ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’

இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’
October 29
14:06 2018

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான அரிதான வாய்ப்பு இது என மக்கள் நம்பினார்கள்.

அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள்.

ஆனால், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி முன்னெப்போதையும்விட படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

கட்சி அரசியல் போட்டிக் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு, கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று ஆரோக்கியமான சிந்தனைகளை அரவணைத்துக் கொள்ளக்கூடியவர்களாக இலங்கை அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதன் பிரதான பங்காளிக் கட்சிகளின் அரசியல்வாதிகளிடையே முரண்பாடுகள் தொடர்ந்து வளர்ந்துகொண்டுதான் இருந்தன.

தங்களது ஆட்சியை ‘ நல்லாட்சி ” என்று கூறிக்கொண்ட அவர்கள் அரசாங்க நிர்வாகச் செயற்பாடுகள் சுமுகமாக முன்னெடுக்கப்படும் வகையில் ஒருங்கிணைந்து செயற்படுவதில் அக்கறை காட்டவில்லை.

பொருளாதாரக் கொள்கைகள் என்றாலும் சரி, அபிவிருத்தி திட்டங்கள் என்றாலும் சரி, அரசியல் சீர்திருத்தங்கள் என்றாலும் சரி இரு கட்சிகளின் அமைச்சர்களும் முரண்பட்ட வண்ணமே இருந்தனர். இடையிடையே தங்களது கட்சிகள் தனியாக ஆட்சியமைக்கும் யோசனையையும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.இந்த லட்சணத்தில்தான் ‘ நல்லாட்சி’ நடந்துகொண்டிருந்தது.

இரு கட்சிகளின் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும், ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாகாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்பதில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்துவந்ததால் அரசாங்கம் சிக்கல்களுக்கு மத்தியிலும் இயங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், காலப்போக்கில் அவர்கள் இருவருக்கும் இடையிலும் முரண்பாடுகள் அதிகரிக்கத்தொடங்கின. இதற்கு அடிப்படைக் காரணம், ஆட்சி முறை குறித்த வேறுபாடுகள் அல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது அரசியல் எதிர்காலத்துக்காக கொண்டிருந்த வியூகங்களேதான் காரணம்.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, மறுநாள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சிறிசேன இனிமேல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரகடனம் செய்ததை யாருமே மறந்திருக்கமாட்டார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்துவிடவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த வைராக்கியமாகவே அவரது அந்தப் பிரகடனத்தை பலரும் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால், ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அதை ஒழிக்கவேண்டுமென்று குரல்கொடுத்துவந்த சுதந்திர கட்சி இன்று ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றப்படவே கூடாது என்று வாதிடுகின்ற கட்சியாக சிறிசேனவின் தலைமையின் கீழ் மாறியிருக்கும் விசித்திரத்தை நாம் பார்க்கிறோம்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருந்ததாக நம்பப்பட்ட புரிந்துணர்வே பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஒருவாறாக நகர்த்திக்கொண்டு வந்ததென்றால், அவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவிட்ட பிறகு இரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான சஞ்சலமான சகவாழ்வு எவ்விதத்திலும் தொடர முடியாததாகி விட்டது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ராஜபக்ஷக்களின் புதிய கட்சி அதிர்ச்சிதரத்தக்க வகையில் பெற்றவெற்றி ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுக்கு அந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிரதமர் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையுமே குற்றஞ்சாட்டிய சிறிசேன அவரை பதவி நீக்கவும் முயற்சித்தார்.

ஆனால், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் விளைவாக அவ்வாறு பதவி நீக்குவது சாத்தியமில்லை எனக் கண்ட சிறிசேன தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவன் பின்னணியில் செயற்பட்டார். ஆனால் விக்கிரமசிங்க அப்பிரேரணையை தோற்கடித்தார்.

அதற்குப் பிறகு இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தினாலும் அது வெறுமனே தங்களுக்கு வசதியான நேரம் வரும்போது ‘ காலைவாருவது’ என்ற அந்தரங்க நோக்கத்துடனான ஒரு பாசாங்காகவே இருந்தது. இப்போது அதுவே அம்பலமாகியிருக்கிறது.

எந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்காக நான்கு வருடங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்கவுடன் சிறிசேன கைகோர்த்தாரோ, அதே ராஜபக்ஷவைப் பயன்படுத்தியே விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டிருந்தால் ராஜபக்ஷச்கள் தன்னை நிலத்தின் கீழ் எட்டு அடிக்குள் தள்ளியிருப்பார்கள் என்று அன்று சொன்ன ஜனாதிபதி சிறிசேன இன்று அதே ராஜபக்ஷக்களை அரவணைத்துக்கொண்டு தான் ஜனாதிபதியாக வருவதற்கு பெரிதும் உதவிய விக்கிரமசிங்கவுக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தனது எதிர்கால அரசியல் குறித்து ராஜபக்ஷக்களுடன் அண்மைக்காலமாக சிறிசேன பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றதைப்போன்று அதிர்ச்சி தரக்கூடியதாக நிகழ்வுப்போக்குகள் மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணி நேரத்திற்குள்ளாக ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஆனால், நடந்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறிய விக்கிரமசிங்க தானே இன்னமும் பிரதமர் என அடம்பிடிக்கிறார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தனக்கு இருக்கிறதென்றும் அதை நிரூபிக்க வசதியாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு விக்கிரமசிங்க சபாநாயகரைக் கேட்டிருந்த நிலையில் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை இரு வாரங்களுக்கு முடக்கியிருக்கிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமராக பதவியேற்ற ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்கக்கூடிய நிலை இருந்தால் சிறிசேன பாராளுமன்றத்தை முடக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பாரா என்பது முக்கியமான கேள்வி.

இலங்கையில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை ‘ குதிரை பேரம் ‘ செயவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ராஜபக்ஷக்கள் அதில் ஜாம்பவான்கள் என்பதை கடந்த காலத்தில் நிரூபித்திருக்கிறார்கள். இரு தரப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசுவதற்கு அடுத்த இருவாரங்களும் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே இலங்கையில் நடந்தேறியிருக்கும் அரசியல் நாடகத்தை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலகு எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான ஒரு விடயமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இரு அரசியல் தலைவர்கள் தாங்களே இந்நாட்டுப் பிரதமராக இருப்பதாக ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கோருகின்ற விசித்திர அரசியல் சூழ்நிலையில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கின்றோம்.

வீரகத்தி தனபாலசிங்கம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News