ilakkiyainfo

ilakkiyainfo

சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?- யதீந்திரா (கட்டுரை)

சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?- யதீந்திரா (கட்டுரை)
November 17
20:49 2016

 

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர்.

மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட, இருவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்தே வந்தனர்,

இந்த நிலைமையானது இருவருக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் அதனையே நம்புமாறும் நிர்பந்தித்தது.

இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை தமிழரசு கட்சியால் தருணம் சரியல்ல, என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் பங்குகொண்டு உரைநிகழ்த்தியிருந்தார்.

அவ்வுரை தொடர்பில் தென்னிலங்கையில் கடுமையான சர்ச்சைகள் எழுந்ததுடன் விக்னேஸ்வரனுக்கு எதிரான கடுமையான கண்டனங்களும் வெளியிடப்பட்டன.

விக்னேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரைக்கு பிழையான சிங்கள மொழிபெயர்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகள் விக்னேஸ்வரனை நோக்கி திரும்பினர்.

இவ்வாறான அனுபவங்களின் பின்னர் இங்கிலாந்து சென்றிருந்த விக்னேஸ்வரன் அங்கும் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.

அவ்வுரை அதுவரை அவர் ஆற்றிய உரைகளுக்கு தலைகீழான ஒன்றாக அமைந்திருந்ததுடன் சம்பந்தனின் நிலைப்பாடுகள்  சிலவற்றுடன்  ஒத்துப் போவதாகவும் இருந்தது.

அவ்வுரையில் தமிழர்களின் எதிர்ப்பரசியல் தொடர்பில் விக்னேஸ்வரன் கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

அவர் தனது உரையில் பலவாறான விடயங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார் ஆனால், அதனுடன் சேர்த்து இவ்வாறும் கூறியிருக்கிறார்.

அதாவது, சேர்ந்து  முடிவெடுத்தல், வேற்றுமைக்குள்ளும் ஒரு ஒற்றுமையை அடையாளம் கண்டு அதன் வழிநடத்தல், மனிதாபிமான முறையில் முடிவுகளை எடுத்தல் போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் புதிய பண்பாடாக மிளிர வேண்டும்.

முக்கியமாக எமது வட மாகாணத்தை தாயகமாகக் கொண்ட பலரிடத்திலும் இந்தக் குணம், அதாவது காரணமின்றி கடுமையாக  எதிர்க்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும்.

எமது அரசர்கள் ஆண்ட காலத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் மற்றவர்களின் ஆட்சியின் கீழேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

போர்த்துக்கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் அதன் பின்னர் சிங்களவர் என்று வாழ்ந்ததால் எதிர்ப்பு வாழ்க்கை எங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் விக்னேஸ்வரன் எதை வலியுறுத்த முற்படுகின்றார்?

‘எழுக தமிழ்’ நிகழ்வின் பின்னர் விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு  மாற்றான  அரசியல் கூட்டணி  ஒன்றுக்கு தலைமை தாங்குவாரா என்னும் கேள்விகள்  ஆங்காங்கே  வெளித்தெரிந்து  கொண்டிருந்த  ஒரு சூழலின்தான் மேற்படி, சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஒன்றாக பங்குகொண்டிருந்த நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறான கேள்விகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளியிடும் வகையிலேயே அவரது பேச்சு அமைந்திருந்தது. குறித்த பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய உரையை கூர்ந்து நோக்கினால் அது மக்களுக்கு ஆற்றிய உரையென்பதைவிடவும் சம்பந்தனை நோக்கி  ஆற்றிய உரையாகவே இருந்தது.

அதில் அவர் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக வலியுறுத்தியிருந்தார். கூட்டமைப்பை உடைக்கும் எந்தவொரு முயற்சியிலும் தான் ஈடுபடப் போவதில்லை.

மேலும், அவ்வாறான எண்ணங்களும் தனக்கில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். சம்பந்தன் இதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரனை தாம் அரசியலுக்கு கொண்டு வந்தது மிகவும் சரியானதொரு முடிவு என்று குறிப்பிட்டதுடன், கூட்டமைப்பே சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தலைமையாக இருப்பதாகவும், அது தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அது அப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

தன் மூலம் விக்னேஸ்வரன் – சம்பந்தன் ஆகியோர் கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை.

அவ்வாறாயின் மாற்று அணியொன்று எவ்வாறு உருவாகும்? அதற்கான வாய்ப்புக்கள் என்ன?

கூட்டமைப்பை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களின் தலைமையாக வெளித்தெரிந்த காலத்திலிருந்தே, அதன் மீதான விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கூட்டமைப்பின் மீதுள்ள முதன்மையான விமர்சனம் அதனை எவ்வாறு ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைப்பாக மாற்றுவது  என்னும் கேள்வியுடன் தொடர்புபட்டிருந்தது.

அவ்வாறான விமர்சனங்கள் இப்பத்தியாளரும் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்திருக்கிறார். ஆனாலும், அதில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பில் பெரியளவில் விவாதங்கள் இடம்பெறவில்லை.

அனைவரது கவனமும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலேயே இருந்தன. முக்கியமாக  அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களிலேயே  அனைவரது கவனமும் குவிந்தது.

இவ்வாறானதொரு  சூழலில்தான் தமிழ் மக்கள் திருப்திகொள்ளத்தக்க ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது எவ்வாறு – என்றவாறான புதியதொரு உரையாடல் தமிழ் அரசியல் அரங்கில் முளைகொண்டது.

peravai  சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?- யதீந்திரா (கட்டுரை) peravai1இந்த உரையாடலை முன்னெடுக்கும் ஒரு அமைப்பாகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவற்றுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்குகொண்டது.

இவ்வாறு தோற்றம் கொண்ட அமைப்பிலேயே விக்னேஸ்வரன் இணைத் தலைவராக அங்கம் வகித்திருத்தார். ஆரம்பத்தில் இது கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அமைப்பாகவே பலராலும் புரிந்துகொள்ளப்பட்டது.

விக்னேஸ்வரன் – சம்பந்தன் முக்கியமாக சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நிலவிய சில முரண்பாடுகளை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்துடன் இணைத்து புரிந்துகொண்டவர்களின் முன்னால் கூட்டமைப்பு உடைந்து செல்வதான ஒரு தோற்றமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால், விக்னேஸ்வரன் அவ்வாறான எண்ணத்தில் செயற்பட்டிருக்கவில்லை என்பது அவரது லண்டன் உரை, அதனைத் தொடர்ந்து அவர் குறித்த பத்திரிகை நிகழ்வில் ஆற்றிய உரை ஆகியன மிகவும் தெளிவாகவே எடுத்தியம்பியிருக்கின்றது.

குறிப்பாக விக்னேஸ்வரனின் லண்டன் உரை அதுவரை விக்னேஸ்வரன் தங்களுடைய நிகழ்நிரலின் கீழ் வரக்கூடியவர் என்றவாறு, புரிந்துகொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியான ஒன்றாகவே இருந்தது.

அவ்வாறான அதிர்ச்சியாளர்கள் சிலர், தங்களின் அதிர்ச்சியை பேஸ்புக் வழியாகவும் இணையத்தள கட்டுரைகளின் வழியாகவும் வெளிப்படுத்தியுமிருக்கின்றனர்.

உண்மையில் இது விக்னேஸ்வரனின் தவறல்ல, மாறாக அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தவர்களின் தவறாகும். தனிநபர்களை முன்வைத்து அரசியல் உரையாடல்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் – அவ்வாறாயின் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அணி சாத்தியமில்லையென்றா இப்பத்தி வாதிடுகிறது? அப்படியில்லை.

vikineswaran  சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?- யதீந்திரா (கட்டுரை) vikineswaran2வரலாற்றுப் போக்கில் புதிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப புதிய அரசியல கூட்டுக்குள் உருவாவதும், பின்னர் அது சிதைவுறுவதும் சாத்தியமே.

ஆனால், அதற்கான புறச்சூழல் உருப்பெறாத சந்தர்ப்பத்தில் ஒன்றின் உடைவு தொடர்பில் சிந்திப்பது, இறுதியில் தவறானதொரு முடிவாகவும் அமைந்துவிடலாம். இருக்கும் ஒன்றையும் பலவீனப்படுத்திவிடலாம்.

அந்த வகையில் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை இப்பத்தி ஆதரிக்கவில்லை.

ஏனெனில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான அரசியல் முன்னெடுப்புக்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அரசியல் யாப்பு தொடர்பான உரையாடல்கள் இன்னும் அதன் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோர் அரசியல் யாப்பு மாற்றத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

அந்த நம்பிக்கை இன்னும் வெற்றிபெறவும் இல்லை. அதேவேளை, இன்னும் தோல்வியுறவும் இல்லை. பெருமளவிற்கு அடுத்த ஆண்டில் இது தொடர்பான புதிர்கள் அனைத்தும் நிச்சயம் அவிழ்ந்துவிடும்.

அதன் பின்னர் கூட்டமைப்பை முக்கியமாக சம்பந்தனை தர்க்கரீதியாக விமர்சிக்கவும் கூட்டமைப்பின் புதிய பாதை அல்லது ஒரு புதிய அரசியல் கூட்டு தொடர்பான உரையாடல் அர்த்தம் பெறும்.

அதுவரை கூட்டமைப்பாக தொடர வேண்டிய தேவையுண்டு என்பதே இப்பத்தியின் கருத்து. இந்த விடயங்களை ஆழமாக புரிந்துகொண்டதன் விளைவாகவே  விக்னேஸ்வரனும் தொடர்ந்தும் கூட்டமைப்பாக பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் — சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் ஆரம்பத்தில் இருந்தது போன்ற அன்னியோன்யமான உறவு இல்லையென்பது உண்மைதான். ஆனால், அந்த விரிசல் கூட்டமைப்பின் உடைவாக பரிணமிக்கும் என்று வாதிட முடியாது.

சம்பந்தனை பொறுத்தவரையில் கூட்டமைப்பை எவ்வகையிலாவது பேணிப் பாதுகாக்கவே விரும்புவார். அதேவேளை, ஒரு சரியான காரணமின்றி ஏனையவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான வாய்புக்கள் இல்லை.

ஒருவேளை இலங்கை தமிழரசு கட்சியினர் தனித்து செல்ல விரும்பினால் ஏனையவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதற்கான வாய்ப்பு எற்படும். அவ்வாறான ஆர்வம் சிலருக்கு இருக்கவும் கூடும்.

sampanthan  சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?- யதீந்திரா (கட்டுரை) sampanthanஆனால், அரசியலில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் சம்பந்தன் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை நன்கறிவார். மேலும் சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கும் ஒருவருமல்ல.

உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எவ்வாறு அவரது தலைமைத்துவத்தை பாதிக்கும் என்பதையும் அவர் நன்கு அறிவார். ஆனால், கூட்டமைப்பிற்குள் மேலும் நெருக்கடிகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் அடுத்த ஆண்டில் ஏற்படும்.

குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தலின் போது வழமைபோல் ஆசனங்களை ஒத்துக்குவதில் நெருக்கடிகள் தோன்றும். அப்போது வழமைபோலவே  கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னைநாள் இயக்கங்களும் தமிழரசு கட்சியும் எவ்வாறு ஒற்றுமையை பேணிப்பாதுகாக்கும் வகையில் செயற்படப்போகின்றன என்பதும் கேள்விக்குரிய ஒன்றே!

ஆனால், கூட்டமைப்பின் சிதைவு அல்லது புதிய அணியொன்றின் எழுச்சியென்பது வெறுமனே பதவிநிலைகள் தொடர்பான ஒன்றாக இருக்க முடியாது.

அது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான ஒன்றாகவே இருக்க வேண்டும். அவ்வாறானதொரு முடிவுதான் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில் நோக்கினால் அரசியல் யாப்பில் என்ன வரப்போகிறது என்பதுதான் புதிய அணியொன்றின் எழுச்சிக்கு வழிகோலும்.

சிலர் குறிப்பிடுவது போன்று அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு சாதகமாக எதுவுமே நிகழவில்லை என்றால், அதன் பின்னர் சம்பந்தன் தலைமையில் ஒரு கூட்டமைப்பு நீடிப்பதற்கான எந்தவொரு தேவையும் இருக்காது.

அதேபோன்று கூட்டமைப்பை நான் ஒருபோதும் உடைக்கப்போவதில்லை என்று விக்னேஸ்வரனோ அல்லது ஏனையவர்களோ அழுத்திக் கூறவேண்டிய அவசியமும் இருக்காது.

யதீந்திரா

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News