ilakkiyainfo

ilakkiyainfo

எந்திரன்! – சிறப்பு கட்டுரை

எந்திரன்! – சிறப்பு கட்டுரை
November 27
01:15 2018

“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர்.

இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்கிரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர்.

ஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

தேசிய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு உருவானபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏராளமான விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார் என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

“மைத்திரியை, நாங்கள்தான் ஜனாதிபதியாக்கினோம்” என்று, ஐக்கிய தேசியக் கட்சி உரிமை கொண்டாடி வந்தது. அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ‘நல்லது கெட்டது’களை எல்லாம், ஜனாதிபதியான புதிதில், போட்டுப் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலைவரம் மைத்திரிக்கு இருந்தது.

மைத்திரியின் அந்தச் சூழ்நிலையை, ஐக்கிய தேசியக் கட்சி ‘மிக நன்றாக’ப் பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் உண்மையாகும்.

மைத்திரியை, ஒரு ‘வெற்று’ ஜனாதிபதியாக வைத்துக் கொண்டு, தமது காரியங்களைச் சாதிக்க நினைத்தவர்கள், தேசிய அரசாங்கத்தில் இருந்துள்ளனர். மத்திய வங்கியின் பிணை முறியில் நடந்த ‘கொள்ளை’, அதைத்தான் நமக்குச் சொல்கிறது.

புதிய ஜனாதிபதிக்கு, ‘கூச்சம்’ தெளியத் தொடங்கிய போது, மைத்திரியை ‘பொம்மை’யாக வைத்துக் கொண்டு, ஆட்சி நடத்தலாம் என்று நினைத்தவர்களின் கனவுகள் தகர்ந்ததையும் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜனாதிபதி முரண்படத் தொடங்கியமையையும் கண்டோம்.

தேசிய அரசாங்கத்தில் நடந்த சில விடயங்கள் குறித்து, ஜனாதிபதி மைத்திரி இப்போது கூறும்போது, “அவை எனக்குத் தெரியாமல்தான் நடந்தன” என்கிறார்.

இப்படிச் சொல்வது, ஆளுமையுள்ள ஒரு தலைவருக்கு, அழகல்ல என்பது ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல.

ஆனால், அதையும் தாண்டி, “தேசிய அரசாங்கத்தில் நடந்த சில விடயங்கள் குறித்து, எனக்குத் தெரியாது” என்று ஜனாதிபதி கூறுகின்றார் என்றால், அதனூடாக அவர் எதையோ, சொல்ல வருகின்றார் என்கிற மிகச் சாதாரண உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், “இப்படிச் சொல்வதற்கு, இவருக்கு வெட்கமில்லையா” என்கிற கேலிகளைத்தான், நம்மில் கணிசமானோரிடம் காண்கிறோம்.

தேசிய அரசாங்கம் உருவானதை அடுத்து, நடைமுறைப்படுத்தப்பட்ட ‘நூறு நாள் திட்டத்தை’ யார் வகுத்தார்கள் என்றே, தனக்குத் தெரியாது என்று, ஒரு தடவை ஜனாதிபதி கூறியிருந்தார்.

அது உண்மை என்றால், மைத்திரியை ஒரு ‘பொம்மை’ ஜனாதிபதியாக வைத்துக் கொண்டு, ஓர் ஆட்சி நடந்திருக்கிறது என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் ‘பொம்மை’, இத்தனை தூரம் கோபமும் பிடிவாதமும் கொள்ளும் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்க்காததன் விளைவுகளைத்தான் இப்போது, அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தில், விஞ்ஞானி வசீகரனின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டு வந்த, ‘சிட்டி’ என்கிற ரோபோ (எந்திரன்), ஒரு கட்டத்தில் சுயமாக இயங்கத் தொடங்குகிறது.

தன்னை உருவாக்கிய விஞ்ஞானிக்கே, அந்த ரோபோ சவாலாக மாறுகிறது. அந்தக் கதையை, நமது சமகால அரசியலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்துகிறது. சிட்டி – மைத்திரி, வசீகரன் – ரணில்.

Sri-Lanka-Prime-Minister-Ranil-Wickremesinghe எந்திரன்! - சிறப்பு கட்டுரை எந்திரன்! - சிறப்பு கட்டுரை Sri Lanka Prime Minister Ranil Wickremesinghe

இன்னொருபுறம், ரணில் விக்கிமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து மைத்திரி விலக்கி, ஒரு மாதம் கடந்து விட்டது.

ஆனால், அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும், இதுவரை ‘வேலைக்கு’ ஆகவில்லை. ரணிலைப் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில், மைத்திரியின் பிடிவாதம் ‘சொட்டும்’ குறையவில்லை என்பது கவனத்துக்குரியது.

வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகளை, ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சந்தித்தபோது, கூறிய ஒரு விடயத்தை, இங்கு அதீத கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

அதாவது, “பிரதமராகத் தெரிவு செய்யப்படுகின்றவர், ஜனாதிபதிக்குப் பொருத்தமானவராகவும், ஜனாதிபதியுடன் நல்லுறவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்” என்று, மைத்திரி கூறியிருந்தார்.

இது முக்கியமான விடயமாகும். ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் ஜனாதிபதியையும் பிரதம மந்திரியையும் கொண்ட அரசாங்கமொன்றால், சிறந்ததோர் ஆட்சியை வழங்க முடியாது.

அப்படிப் பார்த்தால், ரணில் மீது, ஜனாதிபதி கொண்டுள்ள ஒவ்வாமை மனநிலையுடன், அவரைப் பிரதமராக்கி, அரசாங்கம் ஒன்றைக் கொண்டு செல்வதென்பது, சவாலானதாகவே இருக்கும்.

எனவே, இந்த இடத்தில் நாட்டின் நன்மை கருதி, ரணில் விட்டுக் கொடுத்தால் என்ன என்கிற கேள்வியும் மக்களிடம் உள்ளது.

மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த அரசாங்கத்தில் குறுக்கு வழியினூடாகப் பிரதமர் பதவியைப் பிடித்துக் கொண்டமை குறித்து, பெரும்பாலானோர் அதிருப்தியுடனேயே உள்ளனர்.

எனவே, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்ற வேண்டிய தேவை உள்ளது. அதற்காகவேனும், தன்னையன்றி வேறொரு நபரை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க ஏன் பிரேரிக்கக் கூடாது என்கிற ஆதங்கமும் மக்களிடம் உள்ளது.

இந்தியாவில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது, அதன் தலைவர் சோனியா காந்தி, வேறொருவரைப் பிரதமர் பதவியில் அமர்த்தியமை போன்ற வரலாறுகள், நமக்கு முன்னே உதாரணங்களாக உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணிலும், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நபரும் இருப்பதன் மூலம், இப்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணும் சாத்தியத்தை, சம்பந்தப்பட்டோர் சாதகமான முறையில் ஏன் பரிசீலிக்கக் கூடாது?

இன்னொருபுறம், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு இணங்க, ஐக்கிய தேசிய முன்னணியினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் போதுதான், அவர்கள் தமக்கான பிரதமர் பதவியைக் கோர முடியும். அதை ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு நாடாளுமன்றில் 113 எனும் பெரும்பான்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் மனது வைத்தால்தான், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

இந்தநிலையில், ரணிலுக்குத் தமது ஆதரவு கிடையாது என்று, மக்கள் விடுதலை முன்னணி ‘அடித்து’ச் சொல்லி விட்டது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் முரண்பாடு உள்ளதால், அந்தக் கட்சியின் ஆதரவும் ரணிலுக்குக் கிட்டாது போலவே தெரிகிறது.

இதற்கிடையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து துமிந்த திஸாநாயக்க தலைமையில், ஒரு குழு விலகிச் செயற்படவுள்ளதாக கதையொன்று உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தக் குழுவைச் சுதந்திரக் கட்சியிலிருந்து ‘உடைத்து’ எடுத்து விட்டார் என்றும், தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், அதிகாரபூர்வமாக இதைச் சம்பந்தப்பட்ட குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. சிலவேளை, அந்தத் தகவல் உண்மையாயின், அவ்வாறு சுதந்திரக் கட்சியிலிருந்து ‘உடைத்து’க் கொண்டு செல்லும் குழுவினர், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கினால், அப்போது சில காட்சிகள் மாறக் கூடும்.

மறுபுறமாக, நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகள் டிசெம்பர் ஏழாம் திகதி வருகின்றன. இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எதுவாகவும் இருக்கலாம்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை, சட்டப்படி சரியானது என்று, நீதிமன்றம் கூறிவிட்டால், இப்போதுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடும்.

ஆனால், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி இப்போதைக்குக் கலைக்க முடியாது என்று, நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால், இப்போதுள்ள பிரச்சினை, தொடர்ந்தும் நீண்டு கொண்டு செல்வதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக உள்ளன.

எனவே, மைத்திரியின் மனமாற்றம் அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் விட்டுக் கொடுப்பு ஆகியவைதான், இப்போதுள்ள பிரச்சினைக்கு இலகுவானதொரு தீர்வைப் பெற்றுத் தரக் கூடியவையாக உள்ளன.

தாய் நாடு மீது, பேரன்பு கொண்டவர்களாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் இருவரும், தமது பிடிவாதங்களையும் அதிகாரத் திமிரையும் ஒதுக்கி வைத்து விட்டு, இப்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முயற்சிக்க வேண்டும்.

இந்த இடத்தில், இன்னொரு விடயம் குறித்தும் பேச வேண்டியுள்ளது. தன்னைத் தவிர்த்து, வேறொரு நபரை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்வதற்குத் தீர்மானித்தாலும், அங்கும் சில பிரச்சினைகள் எழுத்தொடங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியாளராக வரக் கூடிய ஒருவரை, பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்ய மாட்டார் என்கிற கருத்துகள் அரசியலரங்கில் உள்ளன.

sajith-premadasa எந்திரன்! - சிறப்பு கட்டுரை எந்திரன்! - சிறப்பு கட்டுரை sajith premadasa

சஜித் பிரேமதாஸ

உதாரணமாக, சஜித் பிரேமதாஸவைப் பிரதமர் பதவிக்கு, ரணில் பிரேரிக்க மாட்டார் என்கிற பேச்சு உள்ளது. அப்படிச் செய்வது, ரணிலின் கட்சித் தலைவர் பதவிக்கு, ஆபத்தாக அமைந்து விடக் கூடும் என்கிற அச்சம் உள்ளது.

அப்படியாயின், ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ‘நட்சத்திர’ அந்தஸ்துக் குறைந்த ஒருவரையே, பிரதமர் பதவிக்கு ரணில், சிபாரிசு செய்வார் என எதிர்பார்க்க முடியும். ஆனால், அதற்குக் கட்சியிலுள்ள பெரும்பான்மையினர் விரும்புவார்களா என்கிற கேள்வியும் உள்ளது.

எனவே, பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, வேறொரு நபரை அந்தப் பதவிக்குச் சிபாரிசு செய்வது கூட, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலேசுப்பட்ட காரியமாக, இருந்து விடப் போவதில்லை.

கூர்மையாகப் பார்க்கும் போது, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மிக மோசமான பொறிகளுக்குள் சிக்கியிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க போலதான் தெரிகிறது.

- ரணிலைப் பிரதமராக நியமிக்க முடியாது எனும் மைத்திரியின் பிடிவாதம்.
- ஐக்கிய தேசிய முன்னணிக்கு, நாடாளுமன்றில் 113 பெரும்பான்மை காட்ட முடியாத இக்கட்டு.

- தன்னைத் தவிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள், யாரைப் பிரதமர் பதவிக்குச் சிபாரிசு செய்வது என்கிற குழப்பம் போன்ற பல பிரச்சினைகள், ரணில் விக்கிரமசிங்க முன்பாக எழுந்து நிற்கின்றன.

இந்தப் பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகத் தீர்க்க முடியாது. அதனால்தான், மேலுள்ளவற்றைச் செய்து காட்டுமாறு கூறி, ரணில் பக்கமாகப் பந்துகளை, ஜனாதிபதி மைத்திரி வீசிக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் பந்துகளை அடித்தாடுவதென்பது, இலேசுப்பட்ட காரியமல்ல என்பதை, ரணில் மிக நன்கு அறிவார்.

அதனால்தான், இந்தப் பிரச்சினைகளை வேறு வகைகளில் கையாள்வதற்கான முயற்சிகளில், ரணில் ஈடுபட்டு வருகின்றமையைக் காண முடிகிறது.

பேரணிகளை நடத்துவதும், பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதும், வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறையிடுவதும், அவர்கள் மூலம் மைத்திரிக்கு அழுத்தம் கொடுப்பதும் ரணிலின் ‘வேறு வகை’ முயற்சிகளாகும்.

சரியாகக் சொன்னால், மைத்திரின் பந்துகளை அடித்தாடுவதற்கு, ரணில் அச்சப்படுகிறார் போலவே தெரிகிறது.

-முகம்மது தம்பி மரைக்கார்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News