ilakkiyainfo

ilakkiyainfo

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)
April 29
00:29 2019

ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்வைத்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதை இயக்கம் தவிர்த்துக்கொண்டது.

 

அதன்பின் 2006 ஒக்டோபர் 28, 29 திகதிகளுக்கு மீண்டும் பேச்சுக்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலும் புலிகளால் சிங்கள மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகளுமெனப் போருக்கான சாத்தியங்கள் கூடிவரத் தொடங்கியிருந்தன.

z_p-10-Mavil-03

2006 ஜுலை 21ஆம் திகதி திருகோணமலையில் மாவிலாற்றின் நீர் விநியோகக் கதவுகள் புலிகளின் கட்டளைத் தளபதி சொர்ணத்தின் உத்தரவுக்கமைய மூடப்பட்டன.

பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள விவசாயிகளின் வயல் நிலங்களுக்கான நீர் விநியோகம் இதனால் தடைப்பட்டது.

திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனுடன் இந்த விடயம் பற்றி ஒரு தடவை நான் பேசிக்கொண்டிருந்தபோது “சொர்ணமண்ணை மாவிலாத்துக் கதவுகளை மூடச் சொன்னார்.  பொடியங்கள் மூடினாங்கள்” எனக் குறிப்பிட்டார்.

இறுதிப் போர் தொடங்குவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த மாவிலாற்று விவகாரம் எந்தவிதமான அரசியல், இராணுவ முக்கியத்துவமுமற்றுச் சிங்கள மக்களைச் சீண்டி விளையாடும் ஒரு நடவடிக்கையாகவே இருந்தது.

sornam-2-1024x680sornam

இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் எனத்  திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார்.

அவரது திட்டத்திற்குத் தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்தபடியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது.

2006 ஆகஸ்ட் 15இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன் மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது.

………………………………………………………………………………………………………
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

balasingam………………………………………………………………………………………….
புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாகத் திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.

17 ஆகஸ்ட் 2006 தென்னிலங்கையில்   உள்ள காலி துறைமுகம் கடற்புலிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியது. முற்று முழுதான சிங்களப் பிரதேசமாக இருக்கும் காலியில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்த துறைமுகத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் மூலம் இலங்கைத் தீவின் கடற்பரப்பில் தமக்கிருக்கும் செல்வாக்கைப் புலிகள் நிரூபிக்க முனைந்தனர்.

இறுதிப் போரின் ஆரம்பத் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் தமது பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட களங்களாகவே அமைந்திருந்தன.

2006 நடுப்பகுதியில் மீண்டும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டதால் மக்கள் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டனர். எப்படியாவது போரை வென்றே ஆகவேண்டும் என்ற நிலைக்கு இயக்கம் தள்ளப்பட்டது.

2006 ஒக்டோபரில் ஜெனிவாவில் நடப்பதாக இருந்த சமாதானப் பேச்சுக்கள் நடைபெறாமலேயே போயின. போர் உக்கிரம் பெறத் தொடங்கியது. ஆனால் இயக்கம் எதிர்பார்த்த வகையில் திருகோணமலையில் நடந்த யுத்தம் புலிகளுக்குச் சாதகமாக அமையவில்லை.

இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வேகமாகக் கைப்பற்றத் தொடங்கியது. மீண்டும் ஒரு பயங்கர யுத்தத்திற்குப் புலிகள் இயக்கம் முகம் கொடுக்கத் தயாராகியது.

மக்கள் மீண்டும் பேரவலத்திற்குள் தள்ளப்பட்டனர். சர்வதேசத்தின் அரசியல் இராஜதந்திரச் சூழ்நிலையைச் சற்றேனும் கவனத்தில் கொள்ளாது, 2006 மாவீரர் நாளில் “நாம் தொடர்ந்து போராடுவோம்” என்கிற கோசத்தை முன்வைத்துத் தலைவர் பிரபாகரன் உரையாற்றினார்.

இறுதி யுத்தம் ஒரு தீச்சுவாலையைப் போன்று பற்றியெரிந்து வேகமாகப் பரவத் தொடங்கியது.

நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்

போரும் நெருப்பும் ஒரே இயல்புடையவை. பற்றிக் கொண்டு விட்டால் எவ்விதப் பாரபட்சமும் பார்க்காது.

தமக்கேயுரித்தான  உக்கிரத்துடன் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இறுதி யுத்தத்தின் முதலாவது கட்டம் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.

இறுதியாக, 2007 ஜூலை 11இல் குடும்பிமலையும் (தொப்பிக்கல்) இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது.

http-www.eelamview.com-wpபிரிகேடியர் பானு

பல நூற்றுக்கணக்கான போராளிகள் உயிரிழந்த நிலையில், எஞ்சிய போராளிகளுடன் திருகோண மலைத் தளபதியான சொர்ணமும் மட்டக்களப்பு தளபதியாகவிருந்த பானுவும் தமது தோல்வியை முதுகில் சுமந்தபடி வன்னிக்கு வந்து சேர்ந்தனர்.

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட, வ ிரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மட்டுமே போரை மீண்டும் தொடங்குவதில் தீவிர முனைப்புடன் இருந்தனர்.

போராளிகளின் மனநிலையானது வெளியே காட்டிக்கொள்ளாது விட்டாலும் உள்ளுக்குள் தளர்வாகவே இருந்ததைப் பல தளபதிகள் நன்றாக உணர்ந்திருந்தனர்.

ஏற்கனவே பலவீனமடைந்திருந்த புலிகளது தாக்குதல் திறன் களமுனையை முன்னின்று வழிநடத்தும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்குப் போரில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவில்லை.

மாவிலாற்றின் கதவுகளை மூடி, போரை ஆரம்பித்து மோசமான முறையில் இராணுவத்திடம் தோற்றுப்போனதற்காகத் தளபதி சொர்ணம் போராளிகள் மத்தியில் சலிப்போடு விமர்சிக்கப்பட்டார்.

2007க்குப் பின்னரான காலப் பகுதியில் வன்னிப் பெருநிலப் பரப்பு மட்டுமே புலிகளின் கைவசமிருந்த ஒரேயொரு தளமாக அமைந்திருந்தது.

புலிகள் இயக்கத்திடம் கைவசமிருந்த அதிக அளவிலான ஆயுதங்கள் குறிப்பாகத் தூரவீச்சு ஆட்லறி பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், கடற்சண்டைகளில் பயன்படுத்தும் கனரக ஆயுதங்கள் என்பன அதிகரித்துக் காணப்பட்டன.

இப்படியான விசேட ஆயுதங்களின் உண்மையான பெயர்கள் போராளிகளுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. சாரை, சண்டியன், மொங்கான் எனப் பலவிதமான சங்கேதப் பெயர்களினால் களமுனைகளில் இவை பயன்படுத்தப்பட்டன.

இறுதிப்போரில் ஈடுபட்ட வேளையில், போராளிகளின் தாக்குதல் படையணிகளை விடவும், ஆயுதப் படைக்கலன்களே இயக்கத்தின் பெருத்த நம்பிக்கையாக இருந்தன.

சமாதானத்தின் இறுதிக் காலப் பகுதியான 2006க்குப் பின்னர் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சில சர்வதேச கடற் பரப்பில் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழத் தொடங்கின.

திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அதிநவீன ராடர் பொருத்தப்பட்டுச் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் கண்காணிக்கப்பட்டதுடன், இத்தகைய கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை இந்திய கரையோரக் காவல் படையிடமிருந்தும் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டது.

புலிகளுக்கு ஆயுதங்களை  ஏற்றிவந்த குறைந்தபட்சம் மூன்று கப்பல்களேனும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையால் தாக்கியழிக்கப்பட்டன.

இந்தச் செய்திகளை அறிந்த பொதுமக்கள் “என்ன பிள்ளையள், வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்தின்ர காசு எல்லாம் அநியாயமா கடலில எரிஞ்சுபோகுதே” என எம்மிடம் குறைபட்ட சம்பவங்களும் உண்டு.

Sri Lankan Air Force Jets Destroyed LTTE

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் இவ்வாறு தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம் கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்குத் தேவையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.

இறுதி யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகளை முறியடிப்பதற்கான புலிகளின் எதிர்த் தாக்குதல்களில் ஆட்லறி மற்றும் ஏனைய பீரங்கிகள் தாராளமான சூட்டாதரவை வழங்கி, முன்னணிக் களமுனைத் தாக்குதலணிகளுக்குப் பக்கபலமாகச் செயற்பட்டன.

புலிகளின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, போர்க்களத்தில் இராணுவத்தினருக்கு அதிகமான இழப்புக்களை ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் புலிகளின் பீரங்கிப் படையணி பெரும் பங்காற்றியது.

ஆனால் இதன்பின்னர் தொடர்ந்த சண்டைகளில் புலிகளுக்கு ஏற்பட்ட எறிகணைப் பற்றாக்குறை காரணமாக, இத்தகைய பின்னணிச் சூட்டாதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது.

கூடுதலான தூர இடைவெளிகளைக் கொண்ட காவலரண்களில் மிகவும் குறைந்த தொகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்த போராளிகளுக்குத் தமது கையிலிருக்கும் துப்பாக்கியை விடவும், அவர்களது பின்னணியிலிருந்து ஏவப்படும் சரமாரியான பீரங்கிச் சூடுகளே பெருத்த உளவுரனாக இருந்தன.

தமக்கெதிரே முன்னேறி நகர்ந்துவரும் ஒரு இராணுவத்தினனைக் கண்டதும், உடனடியாகவே எறிகணை ஆதரவு தரும்படி தமது பகுதிக் கட்டளை மையங்களுக்கு அறிவித்தார்கள்.

இதனால் களமுனையில் படைகளை வழிநடத்தும் புலிகளின் இடைநிலைத் தளபதிகளும் பீரங்கிப் படையணியினரும் பெருத்த நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அதேவேளை மழைபோலப் பொழியும் இராணுவத்தினரின் எறிகணை வீச்சு ஆதரவுடன், குண்டு துளைக்காத கவசங்களையும் அணிந்தபடி தாக்கவீச்சுக் கூடிய பி.கே. கனரக ஆயுதத்தினால் சரமாரியாகச் சூடுகளை வழங்கியபடி முன்னேறி வந்து கொண்டிருந்த இராணுவப் படைக்கு எதிராக நின்று தாக்குப்பிடிக்க முடியாத நிலை புலிகளின் முன்னணிக் களமுனைத் தாக்குதலணிகளுக்கு ஏற்பட்டது.

இதனால், போர்க் களமுனைகளில் போராளிகளின் உயிர் இழப்புக்களும் மிகவும் அதிகமாக ஏற்பட்டன. இந்நிலையில், புலிகளின் தாக்குதலணிகள் படிப்படியாகப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை.

இத்தகைய நிலைமையில்தான் உள்ளூரிலேயே எறிகணைகள் மற்றும் கண்ணி வெடிகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில், தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிக முனைப்புடன் ஈடுபடத் தொடங்கினார்.

அதிகமான போராளிகளையும் மற்றும் பொருளாதார வளங்களையும் உள்ளடக்கியதான ‘கணினிப் பிரிவு’ அவரது தலைமையில் இயங்கியது.

தலைவருடைய மிகுந்த நம்பிக்கைக்குரிய நண்பரான   2ஆம் லெப் சீலன் என்ற இயக்கப் பெயரைக்கொண்ட சாள்ஸ் அன்ரனியினுடைய பெயரைத் தனது மூத்த மகனுக்குத் தலைவர் சூட்டியிருந்தார்.

charles-anthony-prabakarancharles-anthony-prabakaran

சாள்ஸ் அன்ரனியினுடைய சிந்தனை முறைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமான அணுகு முறைகளாக இருந்தன. நடைமுறைச் சாத்திய, அசாத்தியங்களைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்.

இறுதிக்கட்டப் போராட்டத்தில் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிலும் களமுனைச் செயற்பாடுகளிலும் கதாநாயகனாக அனைவராலும் ‘தம்பி’ என அழைக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி செயற்பட்டிருந்தார்.

சாள்ஸ் அன்ரனி எடுக்கும் அதிரடியான முடிவுகளால், அவரைக் குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கி வளர்த்த இயக்கத்தின் மூத்த தளபதிகள்கூட  மனக் கசப்படைந்த சம்பவங்களை அறியக் கூடியதாக இருந்தது.

தாக்குதல் தளபதிகளுக்கான கூட்டங்களில் அனுபவம் மிக்க தளபதிகளின் முன்பாகத் தம்பி சாள்ஸ் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதாகவும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கவே சங்கடமாக இருப்பதாகவும் தளபதி விதுஷா பல தடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார்.

மக்கள் அனைவருமே போர்க் களமுனைகளில் நேரடியாகப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. எனவே கட்டாய ஆட்சேர்ப்பு விடயத்தில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் விலக்களிப்புகளும் இருக்கத் தேவையில்லை என்ற அடிப்படையில் அவரது செயற்பாடுகள் அமைந்தன.

அரசியல்துறையினர் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் மெத்தனமாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு அவரால் முன்வைக்கப்பட்டது.

எனவே தனது கணினிப் பிரிவையும் காவல்துறையையும் இணைத்து முள்ளிவாய்க்கால்வரை கட்டாய ஆட்சேர்ப்பை முன்னெடுக்கும்படிச் செய்தார். போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்களையும் தனது மேற்பார்வையிலேயே நடத்தினார்.

அந்தப் போராளிகளுடன் சேர்ந்து தானும் களமுனைக்குச் சென்றார். இயக்கத்திலிருந்து விலகியிருந்த மற்றும் விலக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் தன்னுடன் இணைத்துச் செயற்படுத்த முனைந்தார்.

ஒரு குறுகிய காலமாகவே இருப்பினும் சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாது செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

2006இல் இயக்கத்தின் ஆளணியை அதிகரிப்பதற்காகக் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவுக்கு இயக்கம் வந்திருந்தபோது, இயக்கத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தை மக்கள் காணத் தொடங்கியிருந்தனர்.

அரசியல்துறைப் போராளிகளின் கூட்டத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டபோது பெரும்பாலான போராளிகள் அதிர்ந்துபோயிருந்தார்கள்.

2tl2“எங்களிட்ட போதியளவு ஆயுதங்கள் இருக்குது. ஆளணிதான் இல்லை, தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி இருக்குமெண்டால் இந்த யுத்தத்தில நாங்கள்தான் வெல்லுவம். கடல், தரை, வான் என முப்படைகளின் பலம் இயக்கத்திட்ட இருக்கிது.

அனுபவம் வாய்ந்த தளபதிகள் இருக்கிறார்கள், எல்லாத்துக்கும் மேலாக அண்ணை இருக்கிறார். தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி பலம் மட்டும் இருக்குமெண்டால், இதுதான் தமிழீழத்திற்கான இறுதிப் போராக இருக்கும்.

வீட்டுக்கு ஒருவர் இருவர் இயக்கத்தில் இருந்தால் போதாது. போராட வல்லமையுள்ள அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராட முன் வரவேண்டும்.

எனவே நீங்கள் தயக்கம் காட்டாது இளைஞர் யுவதிகள் அனைவரையும் இயக்கத்தில் இணைக்க வேண்டும். இதுதான் தலைவருடைய எதிர்பார்ப்பு.” அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த விடயத்தைப் போராளிகளின் மத்தியில் தெரிவித்தபோது உண்மையில் மக்கள் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருந்தது.

என்னைப் போன்றே பல போராளிகளுடைய உணர்வுகளும் இருந்தன. ஆனாலும் அத்தகைய சந்தர்ப்பத்தில் எமது கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தலைமையின் கட்டளையை மீறும் துரோகச் செயலாகவே கருதப்படும்.

இயக்கத் தலைமையால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்துவது தான் போராளிகளின் தலையாய கடமையே தவிர அபிப்பிராயம் கூறிக்கொண்டிருப்பது போராட்டத்தில் தெளிவற்றதான குழப்பம் ஏற்படுத்தும் செயற்பாடாகவே கருதப்பட்டது.

23b-men-mobiised-2கட்டாய ஆட்சேர்ப்பு

கட்டாய ஆட்சேர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆண், பெண் போராளிகளுக்கு மக்களுடனான அணுகுமுறைகள் குறித்துப் பலராலும் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும் ஒரு இளைஞனையோ யுவதியையோ கட்டாயமாக இயக்கத்தில் இணைப்பது எவ்வளவு கடினமானதும் மிக மோசமானதுமான வேலை என்பதை இயக்கத்தின் தலைமை உணரத் தவறியது.

கட்டாய ஆட்சேர்ப்புக் காரணமாகப் போராளிகளுக்கிடையே பலத்த விமர்சனங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் வன்னிக்குள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டிருந்த மக்களின் நிலைமைகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.

எந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.

 

தொடரும்…
-தமிழனி-
தொகுப்பு -கி.பாஸ்கரன்

(“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்)

 

karunaaa

(புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அவரின் துணைவி அடேல் பாலசிங்கம், தற்போதைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன், புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் முக்கியப் பிரமுகரும் ஈரோஸ் அமைப்பின் தலைவருமான வே. பாலகுமாரன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, புலிகளின் முக்கியத் தளபதிகளான கருணா, துர்க்கா, விதுஷா, தீபன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, அரசியற்துறையின் முக்கியஸ்தர் இளம்பரிதி உட்பட பல முக்கியஸ்தர்கள்.)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

<

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News