அவுஸ்திரேலியாவில்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்  இலங்கைக்கு எவ்வேளையிலும் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

நடேஸ் பிரியா தம்பதியினரும் அவரது இரு பெண் குழந்தைகளுமே நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராயுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் ஆராய மறுத்துள்ள நிலையிலேயே தமிழ் குடும்பத்தினர் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

நடேசலிங்கத்தின் இரண்டு வயது மகளின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததன் காரணமாக குடிவரவு துறை அமைச்சர் டேவிட் கொலமன் அதனை ஆராயவில்லை என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

nadesh_priya  நாடு கடத்தலை எதிர்கொள்கின்றது இலங்கை தமிழ் குடும்பம்- அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அனுமதி மறுப்பு nadesh priya e1566471809318

இரண்டு வயது குழந்தையின் புகலிடக்கோரிக்கையை கருத்தில் கொள்ளுமாறு கோரி தாங்கள் சமர்ப்பித்த வேண்டுகோளிற்கே இந்த பதில் கடிதத்தை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர் என நடேசலிங்கம் குடும்பத்தின் சட்டத்தரணி கரினா போர்ட் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு வயது குழந்தை  அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான தற்காலிக பாதுகாப்பு விசாவை வழங்குமாறும் அல்லது புகலிடக்கோரிக்கையை பரிசீலிக்குமாறும் கோரியிருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடிதத்தை உரிய அதிகாரிகள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கவில்லை அதற்கான காரணத்தை நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நடேசும் பிரியாவும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வந்தவர்கள் என்பதால் அவர்களின் குழந்தை அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான தடையை அமைச்சரால் மாத்திரமே நீக்க முடியும் என தெரிவித்துள்ள சட்டத்தரணி குறிப்பிட்ட குழந்தை அவுஸ்திரேலியாவில் பிறந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் 2012 மற்றும் 2013 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற  நடசலிங்கமும் பிரியாவும் அங்கு திருமணம் செய்தனர். அவர்களிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நடேசலிங்கம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தவர் என்பதால் அவர் இலங்கை;கு திரும்பினால் சித்திரவதைகளிற்கு உள்ளாவார் என அவரது குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நடேஸ் பிரியா தம்பதியினரின் புகலிடக்கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை கடந்த 17 மாதங்களாக குழந்தைகளுடன் மெல்பேர்னின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.