ilakkiyainfo

ilakkiyainfo

சக்கரை நோய் ஏன் வருகிறது??

சக்கரை நோய் ஏன் வருகிறது??
August 22
10:14 2016

மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நோய்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தொலைக்காட்சி , பத்திரிகை என எல்லா வகையான ஊடகங்களிலும் சர்க்கரை நோய் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆனாலும் இன்றைக்கும் அந்நோய் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இதற்கு உதாரணமாகவும் சில புள்ளி விவரங்களைத்தான் காண்பிக்க வேண்டியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2025 – ம் ஆண்டுவாக்கில் இது இரண்டு மடங்காக உயரக்கூடும்.

அதிலும் குறிப்பாக , மூன்றாவது உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதிலும்  உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் நோயாக இது மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களின் நோயாகக் கருதப்பட்ட இது , இயந்திரமயமாக்கல் , உணவு முறை மாற்றம் , வாழ்க்கை முறை , நவீன யுகத்து கவலைகள் மற்றும் கஷ்டங்களின் காரணமாக , தற்போது சாதாரண மக்களையும் பாதிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது.

உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் குறைவாக இருக்க வேண்டிய நாடு இந்தியா.

ஆனால் , அதிர்ச்சி தரக்கூடிய உண்மை என்ன தெரியுமா ? இந்தியர்கள் மற்ற நாட்டினரைக் காட்டிலும் சர்க்கரை நோய்க்கு மிகச் சுலபமாக இரையாகிறார்கள்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது கிராமப்புற மக்களில் சுமார் மூன்று முதல் நான்கு சதவீதத்தினரும் , நகர்ப்புறங்களில் பத்து முதல் பன்னிரண்டு சதவீதத்தினரும்  இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாற்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் 38 சதவீதத்தினரும் ,  இருபத்தைந்து வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் 5 சதவீதத் தினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 2025 – ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடி சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள்.

சீனாவில் மூன்றே முக்கால் கோடி பேரும் , அமெரிக்காவில் இரண்டேகால் கோடி பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் பற்றி இன்னும் முழுமையான விழிப்புணர்வு வரவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

எனவேதான் , சர்க்கரை நோய்க்கும் பாலுறவுக் குறைபாட்டுக்குமான தொடர்பு பற்றி விரிவாகப் பேசும் முன்னர் இந்த நோய் பற்றி இங்கு விளக்கமாகப் பேச வேண்டி இருக்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் மாவுச் சத்து (Carbohydrate) , புரதம் (Protein) மற்றும்  கொழுப்பு (Fat) ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துகள் உணவில் இருந்து பிரிக்கப்பட்டு , உடலில் உள்ள பல கோடி செல்கள் ஆற்றலுடன் செயல்பட அனுப்பி வைக்கப்படுகின்றன.

குறிப்பாக , மாவுச் சத்துதான் குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுகிறது.

இது குடலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அங்கிருந்து எல்லா அணுக்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ரத்தத்தில் இருந்து வரும் இந்தச் சர்க்கரைச் சத்து மூலமாகத்தான் செல்கள் செயல்படுவதற்கான சக்தி கிடைக்கிறது.

உணவு – உணவின் மூலமாகக் கிடைக்கும் மாவுச் சத்து — மாவுச் சத்து , சர்க்கரைச் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலப்பது – ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து , சக்தியாக மாற்றப்பட்டு செல்களுக்குப் பயன்படுவது – இந்தச் சுழற்சி தடைபடாமல் நடந்துகொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.

அப்போதுதான் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சீரான நிலையில் இருக்கும். உடலின் ஆரோக்கியத்துக்கு குளுக்கோஸ் சீரான அளவில் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உணவின் மூலமாக ரத்தத்தில் குளுக்கோஸ் கலந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் , ஏதோ ஒரு காரணத்தால் அதை உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் அந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

குளுக்கோஸை ஏன் உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை. இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல வேண்டும் என்றால் நாம்

Pancreas_diag_tamil  சக்கரை நோய் ஏன் வருகிறது?? Pancreas diag tamilகணையம் என்கிற உறுப்பு பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது உடலில் இயங்கும் நாளமில்லாச் சுரப்பிகளுள் முதன்மையானதாக விளங்கும் கணையம், வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு மேல் , இரைப்பைக்குப் பின்புறம் மாவிலை வடிவத்தில் காணப்படுகிறது.

இதயத்தைப் போலவே , கணையமும் நாள் முழுக்கச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டு முக்கியமான வேலைகளில் கணையம் பங்கேற்கிறது.

செரிமான நீரையும் நொதிப் பொருள்களையும் வழங்கி , மாவுச் சத்தைக் கரைத்து அது ரத்தத்தில் கலக்க உதவுகிறது.

கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் செல் தொகுப்பில் ஏறக்குறைய பத்து லட்சம் செல்கள் உள்ளன.

1820_The_Pancreas  சக்கரை நோய் ஏன் வருகிறது?? 1820 The Pancreas
இவற்றில் பீட்டா (Beta) , காமா , ஆல்பா  (Alpha) எனப்படும் செல்கள் அடங்கியுள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. பீட்டா செல்கள் , இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன.

இந்த இன்சுலின்தான் குளுக்கோஸை எரித்து செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. செல்கள் வளர்வதற்கும் , வேலை செய்வதற்கும் தேவையான அளவு சக்தியை சரியான விகிதத்தில் கிடைக்கச் செய்வதற்கு இன்சுலின் ஹார்மோன் மிக அவசியம்.

வயிற்றின் அடிப்பகுதியில் மூன்று அவுன்ஸ் கொள்ளளவு கொண்ட இன்சுலின் சுரப்பியானது , உணவு உள்ளே வரும் செய்தியை அறிந்துகொண்ட உடனேயே அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது.

ரத்தம் மூலமாக செல்களுக்கு குளுக்கோஸ் செல்லும் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக செல்களுக்கு குளுக்கோஸ் கிடைத்ததும் பழையபடி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும்.

ரத்தத்தில் தேவைக்கு அதிகமான சர்க்கரை சேரும்போது என்ன ஆகும் ? கல்லீரல் அதை கிளைக்கோஜென்னாக மாற்றி சேமித்துக்கொள்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையும்போது கணையத்தில் சுரக்கும் குளுக்கோஜென் (Glucagon) என்கிற ஹார்மோன் (Hormones) , இந்த கிளைக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றுகிறது.

அந்த வகையில் இது இன்சுலினுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைப் பொறுத்துத்தான் கணையத்தில் ஹார்மோன்களின் சுரப்பு நடக்கிறது.

சர்க்கரை அதிகரித்தால் இன்சுலின் (Insulin) சுரப்பு கூடும். சர்க்கரையின் அளவு குறைந்தால் குளுக்கோஜெனின் சுரப்பு அதிகரிக்கும். இப்படி மாறி மாறி சுரந்துதான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒரே சீரான நிலையில் வைக்கப்படுகிறது.

தொடர்ச்சியாகச் சாப்பிடும்போதெல்லாம் நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தை எரிப்பதற்கு வேண்டிய இன்சுலினை , கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.

கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலினைச் சுரக்க முடியாமல் போனாலோ அல்லது தேவையான அளவு இன்சுலின் சுரப்பு நிகழவில்லை என்றாலோ குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சக்தியாக மாறாது.

இந்த நிலையில்தான் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது. இந்த அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது.

சர்க்கரை நோயைத் தமிழில் மதுமேகம் என்பார்கள். சர்க்கரைச் சத்து சிறுநீரில் கலந்து வெளியேறுவதால் , அது இனிப்புச் சுவையுள்ளதாக மாறும்.

இதில் எறும்புகள் மொய்ப்பதும் உண்டு.

இதனால் இதை சர்க்கரை நோய் என்று கூறுகிறார்கள்.

டயாபடீஸ் மெல்லிடஸ் என்ற வார்த்தைக் கும் இதே பொருள்தான்.

பொதுவாக , சர்க்கரை நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

1. இன்சுலின் சார்ந்தது (Insulin Dependent Diabetic Mellitus)

2. இன்சுலின் சாராதது (Non – Insulin Dependent Diabetic Mellitus) ,

3. குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை (Impaired Glucose Tolerance) ,

4. கணையச் சர்க்கரை நோய் (Pancreatic Diabetes) என்று நான்கு வகைப்படும்.

இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய்

கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படுகிறது.

அதாவது கணையத்தில் இன்சுலினைச் சுரக்கும் செல்கள் அழிந்துவிடுவதால் இது தோன்றுகிறது.

இதை டைப் – 1 வகை நோய் எனக் கூறுகிறார்கள்.

சிறுவர்கள் மற்றும் டீன் – ஏஜ் வயதினரைத் தாக்கும் இது பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும்போது இள வயது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். நமது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி என்பது உண்டு.

வெள்ளை அணுக்களால் உற்பத்தி செய்யப்படும் இந்தச் சக்திதான் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை அழிக்கிறது.

சுற்றுப்புறச் சூழல் , பரம்பரை போன்ற காரணிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தால் , வெள்ளை அணுக்கள் , கணையத்தில் உள்ள பீட்டா செல்களை எதிரிகளாக நினைத்து அழித்துவிடுகின்றன.

இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சர்க்கரைச் சத்தும் சக்தியாக மாற்றப்படாமல் ரத்தத்தில் சேர்ந்துகொண்டே வருகிறது.

மேலே சொன்ன காரணம் மட்டுமின்றி கணையத்தில் ஏற்படும் நோய்களாலும் பீட்டா செல்கள் அழிந்துவிடுகின்றன.

இதனாலும் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இவர்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு , ஊசியின் மூலமாக இன்சுலினைப் போட்டுக்கொள்வதுதான்.

ஊசியின் மூலம் உள்ளே வரும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை எரித்து இயல்பான நிலையைக் கொண்டு வருகிறது.

ஆனால் , பிரச்னை என்னவெனில் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , இன்சுலின் ஊசியை நம்பித்தான் தங்களது வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.

அவர்களின் அன்றாட வாழ்க்கை முழுக்க முழுக்க இன்சுலின் ஊசியைச் சார்ந்தே அமைவதால்தான் இதனை இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் என்கிறார்கள்.

இந்த வகை சர்க்கரை நோய்க்குக் காரணமான பல்வேறு ஜீன்கள் மற்றும் எண்ணற்ற வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

ஆனால் , சர்க்கரை நோயை எந்தப் பொருள் குறிப்பாக உருவாக்குகிறது என்ற விஷயம் மட்டும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது.

அதிகமான தண்ணீர்த் தாகம் , அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல் , அளவுக்கு அதிகமான பசி , அதிகமாகச் சாப்பிட்டாலும் உடல் எடை குறைவு , கண் பார்வை மங்குதல் , அதிகச் சோர்வு போன்றவை முதல் வகை சர்க்கரை நோய்க்கான முக்கியமான அறிகுறிகள்.

தொடரும்…
டாக்டர் டி. காமராஜ் ,

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்’!! – டாக்டர் டி. காமராஜ்

1822_The_Homostatic_Regulation_of_Blood_Glucose_Levels  சக்கரை நோய் ஏன் வருகிறது?? 1822 The Homostatic Regulation of Blood Glucose Levels

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

இலங்கை பத்திரிகைகள்

English News