ilakkiyainfo

ilakkiyainfo

கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்!:எம்.ஏ சுமந்திரன் அளித்த விசேட பேட்டி

கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்!:எம்.ஏ சுமந்திரன் அளித்த விசேட பேட்டி
February 02
09:44 2019

கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அரசியல் பயணம், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த வீரகேசரிப் பத்திரிகையின் நேர்காணலை, குளோபல் தமிழ் செய்திகள் நன்றியுடன் பிரசுரிக்கின்றது.

நேர்காணலின் முழு விபரம் வருமாறு:-

கேள்வி: 51 நாள் அரசியல் நெருக்கடியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வகிபாகம் எவ்வாறு இருந்தது?

பதில் : ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியின் செயற்பாடு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதிர்ச்சி ஒன்றை கொடுத்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள் எழுகின்றபோது அரசியலமைப்பை அவர் முற்றாக மீறியிருக்கின்றார் என்பது தெளிவாக தெரிந்தது.

காரணம் 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஒருவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இருந்து முழுமையாக அகற்றப்பட்ட அதிகாரங்கள் என்ன வென்பது எங்களுக்கு மனப்பாடாக தெரிந்திருந்தன.

அப்படியிருக்கும்போது 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்ட அதிகாரங்கள் தன்னிடம் இருப்பது போன்று அவர் செயற்பட்டது எங்களுக்கு பிரம்மிப்பாக இருந்தது.

ஆனால் ஒரு நாட்டின் அரசியலமைப்பு மீறப்படுகின்றது என்றால் அது மிகவும் பாரதுரமானதாகும். ஆகவே நாட்டின் அரசியலமைப்பு பேணப்படவேண்டும் என்றால் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இருந்தது.

நாங்கள் அதன்படி செயற்பட்டோம். முதலில் பிரதமரை மாற்றுகின்ற உத்தரவை ஜனாதிபதி கொடுத்ததற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இது குறித்து சட்ட ஆலோசனை என்னிடம் கோரியவர்களுக்கு எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று நான் கூறியிருந்தேன். ஆனாலும் அந்த நிலைமையை நீதிமன்றம் மூலமாக மாற்றினாலும் பாராளுமன்றத்தில் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சியை நடத்த முடியும்.

gotabaya-rajapaksa-sumanthiran  கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்!:எம்.ஏ சுமந்திரன் அளித்த விசேட பேட்டி gotabaya rajapaksa sumanthiran e1549100639452முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசை ஜனாதிபதி அமைத்தபோதும் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடின் அவர்களினால் நீடிக்க முடியாது. ஆகவே அதனை பாராளுமன்றத்தில் கையாளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

எனவே பிரதமர் நீக்கத்தை உடனடியாக சவாலுக்கு உட்படுத்தவில்லை. ஜனநாயகத்தை அல்லது அரசியலமைப்பை நாங்கள் பாதுகாக்காவிட்டால் நாட்டின் ஆட்சிமுறை குறித்த முழுக் கட்டமைப்பும் அன்று தகர்ந்து விழுந்திருக்கும்.

அதன்பின்னர் நாட்டை ஜனநாயக வழிக்கு கொண்டுவருவது கடினமாக இருக்கும். தமிழ் மக்களை பொறுத்தவரையில் நாங்கள் அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்த்துள்ளோம்.

அந்த தீர்வு அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தவேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதில் ஆட்சியதிகாரங்கள் பகிரப்படும் நிலையை எதிர்பார்க்கின்றோம்.

அது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட பின்னர் மீறப்படுமாக இருந்தால் அதில் பிரயோசனம் இல்லை. எனவே எந்த சமயத்திலும் அரசியலமைப்பு மீறப்பட்டால் அதனை தட்டிக்கேட்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது.

சுயநலமாக தமிழராக சிந்தித்தால் கூட அது அவசியமாகும். நாட்டின் ஆட்சியமைப்பு சரியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் இருக்கவேண்டும். இல்லை என்றால் அது எங்களையும் பாதிக்கும்.

விசேடமாக எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்றவர்களை கூடுதலாக பாதிக்கும். அது எங்கள் அனுபவமாகும். ஆகவே நாட்டின் நன்மைக்காகவும் குறிப்பாக எங்கள் நன்மைக்காகவும் நாங்கள் எமது வகிபாகத்தை செய்தோம். அதில் தலையிட்டோம் .

கேள்வி : ரணில் விக்கிரமசிங்க பிரதமராக முழுமையான ஆதரவு வழங்கினீர்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் வரும்போது .தென்னிலங்கை கட்சிகள் ஒன்றிணைந்துவிட்டன அல்லவா?

பதில் ஆம். அவ்வாறான தோற்றம் ஏற்பட்டது. அது துரதிஷ்டவசமானது. பதவிக்காக தமிழ்க் கூட்டமைப்பு எப்போதுமே போரிட்டது கிடையாது.

சபாநாயகரின் தீர்ப்பில் பிரித்தானிய முறையை இங்கு கையாள முடியாது. அங்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லை.

முழுமையாக பாராளுமன்ற முறைமை உள்ள ஒரு நாட்டின் படிமுறைகளை நாங்கள் இங்கு முன்னெடுக்க முடியாது என்று கூறினார். எனவே அதனை நாங்கள் அபபடியே இப்போதைக்கு விட்டு வைக்கின்றோம்.

ஆனால் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் இன்னும் சரியான பதிலை வழங்கவில்லை. அதாவது அரசின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவரும் ஒரு கட்சியிலிருந்து வருவது கட்சி ஜனநாயக அடிப்படையில் நடத்தப்படும் ஆட்சி முறையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு பதிலில்லை. புதிய அரசியலமைப்பு சட்டத்தில் இது குறித்த தெளிவுபடுத்தல் அவசியம் என்று சபாநாயகர் கூறியிருக்கின்றார்.

அப்படி சொல்வதன் மூலம் அவர் முக்கிய விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் அவசியம் மற்றும் இந்த சூழலை நிர்ணயிக்கக்கூடிய பொறிமுறை அவசியம் என்பவற்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை சபாநாயகரே தீர்மானிப்பார். நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் இல்லை.

கேள்வி : 51 நாள் நெருக்கடியின்போது சுமந்திரன் எம்.பி. நீதித்துறையை பயன்படுத்திய விதம் அபாரமானது என்று கூறப்படுகின்றது. அவ்வாறு செய்த அவர் இதுவரை காலமும் 13 ஆவது திருத்தத்தம் உட்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெற ஏன் நீதித்துறையை பயன்படுத்தவில்லை?

பதில் : அது நீதித்துறையை நாடவேண்டிய ஒரு விடயம் அல்ல. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டிய பொறுப்பு” மாகாண சபைக்குரியது. மாகாண சபைகள் அதற்கான சில முன்னெடுப்புக்களை செய்திருக்கலாம்.

நாங்கள் வட மாகாண சபை எமது கட்டுப்பாட்டில் எடுத்தபோது அப்படியான ஒரு நிலைமைக்கு வரலாம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக அது செய்யப்படவில்லை. இன்னொரு விடயம் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் காலத்துக்கு காலம் 13 இல் உள்ள அதிகாரங்கள் மீறப்படுகின்றபோது நாங்கள் நீதிமன்றம் சென்றிருக்கின்றோம்.

திவிநெகும சட்டம் வந்தபோது மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 15 அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டன. அதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.

நான்தான் அந்த வழக்கை வாதாடினேன். அதில் வெற்றிபெற்றேன். பின்னர் இரண்டாவது வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து வென்றோம். எனவே நாங்கள் நீதித்துறையை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.

கேள்வி : வடக்கு முன்னாள் முதல்வர் நினைத்திருந்தால் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்திருக்கலாம் என்று கூறுகின்றீர்களா?

பதில் : இலகுவாக பெற்றிருக்கலாம்.

கேள்வி : அவற்றை பெற்றிருக்கலாமா?

பதில் : பெற்றிருக்கலாமா என்பது சந்தேகம். . ஆனால் அவற்றை பெறுவதற்கான கட்டளை சட்டங்களை இயற்றியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் மத்திய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுத்திருக்காவிடின் அது குறித்து நாங்கள் நீதித்துறையை நாடியிருக்கலாம். ஆனால் மாகாண சபை அந்த முன்னெடுப்புக்களை செய்யாமல் நாங்கள் வழக்கு தாக்கல் செய்திருக்க முடியாது.

கேள்வி : உங்கள் கட்சி தானே வட மாகாண சபையில் ஆட்சி செய்தது?

பதில் : ஆம். இப்படியான விடயங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சட்ட அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவந்தோம்.

அதற்கு எங்கள் கட்சிக்குள்ளேயே பாரிய எதிர்ப்பு இருந்தது. தலைவர் சம்பந்தனும் நானும்தான் மும்முரமாக அதனை செய்திருந்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக முதலமைச்சரான சிறிது காலத்திலேயே நிலைமை மாறியது. ஆரம்பத்தில் முதலமைச்சருக்கு ஆளுநருடன் முரண்பாடுகள் இருந்தன.

அது நியாயமானது. நானும் அவருடன் அதில் பங்காற்றினேன். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஆளுநர் பதவியேற்ற பின்னர் இந்தகருமங்களை முன்னெடுத்திருக்கலாம்.

எனினும் அந்த இடைப்பட்ட காலத்தில் அவரின் நோக்கு முற்றாக மாறிவிட்டது. தீவிரவாத எண்ணமுடைய தமிழர் தரப்பினர் சிலர் அவருடைய சிந்தனையை மாற்றி இந்த மாகாண சபை என்பது 13 ஆவது திருத்தத்தின் தோல்வியையே பிரதிபலிக்கின்றது என்று காண்பிக்கப்படவேண்டும் என்ற அவர்களுடைய சிந்தனை கோட்பாட்டை முதலமைச்சருக்கு விற்றுவிட்டார்கள்.

அவரும் அதனை வாங்கி உண்டுவிட்டார். அதற்கு பின்னர் அதனை செயற்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தினால் அது வெற்றியாக அமைந்துவிடலாம்.

அது அவர்களின் கோட்பாட்டுக்கு எதிரானது. ஆகவே இதுபயனற்ற ஒன்று என்று” நிரூபிக்க அவர் முயற்சி எடுத்ததன் காரணமாக இந்த ஆக்கபூர்வமான விடயங்களை செய்யவில்லை. எங்களுடைய உறவும் துண்டிக்கப்பட்டது.

கேள்வி : தற்போது அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி ?

பதில் : அது எங்களுக்கு சவால் அல்ல. அவர் அரசியலில் பிரவேசிப்பது நல்லது. அவர் பிரவேசித்து தேர்தலில் போட்டியிடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டு படுதோல்விடையவதுதான் மக்கள் எங்களுடைய கொள்கையுடன் இருக்கின்றார்கள் என்பதனை ஊர்ஜிதப்படுத்தும்.

கேள்வி : உங்கள் பார்வையில் வட மாகாண சபையின் 5 வருட காலப்பகுதி?

பதில் : மிகவும் கவலைக்குரிய தோல்வியடைந்த ஒரு காலப்பகுதியாகும். அதிலும் அதிகாரப்பகிர்வை கேட்டு நிற்கின்ற நாங்களே எமது மாகாண சபையில் 38 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்களை பெற்று ஆட்சியமைத்து மாகாண சபையில் இருக்கின்ற அதிகாரங்களைக்கூட சரியாக செயற்படுத்த முடியவில்லை. இவர்கள் ஏன் கூடுதல் அதிகாரங்களை கேட்கின்றனர் என்று கேட்கும் அளவுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.

கேள்வி : அரசியல் தீர்வு அல்லது தீ்ர்வு அடங்கிய புதிய அரசியலமைப்பு என்பவற்றின் சாத்தியதன்மை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் : சாத்தியமா இல்லையா என்பதனை சாத்திரக் காரரிடம்தான் கேட்கவேண்டும். நாங்கள் சாத்தியமாகும் என்ற நம்பிகைக்யைில் முழு முயற்சியையும் எடுக்கின்றோம்.

சாத்தியமாகாது என்று நினைத்து எந்த முயற்சியையும் எடுக்க முடியாது. தற்போதைய சூழலின்படி இது சாத்தியமாவதற்கான நிலைமை இன்னும் உள்ளது. ஒரு தனிக்கட்சி அரசியலமைப்பை உருவாக்குவதைவிட பெரும்பான்மை இல்லாத வேளையில் அது உருவாக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.

அப்படியான சூழலில்தான் முற்போக்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 19 ஆம் திருத்தம், 17 ஆம் திருத்தம் என்பனவற்றை குறிப்பிடலாம். பெரும்பான்மை இல்லாத இந்த சூழலில் செய்யப்படுவது சாத்தியமாக இருக்கும்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அந்த வரைவு அப்படியான எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவாகும். அனைத்து கட்சிகளும் இதில் இணங்கியவர்கள்.

நாங்கள் கேட்கும் அனைத்தும் இதில் இல்லை. பேச்சுவார்த்தையில் ஒரு தரப்புக்கு 100 வீத வெற்றி கிடைக்காது. அது இணக்கப்பாடாக இருக்காது. வெவ்வேறு நிலைப்பாட்டில் பலர் உள்ளார்கள்.

இறுதியில் இணக்கப்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சில விட்டுக்கொடுப்புக்கள் செய்தாகவேண்டும். அதனால்தான் எமது தரப்பு எம்மீது முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் அந்த நோக்கத்திலிருந்து பார்க்கவேண்டும்.

அந்த விமர்சனங்கள் நியாயமானவை. எங்களுடைய கொள்கையை முழுமையாக நாங்கள் அடையவில்லை. ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும்போது அப்படியான ஒரு சூழலில் எங்களுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் இதில் உள்ளனவா என்பதனை பார்க்கவேண்டும். விட்டுக்கொடுப்புக்கள் அத்தியாவசியமாகும்.

கேள்வி : உங்கள் இராஜினாமா கடிதம் தயார் என்று அண்மையில் கூறியிருந்தீர்கள்?

பதில் : புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவே அரசியலுக்கு வந்தேன். அதுதான் எனது நோக்கம். அரசியலில் வந்து பதவிகளை பெற அரசியலுக்கு நான் வந்தனவல்ல.

எனவே தீர்வுதான் எனது அரசியல் இருப்பை தீர்மானிக்கும். இது நடைபெறாது. இது முடிந்த கதை. இது சாத்தியமில்லை என்ற ஒரு நிலைமை வந்தால் நான் அரசியலில் இருப்பதில் பயனில்லை.

விலகுவதற்கு தயார். ஆனால் எப்போது அந்த நிலைமை வரும் என்று அவதானித்துதான் தீர்மானம் எடுப்பேன். என்னால் முடியுமான நடவடிக்கை எடுத்தும் முடியாது என்ற நிலை தோன்றினால் நான் விலகுவேன்.

தீர்வு கிடைத்தால் அதன் பின்னர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இராஜினாமா கடிதம் ஏன் எழுதி வைத்துள்ளேன் என்றால் நான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதனை எனக்கு அடிக்கடி நினைவூட்டவேண்டும் என்பதற்காகவாகும்.

கேள்வி : உங்கள் கட்சிக்குள்ளேயே உங்களுக்கு விமர்சனங்கள் உள்ளன. அதாவது நீங்கள் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகின்றதே? அவ்வாறு பங்காளிக் கட்சிகள் கருத காரணம் என்ன?

பதில் : அவர்கள் கருதுவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்கவேண்டும். நான் கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் அரசியலில் சேரவும் எந்த முயற்சியைும் எடுத்திருக்கவில்லை.

இதே கட்சி இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் என்னை தேசியபட்டியல் எம்.பி. யாக வருமாறு கோரியது. நான் மறுத்துவிட்டேன். மூன்றாவது தடவையும் மறுப்புதான் தெரிவித்தேன் எனினும் போர் முடிந்த சூழலில் இனிமேல் அரசயலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே தீர்வுகாண முடியம் என்ற விடயம் ஊர்ஜிதம் ஆன பின்னர் அதில் எனக்கு நிபுணத்துவம் இருந்த காரணத்தினால் அதனை ஏற்றேன்.

அரசியலுக்கு வருவதையே என்னுடைய நோக்காகக் கொண்டிருக்கவில்லை. கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கப்போவதுமில்லை.

கேள்வி : ஜெனிவாவில் 40 ஆவது கூட்டத் தொடரில் புதிய பிரேரணை வருமா?

பதில் : நிச்சயமாக புதிய பிரேரணை வரும்.

கேள்வி : யார் கொண்டுவருவார்கள் ?

பதில் : முதலில் நான்கு நாடுகள் இருந்தன. அதிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஆனால் ஜேர்மன், கனடா என்பன இணைந்துள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணந்து பிரேரணையை கொண்டுவருவார்கள்.

அதுவும் சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்கான பிரேரணையாகவே வரும். 2015 ஆம் பிரேரணைக்கு ஒன்றரை வருடங்கள் வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு பிரேரணை அதனை நீடிப்பதாக அமைந்தது. மேற்பார்வைகாலம் நீடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மேற்பார்வைகாலம் அதிகரிக்கப்படும். கால அவகாசம் என்பது தவறானது. சர்வதேச மேற்பார்வைக்காலமே அதுவாகும். அந்தவகையில் இம்முறையும் 2019 ஆம் ஆண்டில் அந்த சர்வதேச மேற்பார்வைக்காலம் நீடிக்கப்படும்.

அதற்கான பிரேரணை வரும். கால அவகாசம் என்று கூறும்போது அது முடிந்துவிட்டால் வேறு எதனையும் செய்யலாம் என்று பலர் நினைக்கின்றனர்.

அவ்வாறு எதுவும் செய்யமுடியாது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் நாடுகளுக்கு கட்டளையிடுகின்ற தீர்மானங்களை எடுக்க முடியாது.

ஆனால் நாடுகள் இதனை செய்யவேண்டும் என்று ஊக்குவிக்கலாம். எனவே இங்கு சர்வதேச மேற்பார்வையே இருக்கின்றது.

இன்னொரு தீர்மானம் வராவிடின் இலங்கை குறித்த ஜெனிவா அத்தியாயம் முடிந்துவிடும். அதற்கு இலங்கை இம்முறையும் அனுசரணை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான போதிய அழுத்தம் சர்வசேத நாடுகளினால் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனுசரணை முக்கியமாகும்.

கேள்வி : எதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று கூறப்படுகின்றது?

பதில் : ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அதில் சட்ட ரீதியான தன்மை இல்லை. நடைமுறை சிக்கலும் உள்ளது.

ஆனால் அந்த முயற்சியை நான் மறுக்கவில்லை. அது நடந்தால் எமக்கு சந்தோஷம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறு மிக சொற்பமாக இருக்கும்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தை முற்றிலும் கைவிட முடியாது. எமக்கு ஜெனிவாவில் ஒரு பிடி உள்ளது. அதனை தளர்த்த முடியாது.

கேள்வி : ஒருமித்த என்ற விடயத்துக்குள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பெற முடியுமா?

பதில் : ஆம். இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று நாட்டின் சுபாவம். மற்றையது ஆட்சிமுறையாகும். நாட்டின் சுபாவத்தை பொறுத்தவரை அது பிரிக்கப்பட முடியாதது. அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

அதனால்தான் ஏக்கிய ராஜ்ய என்று கூறப்படுகின்றது. ராஜ்ய என்றால் நாடு. அது ஆட்சிமுறை அல்ல. மாறாக நாடு என்பதாகும். ஆனால் அந்த சொல்லுக்கு இதுவரை முன்வைத்த தமிழ் பதம் ஒற்றையாட்சி என்பதாகும்.

அது ஆட்சி முறையை குறிக்கும் சொல்லாகும். அது நாட்டை குறிப்பதல்ல. நாடு எப்படியானது என்பதனை வர்ணிக்கவேண்டும்.

ஏக்கிய ராஜ்ய என்பதன் சரியான தமிழ் பதம் நாட்டினுடைய சுபாவமாகும். அதனைத்தான் ஒருமித்த நாடு என்று கூறுகின்றோம். ஆட்சி முறை தொடர்பில் வர்ணனை தேவையில்லை என்பதே நாங்கள் எடுத்த தீர்மானமாகும்.

அதற்கு பெயர்பலகை தேவையில்லை. ஆட்சிமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டால் போதும். ஆனால் நாட்டின் ஆட்சி முறையானது மத்தியிலும் மாகாணங்களிலும் உள்ள நிறுவனங்களினால் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடப்படும். இவை அறிக்கையில் உள்ளன.

கேள்வி : பிரதமர் ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது?

பதில் : நெருக்கமான உறவு உள்ளது. காரணம் அரசியலமைப்பு விடயத்தில் வழி நடத்தல் குழுவின் தலைவராக பிரதமர் உள்ளார். அவர்தான் இதனை முன்னெடுக்கின்றார்.

அரசியலமைப்பு உருவாக்கப்படிகளில் நானும் ஜயம்பதி விக்ரமரட்னவும் செயலகத்துக்கு பொறுப்பான இணைத் தலைவர்களாக உள்ளோம்.

எனவே எமக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். அரசியல் தீர்வு தொடர்பாகவும் அரசியலமைப்பு வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் வழி நடத்தல் குழுவில் மட்டும் தீர்மானிக்க முடியாது. அந்த விடயங்களில் நான் பிரதமருடன் பேசித்தான் செய்கிறோம்.

கேள்வி : அதனால் வரும் விமர்சனங்கள் குறித்து?

பதில் : விமர்சனங்கள் வரலாம். நெருங்கி செயற்படாமல் ஒரு அரசியலமைப்பை தயாரிக்க முடியும் என்று யாராவது கூறினால் அவர்கள் அதனை செய்துகாட்டலாம்.

கேள்வி : அரசியல் நெருக்கடியின்போது ஏன் இந்தியா மௌனமாக இருந்தது? தீர்வுத்திட்டத்தில் இந்தியாவின் வகிபாகம்?

பதில் : இந்தியா மௌனமாக இருப்பது உண்மையாகும். இந்தியா ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றது என்பது ஒரு தவறான சிந்தனையாகும். மிக முழுமையான ஈடுபாடு உள்ளது.

புதிய அரசியலமப்பு உருவாக்கத்திலும் இருக்கின்றது. ஆனால் பகிரங்கமாக இந்தியா சில நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. இலங்கைக்கு மிக அண்மையில் இருக்கின்ற பாரிய வல்லரசாக இந்தியா இருக்கின்றது.

ஆகவே தன்னுடைய கருத்தை இந்தியா வெளிப்படையாக சொன்னால் அது இலங்கையின் சுயாதீனத்தை மழுங்கடிப்பது போன்றும் அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றும் தோன்றும்.

எனவே அதனை செய்வதில்லை. ஆனால் தங்கள் கரிசனையை இந்தியா பகிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆட்சிமாற்றத்தின்போதும் அதனை செய்தார்கள். புதிதாக ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டவுடன் இந்தியா வாழ்த்து செய்தியை அனுப்பவில்லை.

அது முக்கியமான ஒரு தீர்மானம். அப்படியான செயற்பாடுகளில் அவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்தியா . வெளிப்படையாக செயற்பட முடியாது.

கேள்வி : தீர்வு விடயத்தில் இந்தியாவுடன் தொடர்புடன் இருக்கின்றீர்களா?

பதில் : தொடர்புகளுடன்தான் இருக்கின்றோம்.

கேள்வி : கோத்தபாய வேட்பாளராக வரப்போவது குறித்து?

பதில் : அவர் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நீண்டகாலமாக திட்டமிட்டு செயற்படுகின்றார். அவர் பாதுகாப்பு செயலாளாக இருக்கும்போது நகர திட்டமிடல் அமைச்சு அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டபோதே அந்த திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டுவிட்டது.

அவருடைய அரசியல் சிந்தனையுடன் ஒன்றிணைந்துள்ள சிந்தனையாளர்கள் குழுவினர் நாட்டில் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் பலமானவர்கள் அல்ல.

ஆனால் கருத்தியலை ஏற்படுத்தக்கூடியவர்கள். சிங்கள பௌத்த பேரினவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழுவாகும்.

அவர் பல அமைப்புக்களையும் உருவாக்கி செயற்படுகின்றார். அது தமிழ் பேசும் மக்களுக்கு ஆபத்தானது. ஜனநாயக சூழலில் நாம் அதனை தடுக்க முடியாது. ஆனால் நாம் மாற்று பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

கேள்வி : ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று எண்ணும் நிலைமை ஏற்பட்டதா?

பதில் : இல்லை. ஒரு காலமும் எண்ணியதில்லை. வந்ததினால் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஆனால் இன்னும் ஒன்றும் இறுதி செய்யப்படவில்லை.

நேர்கண்டவர்: – ரொபட் அன்டனி, நன்றி: ‘வீரகேசரி’ (02.02.2019)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News