ilakkiyainfo

ilakkiyainfo

ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11)

ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11)
January 04
00:16 2017

எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி இருப்பது நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது. தஞ்சை பெரியகோயில் விழாவில் மயக்கம்  வருவதாகச் சொன்னவரை டாக்டர் குழு பரிசோதித்து உறுதிப்படுத்தியது.

எழுபதை நெருங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை; வெளியே யாரிடமும் சொன்னதுமில்லை.

இம்முறை பக்கவாதம் காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு இன்னொரு சிக்கல். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தது.

அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட  அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் டாக்டர்கள் வந்து சேர்ந்தார்கள்.

மாநிலமெங்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரை யாரும் பார்க்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு.

எம்.ஜி.ஆர். படுக்கையில் உயிருக்குப் போராடுவது போல் போட்டோ வெளியானால் இமேஜ் பாதிக்கப்படும் என்று பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அப்பல்லோவில் எம்.ஜி.ஆரை அவரது சொந்த பந்தங்களால் பார்க்க முடிந்தது. சினிமாக்காரரான வாலியால் பார்க்க முடிந்தது. கட்சிக்காரரான ஆர்.எம்.வீ.யால் பார்க்க முடிந்தது.

ஆனால் அதற்கு  முந்தைய மாதம் வரை கொள்கை பரப்புச் செயலாளராக  இருந்த ஜெயலலிதாவால் பார்க்க முடியவில்லை.

காரணம் , ஜெயலலிதாவின் தலையீடுகளாலும் முன்னேற்றத்தாலும் அதிருப்தியடைந்திருந்த மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பியிருந்தனர்.

எம்.ஜி.ஆரை தூரத்தில் நின்று பார்த்துவிட்டு வருவதாக ஜெயலலிதா சொல்லிப்பார்த்தார். அனுமதி கிடைக்கவேயில்லை.

அக்டோபர் 16, 1984. பிரதமர் இந்திரா அப்பல்லோவுக்கு வந்து எம்.ஜி.ஆரைப் பார்த்தார். இந்திராவின் வருகை ஏனோ கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

டெல்லியிலிருந்த ஜெயலலிதாவுக்கு இதெல்லாம் தெரியாது. ஜெயலலிதாவுக்குப் போனில் ஆறுதல் சொன்ன இந்திரா காந்தி , ‘ எம்.ஜி.ஆரை அவர் பார்க்காமல் இருப்பது நல்லது ’ என்றார்.

ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லவும் ஆளில்லை. அடுத்த பத்தாவது நாளில் இந்திராகாந்தி சீக்கிய காவலாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திராவின் மூத்த மகன் ராஜிவ் காந்தி அவசரம் அவசரமாகப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

திடீரென்று ஒரு நள்ளிரவில் எம்.ஜி.ஆர். பேசும் சக்தியை இழந்தார். மூளையில் கட்டி. டாக்டர்கள் கைவிரித்தார்கள்.

அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மூன்று லட்ச ரூபாய் செலவில் சிலிக்கன் வாட்டர் பெட் தயாரானது. எம்.ஜி.ஆரை ஏற்றிக்கொண்டு அந்தத் தனி விமானம் விண்ணைத் தொட்டது.

அதே நேரத்தில் கடைசிவரை எம்.ஜி.ஆரைப் பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்கிற கவலையோடு ஜெயலலிதா போயஸ் கார்டனில் தனிமையில் இருந்தார்.

அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும்  எம்.ஜி.ஆரின் சின்ன புகைப்படம்கூட வெளியே வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

நியூ யார்க் விமானநிலையத்தில் ஸ்டிரெச்சரில் எம்.ஜி.ஆரை இறக்கும்போது தூரத்திலிருந்து ‘ இந்து ’ பத்திரிகையின் நிருபர் எடுத்த படம்தான் , மீடியாவுக்குக் கிடைத்த முதல் படம்.

அவசரமாக எம்.ஜி.ஆருக்கு மாற்றுச் சிறுநீரக ஆபரேஷனுக்கு நாள் குறித்தார்கள். டிசம்பர் 19, 1984. அதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சரியாக எட்டு நாள் இருந்த நேரம் அது.

ஒரு பக்கம் இந்திரா காந்தி படுகொலை; இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர். படுத்தப் படுக்கை.

அனுதாப அலை நிச்சயம் என்கிற நம்பிக்கையோடு அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியினர் களம் இறங்கினார்கள். சட்டமன்றத்தின் ஆயுள் , ஆறுமாதம் இருக்கும்போதே அவசர அவசரமாகத் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

hande-dr-mgr-25-1477374314 ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) hande dr mgr 25 1477374314தேர்தல் வந்தால் பிரசாரத்தில் ஆரம்பித்து பதவியேற்பு வரை எல்லாமே ஆர்.எம்.வீதான்.

இருபத்தைந்து வருஷமாக அதுதான் நடைமுறை. ஆட்சி மன்றக்குழுவிலோ , தலைமைக்கழக நிர்வாகத்திலோ ஜெயலலிதா பொறுப்பில் இல்லை.

தேர்தல் சம்பந்தமாக ஆர்.எம்.வீ. எடுக்கும் முடிவுகளுக்குக் கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதா ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.

பிரசாரத்திலும் அவரது ஆதரவாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். ஜெயலலிதா பிரசாரத்துக்கு வருவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியானது.

ஜெயலலிதா, நிச்சயம் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்றார் நெடுஞ்செழியன்.

இன்னொரு பக்கம் ஜெயலலிதா தேவையில்லை என்று பாக்கியராஜை பிரசாரத்துக்கு அனுப்பினார்கள்.

நியூ யார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்து ஆசி வாங்கிக்கொண்டு வந்திருப்பதாக பாக்கியராஜ் சொன்னார்.

பாக்கியராஜின் பிரசாரத்துக்கு மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை.

டிசம்பர் 4, 1984. தென்மாவட்டங்களில் ஜெயலலிதா தனது சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

முதல் வேலையாக ஆர்.எம்.வீ.க்கு போன் செய்த ஜெயலலிதா, ‘ ஆண்டிப்பட்டியில் இருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் தேவை ’ என்றார்.

ப்ரூக்ளின் படுக்கையிலிருந்தபடியே எம்.ஜி.ஆர் , ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார்.

எம்.ஜி.ஆரை ஆதரித்து ஜெயலலிதா பேசிய முதல் கூட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Jayalalitha back with a bang! எம்.ஜி.ஆர். உயிரோடு இல்லை ; ஐஸ் பெட்டியில் வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

_92862762_91520850_jayawithmgr ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) 92862762 91520850 jayawithmgrஜெயிப்பதற்காக அவரது பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்கள்.

தேர்தல் முடிந்ததும் எம்.ஜி.ஆர். இறந்துவிட்ட செய்தியை சொல்வார்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள்.

எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் மக்களுடைய ஆர்வமிருந்தது.

கருணாநிதியும், ‘தி.மு.க.வை ஜெயிக்க வையுங்கள் ; எம்.ஜி.ஆர். திரும்பி வந்தால் முதல்வர் பதவியையே விட்டுக்கொடுத்துவிடுகிறேன் ’ என்று பேசியிருந்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி மக்கள் கேட்டால் என்ன சொல்வது என்கிற தயக்கம் ஜெயலலிதாவுக்கு ஆரம்பத்தில் நிறையவே இருந்தது. அவருக்கே எதுவும் உறுதியாகத் தெரியாத நிலை.

எம்.ஜி.ஆர். பற்றி எந்தத் தகவலைச் சொன்னாலும் அது தலைப்புச் செய்தி. நிலைமையை ஜெயலலிதா சாமர்த்தியமாகச் சமாளித்தார். எல்லா மேடையிலும் தன்னைப்பற்றிப் பேசாமல் எம்.ஜி.ஆர். பற்றி மட்டுமே பேசினார்.

‘ எம்.ஜி.ஆர். பற்றி புதிய தகவல்களை தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசை உண்டா , இல்லையா ?’ இது ஜெயலலிதா. ‘ ஆமாம்… ஆமாம் ’ – பதில் சொன்னது கூட்டம்.

‘ இப்போது சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர். நலமாகவே இருக்கிறார். தமிழக முதல்வராகவே அவர் தாயகம் திரும்பி வருவார்! ’ கூட்டத்தில் பலத்த கைதட்டல். ‘ எம்.ஜி.ஆர். வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க!! ’

‘ அமைதி… அமைதி. உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். தி.மு.க. தலைவர் கருணாநிதி , நாளை இங்கே பேச வருவார்.

அப்போது இந்த நல்ல செய்தியை அவருக்கும்  எடுத்துச் சொல்லுங்கள்! ’ பேசி முடித்துவிட்டு கையிலிருக்கும் மாலையை எம்.ஜி.ஆர். பாணியில் மக்களிடம் வீசிவிட்டு இரண்டு விரலைக் காட்டி கிடுகிடுவென்று ஜீப்பில் ஏறுவார் ஜெயலலிதா.

அதுவரை கைதட்டல் ஓயாது. மக்களுக்கு வேறு கேள்வி கேட்கும் எண்ணமும் வராது. மூன்று வாரச் சுற்றுப்பயணம் , 570 பொதுக்கூட்டங்கள்.

அந்த டிசம்பர் குளிரிலும் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்பதற்காக , மக்கள் காத்திருந்தார்கள்.

mgr_america_13204 ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) mgr america 13204மக்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு எம்.ஜி.ஆர். பற்றி தவறாமல் பேசுவார். அதே நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ப்ரூக்ளின் மருத்துவமனையில் நடந்த மாற்றுச் சிறுநீரக ஆபரேஷன் வெற்றியடைந்தது.

தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து , இரட்டை விரலைக் காட்டினார். அவர் சாப்பிடுவதையும் , கையசைப்பதையும் அப்படியே வீடியோவில் பதிவு செய்துகொண்டு வந்து தமிழ்நாட்டில் தெருத் தெருவாகக் காட்டி பிரசாரம் செய்தார்கள்.

அந்தப் பிரசார யுக்தி பலனளித்தது. அ.தி.மு.க. – இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

எம்.ஜி.ஆருக்கு யார் யார் எங்கெங்கே போட்டியிட்டார்கள் என்பதெல்லாம் தெரியாது. தேர்தல் முடிவு வந்ததும் வெற்றிப் பெற்றவர்களின் லிஸ்ட்டை ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு ஃபேக்ஸ் அனுப்பி படித்துக் காண்பித்தார்கள்.

பிரசாரத்துக்கு போகவே யோசித்த சீனியர் , ஜூனியர் கட்சி பிரபலங்களெல்லாம் ராமவாரம் தோட்டத்தில் அமைச்சர் கனவுகளோடு காத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆரின் கிச்சன் கேபினட் , அமைச்சர் பதவிக்கு ஆளெடுப்பதில் மும்முரமாக இருந்தது. ஜெயலலிதா அந்த நேரத்தில் டெல்லியில் இருந்தார்.

பிப்ரவரி 4, 1985. அதிகாலை நேரம். பரங்கி மலையிலிருக்கும் அந்த ராணுவத் திடலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொட்டும் பனியில் வானத்தில் தோன்றும் ஒவ்வொரு வெளிச்சப் புள்ளியையும் பார்த்தவாறே மக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

சரியாக ஆறு மணிக்கு உச்சி வானில் ஒரு கிர்ர் சத்தம். ‘ பிளேன் வந்தாச்சு… தலைவரு வந்துட்டாரு டோய்… ’ ஒரே கூச்சல்.

அடுத்த சில மணி நேரங்களில் வெளிர் நீல நிற அம்பாசிடர் 4777 கார் சரிவான மரப்பாலத்தில் ஏறி சிறப்பு மேடையிலேயே போய் நின்றது.

காரிலிருந்த இறங்கிய எம்.ஜி.ஆர். , யாருடைய உதவியும் இல்லாமல் மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சுற்றிலும் குழுமியிருந்த மக்களைப் பார்த்து இரட்டை விரலைக் காட்டவும் , கூட்டத்துக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

jayalalithaa_16274 ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) Jayalalithaa 16274

‘புரட்சித் தலைவர் வாழ்க!’ கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஏர்போர்ட் வெயிட்டிங் ரூமில் எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தோடும் , எதிர்காலம் பற்றிய கவலைகளோடும்  தனிமையில்  உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். மீண்டு வந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அவரிடமிருந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் அப்போது குறைந்திருந்தது.

யாரிடமும்  பேசமுடியாத   நிலையில் எல்லாமே  சைகைதான். அதைத் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டதால் , நிறையக் குழப்பங்கள். கட்சியின் நிஜமான விசுவாசிகள் பட்டியல் அடித்தல் திருத்தலோடு லிஸ்ட் புதிதாகத் தயாரானது.

ராஜ்ய சபா துணைத்தலைவர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கப்ட்டார்.

எம்.ஜி.ஆர். மட்டுமே முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்களே இல்லாத அமைச்சரவை அது.

அமைச்சர்கள் நியமனம் பற்றிக் கேட்க எல்லோருக்குமே தயக்கம்.

எம்.ஜி.ஆரோ , ராமாவரம் தோட்டத்தில் தான் நடித்த பழைய படங்களை வீடியோவில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் .

கிட்டத்தட்ட ஒரு மாத இழுபறிக்குப் பின்னர் சிலருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதிலும் ஜெயலலிதா பெயர் இல்லை.

எம்.ஜி.ஆர். இல்லாத நேரத்தில்  பிரசாரத்துக்குப் போய் பெரிய வெற்றியைத் தேடித்தந்தவர்  ஜெயலலிதா என்று மீடியா தெளிவாக ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

தலைமைச்செயலகத்தில்  ஜெயலலிதா , எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்.

சம்பிரதாயத்துக்கு நான்கு வார்த்தைகள் பேசிய எம்.ஜி.ஆர். , வேறு ஏதும் கேட்கவில்லை. ‘ நீ புடைவை கட்டிய அபிமன்யூ ’ என்று ஜெயலலிதாவைப் புகழ்ந்து வாலி கவிதை எழுதினார்.

அடுத்த முதல்வராக வருவதற்கு ஜெயலலிதாவுக்குச் சகல தகுதிகளும் இருப்பதாகவும், ஏனோ கட்சியில் அவர் ஓரங்கட்டப்படுவதாகவும் ஆங்கிலப் பத்திரிகைகள் கட்டுரை எழுதின.

ஒரு சில ஆங்கிலப் பத்திரிகைகள் ஜெயலலிதா அடுத்த முதல்வராக வரப்போவதாகவும் எம்.ஜி.ஆர். ஓய்வெடுக்கப்போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆந்திராவில் என்.டி.ஆர். அரசு கலைக்கப்பட்டது.

அதைக் கண்டித்து கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற முறையில் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.

இரண்டாவது நாள் , என்ன காரணத்தினாலோ அதை வாபஸ் பெற்றுக்கொண்டார். ஜெயலலிதாவின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

திடீரென்று கட்சிக்காரர்களுக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து புது உத்தரவு. யாரும் ஜெயலலிதாவிடம் பேசக் கூடாது.

முடிவெடுத்துவிட்டால் அதற்கான காரணங்களைத் தேடுவது அவரது பழக்கமல்ல.

ஜெயலலிதா கட்சியில் ஓரங்கட்டப்படுவதைக் கட்சியினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. காரணம், எம்.ஜி.ஆரின் குணம். ஜெயலலிதாவை  எதிர்த்தோ, ஆதரித்தோ பேசிவிட்டால்  எம்.ஜி.ஆர். கோபப்படுவார்.

எம்.ஜி.ஆரின் மனத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர். எந்த முடிவை எடுத்தாலும் அதை மௌனமாக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

முன்பு ஒரு முறை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவை நீக்க முடிவெடுத்தார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் அது சம்பந்தமான ஒப்புதல் கடிதத்தை அவரே எழுதி வாங்கியிருந்தார்.

சத்யா ஸ்டுடியோவில்  பொதுக்குழு கூடியது. எம்.ஜி.ஆரின் தீர்மானத்தை ஆதரித்து ஒரு சிலரும் , மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்னும் சிலரும் பேசினார்கள்.

பேச்சின் முடிவில் எம்.ஜி.ஆர். எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியொரு விவாதம் நடந்ததாகவே வெளியுலகிற்கும் தெரியவரவில்லை.

திடீரென்று கட்சிக்குள் ஜெயலலிதா பேரவை என்கிற பெயரில் புதுப்புது அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. முரசொலியில் வரும் செய்திகளில் ஜெயலலிதா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

எம்.ஜி.ஆருக்கு பயங்கர கோபம். ஜெயலலிதா பேரவை ஆரம்பித்தவர்களுக்கு ராமாவரம் தோட்டத்தில் நல்ல அர்ச்சனை கிடைத்தது. அதற்குப் பின்னர் வந்த செய்யாறு, திருநெல்வேலி இடைத்தேர்தல்களில் ஜெயலலிதாவுக்குப் பிரசாரம் செய்யக்கூட அனுமதியில்லை.

நாளுக்கு நாள் அ.தி.மு.க.வில் கோஷ்டிச் சண்டை அதிகமாகிக்கொண்டிருந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர். , முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாகப் பேசினார்.

ஆர்.எம்.வீ. Vs ஜெயலலிதா கோஷ்டி அரசியலை முடிவுக்குக் கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. கட்சித் தொண்டர்களுக்கு அது பெரிய அதிர்ச்சி!

அடிமட்ட தொண்டர்களில் சிலர் சோகம் தாங்காமல் தீக்குளித்து இறந்தார்கள்.

எம்.ஜி.ஆரும் தனது முடிவை மாற்றிக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் , முடிவு தி.மு.க.வுக்குச் சாதகமாக இருந்தது.

அந்தத் தோல்வியை எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கவேயில்லை.

ஆறு மாதமாக ஆட்சியையும் சரி , கட்சியையும் சரி எம்.ஜி.ஆரால் சரிவர கவனிக்க முடியவில்லை. செல்வாக்கு சரிந்து கொண்டிருந்தது.

தன்னுடைய ரசிகர் மன்றங்களை , எம்.ஜி.ஆர். தூசிதட்ட நினைத்தார்.

ஆர்.எம்.வீ.யிடம்தான் அந்தப் பொறுப்பை தருவார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் , அவர் ஜெயலலிதாவைக் கூப்பிட்டு மதுரையில் ஒரு ரசிகர் மன்ற மாநாட்டை நடத்துமாறு உத்தரவிட்டார்.

அதில் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அறிவிக்க இருக்கிறார் என்று செய்திகள் வர ஆரம்பித்தன.

4vqz5z ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) 4vqz5z1985, ஜூலை 14. எம்.ஜி.ஆர். ஜானகி மற்றும் ஜெயலலிதா சகிதம் மதுரைக்கு விமானத்தில் வந்து இறங்கினார்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு பிரமாண்டமான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரண்டு வந்திருந்த ரசிகர்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆருக்குப் பழைய உற்சாகம் வந்துவிட்டது.

‘ மன்றம் வேறு கட்சி வேறு அல்ல ; இரண்டும் ஒன்றுதான். கழகம் உடல் என்றால் அதில் மன்றம் உயிர் ; 1972 – ல் தொடங்கிய தர்மயுத்தம் இன்னும் முடியவில்லை.

ஆகவே , ரசிகர்கள் வெளியே செல்லும்போது தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும் ’ என்று ஏதேதோ பேசினாலும் அரசியல் வாரிசு பற்றிய செய்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.

mgr ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11) mgrஜெயலலிதா , எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் சார்பில் ஆறடி உயர வெள்ளி செங்கோலை பரிசாக அளித்தார். பரிசை வாங்கிய எம்.ஜி.ஆர். , அதை அப்படியே ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

காமிராவின் பிளாஷ் வெளிச்சங்கள் மின்ன ஆரம்பித்தன. கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானித்த அந்த நிகழ்ச்சி , அரை நிமிஷத்தில் நடந்து முடிந்துவிட்டது.

பழையபடி கட்சியைச் சுறுசுறுப்பாக்க ஜெயலலிதா தேவை என்று நினைத்தார்.

ஜெயலலிதாவுக்கு மீண்டும் கட்சியில் பழைய அந்தஸ்து கிடைத்தது. 1985, செப்டெம்பர் 6. மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா!

போயஸ் தோட்டத்தில் உற்சாகம் வழிந்தது. அன்றைக்குத்தான் ஆர்.எம்.வீ.யின் அறுபதாம் கல்யாணம்.

நேராக ஆர்.எம்.வீ. வீட்டுக்குப் போன ஜெயலலிதா , பொன்னாடை போர்த்தி ஆசீர்வாதம் பெற்று , பலரை ஆச்சர்யப்படுத்தினார்.

1985, செப்டெம்பர் 24. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பில் அடையாள உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். தலைமையில் அண்ணா சமாதியில் அது நடந்தது.

தாம்பரத்தில் ஆர்.எம்.வீ. தலைமையிலும் செங்கல்பட்டில் ஜெயலலிதா தலைமையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஒருவழியாக அ.தி.மு.க.வில் கோஷ்டி எண்ணிக்கையெல்லாம் குறைந்து , இரண்டே இரண்டு கோஷ்டி மட்டுமே என்கிற நிலைமை வந்தது.

அடுத்து வந்த இரண்டு வருடங்கள் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீ.க்கும் சரியான பலப்பரீட்சை.

ஏதாவது ஒரு கோஷ்டிக்குப் பதவி கிடைப்பதும் , எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றுவிட்டு வந்ததும் , ஏற்கெனவே தரப்பட்ட பதவி பறிக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.

தொடரும்..

அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-10)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News