ilakkiyainfo

ilakkiyainfo

கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3)

கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை??  (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3)
September 22
06:29 2016

சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கலான பிரச்னைகள்

சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளா விட்டால் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைகின்றன. இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆணிவேர்.

ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் , சரியான ரத்த ஓட்டம் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்காமல் ஒவ்வோர் உறுப்பும் பாதிப்புக்குள்ளாகிறது.

குறிப்பாக , சிறுநீரகச் செயலிழப்பு , இதயச் செயலழிப்பு , பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு ரத்த நாள பாதிப்புகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.

ரத்த நாளங்கள் பாதிப்படைவது ஒருபுறமிருக்க , ரத்தக்குழாய்கள் சுருங்கிவிடும் பிரச்னையும் இந்த நோயால் உண்டாகிறது. பொதுவாக , சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் , இன்சுலின் சுரப்பு இருந்தாலும்கூட அது முழுமையாக வேலை செய்யாது.

இதனால் , கல்லீரலில் கொழுப்புச் சத்து பிரிக்கப்படும் செயல்பாட்டில் சிறிது சிறிதாகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து , கெட்ட கொழுப்புகள் அப்படியே ரத்தத்தில் படிய ஆரம்பித்துவிடும்.

இந்தக் கொழுப்புகள் , பற்களின் மீது படியும் மஞ்சள் நிறக் கறைகளைப்போல் , ரத்தக் குழாய்களின் சுவரிலும் படிந்து , குழாய்களின் உள் சுற்றளவைக் குறைத்துவிடும்.

நாளடைவில் அந்த வழியே ரத்தப் போக்குவரத்து சரியாக நடக்காத அளவுக்கு ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும்.

இவ்வாறு ரத்தக் குழாய்கள் சுருங்குவதால் , அந்தக் குறுகிய பாதையின் வழியே ரத்தம் பாயும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும் ; இதயப் பிரச்னைகள் உருவாவதால் அடிக்கடி நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கும்.

சிலசமயம் திடீரென மாரடைப்பும் வரலாம்.
tw99rmg  கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை??  (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3) tW99RMG
காயம் ஏன் ஆறுவதில்லை ?

பொதுவாக , இதயத்துக்கு அருகில் உள்ள உறுப்புகளில் காயம்பட்டால் , அது கொஞ்சம் விரைவாக ஆறிவிடுவது உண்டு.

ஆனால் , இதயத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கால் பகுதியில் காயம் பட்டால் ஆறுவதற்குத் காலதாமதமாகும்.

இதற்கு என்ன காரணம் என்றால் , அதிக சர்க்கரையால் ரத்த நாளங்கள் சுருங்கிவிடுவதால் , காலுக்கு சரியான ரத்த ஓட்டம் இருக்காது.

இதயம் சுருங்கி விரியும் செயல்பாட்டினால் வெளியேறும் ரத்தம் , நீண்ட தொலைவில் உள்ள கால்களுக் குப் பயணித்து அந்தப் பகுதியை முழுமையாக அடையாது.

தவிர , காயம் பட்ட இடத்தில் அதிகமான சர்க்கரை இருக்கும்.

ஆனால் , ரத்தத்தில் காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும்.

குறிப்பாக , வெள்ளை அணுக்கள் சரிவர செயல்படாத நிலை உண்டாகி விடும். இதனால்தான் இத்தகைய பிரச்னைகள் வருகின்றன. காயம் ஆறாத பட்சத்தில் அதைச் சுற்றி சிவப்புப் புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

கிருமிகள் தொடர்ந்து அதன் வழியாகத் தொற்றுவதால் காயம் அழுகவும் ஆரம்பிக்கும். இதனால்தான் நோயாளிகளுக்குக் காலில் அடிபட்டால் விரைவில் ஆறுவதில்லை.

இப்படிப்பட்ட பிரச்னைகள் வரக் கூடாது என்பதால்தான் , சர்க்கரை நோயாளிகள் நகத்தைக்கூட ஒட்ட வெட்டக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள்.

நகத்தை வெட்டப்போய் , கொஞ்சம் சதையை வெட்டிக்கொண்டால்கூட அது ஆறாமல் புரையோடிப் போய்விடும். இறுதியில் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும்.

கால்களுக்கு ஏற்படும் பாதிப்பு காலின் நுனிப்பகுதியில் எரிவது போன்ற உணர்ச்சி , சுருக் சுருக் எனக் குத்தும் உணர்வு , உணர்ச்சியின்றி மரத்துப்போதல் , தரையில் நடந்தாலும் பஞ்சின் மீது நடப்பது போன்ற உணர்வு போன்றவை இருக்கும்.

இந்த நிலைக்கு வந்துவிட்ட நோயாளிகளால் , கால் இடறி கீழே விழுந்தாலோ அல்லது எதிலாவது இடித்துக் கொண்டாலோகூட தாங்கள் காயப்படுவதை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. எனவே , நடக்கும்போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

காலில்  நகங்கள் வளர்ந்தால் மேலோட்டமாக வெட்டி எடுக்க வேண்டும்.

அதேசமயம் , காலில் தசைகள் வளர்ந்தால் அவற்றை நீங்களாக வெட்டியெடுக்காமல் , மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.

காலில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது , கொசு , கரப்பான் , எலி போன்றவை கடிக்க இடம் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இறுக்கமான , கால்களைக் கடிக்கும் காலணிகள் அணிவதைத் தவிர்த்துவிடுங்கள்.

ரத்த நாளங்களைச் சுருங்கவைக்கும் புகைப் பழக்கம் , உடற் பயிற்சியின்மை ஆகியவற்றைத் தவிருங்கள்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது , கூடுதலான குளுக்கோஸ் பொருளானது சக்தியாக மாற்றப் படாமல் ‘ சார்பிடால் ’ என்ற வேதிப் பொருளாக மாறும்.

இது கால் நரம்புகளில் அதிகமாக இருக்குமானால் காலின் உணர்ச்சி குறையத் தொடங்கும். இரவில் படுக்கும்போது பாதத்தில் எரிச்சல் , ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும்.

தவிர , தாகம் , அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு , கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படும். கால்களில் உணர்ச்சி மாற்றங்கள் அவ்வப்போது வரும் நிலையிருந்தால் அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
human-kidneys-701  கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை??  (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3) human kidneys 701
சர்க்கரை நோயால் சிறுநீரகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

சர்க்கரை நோய் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவு புரதச் சத்து வெளியேறும்.

இதனால் , உடலின் சமச்சீர் நிலை குறையும். இதை ஆரம்ப நிலையிலேயே மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை மூலமாகக் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.

சிறுநீரில் புரதச் சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை ரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கலாம்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறி விடுவதால் உடல் பருத்தும் , கை கால்கள் வீங்கியும் காணப்படும்.

கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சர்க்கரை யால் பாதிக்கப்பட்ட நபர் , ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு , சிறுநீரகத்துக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது ?

சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

சர்க்கரை நோயின் காரணமாக கூடுதல் பணியைச் செய்யவேண்டியிருப்பதால் நாளடைவில் சிறுநீரகம் தளர்வடைந்து சரியாக சுத்திகரிப்புப் பணியைச் செய்ய இயலாது.

தவிர , ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகத்தில் உள்ள சிறுநீர் வடிகட்டிகள் அதைச் சரியாகச் சுத்திகரிக்காமல் விட்டுவிடுகின்றன.

இதனால் கழிவுப் பொருள்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இந்த நிலையில்தான் நிறைய பேருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கிறது.

40 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயாலும் , 20 சதவீதம் பேருக்கு மிகை ரத்த அழுத்தம் காரணமாகவும் நிரந்தரமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது.

ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்படாமல் இருந்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது தெரியும்.

தொடர்ந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

இதற்கு டயாலிசிஸ் செய்யவேண்டி இருக்கும். இதனால்தான் , சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்ததுமே , சிறுநீர்ப் பரிசோதனை செய்து ‘ ஆல்புமின் யூரியா ’ என்ற புரதப் பொருள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

சிறுநீரில் ஆல்புமின் யூரியாவின் அளவு முப்பது மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்.

இதற்கு மேல் இருந்தால் சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட ஆரம்பித் திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையையும் பெறவேண்டும்.

1459416437-7262  கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை??  (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3) 1459416437 7262
கர்ப்பக் காலத்தில் சர்க்கரை
கர்ப்பக் காலத்தில் பொதுவாக ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். தாயின் உடலில் ரத்த அளவும் அதிகரிக்கும். ரத்த அளவுக்கு ஏற்ப ரத்தச் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

இந்த அளவை   ஈடுசெய்வதற்காக அதிகமான இன்சுலினை கணையம் சுரக்கவேண்டியிருக்கும். இந்தச் செயல்பாட்டில் குறைபாடு தோன்றி கணையம் போதுமான இன்சுலினை சுரக்காவிட்டால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

இவ்வாறுதான் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் தோன்றுகிறது. இதைப் பரிசோதனை செய்யாவிட்டால் தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாது.

குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். கர்ப்பக் காலத்தில் சுமார் பதினேழு சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

கருத்தரித்த காலத்தில் சர்க்கரை நோய் இருந்து குழந்தை பிறக்க நேரிட்டால் குறைப்பிரசவம் , அதிக எடையுடன் குழந்தை பிறத்தல் , வயிற்றிலோ அல்லது பிறந்த உடனோ குழந்தை இறந்துவிடுதல் , பிறவியிலேயே ஊனமாகப் பிறத்தல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரைப் பரிசோதனை ஒவ்வொரு மாதமும் பெண்ணின் கரு வளர்வதால் தாய்க்கு அதிக ஊட்டம் தேவைப்படுகிறது. ரத்த அளவும் அதிகரிக்கிறது.

இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கிறது. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை என குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

குறிப்பாக , கர்ப்பம் தரித்த பதினாறாவது வாரம் (நான்காவது மாதம்) , இருபத்து நான்காவது வாரம் (ஆறாவது மாதம்) , முப்பத்திரண்டாவது வாரம் (எட்டாவது மாதம்) ஆகிய காலங்களில் கண்டிப்பாக ரத்தச் சர்க்கரை பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் ஊசி மருந்து போடக் கூடாது எனக் கூறப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் , இன்சுலின் ஊசி குழந்தைக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே , இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் , மாத்திரை எடுத்துக்கொள்வதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கென எல்லா மருத்துவமனைகளிலும் உணவுத் திட்டம் இருக்கும். திட்டமிட்ட உணவு முறையால் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

இனிப்புப் பொருள்களைத்  தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடுவதைப்போல் , உணவைப் பிரித்துக்கொண்டு சாப்பிட்டுப் பழக வேண்டும்.

ஒரு குழந்தையைச் சுமக்கும்போது தாய்க்குச் சர்க்கரை நோய் இருந்தால் , அடுத்த குழந்தையைச் சுமக்கும்போதும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. முதல் குழந்தையைச் சுமக்கும்போது சர்க்கரை இல்லாமல் இரண்டாவது குழந்தையைச் சுமக்கும்போதுகூட சர்க்கரைப் பிரச்னை உண்டாகலாம்.

சில பெண்கள் , பிரசவத்துக்குப் பிறகு உடல் நலன் மீது அக்கறை காட்டுவதில்லை. இதனால் உடற்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சர்க்கரை நோயுன் வந்துவிடுகிறது.

ஆகவே , உடற்பயிற்சி , உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் பிரச்னைகள் பற்றி விளக்கமாகப் பேசியாகிவிட்டது. இந்த நோய்க்கான காரணங்களையும் , பரிசோதனை முறைகளையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.

இன்சுலின் சாராத சர்க்கரை நோய் (டைப் – 2) எப்படி உருவாகுகிறது?? பாதிப்புகள் என்ன?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-2)

சக்கரை நோய் ஏன் வருகிறது??

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News