ilakkiyainfo

ilakkiyainfo

கண்ணீர்… களங்கம்… கொலைப்பழி! – சசிகலா நெக்ஸ்ட்?

கண்ணீர்… களங்கம்… கொலைப்பழி! – சசிகலா நெக்ஸ்ட்?
January 06
07:00 2017

 

உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?!

அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என… நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார்.

சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல… அதிர்ஷ்ட அம்மா!

`ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொண்டேன்.

ஆனால், இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசும் ஒரு சூழல் எனக்கு உருவாகியிருக்கிறது. உங்களின் அன்புக்கட்டளையை ஏற்கவேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் கனவிலும் நினைக்காத ஒன்று, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது’ என, கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சசிகலா கண்ணீரோடு உரையாற்றத் தொடங்கினார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, சசிகலா கைக்குத்தான் கட்சி போகும் என கணக்குப்போட, யாருக்கும் தமிழ்நாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜெயலலிதாவையும் சசிகலாவையும் ஒரே ஒருமுறை பார்த்தவர்கள்கூட இதை உணர்ந்துவிடுவார்கள்.

இறந்துபோன எம்.ஜி.ஆரின் உடல் அருகே ஜெயலலிதா இருந்தபோது, ஒட்டிய கன்னங்களுடன் உடன் இருந்த சசிகலாவை ஏதோ பணிப்பெண் என்றுதான் நினைத்திருப்பார்கள் பலர்.

ஆனால், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதன்முறையாக  முதலமைச்சர் ஆனபோது சட்டமன்றத்துக்குள் தன்னோடு சசிகலாவையும் அழைத்துவந்து உட்காரவைத்தபோதே, இவரே ‘அடுத்த கண்’ என உணர்த்தப்பட்டார்.

போயஸ் கார்டனுக்குள் போனவர்களுக்கும் அதிகார மையங்களில் வலம்வருபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது, சசிகலா நினைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும் என்று.

சசிகலா நினைப்பதைத்தான் ஜெயலலிதா செய்கிறார் என்று,  சசிகலாவைப் பகைத்துக்கொண்டால் அ.தி.மு.க-வில் எதிர்காலமே இல்லை என்று. அந்த அளவுக்கு தனது இருப்பை ஜெயலலிதாவுடன் நெருக்கப்படுத்திக்கொண்டார் சசிகலா.

10p2  கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? 10p2

‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்’ என்ற அடைமொழியுடன் சுதாகரன் – சத்தியலட்சுமி திருமணம் நடந்தபோது ‘அடுத்த கண்’ என்பது மட்டும் அல்ல, ஜெயலலிதாதான் சசிகலா… சசிகலாதான் ஜெயலலிதா என்பதும் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது.

கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி புனித நீராடியதன் மூலமாக, உலகத்துக்கு உரக்கச் சொன்னார்கள்.

1996-ம் ஆண்டு தேர்தலின் மரண தோல்விக்கு, இது மட்டுமே போதுமானதாக இருந்தது.

கண்துடைப்புப் படலமாக, சசிகலாவை சில நாட்கள் கட்சியைவிட்டு  நீக்கிவைத்திருந்தார் ஜெயலலிதா. அப்போது,  சசிகலா சிறையில் இருந்தார்.

அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஜெயலலிதா, வீட்டுக்கு வந்ததும் அவரை நீக்கினார். சில நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா.

அவர் நேராக போயஸ் கார்டனுக்கு வந்ததும், ஆரத்தித் தட்டுடன் நின்றுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அப்பட்டமான நாடகம் இது. நாடகம் பார்ப்பதில்தானே நமக்கு அலாதியான ப்ரியம்.

1997-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, சசிகலாவின் குடும்பம் ஆக்டோபஸ் போல ஜெயலலிதாவை வளைத்துக்கொண்டது. ஜெயலலிதாவுக்கும் இந்த வலைதான் வசதியாகவும் இருந்தது.

மூன்று முறை (1991, 2001, 2011) ஆட்சியின்போதும் முறைவைத்து இயக்கியது சசிகலா குடும்பத்தினர்தான். குடும்பத்தில் தலைகள் மாறியிருக்கலாம்.

ஆனால், குடும்பம் மாறவில்லை. டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு மட்டும்தான் கட்சிப் பதவிகள் நேரடியாகத் தரப்பட்டன.

ஆனால், மற்றவர்கள் அனைவரும் கட்சியையும் ஆட்சியையும் நேரடியாகவே இயக்கினார்கள். டெண்டர்கள் இவர்கள் இல்லாமல் நடக்காது.

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இவர்களே பேசினார்கள். இவர்கள் நினைத்த ஆட்களுக்கு மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உரிமை தரப்பட்டது. இவர்கள் நினைத்தவர்கள் மட்டுமே அமைச்சர்கள் ஆனார்கள்.

பலரது தலைகளை உருட்டியதும் இவர்கள்தான். இதுவரை மறைமுகமாகக் கோலோச்சிவந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் மரணம் நேரடியாகவே வந்து உட்கார பாதை அமைத்துக் கொடுத்துவிட்டது.

10p3  கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? 10p3

இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரிந்தே நடந்தன. அவருக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவுக்கு இவை எல்லாம் தெரியாமல் நடந்தன என்று சொன்னால், ஜெயலலிதாவுக்கு என உருவகப்படுத்தும் ஆளுமைத்திறன் அனைத்துமே பொய் என்றாகிவிடும்.

‘ஜெயலலிதா நல்லவர்; சசிகலாதான் கெட்டவர்’ என சிலர் சுருதி மாற்றிப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது உறவுகள் செய்தவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரியும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலா மற்றும் அவரது உறவுகளின் நடவடிக்கைகளை, ஜெயலலிதா பட்டவர்த்தனமாக நியாயப்படுத்திப் பேசினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தைக் கவனித்து வந்தார்.

அவர் திடீரென இறந்துபோனார்.  அவரது மனைவிதான் இளவரசி.  இவர்களது மகள் கிருஷ்ணப்ரியாவின் திருமணம், 2000-ம் ஆண்டு நடந்தது.

‘எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சந்தித்த அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்’ என்று ஜெயலலிதாவே பேசினார்.

தனக்காகவும் அ.தி.மு.க-வுக்காகவும், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் வாழ்கிறார்கள் என, தனது வாயாலேயே மாலை கட்டிய சசிகலாவுக்குத்தான் இன்று பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

டாக்டர் வெங்கடேஷ் திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய ஜெயலலிதா, ‘என்னோடு துணையாக இருந்து, எல்லா வகைகளிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று காரணம் கற்பித்தார்.

அப்போது மணமேடையில் இருந்த சசிகலா அழுதார். இதோ இப்போதும் சசிகலா அழுகிறார். அன்று அக்கா அங்கீகாரம் தந்தார். இன்று அக்கா, தான் வகித்த பதவியையே தந்துவிட்டுப் போய்விட்டார்.

‘எனக்கு இப்போது 62 வயது. என்னுடைய 29-வது வயது முதல் நம் இதயதெய்வம் அம்மாவோடுதான் இருந்துள்ளேன். எஞ்சி இருக்கும் காலத்தை, கழகத்துக்காக வாழ்வேன்’ என்று சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சபதம் சரி. ஆனால், நிலைமை சரியில்லையே!

10p4  கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? 10p4

சசிகலாவின் பொதுவாழ்வு என்பது, கொலைப்பழியோடு தொடங்குகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, சசிகலா ஏதோ செய்துவிட்டார், சசிகலா எதையோ மறைக்கிறார் போன்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றன.

அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது. இது ஏதோ அரசியல் குற்றச்சாட்டுகளைப்போல சாதாரணமானது அல்ல, அதற்கு மேம்போக்கான பதில் அல்ல. உண்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் சசிகலா வைத்தாக வேண்டும்.

‘நன்கு உடல்நலம் தேறிவந்த நம் அம்மா, தலையில் இடி விழுந்ததைப்போல நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக்கொண்டான்’ என்று சசிகலா பேசியதைக் கேட்கும்போது சந்தேகம்தான் கூடுகிறது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதயத்துடிப்பு நின்றுபோனதாக அறிவிக்கப்பட்டது வரையிலான 75 நாட்களும், சிரித்தார், பேசினார், டி.வி பார்த்தார், கிச்சடி சாப்பிட்டார், பந்து தூக்கிப்போட்டார், நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார், ‘போயஸ் கார்டன் வந்தால் காபி எப்படிப் போடணும் எனச் சொல்லித் தருகிறேன்’ என்றார், டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார் என்று பல நூறு குணச்சித்திரக் காட்சிகள் பரப்பப்பட்டன.

அதாவது கார்டியாக் அரெஸ்ட் ஆவதற்கு முன்பு வரை நன்றாக இருந்தார் என்றே சொல்லப்பட்டது. சசிகலாவும் அதைத்தான் சொல்கிறார்.

‘நன்றாக இருந்த’ ஜெயலலிதாவை, யாருக்குமே காட்டாமல் மறைத்துவைத்திருக்கவேண்டிய மர்மம் என்ன? தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என, ஒருவேளை ஜெயலலிதாவே நினைத்துத் தடுத்திருக்கலாம் என்றால், அவர் இல்லாத நிலையில் மருத்துவம் பற்றி பேசத் தயங்குவது ஏன்?

10p5  கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? 10p5

டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்னர் வரை ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டால், ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால், சசிகலா மீதான களங்கம் துடைக்கப்படுமே. என்ன தயக்கம், ஏன் தயக்கம்?

‘கொலைப்பழியோடு’ பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார் சசிகலா. ‘கொலைப்பழியோடு’ முதலமைச்சராகவும் ஆகலாம். இவை இரண்டுமே தானாக வருவன.

ஜெயலலிதா தந்துவிட்டுச் சென்றது. யாராலும் தடுக்க முடியாதது. ஆனால், மக்கள் மன்றத்தில் நேரடியாக வாக்குக் கேட்டு சசிகலா செல்லும்போதுதான் இந்தக் கறை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் எழும்.

அவருக்கும் உணர்த்தப்படும். இரண்டு சொட்டு அழுகை, இந்தக் கறையை நீக்கிவிடாது. தன் மீதான பழியை அவர் உடனடியாகத் துடைத்தாக வேண்டும்.

சசிகலாவிடம் கேட்பது மிகவும் சாதாரணமான ஒரு கோரிக்கைதான்…

ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு வீடியோ கேசட் வெளியிடுங்கள். கேசட் ரிலீஸ் செய்ய, உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டுமா என்ன?

ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார்

 

சசிகலா வசமாக மாட்டிக்கிட்டார்

 

Exclusive: Interview with Nanjil Sampath on Quitting AIADMK | Puthiya Thalaimurai TV

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News