ilakkiyainfo

ilakkiyainfo

இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன்

இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன்
April 03
00:33 2018

ஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

ஐரோப்பாக் கண்டத்தில், இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அல்பேனியா, ஒரு நாஸ்திக நாடானது எப்படி? அதற்குக் காரணம், அந்நாட்டின் கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷாவும், அவரது விட்டுகொடாத சோஷலிச அரசியல் கோட்பாடுகளும் ஆகும்.

1912 ம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் வரலாற்றில் முதல் தடவையாக அல்பேனியா என்ற தேசம் உருவாகி இருந்தது.

பண்டைய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாகவும், பிற்காலத்தில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாகவும் இருந்து வந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலத்தில் பரவிய கிறிஸ்தவ மதம், அல்பேனியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி இருந்தது.

மேற்கெல்லையில் இத்தாலி இருப்பதால் அங்கிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவமும், கிழக்கெல்லையில் கிரேக்கம் இருப்பதால் அங்கிருந்து ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவமும் தாக்கம் செலுத்தின.

பதினாறாம் நூற்றாண்டில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட நேரம், பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

537147419  இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன் 537147419

Albanian Primeminister Enver Hoxha

இந்த வரலாற்றுப் பின்புலம், இன்றைக்கும் அல்பேனிய சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றது. இன்றைய அல்பேனிய மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியராகவும், அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்களாகவும், குறைந்தளவில் ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். “பொதுவான” (வேறுபாடுகள் உண்டு) அல்பேனிய மொழி மட்டுமே, அவர்கள் அனைவரையும் ஒரே தேசிய இனமாக ஒன்றிணைத்தது.

என்ன தான் தேசிய இனப் பெருமிதம் பேசினாலும், இறுதியில் அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகள் தான். முதலாம் உலகப்போர் முடிவில், அல்பேனிய மொழி பேசும் மக்களில் அரைவாசிப் பேர், பிற நாடுகளில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

அவ்வாறு தான், கொசோவோ செர்பியாவுக்கு சொந்தமானது. இன்னொரு பிரதேசம் மாசிடோனியாவுக்கு கொடுக்கப் பட்டது. மொன்டிநீக்ரோ, கிரீஸ் ஆகியனவும் தமக்கென சிறிய துண்டுகளை பிடுங்கிக் கொண்டன.

அல்பேனியா என்ற தேசியம் தோன்றிய காலத்தில் தான் என்வர் ஹோஷாவும் பிறந்தார். அந்தக் காலத்தில் அல்பேனியாவில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள், எழுதப் படிக்க தெரியாத ஏழைகளாக இருந்தனர்.

ஓட்டோமான் சுல்த்தானின் ஆட்சிக் காலத்தில், அல்பேனிய இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒரு வசதியான மேட்டுக்குடி வர்க்கம் உருவாகி இருந்தது.

அவர்கள் நிலவுடமையாளர்களாகவும், வணிகர்களாகவும், அரச ஊழியர்களாகவும் இருந்தனர். ஆகையினால், என்வர் ஹோஷாவும் ஒரு இஸ்லாமிய வணிகரின் மகனாகப் பிறந்ததில் ஆச்சரியம் இல்லை.

1930ம் ஆண்டு, என்வர் ஹோஷா உயர் கல்வி நிமித்தம் பிரான்ஸிற்கு சென்றார். பாரிஸ் நகரில் தங்கிப் படிக்கும் காலத்தில் அல்பேனிய தூதுவராலயத்தில் செயலாளராக வேலை செய்தார்.

அந்தக் காலத்தில் பிரெஞ்சு கலாச்சாரம், இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது.

பிரான்ஸின் புரட்சிகரமான கடந்தகாலமும் அவரைக் கவர்ந்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பின்னர், மார்க்ஸிய தத்துவங்களை கற்றுத் தெளிவதில் ஆர்வம் காட்டிய என்வர் ஹோஷா, ஒரு கட்டடத்தில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி விட்டு தாயகம் திரும்பினார்.

enver_hoxha_0010  இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன் enver hoxha 0010

Enver Hoxha (என்வர் ஹோஷா) 

1939 ம் ஆண்டு, முசோலினியின் பாசிச இத்தாலி இராணுவம், அல்பேனியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அப்போது, இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

அந்த நேரத்தில், தலைநகர் டிரானாவில் ஒரு புகையிலைக் கடை தொடங்கிய என்வர் ஹோஷா, அதை விடுதலை வீரர்கள், குறிப்பாக அல்பேனிய கம்யூனிஸ்டுகள் இரகசியமாக கூடி சந்திக்கும் இடமாக மாற்றினர்.

என்வர் ஹோஷாவுக்கு முன்னரே, அல்பேனியாவில் நிறைய மார்க்சியவாதிகள் இருந்தனர். குறிப்பாக மெஹ்மெட் ஷேகு என்ற அல்பேனிய கம்யூனிஸ்ட், ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் பங்கெடுத்திருந்தார்.

அத்தகைய கள அனுபவம் காரணமாக, அன்று அல்பேனியாவில் இரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையின் தளபதியாக பொறுப்பேற்றார். என்வர் ஹோஷா, மெஹ்மெட் ஷேகு ஆகியோரின் இராணுவ தந்திரோபாயம் காரணமாக, கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையணிகள் போரில் வெற்றி பெற்று முன்னேறின.

இரண்டாம் உலகப்போரில், ஒரு கட்டத்தில் பாசிச இத்தாலி பல முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலவீனமடைந்திருந்தது. அப்போது நாஸி ஜெர்மனி உதவிக்கு வந்தது.

ஆகையினால், அல்பேனிய கெரில்லாக்கள் நாஸி ஜெர்மன் படையினரையும் எதிர்த்துப் போரிட வேண்டி இருந்தது. ஒரு மலைநாடான அல்பேனியாவில் எந்த வளமும் இல்லையென்பதால், அங்கு போரிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்த ஜெர்மன் படைகள் யூகோஸ்லேவியாவில் கவனத்தை குவித்தன.

அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, கம்யூனிச கெரில்லாக்கள் அல்பேனியாவை தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், பெரும்பாலான கிழக்கைரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நேரத்தில், யூகோஸ்லேவியா, பல்கேரியா, அல்பேனியாவை இணைத்து “பால்கன் சோஷலிச குடியரசு” அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆனால், ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டன. அனேகமாக, மிகப் பெரிய நாடான யூகோஸ்லேவியாவின் உள்நோக்கம் குறித்து அதிருப்தி உண்டாகி இருக்கலாம்.

Josipbroztito  இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன் Josipbroztito

President of Yugoslavia Josip Broz Tito

இதற்கிடையே, ஸ்டாலினுக்கும், டிட்டோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்து, யூகோஸ்லேவியா சோவியத் ஆதிக்கத்தில் இருந்த Cominform அமைப்பில் இருந்து வெளியேறியது.

அந்தத் தருணத்தில் என்வர் ஹோஷா ஸ்டாலினை ஆதரித்தார். ஸ்டாலின் மரணமடையும் வரையில், சோவியத் யூனியனின் உதவி அல்பேனியாவுக்கு கிடைத்து வந்தது.

அந்தக் காலகட்டத்தில், “டிட்டோயிஸ்டுகள்” என்று குற்றம் சாட்டி பலர் கைது செய்யப் பட்டனர். கட்சியின் தலைமையில், ஹோஷாவின் வலதுகரமாக இருந்த கோசி ஹோசே கூட அந்தக் களையெடுப்புகளுக்கு தப்பவில்லை.

யூகோஸ்லேவிய அதிபர் டிட்டோவிடம், அல்பேனியாவையும் சேர்த்து யூகோஸ்லேவிய சமஷ்டிக் குடியரசு அமைக்கும் நோக்கம் இருந்தது. அல்பேனியாவிலும் சிலர் அந்தத் திட்டத்தை ஆதரித்திருந்தனர்.

ஹோஷாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான நல்லுறவு, அல்பேனியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது.

Dictatorul-Iosif-Stalin-este-inca-erou--pentru-unii--in-Rusia-si-Georgia--Video-  இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன் Dictatorul Iosif Stalin este inca erou pentru unii in Rusia si Georgia Videoஸ்டாலினைப் போன்று, ஹோஷாவும் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சோவியத் உதவியுடன் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. ஒரு காலத்தில் விவசாயம், மீன்பிடியை மட்டுமே நம்பியிருந்த அல்பேனியா, பதினைந்து வருடங்களில் தொழிற்துறை வளர்ச்சி கண்ட நாடாக மாறியது.

1957ம் ஆண்டு தான், அல்பேனிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பல்கலைக்கழகம் உருவானது. இலவசக் கல்வி, நாடு முழுவதுமான பொதுக் கல்வி காரணமாக, எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைக்கப் பட்டது. பதினைந்து வருடங்களில் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கை 85 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்தது.

அதே நேரம், பெண்களின் நிலைமையும் மேம்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முந்திய அல்பேனியாவில், பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது.

நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு மனைவி கணவனின் உடைமையாக கருதப் பட்டாள். “ஒரு பெண் கழுதையை விட கடுமையாக வேலை செய்ய வேண்டும்” என்ற பழமொழியும் இருந்தது. கம்யூனிஸ்டுகள் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்கவும், வேலை செய்யவும் அனுமதித்தனர்.

ஸ்டாலின் இறந்த பின்னர், அல்பெனியாவுக்கும் சோவியத் யூனியனுக்குமான உறவு சீர்குலைந்தது. புதிதாக பதவியேற்ற குருஷேவ் வாயளவில் கம்யூனிசம் பேசினார்.

ஆனால், செயலளவில் ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதியாக நடந்து கொண்டார். ஸ்டாலின் காலத்தில் கம்யூனிச நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தோழமை என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. அதனால் தான், எந்த வளமும் இல்லாத பின்தங்கிய நாடாக கருதப் பட்ட அல்பேனியா தொழிற்துறை வளர்ச்சி காண முடிந்தது.

NikitaKhrushchev  இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா! -கலையரசன் NikitaKhrushchev

NikitaKhrushchev

குருஷேவ், அல்பேனியாவை ஒரு சோவியத் காலனியாக நடத்த விரும்பினார். அல்பேனியா, மத்திய தரைக் கடலை அண்டிய வெப்ப மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால், அங்கு பழங்களும், காய்கறிகளும் பெருமளவில் உற்பத்தி செய்து, சோவியத் யூனியனுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்குப் பதிலாக சோவியத் யூனியனிடம் இருந்து எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யலாம் என குருஷேவ் ஆலோசனை கூறினார்.

குருஷேவின் காலனியவாத கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த என்வர் ஹோஷா, சோவியத் யூனியனுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொண்டார்.

அதற்குப் பதிலாக மாவோவின் சீனாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். சீன உதவியுடன் மிகப்பெரிய அணைக்கட்டுகள், புனல் மின்சார நிலையங்கள் கட்டப்பட்டாலும், ஸ்டாலின் காலத்து தொழிற்துறை வளர்ச்சியை எட்ட முடியவில்லை. எண்பதுகளில் சீனாவில் டென்சியோபிங் பதவிக்கு வந்த பின்னர் சீன உறவும் துண்டிக்கப் பட்டது.

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், உலகில் எந்தவொரு நட்பு நாடும் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்ட அல்பேனியாவில், மீண்டும் திருத்தல்வாதிகள், டிட்டோயிஸ்டுகள் தலையெடுக்கலாம் என ஹோஷா அஞ்சினார்.

அந்தக் காலத்தில் மாவோவை விட்டால் வேறு நண்பனும் இல்லை. ஸ்டாலின் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் பல்வேறு தளங்களிலும் தொடர வேண்டும் என்று மாவோவும், ஹோஷாவும் கருதினார்கள். மாவோவின் சீனாவில் அது கலாச்சாரப் புரட்சியாக வடிவமெடுத்தது. ஹோஷாவின் அல்பேனியாவில் நாஸ்திகப் புரட்சியாக வடிவமெடுத்தது.

1967 ம் ஆண்டு, அல்பேனியா உலகின் முதலாவது நாஸ்திக நாடாக பிரகடனம் செய்யப் பட்டது.

அல்பேனிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொது இடங்களிலும் மதம் இல்லாதொழிக்கப் பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இழுத்து மூடப் பட்டன. சில குறிப்பிட்ட பழம்பெருமை வாய்ந்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் அருங்காட்சியமாக மாற்றப் பட்டன. எஞ்சியவை விளையாட்டுத் திடல்களாக அல்லது கால்நடை வளர்க்கும் இடங்களாக மாற்றப் பட்டன.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதகுருக்கள் யாராவது எதிர்ப்புக் காட்டும் பட்சத்தில், கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்கள் மதத்தை துறந்து சாதாரண மனிதர்களாக வாழ்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மதச்சார்பற்ற பெயர்கள் வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப் பட்டது. அவற்றில் பல மொழி சார்ந்த பெயர்களாகவும் இருந்தன.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில், பொது உணவுச் சாலைகளில் பரிமாறப் பட்ட உணவில் பன்றி இறைச்சி சேர்த்துக் கொள்ளப் பட்டது.

அல்பேனியாவில் இன்றைக்கும் பல “இஸ்லாமியர்கள்” எந்தத் தயக்கமும் இன்றி பன்றி இறைச்சி சாப்பிடுவதைக் காணலாம். இன்று அல்பேனியா சோஷலிச நாடல்ல. ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாடு. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

எண்பதுகளின் என்வர் ஹோஷா இறந்த பின்னர் நாஸ்திக நாடு கொள்கையும் கைவிடப் பட்டது. மீண்டும் மத வழிபாட்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு சுதத்திரம் கிடைத்தது.

தொண்ணூறுகளில், அது முதலாளித்துவ நாடான பின்னர், சவூதி அரேபிய நிதி உதவியுடன் பல புதிய மசூதிகள் கட்டப் பட்டன. இருந்த போதிலும், இளையோர் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. பெரும்பான்மையான அல்பேனியர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணம் தேடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

அல்பேனியாவை நீண்ட காலத்திற்கு ஒரு நாஸ்திக நாடாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு மக்களின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும். அதற்கான காரணிகள் எவை? துருக்கி- ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில், அல்பேனியர்களுக்கு மத அடையாளம் மட்டுமே இருந்தது.

அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் “துருக்கியர்கள்” என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் “ரோமர்கள்” என்றும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் “கிரேக்கர்கள்” என்றும் அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய அல்பேனிய மொழி ஒரு அடையாளமாக இருக்கவில்லை.

19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய மொழித் தேசியவாதக் கோட்பாடுகள் அல்பேனியாவிலும் எதிரொலித்தன. அப்போது மொழி அடிப்படையில் அல்பேனியர் என்ற தேசிய இனம் (புதிதாக) உருவானது.

இந்த தேசிய இன அடையாளம் வளர்ச்சி அடைந்த நேரம், மத அடையாளம் கைவிடப் பட்டது. மேலும் பெரும்பான்மை அல்பேனியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும் அவர்களே இருந்தனர்.

அல்பேனிய நிலப்பிரபுக்கள் மத நிறுவனங்களையும் தமக்கு சார்பாக வளைத்துப் போட்டிருந்தனர். அப்போதே அல்பேனிய மக்களின் மனதில் மத நிறுவனங்கள் குறித்த நல்லெண்ணம் இருக்கவில்லை.

அதே நேரம், துருக்கி சாம்ராஜ்யவாதிகளும் அல்பேனிய நிலப்பிரபுக்களை ஆதரித்தனர். அத்தகைய பின்னணியில் தான் அல்பேனிய தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போதே அல்பேனிய மக்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருந்தது.

-கலையரசன்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News