ilakkiyainfo

ilakkiyainfo

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? – புருஜோத்தமன் (கட்டுரை)

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? – புருஜோத்தமன் (கட்டுரை)
February 22
00:07 2018

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள்.

தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள்.

அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்கான வெளி தமிழ்ச் சூழலிலும் பெரியளவில் ஏற்பட்டிருக்கவில்லை.

அல்லது எடுபடவில்லை. கேள்விகள், விமர்சனங்களுக்கு அப்பால் நின்று, ஓரணியில் திரள்வதே பலம் என்று நம்பி வந்திருக்கின்றார்கள். ஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள், ஓரணியில் திரள வேண்டும் என்கிற நிலையைக் குறிப்பிட்டளவு தளர்த்தியிருக்கின்றது.

அது, மக்களை மாற்றுக் குரல்களையும் மாற்றுத் தெரிவுகளையும் பரிசீலிக்கவும் வைத்திருக்கின்றது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (நேரடியாக ‘தமிழரசுக் கட்சி’ என்று கொள்வதே பொருத்தமானது.) சந்தித்த பின்னடைவு, அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அலை, நாடு பூராவும் வீசிக்கொண்டிருந்த போது, அந்த அலைக்குள் தமிழ் மக்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

தமது நிலைப்பாட்டைத் தங்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகப் பிரதிபலித்து, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, அதை அங்கிகரித்தார்கள்.

அந்த அங்கிகாரத்தின் அடுத்த கட்டமாக, 2015 பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு ஏக பிரதிநிதிகள் என்கிற நிலைக்கு அண்மித்த வெற்றியைப் பரிசளித்தார்கள்.

2009 முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்ட மக்கள், அதன் பின்னர் அடக்கு முறைகளுக்கு எதிராக, ஓரணியில் திரளும் போக்கில் இருப்பதில், நம்பிக்கையான தரப்பு என்கிற அடிப்படையில் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.

ஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள் என்பது, சிறிய ஜனநாயக வெளியைத் தமிழ் மக்களை நோக்கித் தள்ளியது. அது, முடங்கிப் போயிருந்த அரசியல் உரையாடல் வெளியைக் குறிப்பிட்டளவு திறந்து விட்டது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பங்காளிகள் என்கிற வகையில் கூட்டமைப்பினரைத் தமிழ் மக்கள், தமது ஆளும் கட்சியாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்.

வடக்கு மாகாண சபையில், சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சியமைக்கும் போது, அதை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாகவே மக்கள் முன்மொழிந்தார்கள்.

ஆனால், ஆட்சி மாற்றம் என்பது, கூட்டமைப்பே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் மீது ஆளுங்கட்சி அடையாளத்தைக் கொடுக்க வைத்தது. அதன்பின்னரான நாட்களில், வடக்கு மாகாண சபைக்குள் எழுந்த குழப்பங்கள் மக்களினால் இரசிக்கப்படவில்லை.

அத்தோடு, தமிழரசுக் கட்சி எதிர்கொண்டிருக்கின்ற அக முரண்பாடுகளும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழரசுக் கட்சிக்குள் சிரேஷ்ட- கனிஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான தலைமுறை இடைவெளி மாத்திரமல்ல, பதவிகளுக்கான அலைச்சலும் பெரும் பிரச்சினையாகும்.

தமிழ்த் தேசிய அரசியலில் தற்போதுள்ள கட்சிகளில் தமிழரசுக் கட்சியே பெரிய கட்சி. அந்தக் கட்சியே தற்போதும் உறுப்பினர்களை வெளிப்படையாக இணைத்துக் கொள்கின்றது.

தொகுதி – பிரதேச வாரியாக, நிர்வாக உறுப்பினர்களை நியமித்துச் செயலாற்றுகின்றது. ஆனால், கட்சியின் கட்டுமானத்தில் படிப்படியாக முன்னேறிச் செல்வது – அதற்காகச் செயலாற்றுவது என்கிற நிலைகளுக்கு அப்பால், யாரோடு இருந்தால் பதவிகளை இலகுவாக அடையலாம் என்கிற நிலை, தமிழரசுக் கட்சியைக் கூறுபோட்டு வைத்திருக்கின்றது.

தேர்தல் அரசியலில் இவ்வாறான குத்துவெட்டுகள் இயல்பானதுதான் என்கிற போதிலும், தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமது தலையாய கடமை என்று சொல்லும் தமிழரசுக் கட்சிக்குள் இவ்வாறான பிற்போக்கான விடயங்கள் அதிகமாகத் தலைதூக்குவது என்பது அபத்தமானது.

சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இழந்தமைக்கு, தமிழரசுக் கட்சிக்குள் நீடித்த அக முரண்பாடுகளே காரணம்.

arunthavapalan2  கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? - புருஜோத்தமன் (கட்டுரை) arunthavapalan2md-2-414x381  கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? - புருஜோத்தமன் (கட்டுரை) md 2சாவகச்சேரியில் அருந்தவபாலனுக்கும் சயந்தனுக்கும் இடையிலான தன்முனைப்புப் பிரச்சினை, கூட்டமைப்பைத் தோற்கடித்தது. பருத்தித்துறை நகர சபைக்கான வேட்பாளர் தேர்விலும் சுகிர்தனின் கை ஓங்கியதை ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கூட்டமைப்புக்கு எதிராக வேலை செய்தார்கள்.

அத்தோடு,வல்வெட்டித்துறை நகர சபையில் சுயேட்சைக்குழு பெற்ற 1,000 வாக்குகள், கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டியவை. கடந்த முறை அனந்தராஜா தலைமையிலான சபையைக் குழப்பிய விதத்தில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.

இதனாலேயே, சுயேட்சைக் குழுவொன்றை களத்தில் இறக்குவதற்கு வல்வெட்டித்துறை சமூகம் முனைந்தது. வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு முன்னிலை பெற்ற போதும், குறைந்தது இரண்டு ஆசனங்களைப் பெறுமளவுக்கான வாக்குகளை சுயேட்சைக்குழுவிடம் இழந்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டு, அதிகாரத்தில் பங்காளியாக இருந்த கூட்டமைப்பு மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதற்கும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களே பெரும்பாலும் காரணமாக இருந்தார்கள்.

யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்டே என்பதை, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தயார்படுத்தி வந்தது.

அதுவரை காலமும் அதைக் குறிப்பிட்டளவு ஆமோதித்து வந்த சி.வீ.கே. சிவஞானம் தரப்பு, இறுதி நேரத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை, யாழில் இயங்கும் தொலைக்காட்சியொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட தரப்பினர் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தபோது, அந்தப் பக்கம் சாய்ந்தது.

அது, தமிழரசுக் கட்சிக்குள்ளும் மத- சாதியவாத உரையாடல்களை மறைமுகமாகச் செய்ய வைத்தது. தேர்தல் பிரசாரங்களின் போதும் அதை முன்னிறுத்திய நிகழ்வுகள் நடந்தன.

sumanthiran500  கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? - புருஜோத்தமன் (கட்டுரை) sumanthiran500அத்தோடு, சுமந்திரனை மீறி இன்னொருவரை மேயர் வேட்பாளராகக் கொண்டு வர முடியாது என்கிற நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்துவதில் அதிகமான தமிழரசுக் கட்சியினரும் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது யாழ். மாநகர சபை. அதை வெற்றி கொள்வது என்பது தமிழ்த் தேசிய அடையாள அரசியலில் முக்கியானது. ஏனெனில், அது அனைத்துத் தரப்பு மக்களையும் கொண்ட சபை.

அப்படியான நிலையில், பிரதான கட்சியான கூட்டமைப்பு, தன்னுடைய மேயர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவித்து, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை என்பதே பெரும் பின்னடைவாகும்.

இருப்பதிலேயே சிறு தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தால், பாதிப்புகளை விரைவாக சரி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

sampanthan  கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? - புருஜோத்தமன் (கட்டுரை) sampanthanஅதில், முக்கியமானது தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு தொடர்பானது. அடுத்தது, கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், கட்சிக்குள் நீடிக்கும் குழப்பங்களைக் கண்டும் காணாமல் விடுவது.

குழப்பங்கள் எழும்போது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதுவே கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.

இவ்வாறான நிலையில், எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டாலும், மக்களின் அதிருப்தியைப் பெறுவதை நிறுத்தவே முடியாது.

அத்தோடு, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒரு கட்சியாக, ஒரு முடிவை எடுத்த பின்னர், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையொன்றைத் தமிழரசுக் கட்சி உருவாக்க வேண்டும்.

மாறாக, கட்சிக் கூட்டங்களில் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு, கட்சியின் முடிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகும் போது, அந்த முடிவுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கும் நபர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்த வேண்டும்.

அந்த நிலையை, சில காரணங்களுக்காகப் பொறுத்துக் கொள்வது என்பது, கட்சியை மாத்திரமல்ல, மக்களையும் முட்டாளாக்கும் செயலாகும்.

அதைத் தமிழரசுக் கட்சி இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக் கட்சியே பிரதான பொறுப்பை ஏற்க வேண்டும். சம்பந்தனும் மாவையும் சுமந்திரனும் நின்று நிதானித்து அதேநேரம் தீர்க்கமாகச் செயலாற்ற வேண்டும்.

-புருஜோத்தமன் தங்கமயில்-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகவும் கவலையான நிகழ்வு. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியாவது இந்த அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அநேக தமிழ் [...]

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறான வியாதிகளிலிருந்து விரைவில் [...]

ஐசிஸ் பயங்கரவாதிகளை தேடி ராணுவம் நாடு முழுவதும் தேடுதல் நடத்த வேண்டும், அவசர கால அமுலில் உள்ள இந்த வேளையில் [...]

ஓவ்வொரு மதத்தவரிலும் கிருக்கனுகள் பலர் இருக்கிறார்கள். இவர் எங்கள் மார்கத்தில் உள்ள ஒரு பச்ச வெங்காயம் ஆவார், இவரை போலிஸ் [...]

இந்த மனநோய்க்கு மருந்தில்லை. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News