ilakkiyainfo

ilakkiyainfo

உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)
March 28
02:50 2019

ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் ‘எள்ளல்’ தொனியிலான உரையாடலையும் தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானத்தின் வழி நின்று, விடயங்களை அணுக வேண்டும் என்றே கடந்த காலங்களில் சுமந்திரன் அனைத்துத் தரப்பிடமும் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

அதன்போக்கிலேயே, இலங்கைக்கான கால அவகாசம் (சுமந்திரன் மொழியில் கண்காணிப்புக் காலம்) இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்படுவதற்கான ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அவர் 2017ஆம் ஆண்டு வாதிட்டார்.

உட்கட்சி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, ஊடகங்களின் விமர்சனம் உள்ளிட்டவற்றைக் கடந்து நின்று, கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்கும் நிலை அப்போது ஏற்பட்டது.

தற்போது, மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்துக்கான தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அதற்கும் சுமந்திரனும், கூட்டமைப்பின் தலைமையும் இணக்கமான நிலையையே காட்டியிருக்கிறார்கள். அதனை வழங்குவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை என்று, ஒரு கட்டம் வரையில் அவர் கூறியும் வந்தார்.

அப்படியான நிலையில், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையொன்றைப் பற்றிப் பேசுவதற்கான தார்மீகத்தை, சுமந்திரன் இழந்துவிட்டார் என்பது, கடந்த காலத்திலிருந்து சர்வதேச நீதி விசாரணையைக் கோரி வரும், தரப்புகளின் வாதமாகும்.

அடிப்படையில், அது சரியானதுதான். ஏனெனில், முற்றுமுழுதான சர்வதேச விசாரணையைக் கோரும் தரப்புகள், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து, தமிழ் மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும்.

இல்லையென்றால், இராஜதந்திர நோக்கு மற்றும் சர்வதேச யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட அணுகுமுறைகள் ஊடாக நீதிகோரும் தங்களது, முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சுமந்திரன் பேசி வந்திருக்கிறார்.

அப்படியானால், சுமந்திரன் ஏன் முற்றுமுழுதான சர்வதேச நீதி விசாரணை பற்றி இப்போது பேசத் தலைப்படுகிறார்? அவரின் கடந்த காலப் பேச்சுகளை அவர் புறந்தள்ளிக் கொண்டு பேச முயல்கிறாரா? அவற்றுக்குப் பின்னால், தேர்தல்களை இலக்காகக் கொண்ட காரணிகள் இருக்கின்றனவா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டாலும், அது 2002ஆம் ஆண்டே நடைமுறைக்கு வந்தது.

மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட விடயங்களையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

அதுவும், குற்றம் நிகழ்ந்திருக்கின்ற நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளாத இடத்தில், அதனால் விசாரணைகளை நடத்த முடியாது.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதில், பங்கெடுப்பதற்கான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்வது, தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானமொன்றை எடுத்து, அதில் இலங்கை இணைந்து கொண்டாலும், ரோம் சட்ட விதிமுறைகளுக்கு அமைய, குறித்த ஒரு நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து, அதற்குப் பின்னரான காலத்திலேயே விசாரணையை எதிர்கொள்வதற்கான வரைமுறை இருக்கின்றது.

ஆக, எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டாலும், கடந்த காலப் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான தடை என்பது, ஒருவகையில் இருக்கவே செய்கின்றது.

அப்படியானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவது தொடர்பிலான அடுத்த கட்டம், எவ்வாறு அமையும் என்கிற கேள்வி எழுகிறது. அதற்குத்தான், பாதுகாப்புச் சபையூடாக அணுக வேண்டும் என்கிற விடயம் பேசப்படுகின்றது.

2009 இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் கூட, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அங்கு ‘வீட்டோ’ அதிகாரத்தோடு இருக்கும் நாடுகளுக்கிடையில் காணப்படும் போட்டியால், அது அப்போது கைவிடப்பட்டது. அந்தநிலை, இன்று வரையில் நீடிக்கவே செய்கின்றது.

இலங்கை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமொன்றில் இருந்திருக்காவிட்டால், இலங்கையின் இன முரண்பாடுகள், எப்போதோ தீர்ந்து போயிருக்கும்.

இன்றைக்கு, ஒரே இனத்துக்குள் சாதிய, அதிகார வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராக, மக்கள் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இலங்கையின் அமைவிடம் மிக முக்கியமானது. அதுதான், இலங்கையில் நிகழும் பேரினவாத ஆட்டங்களுக்குக் குறிப்பிட்டளவு அனுமதியையும் சில நாடுகள் வழங்கியிருக்கின்றன.

இனப்படுகொலையொன்று நிகழும் போது, அதை அனுமதித்து, காத்திருக்கவும் வைத்தது.

அப்படியான நிலையில், தங்களது நலன்கள் சார்ந்து, வல்லரசுகள் கவனம் செலுத்தும் போது, இலங்கையின் விடயத்தை கவனத்தில் எடுக்காது செயற்படாது.

அதன்போக்கில்தான், வல்லரசுகளிடம் இருக்கின்ற ‘வீட்டோ’ அதிகாரம் என்கிற விடயம், இலங்கையை இதுவரை காப்பாற்றி வந்திருக்கின்றது.

இல்லையென்றால், இலங்கையின் முன்னாள் தலைவர்கள் சிலர் இப்போது, சர்வதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள். ஆக, பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி, முற்றுமுழுதான சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைகள் இலங்கைக்குள் வருவதற்கான சாத்தியமான வழிகள் தற்போதைக்கு இல்லை.

அப்படியான நிலையில், கலப்புப் பொறிமுறையொன்றை நாடுவது, அல்லது சர்வதேச தலையீடுகளைக் கோருவதற்கான கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யாமல் தடுப்பதற்கான ‘ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் பாதுகாத்தல்’ என்கிற விடயத்தைப் பேணுதல் போன்ற விடயங்கள் மேலெழுகின்றன.

நடைமுறையில், இந்த விடயங்களில் நின்று இயங்குவது தொடர்பில், இரகசியமானதும் இணக்கமானதுமான உடன்பாடு என்பது, தமிழ்த் தரப்புகள் அனைத்திடமும் உண்டு. ஆனால், அதுகுறித்து வெளிப்படையான உரையாடல்களை நடத்துவது சார்ந்துதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

முற்றுமுழுதான சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நாடுவது தொடர்பில் சுமந்திரன் பேசியிருப்பது, தென் இலங்கையுடனான ஊடாட்டத்தில் நின்றேயாகும்.

அதாவது, ஜெனீவாத் தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறைக்கு இலங்கை இணங்கி இருக்கின்ற நிலையில், அதிலிருந்து விலகியோடும் நிலையை விமர்சிக்கும் உரையாடலின் போதே, சுமந்திரன் சர்வதேச விசாரணை பற்றிப் பேசுகிறார்.

குறிப்பாக, அண்மைய ஜெனீவா அமர்வுகளின் போது, வெளிவிவகார அமைச்சரான திலக் மாரப்பன, இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தின் அடிப்படைகளையே மறுதலித்து உரையாற்றியமை, “சர்வதேச நீதிபதிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று நாடாளுமன்றத்துக்குள் பிரதமர் ரணில் தெரிவித்திருந்த விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றும் போதே, சுமந்திரன் சர்வதேச விசாரணையை நாடும் சூழல் ஏற்படும் என்று பேசுகிறார்.

சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமில்லை என்று தற்போது கூறிவரும் முன்னாள் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்‌ஷ, 2013ஆம் ஆண்டில், இலங்கைச் சட்டத்தில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இடமிருப்பதாக சர்வதேசத்திடம் கூறியதையும் சுமந்திரன் எடுத்துரைக்கின்றார்.

அப்படியான கட்டத்தில், “அரசியல் தீர்மானமொன்றை எடுக்காது, பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்தும் அலைக்கழிக்கும் வேலையை, தென் இலங்கை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாது” என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு ஜனநாயக அரசாக, சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி செயற்படத்தவறும் பட்சத்தில், சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்று, இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்துவது சார்ந்து சிந்திக்கத் தலைப்படுவோம் என்பதையே, சுமந்திரன், சர்வதேச நீதி விசாரணையை நாட வேண்டியிருக்கும் என்கிற உரையாடல் வழி, பேச விளைந்திருக்கிறார்.

இதைத் தாண்டிய வேறொன்றை இங்கு புரிந்து கொள்ள முடியாது. வேண்டுமென்றால், தேர்தல்களை இலக்கு வைத்த உரையாடலை அவர் நிகழ்த்தியிருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், அது அவ்வளவுக்கு எடுபடும் வாய்ப்புகள் இல்லை.

புருஜோத்தமன் தங்கமயில்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News