அம்பாறையில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுசெய்து அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் குமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல் குமார,

 

“இவ் வருடம் கடந்தஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதியளவில் நான் பொலிஸ் மா அதிபரை சந்திக்க சென்றிருந்தேன்.

அப்போது அவர் எனக்கு, ‘எப்படி நாமல் சந்தோஷமா? இவன் என்னுடைய ஆள்” என்று கூறும் போது நாலக சில்வா சிவில் உடையில் அங்கு வருகிறார்.

‘உங்களுக்கு பரிசொன்று இருக்கிறது’ என்று கூறி அவர் 2 காசோலைகளை கையில் எடுக்கிறார்.

அந்த இரு காசோலைகளிலும் இரண்டரை இலட்சம் ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது.

பொலிஸ்மா அதிபர் தான் அந்த கடிதத்தை என் கைகளில் தந்தார். ஊடகவியலாளர்களும் புகைப்படங்களை எடுத்தனர். பொலிஸ்மா அதிபர் காசோலைகள் இரண்டையும் அப்போதே இழுத்து எடுத்தார்.

பின்னர் பொலிஸ்மா அதிபர் என்னிடம்,

‘இதற்கு பிறகு நீ செய்ய நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் நிறுத்து இல்லாவிடின் என்னை கெட்ட மனிதனாக்கி கொள்ளாதே’ என்று அதிகாரத் தொணியில் கூறினார்.

அதற்கு நான் சிரித்தேனே தவிர வேறு எதுவும் கூறவில்லை. ஏனென்னறால் அவர் நல்ல மனிதனா? கெட்ட மனிதனா? என்று எனக்கு தெரியும்.

அவர் அன்று செய்த அந்த செயல் தான் எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம்.

ஏனென்றால், நாட்டின் பொலிஸ்மா அதிபரும் இச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கிறார் என அன்று நான் தெரிந்து கொண்டமையால்.

‘உன்னை நாலக சில்வாவிடம் பாரம் கொடுத்துள்ளேன் வேறு எந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நீ தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியாது.

உன்னுடைய பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்பவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்.

நான் கூறுவதை கேட்டு நடந்து கொண்டால் உனக்கு பணம் கிடைக்கும்’ என பொலிஸ்மா அதிபர் என்னிடம் கூறினார்.

அதற்கு பிறகு அந்த இரு காசோலைகளையும் எனக்கு கொடுத்து விட்டு ‘இந்த காசோலைகள் இரண்டும் நாலக சில்வாவின் பெயரில் தான் இருக்கிறது அவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்’ என்று பொலிஸ்மா அதிபர் கூறினார்.

நான் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தி 24 மணித்தியாலங்கள் கடக்கும் முன்பே பொலிஸ்மா அதிபர், ‘நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களின் குரல் பதிவுகள் சந்தேகத்திற்கிடமானவை’ என்று அறிக்கை வெளியிட்டார்.

பொலிஸ்மா அதிபர் இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்காது மற்றொரு பிரிவிடம் விசாரணை செய்யுமாறு வழங்கினார்.

இவைகள் தான் சந்தேகத்தை எழுப்புகின்றன. இவ் விடயத்தை மறைக்கவே அரசியல் வாதிகள் வெவ்வேறு வழிமுறைகளை பிரயோகிக்கிறார்கள். சரத் பொன்சேகா கோஷமிடுகிறார், ரணிலும் கோஷமிடுகிறார்.

நான் ஒரு வருட காலமாக இவ் விடயங்கள் தொடர்பாக நாலக சில்வாவுடன் பேசியுள்ளேன். அதற்கு நாலக சில்வா,

‘அரசியலமைப்பில் இருக்கிறதாம் ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் அப் பதவிக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என்று கூறினார்.

அவ்வாறெனில் யார் அந்த இடத்தை பெற முடிந்தவர், ரணில் விக்ரமசிங்க. அதனால் நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கரையேறிவிடலாம்’ என்று கூறினார்.

அதற்கு நான், இதற்கான திட்டம் எங்கே என்று நாலக சில்வாவிடம் கேட்டதற்கு நாலக சில்வா, ‘பயப்படாதே எங்களிடம்

( சிங்களத்தில் படு : பொருள் அல்லது ஆள் படை எனப் பொருள்படும்) இருக்கிறது.’என்று கூறினார்.

நான் கேட்கிறேன் யார் அது எஸ்.டி.எஃப் (S.T.F)?ஆ என்று நான் ஏன் அப்படி கேட்டேன் கண்டி தெல்தெனிய கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் நான் பொலிஸ் வாகனத்தில் நாலக சில்வாவின் அருகில் அமர்ந்து கொண்டு தான் இருந்தேன்.

அச் சந்தர்ப்பத்திலும் சரத் பொன்சேகா நாலக சில்வாவோடு தொலைபேசியில் பேசினார். அவை அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டு தான் இருந்தேன்.

அவர்கள் கதைத்த பெரும்பாலான விடயங்கள் எனது கைத்தொலைப்பேசியில் பதிவாகியுள்ளது.

அது மட்டுமல்லாது  இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின்  செயலாளர் சமன் திஸாநாயக்கவை அப் பதவியிலிருந்து நீக்க மேற்கொண்ட திட்டம், கொழும்பு மேற்கு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நந்தன முனசிங்க, களுத்துறை மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர் கொடித்துவக்கு, விஷேட அதிரடி படை கட்டளைத் தளபதி லதீப் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி பிரசன் டி அல்விஸ் ஆகியோரை கொலை செய்வதற்கு மேற்கொண்ட சதித்திட்டங்களின் குரல் பதிவுகளை நான் இன்னும் சேகரித்துக்கொண்டு தான் இருக்கிறேன்” என தெரிவித்தார்.