ilakkiyainfo

ilakkiyainfo

பட்டொளி வீசிப் பறந்த நாட்டியப் பேரொளி

பட்டொளி வீசிப் பறந்த நாட்டியப் பேரொளி
September 30
07:22 2019

இப்போது நடிகர் நடிகைகளுக்கு ஆடத்தெரிந்திருக்கவேண்டும் என்கிற நிலை இல்லை. அவ்வளவு ஏன்… மொழி தெரிந்து பேசுகிறார்களா என்பது கூட முக்கியமில்லை.

ஆனால், அந்தக் காலத்தில், ஒருவர் நடிக்க வருகிறாரென்றால், அவருக்கு ஆடத்தெரிந்திருக்க வேண்டும். அட்சரம் பிசகாமல் வசனம் பேசத் தெரிந்திருக்கவேண்டும்.

எல்லாவற்றையும் விட, நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும். அப்படி, ஆடி, பேசி, அற்புதமான நடிப்பையும் வழங்கியவர்களில், தனியிடம் பிடித்தவர்… பத்மினி. நாட்டியப் பேரொளி பத்மினி.

அன்றுதென்னகத்தில், கேரளாவில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் பல நடிகைகள், வந்து தமிழகத்தில் கொடி நாட்டினார்கள். அந்த வகையிலும் பத்மினி தனித்துவத்துடன் பட்டொளி வீசிப் பறக்கவிட்டார்.

கேரளாவின் சின்ன கிராமம்தான், பத்மினிக்கு பூர்வீகம். பத்மினியை பின்னாளில் தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள்.

ஆனால் அவரின் பால்யத்தில், திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். இந்த மூவரிலும் உயர்ந்து நின்று முதலிடம் பிடித்தார் பத்மினி.

இந்திப் படத்தில் நடிக்கச் சென்று, அங்கே இங்கே நடிக்கத் தொடங்கி, தமிழில் வரிசையாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் பத்மினி. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அந்தக்காலத்தின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டு.

எம்ஜிஆருடன் நடித்தாலும் சரி, சிவாஜியுடன் நடித்தாலும் சரி, எவருடன் நடித்தாலும் சரி… அந்தப் படத்தில் பத்மினி நடிக்கிறார் என்றால், அவரின் நடனத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாட்டாவது வைத்துவிடுவார்கள்.

அதேபோல், பல காட்சிகள் க்ளோஸப் ஷாட்டுகளாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவரின் நடிப்புக்குத் தீனி போடும்விதமாக, ரெண்டு காட்சியாவது இடம்பெற்றுவிடும்.

சிவாஜியுடன் நடித்த ‘தெய்வப்பிறவி’ மாதிரியான படங்களில் இருவருக்கும் நடிப்பில் போட்டியே இருக்கும். அதேபோல் எம்ஜிஆருடன் ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ முதலான படங்களிலெல்லாம் இருவரில் யார் அழகு என்று ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்துவார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘சித்தி’ படம்தான் பத்மினியின் பிரமாண்டமான நடிப்புக்கு ஆகச்சிறந்த உதாரணம். எம்.ஆர்.ராதாவுக்கு மனைவியாக, அந்தக் குடும்பத்தை சரிசெய்யும் அன்னையாக, சிற்றன்னையாக தன் நடிப்பால் அசத்தியிருப்பார் பத்மினி.

‘சபாஷ் சரியான போட்டி’ எனும் வாசகம் மிகப்பிரபலம். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில், பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் நடனமாடுவார்கள். அந்தப் போட்டி நடனத்தின் போது சொல்லப்படும் வசனம்தான்… ‘சபாஷ் சரியான போட்டி’.

எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, கண்ணை மூடிக்கொண்டு, கற்பனையால் எழுதிய நாவல்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’.

அந்த மோகனாம்பாளின் கதை, சினிமாவாக வரும்போது, மோகனாவாகவே புதுப்பிறப்பெடுத்து அசத்தியிருப்பார் பத்மினி. அந்தக் கதாபாத்திரத்தை, பத்மினியைத் தவிர வேறு எவரும் நடிப்பதற்கு நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

நாதஸ்வரக் கலைஞராக சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்திருப்பார்கள். இத்தனை வருடங்களாகியும், பத்மினியும் அழகும் ஆட்டமும் அசைவுகளும் உணர்ச்சிப் பிரவாகமும் நம்மைப் பரவசப்படுத்தத்தான் செய்கின்றன.

‘இரு மலர்கள்’ படத்தில், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பாடலில், சிவாஜியும் பத்மினியும் அப்படியொரு சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள். சில இடங்களில், பத்மினியின் எக்ஸ்பிரஷன்கள், நம் மனங்களைக் கொள்ளையடித்துவிடும்.

சாவித்திரி மாமி. ‘வியட்நாம் வீடு’ குடும்பத்தலைவி. நாயகி. மூக்குத்தி டாலடிக்க, மடிசார் புடவையும் பிராமண பாஷையும் கொஞ்சம் புத்திசாலித்தனமும் நிறைய்ய வெகுளித்தனமுமாக வெளுத்து வாங்கியிருப்பார் பத்மினி.

‘சாவித்ரி… சாவித்ரீ…’ எனறு பிரஸ்டீஜ் பத்மநாபனாக சிவாஜி அழைப்பதும் அதற்கு ‘என்னண்ணா.. சொல்லுங்கோண்ணா’ என்று குழைந்துக் கொஞ்சுவதும்… ஆஹா… இருவரையும் மனசுக்குள் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போட்டார்கள் ரசிகர்கள்.

இயக்குநர் பாசில், ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். அந்தப்படத்துக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இளையராஜா.

கேரக்டர்களின் உணர்வுகளை, இசை வழியே ரசிகர்களுக்குக் கடத்தியிருப்பார். இன்னொருவர் பப்பிம்மா (பத்மினி). அந்தப் பாட்டி கதாபாத்திரத்தை, பூங்காவனத்தம்மாள் எனும் கேரக்டரை, அவ்வளவு அழகாக, லைவாக வாழ்ந்திருப்பார்’ என்கிறார் இயக்குநர் பாசில்.

பண்பட்ட நடிப்பும் ஆபாசமில்லாத நடனமும்தான் பத்மினியின் அடையாளம். கால்கள் ஆடும். கண்கள் பேசும். கைகள் அபிநயம் பிடித்து அதுவொரு பாஷைபேசும். பப்பிம்மா என்றும் பத்மினி என்றும் நாட்டியப்பேரொளி என்றும் எல்லோரும் கொண்டாடிய அந்த மகோன்னதமான நடிகை, இன்றைக்கு இல்லை. கடந்த 2006ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ம் திகதி இறந்தார்.

ஆனாலும் இன்னும் நூறாயிரம் ஆண்டுகளானாலும் பத்மினியின் புகழை, ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து, யார் வீட்டிலாவது, எந்தச் சிறுமியாவது, ‘நான் டான்ஸ் கத்துக்கணும்பா’ என்று சொன்னால், ‘அப்படியா, பத்மினி மாதிரி வரப்போறியா’ என்று அப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.

ஏனெனில்… பத்மினி வரம் பெற்ற நடிகை. சாகா வரம் பெற்ற கலையரசி.

செப்டம்பர் 24ம் திகதி நாட்டியப்பேரொளி பத்மினி நினைவு நாள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News