ilakkiyainfo

ilakkiyainfo

சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)
August 10
01:55 2017

பிரித்தானியப் பாரளமன்றத்தின் மேலவையான பிரபுக்கள் சபையின் உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான மேக்நாத் தேசாய் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு முழுமையான போர் விரைவில் நடக்கும் என்றும் அதில் அமெரிக்கா இந்தியாவின் பின் நிற்கும் என எதிர்வு கூறியுள்ளார்.

அந்தப் போர் பல முனைகளில் நடக்கும் எனவும் அவர் எதிர்பார்க்கின்றார். 2017-ஓகஸ்ட் 7-ம் திகதி சீன மக்கள் படை இந்தியர்கள் சீனாவின் நிலத்தில் இருந்து வெளியேறாவிடில் மோதல் வெடிக்கும் என்கின்றது.

ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பு அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்த ப்பட்டிருக்க மாட்டாது. இரசியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பிற்கு உக்ரேனும் ஜோர்ஜியாவும் முக்கியமானவை.

அதன் தென் பகுதிப் பாதுகாப்பிற்கு கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான் போன்றநாடுகளும் கிழக்குப் பகுதிக்கு மங்கோலியாவும் முக்கியமானவை.

இந்த நாடுகள் இரசியாவிற்கு எதிரான நாடுகளின் கைகளுக்கு போகமல் இருக்க இரசியா எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.

இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்க தீபெத் முக்கியமான பிரதேசம் என்பதாலும் ஆசிய நீர்வழங்கலுக்கு அது முக்கியமான பிரதேசம் என்பதாலும் சீனா 1950இல் அதை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தியாவுடன் கைகோர்த்த பூட்டானும் இணைந்த சிக்கிமும்

தீபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் சீனா தமது நாட்டையும் ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் கொண்ட பூட்டான் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது, அதன் வெளியுறவுத் துறை நடவடிக்கைகளையும் பன்னாட்டு அரசுறவியல் நடவடிக்கைகளையும் இந்தியாவே செய்து வருகின்றது.

பூட்டானை தன் பக்கம் இழுக்க சீனா பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடன் வழங்கல், உதவி வழங்கல் போன்ற பல வகைகளை சீனா கையாளுகின்றது.

குடியேற்ற ஆட்சியின் போது பிரித்தானியாவும் அதையே செய்து வந்தது. பூட்டானைப் போல் அச்சம் கொண்ட சிக்கிம் 1975இல் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்து கொண்டது.

பூட்டானும் சிக்கிமும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இந்தியாவிற்கு ஒரு கவசமாக இருக்கின்றன. பூட்டானைத் தன் பக்கம் இழுக்கும் முயற்ச்சியில் இந்தியாவால் பூட்டானைப் பாதுகாக்க முடியாது என பூட்டானுக்கு உணர்த்த சீனா பல வகைக்களில் முயல்கின்றது.

பூட்டான் தனது வட பகுதியில் 470 கிலோ மீட்டர் எல்லையை சீனாவுடன் கொண்டுள்ளது. இந்தியா தனது 650 கிலோ மீட்டர் எல்லை மூலம் பூட்டானை கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பிடிக்குள் வைத்திருக்கின்றது.

s-5  சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை) s 5
சில்குரி இணைப்பாதை ( siliguri corridor)

நிலத்தில் இருந்து உயரமான இடத்தில் இருக்கும் சமதரையை பீடபூமி என்பர். உலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்டதும் அதிக உயரத்தில் இருப்பதும் தீபெப் பீடபூமியாகும்.

இது சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் தீபெத் நாடு மட்டுமல்ல நேப்பாளம், பூட்டான், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

தீபெத் நாட்டில் இருந்து சம்பி பள்ளத்தாக்கு என்ற முக்கோணவடிவப் பிரதேசம் பூட்டானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தெற்கு நோக்கி நீண்டுள்ளது.

அந்த முக்கோண வடிவ சம்பி பள்ளத் தாக்கின் தென் முனை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளிக்கும் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கும் அண்மை வரை செல்கின்றது.

ind-china-3  சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை) ind china 3ஈசான மூலையில் இந்தியாவிற்குப் பிரச்சனை

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது.

17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள்.

வட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து

சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு ஆப்பாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது.

பூட்டானின் வேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது.

பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது.

அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது.

கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். டொலம் சமவெளிக்கு அண்மையில் கூட சீனர்களை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

இதுதான் பூட்டானின் டொலம் சமவெளியை ஒட்டி இந்தியாவும் சீனாவும் தமது படைகள் மூவாயிரத்திற்கு மேற்பட்டோரை ஒருபடையினரது கண்களை மற்றப்படையினர் பார்க்கக் கூடிய அளவிற்கு நெருக்கமான நிலையில் நிறுத்தி ஒருவரை ஒருவர் விலகிச் செல்லும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

nationalwaterway2  சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை) nationalwaterway2
நீரின்றி அமையாது அமைதி

சீனாவில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மெகாலயா, சிக்கிம், நாகலாந்து மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உணவு உற்பத்திக்கு நீர்வழங்கிக் கொண்டு பங்களாதேசத்தினூடாகச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றது.

சீனாவில் உருவாகிக் கொண்டு வரும் நீர்த் தட்டுப்பாட்டிற்கு பிரம்மபுத்திரா திசை திருப்பப்பட வேண்டும் இந்தியாவின் வட கிழக்கில் இருக்கும் மாநிலங்களை ஆக்கிரமித்தால் அது இலகுவானதாக அமையும்.

அதனால் சீனா நீண்டகாலமாக அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அருணாசலப் பிரதேச எல்லையில் இந்தியாவும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தவாங் மாவட்டத்தை நோக்கி சீனா பாரிய தெருக்கள் உட்படப் பல உட்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது.

சனன் என்னும் நகரில் இருந்து அருணாச்சலபிரதேச் எல்லையை நோக்கி இருநூறு கிலோ மீட்டர் நீளமான எஸ்-202 என்னும் நெடுஞ்சாலை முக்கியமானதாகும்.

பிரம்மபுத்திரா நதியைத்துருப்புச் சீட்டகப் பாவித்து பங்களாதேசத்தை சீனாவின் பிடிக்குள் கொண்டுவருதல் முடியும். இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களை சீனா அபகரித்தால் அதன் மூலம் பங்களாதேசத்தையும் சீனாவால் இலகுவாக அபகரிக்க முடியும்.

பின்னர் இந்து மாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும். பின்னர் இந்தியாவின் கிழக்குக் கரைக்கு பெரும் அச்சுறுத்தலை விடுக்க முடியும். ஏற்கனவே பாகிஸ்த்தானின் குவாடர் துறைமுகமும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகமும் இந்தியாவின் மேற்குக் கரைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

படை நகர்வுகள்
உலகிலேயே படைநகர்வுக்கு சிரமமான பிரதேசம் டொலம் சமவெளியாகும். இந்தியாவிலும் பார்க்க சீனாவிற்கே அதிக சிரமம் உண்டு. டொலம் சமவெளிக்கு அண்மையாக சீனாவிடம் 15 வான்படைத் தளங்களும் இந்தியாவிடம் 22 வான்படைத் தளங்களும் உள்ளன.

டொலம் சமவெளிக்கு அண்மையில் உள்ள சீனா வான்படைத் தளங்கள் கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து உயரமான ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் எழும்புவதற்கு அதிக நேரம் எடுக்கும்.

அத்துடன் அதிக அளவு படைக்கலன்களையும் தாங்கிச் செல்ல முடியாது. ஆனால் இந்தியாவின் பக்கத்தில் அந்தப் பிரச்சனை குறைவு. டொக்லா பீடபூமிக்கு அண்மையில் உள்ள இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்தியாவின் 63வது படைப் பிரிவும் 112வது படைப்பிரிவும் நிலை கொண்டுள்ளன.

இரண்டிலும் மொத்தமாக ஆறாயிரம் படையினர் உள்ளனர். இந்தியாவின் 164-வது படைப்பிரிவு அருட்டப்பட்டு சீன எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் போர் செய்யும் திறனுடைய இரண்டு காலாட்படையணிகள் டொக்லம் பீடபூமியை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவற்றில் மொத்தம் இருபதினாயிரம் படைவீரர்கள் இருக்கின்றார்கள்.

சீனா எத்தனை படை வீரர்களை டொக்லம் பீடபூமியை நோக்கி நகர்த்தி உள்ளது என்பது பற்றி சரியான தகவல் இல்லை. சீனா வெளிவிட்ட தகவல்களின் படி மூவாயிரம் படையினர் உள்ளனர் என அறிய முடிகிறது.

உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். சீனாவின் படைத்துறை ஆரம்பித்த 90வது ஆண்டு நிறைவை ஒட்டிய படை அணிவகுப்பு பீஜிங்கில் இம்முறை கொண்டாடவில்லை. எல்லைப் பிரச்சனை இருக்கும் போது தலைநகர் பீஜிங்கிற்கு படையினரை அனுப்புவது ஆபத்தானது. இதனால் சீனாவின் வட பிரதேசத்தில் உள்ள பாரிய படைத்தளத்தில் இது நடத்தப்பட்டது.
.
பல்குழல் எறிகணைகள் சீனாவிடம் 1770உம் இந்தியாவிடம் 292உம் இருப்பதாக நம்பப்படுகின்றது. நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிடம் 68, இந்தியாவிடம்14

China-India-Border-Disputes  சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை) China India Border Disputesஇந்திய சீன எல்லை வரலாறு
1949 ஒக்டோபரில் சீனாவில் பொதுவுடமைப் புரட்சி மூலம் மாவோ சே துங் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவரது அரசை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

1954-ம் ஆண்டு இரு நாடுகளும் பஞ்சசீலப் பத்திரத்தில் கையொப்ப்டம் இட்டன. ஆனால் அதற்கு முன்னரே சீனா தீபெத் நாட்டை அபகரித்து விட்டது.

1955-இல் இந்தியாவிற்கு சொந்தமான பிரதேசங்களை சீனா தனது நாட்டின் வரைபடத்தில் உள்ளடக்கியது. இந்தியாவைன் ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் சீனா மீண்டும் 1958இல் இந்தியாவின் வட கிழக்குப் பிரதேசத்தை தனது நாட்டின் வரைபடத்தில் உள்ளடக்கியது.

இந்தியாவின் 40,000 சதுர மைல் நிலப்பரப்பை சூ என் லாய் தமது நாட்டுக்குச் சொந்தமானது என்றார். 1960இல் ஜவகர்லால் நேருவும் சூ என் லாயும் இந்தியாவில் எல்லைகள் தொடர்பாக நடத்திய பேச்சு வார்த்தை முறிவடைந்தது.

1961இல் சீனா இந்திய சீன எல்லையில் 12,000 சதுர மைல்களை அபகரித்தது. 1962 நவம்பர் 15-ம் திகதி சீனப் படைகள் இந்தியாமீது தாக்குதல் நடத்தின. 21-ம் திகதி சீனா ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தையும் அறிவித்தது.

தகராற்றின் சதிக் கோட்பாடுகள்
அண்மைக்காலங்களாக அமெரிக்கா இந்தியாவுடன் தனது உறவை அதிகரித்து வருகின்றது.

அந்த உறவை சீனாவை அச்சுறுத்தக் கூடிய அளவிற்கு வளர்க்க அமெரிக்காவின் பெண்டகனில் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். சீனாவிற்கு எதிரான ஓர் உறுதியான நிலைப்பாடை இந்தியா எடுத்து சீனாவுடன் ஒரு போருக்குக் கூடத் தயாரான நிலையில் இந்தியா இல்லை என நினைப்பவர்களைக் குறிவைத்தே இந்தியா டொக்லம் பீடபூமியில் உறுதியாக நிற்கின்றது.

ஒரு போருக்குக் கூட இந்தியா தயக்கம் காட்டாமல் இருக்கின்றது. சீனாவின் பாதுகாப்புத் துறை தரப்பில் இந்தியாவிற்கு மூக்கு உடைபடக்கூடிய ஒரு குறுங்காலப் போரை சீனா செய்ய வேண்டும் என சிலர் நம்புகின்றனர்.

அப்படி ஒரு சரியான பாடம் கற்பிக்கப்படுமிடத்து எல்லா நாடுகளும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் என அவர்கள் கருதுவதுடன் தென் சீனக் கடலை ஒட்டியுள்ள நாடுகளையும் அது அடக்கி வைக்கும் என அடித்துச் சொல்கின்றனர்.

இரு தலைகள் போடும் சீன்
இந்தியாவில் தான் ஒரு தன்னிகரில்லாத தலைவன் என சீன் போடுவதற்கு டொக்லம் சமவெளியை மோடி பயன்படுத்துகின்றார்.

அவர் ரேஷன் ஒழிப்பு எரிவாயுவிற்கான உதவித் தொகை ஒழிப்பு போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சீனாவுடனான ஒரு முறுகல் நிலை மோடிக்கு பெரிதும் உதவும்.

2017 இலையுதிர்காலத்தில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது அதில் சீன அதிபர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தன்னிகரில்லாத தலைவராக நிலை நாட்ட வேண்டும். இதனால் இரு நாடுகளும் டொக்லா பிரதேசத்தில் இருந்து இப்போதைக்கு விலகிச் செல்ல வாய்ப்புக் குறைவு.

சீன ஊடகங்கள் ஒரு குறுகியகாலம் மட்டும் நீடிக்கக் கூடிய படை நடவடிக்கை மூலம் இந்தியர்களை டோலம் பீட பூமியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தைப் பரவலாக முன் வைத்த கருத்தை சீனப் பாதுகாப்புத் துறை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.

போர் நடக்குமா?

2016-ம் ஆண்டு சீனா இந்தியாவிற்கு 60பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்து கொண்டு 9பில்லியன் பெறுமதியான இறக்குமதியை மட்டும் இந்தியாவில் இருந்து செய்தது. இந்த வர்த்தகம் பாதிக்கப்படுவதை இரு நாடுகளும் விரும்பாது.

போர் ஓரு அணுக்குண்டுப் போராக நடந்தால் இரு நாடுகளும் பேரழிவைச் சந்திக்கும் அணுக்குண்டுகள் இல்லாத போர் நடக்கும் போது சீனா மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றலாம். ஆனால் இந்தியாவின் ஏவுகணைகள் சீனாவின் பல நகரங்களைப் பதம் பார்த்துவிடும்.

அதே போல சீனாவாலும் செய்ய முடியும். உலகத்திலேயே அதிக வேகமாகப் பாயக்கூடிய வழிகாட்டல் ஏவுகணையாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் போரில் முக்கிய பங்கு வகிக்கும்.

சீனா தனது பொருளாதாரம் உச்ச நிலையடைந்து அமெரிக்காவையும் மிஞ்ச வேண்டும் என்ற இலக்கை அடையும் முயற்ச்சி இந்தியாவுடனான போரில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். அதனால் போர் ஒன்று உடனடியாக நடக்காது ஆனால் இந்த முறுகல் நீடிக்கும்.

ஆனால் அது போர் என்ற நிலையை நோக்கி நகரும் போது இரசியா தலையிட்டு சமாதானத்தை நிலை நாட்டும். இரு நாடுகளும் போரால் அழியாமல் தன்னிடமிருந்து படைக்கலன்களைப் பெருமளவில் கொள்வனவு செய்ய வேண்டும் என அது நம்புவதால் போர் தவிர்க்கப்படும்.

-வேல் தர்மா-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News