ilakkiyainfo

ilakkiyainfo

இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி… நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!

இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி… நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!
July 13
01:30 2019

முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் இரண்டு முறை ஏமாற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், கடைசி வரையில் நம்பர் 2 வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.

”தம்பி வா… தலைமையேற்க வா!”

- அரசியலில் இன்று வரை பேசப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் இந்தப் பொன்மொழிக்குச் சொந்தக்காரர், நாவலர் நெடுஞ்செழியன்.

நாவலர் மீது அண்ணாவுக்குத் தனி பாசம் உண்டு. கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சி அவைத்தலைவர், பொதுச் செயலாளர், அமைச்சரவையில் தனக்கு அடுத்த இடம் எனப் பெரிய பதவிகளை எல்லாம் நெடுஞ்செழியனுக்கு அளித்து அழகு பார்த்தார், அண்ணா. அந்த நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது.

அண்ணா  இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி... நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!அண்ணாவுடன் நெடுஞ்செழியன்…

கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், அண்ணா மறைந்த பிறகு, ‘முதலிடத்துக்கு வரலாம்’ என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அது நிராசை ஆனது. அண்ணா மறைந்த பிறகு, தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். அண்ணாவின் இறுதிச் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு, நிரந்தர ஏற்பாட்டைச் செய்வதற்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டத்துக்கு நாள் குறித்தார்கள்.

அபச  இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி... நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!நெடுஞ்செழியன்தான் அடுத்த முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அரசியல் திருப்பம் ஏற்பட்டது. இவ்வளவு ஏன், மூத்தவரான நெடுஞ்செழியன்தான் முதல்வராக வருவார் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுமே நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், தி.மு.க முன்னோடிகளும் தொண்டர்களும் கருணாநிதி முதல்வர் ஆவதை விரும்பினார்கள்.
அப்போதைய அமைச்சர்கள் கே.ஏ.மதியழகன், சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, சாதிக்பாட்ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோர் கருணாநிதியைச் சந்தித்து, ”முதல்வராகப் பதவியேற்க வேண்டும்” என வற்புறுத்தினார்கள். கருணாநிதிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்களிடமிருந்தும் அறிக்கைகள் வர ஆரம்பித்தன.
நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டபோது, அதை வரவேற்ற தந்தை பெரியார்கூட, ”அண்ணாவின் இடத்தைப் பூர்த்திசெய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் படைத்தவர் கருணாநிதிதான். தி.மு.க. கெட்டியான பூட்டுதான். ஆனால், யாரும் கள்ளச்சாவி போடாமல் பார்த்துக்கொள்வது நல்லது” என்றார்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ராமாவரம் தோட்டத்தில் விருந்து வைத்து அவர்களின் கருத்தைக் கேட்டார், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.

அவர்கள், கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பதை அறிந்துகொண்டார். கருணாநிதியைச் சந்தித்து எம்.ஜி.ஆர் பேசியபோது, ”முதல்வர் பதவியை விரும்பவில்லை. நெடுஞ்செழியனே இருந்துவிட்டுப் போகட்டும்” என்றார் கருணாநிதி.

”பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை உதாசினப்படுத்தக்கூடாது” என எம்.ஜி.ஆர் வற்புறுத்த… கருணாநிதி ஏற்றுக்கொண்டார்.

அடுத்து, நெடுஞ்செழியனைச் சமாதானப்படுத்தும் படலம் ஆரம்பமானது. கருணாநிதி, என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், ஏ.கோவிந்தசாமி ஆகியோர் நெடுஞ்செழியனைப் போய்ச் சந்தித்தார்கள்.

”முதலமைச்சராகத்தான் இருப்பேன். இல்லையென்றால், எந்த அமைச்சர் பொறுப்பையும் ஏற்கமாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார், நெடுஞ்செழியன்.

தா  இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி... நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!

”துணை முதல்வராக இருங்கள். அவை முன்னவராகவும் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். சட்டமன்றத்தில்கூட உங்களுக்கு அடுத்த இடத்தில் நான் அமர்ந்துகொள்கிறேன்” எனக் கருணாநிதி சொன்னபோதுகூட, நெடுஞ்செழியன் மசியவில்லை.

வெறுத்துப்போன கருணாநிதி, ”நாவலர் மனவருத்தத்தோடு இருக்கும் சூழலில், முதல்வராக விரும்பவில்லை” என்றார். ஆனாலும், ‘கருணாநிதிதான் முதல்வர் ஆக வேண்டும்’ என்பதில் தந்தை பெரியாரும் எம்.ஜி.ஆரும் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் உறுதியோடு இருந்தார்கள்.

சட்டமன்ற கட்சித் தலைவரைத் (முதல்வரை) தேர்வு செய்வதற்காக 1969 பிப்ரவரி 9-ம் தேதி அரசினர் தோட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள்.

முதல்வர் பதவிக்குக் கருணாநிதியின் பெயரை அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன்மொழிய… அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார்.

அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, ”வேறு யாராவது போட்டியிடுகிறீர்களா?” எனக் கேட்டார். நெடுஞ்செழியன் பெயரை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.ராமசாமி முன்மொழிந்தார்.

பெரணமல்லூர் எம்.எல்.ஏ வி.டி.அண்ணாமலை வழிமொழிந்தார். உடனே நெடுஞ்செழியன் எழுந்து, ”சட்டமன்ற கட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் நான் போட்டியிட விரும்பவில்லை. விலகிக்கொள்கிறேன்” என அறிவித்தார்.

இதனால், கருணாநிதி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். 15 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. அடுத்த நாள் 10-ம் தேதி கருணாநிதி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

“அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தை இதுவரை வகித்து வந்த நான், இப்போது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், புதிய அமைச்சரவையில் பணியாற்றமாட்டேன்.

சாதாரண சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருவேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரமாட்டேன். ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன்.

கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன்” எனப் பத்திரிகையாளர்களிடம் சொன்னார், நெடுஞ்செழியன். இதற்கு அர்த்தம். ஆட்சி அதிகாரம் பறிபோய்விட்டது. கட்சியின் அதிகாரம் தன் வசம் இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், நெடுஞ்செழியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதற்குக் காரணம் தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு. 1969 ஜூலை 26-ம் தேதி, பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகப் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன், ”பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போகிறேன்” என அறிவித்தார்.

முதல்வராக கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால், பிரச்னைகள் ஏற்படும். கட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும் என்கிற வாதம் வலுவாக எழுந்தது.

கருணாநிதியை முதல்வராக்க காய் நகர்த்திய அதே எம்.ஜி.ஆர்தான், கட்சியிலும் கருணாநிதிதான் தலைமை தாங்க வேண்டும் என முயற்சிகளை முன்னெடுத்தார்.

தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவியில் கருணாநிதியை அமரவைப்பதற்காகக் கட்சியின் முன்னணியினரை அழைத்துப் பேசினார்.

நெடுஞ்செழியனுக்குக் கோபம் அதிகமானது. ”பொதுச் செயலாளர் பதவிக்குக் கருணாநிதி போட்டியிடப்போவதாக அறிவித்தது வருத்தமளிக்கிறது” என நெடுஞ்செழியன் அறிக்கைவிட்டார்.

பதிலுக்குக் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடாமல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

கடைசியில் போட்டியைச் சமாளிக்க சமரச திட்டம் ஒன்று தயாரானது. தி.மு.க-வை அண்ணா உருவாக்கியபோது தலைவர் பதவியை ஏற்படுத்தவில்லை. அவைத் தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும்தான் இருந்தது.

இதில் திருத்தம் கொண்டுவர முடிவானது. அவைத் தலைவர் பதவி, தலைவர் என மாற்றப்பட்டது. பொதுச் செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தலைவருடன் கலந்துபேசி இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக தலைவராகக் கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் தேர்வுபெற்றார்கள். மோதல் முடிவுக்கு வந்தது. கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார், நெடுஞ்செழியன். அண்ணா காலத்திலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி காலத்திலும் அதே நம்பர் 2-வாக இருந்தார்.

முதல்வர் ஆவதற்கான இரண்டாவது சான்ஸும் நெடுஞ்செழியனுக்கு வாய்க்கவில்லை.

நெடுஞ்செழியனுக்கு மூன்றாவது சோதனை. தி.மு.க-வில் இருந்து விலகி, தனிக்கட்சி கண்டு, ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். பிறகு அ.தி.மு.க-வில் இணைந்துகொண்ட நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும் நம்பர் 2 ஆனார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்ட நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக 1987 டிசம்பர் 28-ம் தேதி அறிவித்தார்.

உடனே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளிடமிருந்து அறிக்கை ஒன்று ரிலீஸ் ஆனது. ”கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கிணங்க முதல்வர் பதவியேற்கச் சம்மதிக்கிறேன்.

நாவலர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஆவதற்கான இரண்டாவது சான்ஸும் நெடுஞ்செழியனுக்கு வாய்க்கவில்லை.

கவர்னர் குரானாவைச் சந்தித்து, ”ஜானகி அம்மாளுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது” எனத் தெரிவித்தார், அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்.

நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் கூடி, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 97 பேர் ஜானகியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவிக்க… ஜானகி அம்மாளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் குரானா.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஜானகி ஆட்சி கவிழ்ந்தது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.

ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது. ஜெயலலிதா அணியில் இருந்து பிரிந்து நால்வர் அணியை வழிநடத்திய நெடுஞ்செழியன், பிறகு அ.தி.மு.க-வில் சேர்ந்து ஆட்சியிலும் கட்சியிலும் நம்பர் 2-வாக தொடர்ந்து, இறுதியில் மறைந்து போனார்.

“தம்பி வா… தலைமையேற்க வா” என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகள் கடைசிவரை பலிக்கவே இல்லை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

ராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News