முன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டம் ஒன்று இருந்தது என்று கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, இராணுவ ரீதியாக தலையிட்டால் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் தோட்டத்தொழிலாளர்கள்  ஆபத்தில் சிக்க நேரிடும் என்று அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

 23 வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்திற்கு (ராஜ்ய சபாவுக்கு ) தெரிவாகியிருக்கும் வைகோ ‘ த இந்து ‘ ஆங்கிலத்தினசரிக்கு நேற்று திங்கட்கிழமை அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில் ” இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை உருவாக்கிக்கொடுத்திருந்தால், அவரை இலங்கை தமிழர்கள் ஆயிரம் வருடங்களுக்கு பராசக்தி என்று வழிபட்டிருப்பார்கள் ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய இராணுவத்தைப் பயன்படுத்தி தனித்தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்ததாக முன்னர் ஒரு தடவை கூறியிருந்தீர்களே…..அது பற்றி இப்போது ஏதாவது கூறவிரும்புகிறீர்களா என்று வைகோவிடம் நேர்காணல் கண்ட செய்தியாளர் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ;

 60731 தமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது - வைகோ தகவல் தமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது - வைகோ தகவல் 60731 e1563183632111

இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பியபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது பாராளுமன்ற உரையில் ஒரு தடவை பங்களாதேஷை உருவாக்கியதற்காக இந்திரா காந்தியை துர்க்கையாக வர்ணித்ததை நான் நினைவுபடுத்தினேன்.

தமிழ் ஈழத்தை உருவாக்க இந்திரா அம்மையாரால் இயலுமாக இருந்திருந்தால் அவரை இலங்கைத் தமிழர்கள் பராசக்தியாக ஆயிரம் வருடங்களக்கு வழிபட்டிருப்பர் என்று நான் கூறினேன்.

அவ்வாறு நான் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்ட அம்மையார் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று சொன்னார்.

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் சபைக்கு வெளியில் அவரைச் சந்திப்பதற்காக ஓடோடிச்சென்ற நான் ‘ தமிழ் ஈழத்தை உருவாக்குங்கள் ‘ என்று வேண்டுகோள் விடுத்தேன்.

அதற்கு அவர் இராணுவத்தலையீட்டைச் செய்தால் இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழ்கின்ற தமிழர்களான தோாட்டத்தொழிலாளர்கள் இடையில் அகப்பட்டு ஆபத்திற்குள்ளாவர் என்று பதிலளித்தார்.

சகல தமிழர்களையும் ஒரு பக்கத்துக்கு கொண்டுவருவதற்கு தந்திரோபாயமொன்றை வகுக்குமாறு அம்மையாரிடம் நான் கூறினேன்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் உணர்ச்சிவசப்படாமல் அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு என்னை அவர் கேட்டுக்கொண்டார்.

நான் அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சரவை சகாக்கள் அந்த இடத்துக்கு வந்ததால் சம்பாஷணையை நிறுத்திக்கொள்ளவேண்டியதாயிற்று.

உடனடியாக நான் டில்லியில் உள்ள ‘ த இந்து ‘ பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று ஜி.கே.ரெட்டியிடம் ‘ இந்திரா அம்மையாரிடம் திட்டம் ஒன்று இருக்கிறது.

அவரை உடனடியாக சந்தியுங்கள் ‘ என்று கூறினேன். ரெட்டி விடுதலை புலிகளையும் இலங்கை தமிழர்களின் போராட்டத்தையும் ஆதரித்தவர்.

அந்த நேரமளவில் பாராளுமன்றக்கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. அடுத்து இந்திரா அம்மையார் கொல்லப்பட்டுவிட்டார். தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டமொன்று அவரிடம் இருந்தது உண்மை.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது விடுதலை புலிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்களின் பட்டியல் ஒன்றுடன் அவரையும் நான் அணுகினேன்.

அந்தப்பட்டியல் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவரது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஊடாக  எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியல் இன்னமும் கூட என்னிடம் இருக்கிறது.

பிரதமர் சிங் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டபோது அவருக்காக குரல் கொடுத்தவன் நான்.

தான் ஒரு கூட்டரசாங்கத்தின் பிரதமராக இருப்பதால் ஆயுதப்பட்டியல் விடயத்தில் எதையும் செய்யமுடியாமல் இருப்பதாக சிங் என்னிடம் கூறினார்.

ஆனால், மருந்துவகைகளை அனுப்புவதற்கு இணங்கிய அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ராலைச் சந்திக்குமாறு என்னைக்கேட்டுக்கொண்டார்.

முதலாவது தொகுதி மருந்துவகைகளின் விபரங்களை இந்திய புலனாய்வு அமைப்பான ” றோ” வின் சிரேஷ்ட அதிகாரியொருவர் என்னைச் சந்தித்துப் பெற்றுக்கொண்டார்.

47 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துவகைகளின் பட்டியலை நான் கையளித்தேன்.ஆனால், சில காரணங்களால் அந்த வருந்துவகைகளை அனுப்பும் முயற்சி கைகூடவில்லை. அந்த காரணங்களை இப்போது நான் கூறவிரும்பவில்லை.எனது சுயசரிதையில் அவற்றை வெளியிடுவேன்.