ilakkiyainfo

ilakkiyainfo

ஈழத்தமிழர் பிரச்சனையும் இந்திய பிரதிநிதிகளின் கருத்தும் – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)
August 31
15:26 2014

இனப்­பி­ரச்­சினை   கார­ண­மாக இலங்­கையில் முப்­பது வரு­டங்­க­ளாக ஒரு மோதல் நிலைமை – முரண்­பாட்டு நிலை­யொன்று நிலவி வந்­தி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மாக இலங்கை அரச படை­க­ளுக்கும், தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காக, ஆயு­த­மேந்திப் போ­ரா­டிய விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று மூண்­டி­ருந்­தது. இது உல­க­ம­றிந்த பர­க­சியம்.

இந்த யுத்த மோதல்கள் கார­ண­மாக, தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். சிங்­கள மக்­க­ளும்­கூட பாதிப்­ப­டைந்­தி­ருந்­தார்கள். குறிப்­பாக வடக்கு கிழக்குப் பிர­தேசங்­களைச் சேர்ந்த தமிழ் மக்கள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அவர்கள் மீது மிக மோச­மான கெடு பிடி­க­ளையும், நெருக்­கு­வா­ரங்­க­ளையும்    அர­சாங்­கத்­தி­னரும், அரச படை­யி­னரும்   பிர­யோ­கித்­தி­ருந்­தார்கள். இரு நாடு­க­ளுக்­கி­டையில்  பிர­யாணம் செய்­கின்ற அந்­நி­யர்கள் மீது விதிக்­கப்­ப­டு­கின்ற விசா நடை­மு­றைக்கு ஒத்த வகையில், தமிழ் மக்கள் மீது உள்­நாட்­டுக்­குள்ளேயே விசா நடை­மு­றைக்கு  ஒப்­பான  முறையில் இரா­ணுவ பாஸ் பெற வேண்­டிய கட்­டாய நிலைமை அவர்கள் மீது திணிக்­கப்­பட்­டி­ருந்­தது.

விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த மக்கள், இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள பிர­தே­சங்­க­ளுக்குள் வரு­வ­தற்கும், நாட்டின் தலை­ந­க­ரா­கிய கொழும்பு உட்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்குச் செல்­ப­வர்­க­ளுக்கு அந்தப் பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் ஸ்பொன்சர் செய்ய வேண்­டிய நிலை­மையும் உருவாக்கப்பட்­டி­ருந்­தது.

அத்­துடன் விசா நடை­மு­றையைப் போல – குறிப்­பிட்ட தினங்கள் மாத்­தி­ரமே, செல்­லு­மி­டங்­களில் அவர்கள் தங்­கி­யி­ருந்து தமது காரி­யங்­களை முடித்துக் கொண்டு திரும்­பி­விட வேண்டும் என்ற நிய­தியும் கண்­டிப்­பான முறையில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தது.

குறிப்­பிட்ட தினங்­க­ளுக்கு மேல் தங்­கி­யி­ருந்­த­வர்கள் கைது செய்­யப்­பட்டு , புலிகளால்   தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்பட்டார்கள்.

தொடர்ச்­சி­யான ஒரு யுத்தச் சூழ் நிலையின் கீழ் சுதந்­தி­ர­மான நட­மாட்டம் மட்டும் அல்­லாமல், உணவு மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களை எடுத்துச் செல்­வ­தும்­கூட, சிக்கல் மிகுந்த மீறிச் செயற்­பட முடி­யாத இரா­ணுவ நடை­மு­றை­களின் மூலம் மோச­மாகக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

உணவுப் பொருட்கள், அத்­தி­யா­வ­சிய பாவனைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்கள் மீதும் கட்­டுப்­பா­டு­களும் தடை­களும் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

எரி­பொருள் மற்றும் மின் பிறப்­பாக்கி உப­க­ரணங்கள், பொருட்கள் என்­ப­னவும் தடுக்­கப்­பட்­டி­ருந்­தன. மொத்­தத்தில் யுத்த பிர­தே­சத்­தினுள் – விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­களில் வாழ்ந்த மக்கள் மீது மோச­மான பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கும் அப்பால் மோதல்கள் கார­ண­மா­கவும், இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவும், தமிழ் மக்கள் நாளாந்தம் காய­ம­டைந்­தார்கள். பலர் உயி­ரி­ழந்­தார்கள். அது மட்­டு­மல்­லாமல் இரா­ணுவ தேடுதல் நட­வ­டிக்­கைகள், சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றின்­போது பலர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள்.

அவர்­களில் பல­ருக்கு என்ன நடந்­தது   என்­பது இன்னும் தெரி­யாமல் உள்­ளது. கைது செய்து கொண்டு செல்­லப்­பட்ட பலர் பின்னர் துப்­பாக்கிச் சூட்டுக் காயங்­க­ளுடன் தெரு­வோ­ரங்­க­ளிலும் காட்டுப் பகு­தி­க­ளிலும் சட­லங்­க­ளாகக் கண்­டெ­டுக்­கப்­பட்­டார்கள்.

பெண்கள், சிறு­வர்கள், முதி­ய­வர்கள் என வலு­வி­ழந்­த­வர்­களும் இந்தக் காலப்­ப­கு­தியில் மோச­மா­கப் பாதிக்க­ப்பட்­டி­ருந்­தார்கள். தொடர்ச்­சி­யான இடப்பெ­யர்வும் அந்த மக்­களைப் பெரிதும் வாட்­டி­யி­ருந்­தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான மோச­மான இறுதி இரா­ணுவ நட­வ­டிக்கை – யுத்த நட­வ­டிக்கை யுத்த பிர­தேசத்தில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­களை – தமிழ் மக்­களைப் மிக மிக மோச­மாகப் பாதித்­தி­ருந்­தது.

ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். எண்­ணற்­ற­வர்கள் காய­ம­டைந்து, உரிய வைத்­திய கவ­னிப்பும், வைத்­திய சிகிச்­சை­யு­மின்றி பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இத­னாலும் பலர் உயி­ரி­ழந்­தார்கள்.

இறுதி யுத்­தத்­தின்­போது மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லி­க­மாகக் குடி­ய­மர்ந்­தி­ருந்த கொட்டில் குடி­யி­ருப்­புக்கள் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகின. மருத்­து­வ­ம­னை­களும் தாக்­கப்­பட்­டன.

போக்­கு­வ­ரத்து  மார்க்­கங்­க­ளிலும் குண்­டுகள் வீழ்ந்து வெடித்துப் பலரைக் காவு கொண்­டன. யுத்­தத்தின் இறுதி நேரத்தில் ஊழிக்­கால தாண்­ட­வத்­தையும் விட நிலை­மைகள் மோச­மா­கி­யி­ருந்­தன.

இதனால் விபரம் அறி­யாத நிலை­யி­லேயே மாண்டு போனார்கள். பலர் படு­கா­ய­ம­டைந்­தார்கள். தொடர்ச்­சி­யான எறி­கணை தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூட்டுக் காயங்கள் என்­ப­வற்­றுக்கு ஆளா­கிய பல­ரு­டைய உடல்­களில் குண்டுச் சித­றல்கள் அகற்ற முடி­யாத நிலையில் இன்னும் இருக்­கின்­றன.

இவ்­வாறு சொல்­லொ­ணாத் துன்­பங்­க­ளுக்கும் கஷ்­டங்­க­ளுக்கும் உள்­ளாகி, யுத்தச் சூழலில் குண்டு மழைக்குள் அகப்­பட்டு தெய்­வா­தீ­ன­மாகத் தப்பி மீண்டு வந்­துள்ள மக்­களைப் பார்த்து, நீங்கள் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது, அது இது என்று கேட்­கக்­கூ­டாது என்று சிலர் ஆலோ­சனை கூறுகின்­றார்கள்.

அர­சியல் உரி­மைகள் பற்றி நீங்கள் பேசக்­கூ­டாது. அந்த அரு­கதை உங்­க­ளுக்குக் கிடை­யாது என்றும் அவர்கள் அறி­வு­றுத்­து­கின்­றார்கள்.

Avadhash.Kaushal  ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை) AvadhashAvadhash.Kaushal ( அவ்தாஷ் கௌஷலும்)

குறிப்­பாக அண்­மையில் இலங்­கையில் நடை­பெற்ற பாது­காப்பு செய­ல­மர்வில், இந்­தி­யாவின் பிர­தி­நி­தி­யாகக் கலந்து கொண்ட சுப்­பி­ர­ணிய சுவா­மி­யும், இலங்­கையில் காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்ற ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­ச­க­ராக நியமிக்கப்பட்டிருப்­ப­வர்­களில்  ஒரு­வ­ரா­கிய, சமூக சேவை­யாளர் என்றும் மனித உரிமைச் செயற்­பாட்­டாளர் என்றும், வல்­லுனர் என்றும்  கரு­தப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்ற  இந்­தி­ய­ரா­கிய அவ்தாஷ் கௌஷலும்,   இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை தொடர்­பிலும், பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் செயற்­பா­டுகள் தொடர்பிலும் இவ்­வா­றான ஆலோ­ச­னை­க­ளையும், அறி­வு­றுத்­தல்­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள்.

இவர்­க­ளு­டைய கருத்­துக்கள் தமிழ் மக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. தமிழ் அர­சியல் வட்டாரங்­க­ளிலும் சீற்­றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை இல்லை. மொழி ரீதி­யான பிரச்­சி­னையே இருக்­கின்­றது என்ற புதிய கண்­டு­பி­டிப்பு ஒன்றை இலங்­கைக்கு வருகை தந்திருந்த சுப்­பி­ர­ம­ணி­ய­சு­வாமி வெளி­யிட்­டி­ருந்தார்.

suvamy  ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை) suvamyபார­திய ஜனதா கட்­சியின் சிரேஷ்ட தலைவர் என்று கூறப்­ப­டு­கின்ற சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியை கோமாளி அர­சி­யல்­வா­தி­யென்றும் சிலர் அழைப்­ப­துண்டு. நேரத்­துக்கு ஒரு கருத்தும், நாளுக்­கொரு நிலைப்­பா­டு­மாகக் கருத்­துக்­களை அவர் வெளி­யி­டு­வதன் கார­ண­மா­கவே அவரை அவ்­வாறு அழைப்­ப­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.

இந்­தி­யாவில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து, புதிய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யாக கொழும்பில் நடை­பெற்ற இலங்கை அர­சாங்­கத்தின் பாது­காப்பு செய­ல­மர்வில் அவர் கலந்து கொண்­டி­ருந்தார்.

‘இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னை­யென்ற ஒன்று இல்லை. யுத்தம் முடி­வுக்கு வந்­த­வுடன், பிரச்­சி­னை­க­ளுக்­கான வழிகள் மூடப்­பட்­டு­விட்­டன. இன்று இலங்­கையில் மொழி ரீதி­யான பிரச்­சி­னையே உள்­ளது. சிங்­களம், தமிழ் என தனித்­த­னியே செயற்­ப­டு­கின்­ற­மையே பிரச்­சி­னை­களைத் தோற்­று­விக்­கின்­றது’ என்று அந்த பாது­காப்பு செய­ல­மர்வில் உரை­யாற்­றி­ய­போது அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

அதே­நேரம் மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் தேவை­யில்லை என்றும் சுப்­பி­ர­ம­ணி­ய­சு­வா­மி கூறி­யி­ருக்­கின்றார்.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை கார­ண­மா­கவே இந்­தியா கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை அர­சுடன் ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து கொண்­டது. சர்­வ­தேச அள­வி­லான அந்த ஒப்­பந்­தத்­தை­ய­டுத்தே, தனது இரா­ணு­வத்தை அமை­தி­காக்கும் படை­யென்ற பெயரில் இலங்­கைக்கு இந்­திய அரசு அனுப்பி வைத்திருந்தது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு, ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­கா­கவே இலங்­கையில் மாகாண சபை ஆட்சி முறையை இந்­தியா அறி­மு­கப்­ப­டுத்தி, அதற்­காக இலங்கை அர­சி­யலில் 13 ஆவது அர­சியல் திருத்­தத்தை மேற்­கொள்ளச் செய்­தி­ருந்­தது.

இந்த ஒப்­பந்­தத்­தின்­படி, மாகாண சபைகள் மட்­டத்தில் பிராந்­தி­யங்­க­ளுக்கு காணி., பொலிஸ் உட்­பட முக்­கிய அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது அப்­போது மேற்­கொள்­ளப்­பட்ட 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம், அர­சி­ய­ல­மைப்­பி­லேயே உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த ஒப்­பந்தம் செய்­யப்­பட்டு 27 வரு­டங்கள் கழிந்­து­விட்ட நிலை­யிலும், அதன் மூலம் உரு­வாக்கப்பட்ட மாகாண சபை­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என்று இலங்கை அர­சாங்கம், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்­ன­ரான இன்­றைய நிலை­யிலும் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றது.

மாகா­ண­சபை வேண்டும் என்று இலங்கைத் தமிழ் மக்கள் இந்­தி­யா­விடம் ஓடிச் சென்று கேட்­க­வில்லை. நியா­ய­மான சமத்­து­வ­மான உரி­மை­க­ளுடன் கூடிய, சுயாட்­சிக்­கான அதி­கா­ரங்­களைக் கொண்­டதோர் அர­சியல் தீர்­வையே அவர்கள் கேட்­டி­ருந்­தார்கள்.

நாடி­யி­ருந்­தார்கள். மாகாண சபை வேண்டும். அதற்குப் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் காணி அதி­கா­ரங்­க­ளையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் இந்­தி­யா­விடம் கோர­வில்லை.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை என்­பது நீண்ட வர­லாற்றைக் கொண்­டது. இதற்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக திம்பு தொடக்கம் ஐரோப்­பிய தலை­ந­க­ரங்கள் வரையில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. உள்­நாட்­டி­லேயே மித­வாத அர­சியல் தலை­வர்கள் மட்­டு­மல்­லாமல், ஆயு­த­மேந்­திய அமைப்­புக்­களின் தலை­வர்கள் மட்­டத்­தி­லேயும் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.

உள்­நாட்டு அர­சியல் தலை­வர்கள் மட்­டத்தில் நடை­பெற்ற பேச்­சுக்­களின் பின்னர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வழி­மு­றைகள் குறித்து ஒப்­புக்­கொண்டு ஒப்­பந்­தங்­களும் செய்­யப்­பட்­டி­ருந்­தன. பின்னர் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் அர­சாங்கத் தரப்­பி­னரே அவற்றைக் கிழித்­தெ­றிந்த சம்­ப­வங்­களும் பகி­ரங்­க­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.

இதனைப் புரிந்து கொள்­ளாத, புரிந்து கொள்ள மறுத்­துள்ள அல்­லது புரிந்து கொள்­ளாத மாதிரி வேடம் புனைந்­துள்ள சுப்­பி­ர­ம­ணிய சுவா­மி அரை­வேக்­காட்டுத்­த­ன­மாக இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை இல்லை என்றும், மாகாண சபைக்கு பொலிஸ் அதி­காரம் தேவை­யில்லை என்றும் கருத்து வெளியிட்டிருப்­பது வேடிக்­கை­யா­கவும் ஒரு வகையில் வேதனை அளிப்­ப­தா­கவும் உள்­ளது.

இலங்­கைக்கு அவர் வந்­தி­ருந்­த­போது, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யையும், அவ­ரு­டைய அர­சாங்­க­த்தின் உயர் மட்­டத்­தி­ன­ரையும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் புது­டில்­லிக்குச் சென்று சந்­திப்­ப­தாக இருந்­தது.

mahind-and-Subramaniyaswamy  ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை) mahind and Subramaniyaswamy1
ஆயினும், இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் அனு­ம­தி­யின்றி கூட்­ட­மைப்­பி­னரை இந்­திய அர­சாங்­கத்­தினர் சந்திக்க மாட்­டார்கள் என்றும் அவர் திருவாய் மலர்ந்­தி­ருந்தார்.
அவ்­வாறு அவர் கூறி வாய் மூடு­வ­தற்கு முன்பே கூட்­ட­மைப்­பினர் புது­டில்­லியைச் சென்­ற­டைந்­தி­ருந்­தனர். இதனால் சுப்பிரம­ணிய சுவா­மி இந்­தி­யாவின் கோமாளி அர­சி­யல்­வா­தி­யாக பகி­ரங்­க­மாக அசடு வழிய நேர்ந்­தி­ருந்­தது.

இதே­வேளை, சமூக சேவை­யாளர் என்றும் மனித உரிமைச் செயற்­பாட்­டாளர் என்றும், வல்­லுனர் என்றும் கரு­தப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்ற இந்­தி­ய­ரா­கிய அவ்தாஷ் கௌஷலும், தமிழ் மக்கள், வட­மா­கா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கோர முடி­யாது என்று கூறி­யி­ருக்­கின்றார்.

இலங்­கையில் காணாமல் போயுள்­ள­வர்­களைப் பற்றி விசா­ரணை நடத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக இலங்கை ஜனா­தி­ப­தி­யினால், சர்­வ­தேச அளவில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிபுணர் குழுவின் உறுப்­பி­ன­ரா­கிய அவ்தாஷ் கௌஷல் இலங்கை ஜனா­தி­ப­திக்கு மிகவும் வேண்­டி­யவர் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே அவர் தனிப்­பட்ட ரீதியில் இந்த நிபு­ணத்­துவ ஆலோ­சனைக் குழுவின் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. இந்த நிய­ம­னத்­திற்கும் இந்­திய அர­சுக்கும் எந்­த­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு வந்­துள்ள ஒருவர், இனப்­பி­ரச்சினையினால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்டு, அந்தப் பிரச்­சி­னைக்கு அர்த்­த­முள்ள நிரந்­த­ர­மான ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­காக அலை­மோதிக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் மக்­களின் மனம் புண்­படும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருப்­பது கண்டிக்கத்தக்கது.

மனித உரிமை மீறல்கள் தொடர்­பான விட­யங்­களில், ஒரு விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அழைக்­கப்­பட்­டுள்ள அவர், அர்த்­த­மற்ற முறையில் அர­சியல் பேசு­வது அழ­கல்ல. அது அவ­ருக்கு அவ­சி­ய­மான ஒரு விடயம் என்றும் கருத முடி­யாது.

இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் தம்மை இலங்­கை­யர்கள் என்று உணர வேண்டும். அந்த வகையில் இலங்­கையின் சட்­டத்­திற்கும், அர­சி­ய­லமைப்­புக்கும் உட்­பட வேண்டும். அவர்கள் வட­மா­கா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கேட்க முடி­யாது’ என்று அவர் இந்­தி­யாவின் பிர­ப­ல­மான செய்­தித்­தா­ளா­கிய நியூ இந்­தியன் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரி­கைக்கு அளித்­துள்ள பேட்­டி­யொன்றில் கூறி­யி­ருக்­கின்றார்.

‘இலங்­கையின் இறை­மையை இந்­தி­யாவும், இந்­தி­யாவின் இறை­மையை இலங்­கையும் மதிக்க வேண்டும். பிரச்­சி­னை­களில் ஆலோ­ச­னை­களை வழங்க முடியும், ஆனால் இதனை செய்­யுங்கள் என்று கோரிக்கை விடுக்க முடி­யாது.

இந்­தியா பெரிய அண்ணன் என்ற வகையில் அழுத்தம் பிர­யோ­கிக்கக் கூடாது. இலங்­கையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் எற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் குறித்து, இந்­தியா பாராட்ட வேண்டும். இந்த விட­யத்தில் இலங்கை தொடர்ந்து முன்­செல்ல வேண்டும் என்றுவலியு­றுத்த வேண்டும்’ என்றும் அவ்தாஷ் கௌஷல் கூறி­யி­ருக்­கின்றார்.

ஒரு நாடு மற்­றொரு நாட்டின் இறை­மையை மதித்துச் செயற்­ப­டு­வ­தென்­பதும், மற்­றொரு நாட்டின் மீது  இன்­னு­மொரு நாடு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கக் கூடாது என்­பதும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க விட­யம்தான்.

ஆனால், சர்­வ­தேச ஒப்­பந்தம் ஒன்றின் மூலம் நிறை­வேற்­று­வ­தாக ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் அர­சியல் ரீதி­யாக பேய்க்­காட்ட முற்­ப­டு­கின்ற ஓர் அர­சாங்­கத்தின் மீது அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­காமல் வேறு என்ன செய்ய முடியும்?

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு, ஈடு­பாடு என்­பன ஆரம்ப கட்டத்ததில் உள்ள ஒரு விட­யமாகக் கூற முடி­யாது. இனப்­பி­ரச்­சினை விட­யத்தில், தமிழ் மக்கள் சார்பில் இந்­தியா இலங்­கை­யு­ட­னான ஒப்­பந்தம் ஒன்றில் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கின்­றது என்­பதை மறந்­து­விடக் கூடாது.

இந்த ஒப்­பந்­தத்தின் மூலம், தமிழ் மக்­க­ளுக்­கான ஓர் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் இந்தியா கடமைப்பட்டிருக்கின்றது. பொறுப்பேற்றிருக்கின்றது. உப கண்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற பலகோடி மக்களின் ஜனநாயக அரசியல் நிர்வாகத் தலைமையைக் கொண்டுள்ள இந்தியா இந்தப் பொறுப்பில் இருந்து இலகுவில் விலகிச் செல்ல முடியாது.

இதன் காரணமாகத்தான், இலங்கை விவகாரங்கள் அனைத்திலும், அது தொடர்ச்சியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபாடு காட்டி வந்துள்ளது. இப்போதும் ஈடுபாடு கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில் சுப்பிரமணிய சுவாமி, அவ்தாஷ் கௌஷல் போன்றவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தான்தோன்றித்தனமாகக் கருத்துக்களை வெளியிடுவது என்பது, அவர்களின் அந்தஸ்தை கேள்விக்குள்ளாக்குவதாகிவிடும். பொறுப்பெடுத்த வேலையையும், வந்த வேலையையும் பார்ப்பதை விடுத்து அரசியல் மேதாவித்தனத்தை வெளிப்படுத்த முற்படுவது விபரீதங்களுக்கே வழிவகுப்பதாக அமையும்.

index  ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை) index22காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அவ்தாஷ் கௌஷல், அர்த்தமற்ற வகையில் அரசியல் பேசுவதென்பது, அவர் ஆற்றப் போகின்ற பணியில் அவருக்கு உள்ள பக்கச்சார்பற்ற பங்கு குறித்து பலத்த ஐயப்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கே உதவும்.

அவ்தாஷ் கௌஷலின் அர்த்தமற்ற அரசியல் பேச்சானது, ஏற்கனவே நம்பிக்கையற்று, செல்லாக்காசாகியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை, மேலும் மோசமாக்குவதற்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன், யுத்தத்தினாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் மனிதாபிமான முறையில் நீதி வழங்குவதற்குப் பதிலாக இந்த ஆலோசனைக்குழுவும் பக்கசார்பாகவே நடந்து கொண்டிருக்கின்றது என்ற அவச்சொல்லுக்கு உள்ளாக்கவே செய்யும் என்பதிலும் ஐயமில்லை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News