ilakkiyainfo

ilakkiyainfo

தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் தீர்வின் சாவி!! -எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)

தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் தீர்வின் சாவி!! -எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)
December 07
01:36 2018

அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார்

அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி இருக்கவில்லை. “பொதுத் தேர்தலை நடத்தி, புதிதாக நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதே, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உள்ள ஒரே தீர்வு” என, அவர் கூறினார்.

இது, அவரோ அவரது அணியினரோ, முதல் முறையாகக் கூறும் விடயம் அல்ல. அவரது அணியினர், பல்வேறு குழுக்களின் பெயர்களில் நடத்தி வரும், ஆர்ப்பாட்டங்களின் பிரதான சுலோகமாக இருப்பதும், பொதுத் தேர்தல் ஒன்று வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், அவர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள விடயம் ஒன்று தொடர்பாக, அவரது கருத்தை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர்த்து, 13 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை மீதான விசாரணை நவம்பர் மாதம் 12, 13 ஆம் திகதிகளில் நடைபெற்று, இம்மாதம் நான்காம் திகதி (நேற்று) வரை ஒத்தி வைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (07) அதன் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. அந்த வழக்கைப் பற்றியே மஹிந்த, ‘விசேட’ அறிக்கை மூலம், தமது கருத்தைத் தெரிவித்து இருந்தார்.

“அரசமைப்பின் 70 (1) வாசகத்தின் படி, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்ட விரோதமாக இருந்தால், நாட்டில் எது நடந்தாலும், நாலரை வருடங்கள் செல்லும் வரை, நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாமல் போய்விடும்” என, அவர் அந்த உரையில் வாதிட்டார்.

இந்நாள்களில் பலர், ஊடகங்கள் மூலம், இந்த வழக்கைப் பற்றிய தமது கருத்தைத் தெரிவித்து வருவது உண்மை தான்.

ஆனால், ஒருவர் பிரதமராகத் தம்மைக் காட்டிக் கொண்டு, தொலைக்காட்சியில் தோன்றி, இவ்வாறு கருத்து வெளியிடுவது, நீதிமன்றத்தின் மீது, அழுத்தம் செலுத்துவதாக அமையாதா என்ற கேள்வி எழுகிறது.

இதையே, மஹிந்த ஆதரவாளராக மாறியிருக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரும் அன்று செய்தார்.

அவர் இதைவிட, நேரடியாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையிலேயே, கருத்து வெளியிட்டு இருந்தார்.

மக்கள் பொதுத் தேர்தலொன்றைக் கோருவதாகவும் நீதிமன்றம் தமது தீர்ப்பின் போது, அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ‘நீதிபதிகளே, எமது வாக்குரிமையை எமக்குத் தாருங்கள்’ என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளும் கொழும்பில் ஒட்டப்பட்டு இருந்தன.

இவை, நீதிமன்றத்தின் மீது அழுத்தம் செலுத்துவதாக அமையாதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90  தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் தீர்வின் சாவி!! -எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை) 625

மஹிந்த அணியினரும், தற்போதைய அரசியல் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டியமை பிழையென்று அறிவிக்க வேண்டும் என்று கோரியே, அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சிவில் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதியாக இருந்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவே, அந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளர்.

நாடாளுமன்றத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவிக்கும், அவரது அமைச்சரவைக்கும் எதிராக, இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கடந்த மாதம் 14ஆம் திகதியும் 16ஆம் திகதியும் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்தே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் படிப்பவர்களுக்கு, இந்த வழக்குகள் மிகவும் சிறந்த வழக்குகள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளதால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் சகல அலுவல்களும் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதே அவரது வாதமாகும். இது பலமானதொரு வாதமாகும்.

ஏனெனில், நாடாளுமன்றக் கலைப்புச் சரியென, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், கலைப்புக்குப் பின்னர், நாடாளுமன்றம் எடுத்த சகல நடவடிக்கைகளும் சட்டவிரோதமாகக் கூடும் என்பதாலேயே ஆகும்.

இதைக் கடந்த 13ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் கூறியிருந்தார்.

ஆனால், மறுநாள் நாடாளுமன்றம் கூடிய போது, தமது வாதத்தைத் தாமே குப்பையில் எறிந்துவிட்டு, அவரும் சபையில் கலந்து கொண்டார்.

ஆனால், இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவுடன் நாடாளுமன்றக் கலைப்பு, தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால், கலைப்பு சரி என்று தீர்ப்பளிக்கப்படும் வரை, அந்தக் கலைப்பு செல்லுபடியாகாது என்ற அடிப்படையிலேயே சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டி, அதை நடத்தி வருகிறார்.

அதாவது, இடைக்கால உத்தரவு வந்தபோது இருந்த நிலையில், சபை இருக்க வேண்டும் என சரத் வீரசேகர கூறுகிறார்.

தடை உத்தரவு வந்ததால், பிணக்கு ஆரம்பித்த போது, இருந்த நிலைக்குப் போக வேண்டும் என, மற்றைய சாரார் கூறுகின்றனர். படிப்பதற்கு அருமையான வழக்கு.

தீர்ப்பு வழங்கப்படும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் காரியங்கள் நடைபெற வேண்டும் என, மஹிந்த அணியினர் அந்த வழக்கின் மூலம் வாதிடுகிறார்கள்.

அவ்வாறானால், நாடாளுமன்றம் கலைக்காததைப் போல் மஹிந்தவும் அவரது அமைச்சரவையும் தொடர்ந்து பிரதமராகவும் அமைச்சர்களாகவும் செயற்பட்டு வருவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. அவர்கள் தேர்தல் காலத்தில் நடைபெறும் ‘காபந்து’ அரசாங்கமாக நடந்து கொள்வதில்லை.

இதற்கிடையில், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், மஹிந்தவுக்குப் பிரதமர் பதவியில் இருக்க முடியாது எனப் பிரகடனப்படுத்தும் ‘குவோ வொரண்டோ கட்டளை’யொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதியால் ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்தவுக்கு எதிரான எம்.பிக்கள் 121 பேரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இது, ஏற்கெனவே கலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கோடு தொடர்புள்ள ஒரு விடயம் என்பதால், அதை விசாரிக்க முடியாது என, மஹிந்த தரப்புச் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

ஆனால், அதற்கும் கலைப்புக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அது கலைப்புக்கு எதிரான வழக்கைப் பாதிப்பதாக இருந்தால், சரத் வீசேகரவின் வழக்கு, அதை விடக் கலைப்புக்கு எதிரான வழக்கைப் பாதிக்கும் என்றும் வாதிடலாம்.

நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்கவில்லைப் போலும், மஹிந்தவும் அவரது அமைச்சர்களும் பிரதமராகவும் அமைச்சர்களாகவும் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இரண்டு தடை உத்தரவுகளும் மஹிந்த அணியின் எதிர்பார்ப்புகளை, வெகுவாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதேபோல், மஹிந்தவுக்கு எதிரானவர்களின் வாதங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர். அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறாயின், அடுத்ததாக ஜனாதிபதி, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அடுத்து, தாம் எந்தவொரு பிரதமரையும் ஏற்றுக் கொள்வதில்லை என சபாநாயகரே அறிவித்து இருந்தார்.

அவ்வாறாயின், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை எவ்வாறு கூட்ட முடியும்?

‘யாதுரிமைப் பேராணை’ வழக்கின் இடைக்காலத் தீர்ப்பின் படியும், பிரதமரும் அமைச்சர்களும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. அதன்படியும் நாடாளுமன்றம் கூட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஒருவகையில், தேர்தலுக்கு முன்னர் மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை நல்லது எனவும், மஹிந்த விரோதிகள் வாதிட முடியும்.

ஏனெனில், அவர்களின் உண்மையான நிலைமையை மக்களுக்கு ஞாபகப்படுத்த, இந்தக் குறுகிய கால மஹிந்த ஆட்சி, சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

அவர்கள், இதுவரை எந்தக் காரணங்களைக் கொண்டு, ரணிலின் ஆட்சியை விமர்சித்தார்களோ அவற்றையே அவர்களும் செய்கிறார்கள்.

ரணிலின் அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்த போது, அது பயங்கரவாதிகளை விடுதலை செய்வதாகவே அவர்கள் வர்ணித்தனர்.

இப்போது மஹிந்தவின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த வாசுதேவ நாணயக்கார, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காகத் தாம் அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறுகிறார்.

மஹிந்தவின் அரசாங்கம், சட்ட விரோதமாக இருந்த போதிலும், அவரது கருத்தை வரவேற்க வேண்டும் தான். ஆனால், மஹிந்த அணியில் எவரும் அதை விமர்சிக்கவில்லை.

ரணிலின் ஆட்சிக் காலத்தில், பல குற்றங்களுக்காக முப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போது, புலிகளுக்கு எதிராகப் போரிட்ட போர் வீரர்களை அரசாங்கம் வேட்டையாடுவதாக, மஹிந்த அணியினர் கூறினர்.

ஆனால், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவமொன்று தொடர்பாக, முப்படைகளுக்கும் பொறுப்பான பாதுகாப்பு ஆளணித் தளபதியான முன்னாள் கடற்படைத் தளபதி ரவி விஜேகுணவர்தன, மஹிந்தவின் இந்தக் குறுகிய ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கையெழுத்திடப்பட்ட சிங்கப்பூர் கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக, மஹிந்தவின் சர்வதேச வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன, கடந்த வாரங்களில் கூறித் திரிந்தார்.

இப்போது, அதை இரத்துச் செய்ய முடியாது என்றும், அது திருத்தப்பட்டு மீண்டும் கையெழுத்திடப்படும் என்றும் கூறுகிறார்.

ரணிலின் காலத்தில் வடக்கிலோ கிழக்கிலோ புலிகளின் சாயல் எதுவும் காணப்பட்டால் அது அரசாங்கத்தின் பலவீனத்தின் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகவே மஹிந்த தரப்பினர் எடுத்தியம்பினர்.

ஆனால், அக்காலத்தில் பாதுகாப்புத் துறையினர் எவரும் கொல்லப்படவில்லை. இப்போது, மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அவர்கள் தமது அரசாங்கத்தின் பலவீனமாகக் கூறுவதில்லை.

இந்த வருடம் நடுப்பகுதியில் இருந்து, ரூபாயின் பெறுமதி வேகமாகக் குறைந்து வருகிறது. இது, ரணிலின் அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தின் தவறு என்றே, மஹிந்த அணியினர் கூறி வந்தனர்.

ஆனால், அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னரும், ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருக்கிறது.

அவர்கள் அதைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது பந்துல குணவர்தன, ரூபாயின் பெறுமதிக் குறைப்புக்குப் புதிய காரணம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்.

அண்மைக் காலமாக, இலங்கையர்கள், இலங்கையிலிருந்து தமக்குச் சொந்தமான பணத்தைப் பெருமளவில் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் ரூபாயின் பெறுமதி குறைப்புக்கு, அதுவே காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பணத்தை மீண்டும் நாட்டுக்குள் ஈர்த்துக் கொள்வதற்காக, அவர்கள் உள்நாட்டில் முதலீடு செய்யும் வகையில், அவர்களுக்குப் பெருமளவில் வரிச்சலுகை வழங்குவதாகவும் அவர்கள், எவ்வாறு இந்தப் பணத்தைச் சம்பாதித்தார்கள் என்று கேட்கப்படாது எனவும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

இலங்கையர்கள் பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றதால் தான், ரூபாயின் பெறுமதி குறைந்தது என்பதை, பந்துல எந்த ஆதாரத்தைக் கொண்டு கூறுகிறார்? அதுதான் காரணம் என்றால், ஏனைய பல நாடுகளிலும் இதே காலத்தில், அந்நாடுகளின் நாணயங்களின் பெறுமதியும் வேகமாகக் குறைந்ததன் காரணம் என்ன? வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம், சட்டபூர்வமாகச் சம்பாதித்தது அல்ல என்பதைப் போல், அது எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது எனக் கேட்கப்பட மாட்டாது என, பந்துல கூறுகிறார்.

அது சட்டபூர்வமான பணம் அல்ல என்பது, பந்துலவுக்கு எப்படித் தெரியும்? இது, மஹிந்த அணியினர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணத்தை, நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆயத்தமா என்ற கேள்வியையும் எழுப்பலாம்.

இப்போது ஜனாதிபதியும் மஹிந்த அணியினரும் மண்டியிடும் நிலை உருவாகி வருகிறது.

இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.கவுடன் இணைந்து பெரும்பான்மையைக் காட்ட முற்பட்டதன் விளைவாகும். மக்கள் விடுதலை முன்னணிக்கு இருப்பது ஆறு ஆசனங்கள் என்பதால், அக்கட்சிக்குத் தற்போதைய நிலையின் பெருமையை அடைய முடியாது.

புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலமே, தற்போதைய பிரச்சினையை ஒருவாறு தீர்க்கலாம். அதற்குத் தற்போதைய சட்டச் சிக்கல் தீர்ந்த பின், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால், அதற்கு ஐ.தே.க இணங்குமா என்பது சந்தேகமே. அதற்கு இணங்கும் நிபந்தனையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.கவை ஆதரிக்க வேண்டும். எனவே, கூட்டமைப்பிடமே தற்போதைய அரசியல் நெருக்கடியின் தீர்வுக்கான சாவி இருக்கிறது.

 -எம்.எஸ்.எம். ஐயூப்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News