ilakkiyainfo

ilakkiyainfo

பத்மவிபூஷண் இசை ராஜா – விருதுகள்

பத்மவிபூஷண்  இசை ராஜா –  விருதுகள்
February 07
05:34 2018

‛‛புது ராகம் படைப்பதாலே…நானும் இறைவனே…’’-இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இன்றும், தொலைதுாரம் பயணிப்போருக்கும். இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்போருக்கும், தோழனாய் தோள் கொடுப்பது இளையராஜாவின் இசையே.

ஒரு தமிழனாய், ஒரு இந்தியனாய், நமது இசையை உலகம் முழுக்க உச்சரிக்க செய்தவர். பத்மவிபூஷண் விருதைப் பெற்று உச்சத்தை தொட்டிருக்கிறார்.

அவருக்கு இந்த தொகுப்பு மூலம், பாராட்டு பத்திரம் வாசிக்கிறோம்…:

இசை ஆரம்பம்

ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், ராமசாமி – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றியவர். பண்ணைப்புரத்தில் மாலை நேரங்களில், அதன் சாலைகளில் மனம் போன போக்கில் பாடிக்கொண்டு நடந்தவர் இளையராஜா.

கம்யூனிஸ்ட் கட்சி பிராசார பாடகராக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் உருவாகியிருந்தார். ஆர்மோனியத்தை தலையில் சுமந்தபடி அண்ணன் போன பாதையில் தொடர்ந்தவர் இளையராஜா.

1958-ல் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு முன், பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவரது தாய், இளையராஜாவை உதவிக்கு அழைத்துப் போ என்றார்.

அண்ணனுக்குப் பதில் இவர் வாசித்த இசை, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது. அண்ணனுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எந்த ஊருக்கு சென்றாலும் ஒரு கச்சேரிக்கு ரூ.40, அநேகமாக அதைக்கூட பெற முடியாத நிலை, 1958-68 காலக்கட்டத்தில் தொடர்ந்தது. பாட்டு கேட்க வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு, சகோதரர்களுடன் (பாஸ்கர், கங்கை அமரன்) சென்னைக்கு ரயில் ஏறினார் இளையராஜா.

என் அன்னையின் திருவாக்கில் தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று திருச்சி இசை நிகழ்ச்சிகளில் பெரிய கூட்டம் எனக்கும், என் பாட்டுக்கும் என்று இளையராஜாவே கூறியிருக்கிறார்.

சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்த சாய் லாட்ஜ் படிகள் தான் இளையராஜாவிற்கு ஏணியாக அமைந்தன. மைசூர் மகாராஜாவின் மேற்கத்திய இசை குழுவில் இருந்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

வருமானம் இல்லாத இளையராஜாவிடம், பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களை கற்று தந்தார் தன்ராஜ் மாஸ்டர். பியானோ கற்று கொள்வதற்காக வந்த இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து, எல்லாவற்றையும் கற்று கொடுத்தார் தன்ராஜ்.

எம்.எஸ்.வி., நண்பரும், பிறகு உதவி இசையமைப்பாளராகவும் இருந்த ஜிகே வெங்கடேஷிடம் இளையராஜாவிற்கு அறிமுகம் கிடைத்தது. அவரது இசைக்குழுவில் சேர்ந்த பின் அவரது ஏழ்மை நிலையும் மாற ஆரம்பித்தது.

தயாரிப்பாளர், இயக்குநர் உடன் மெட்டு அமைக்கும்போது, நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் ஆசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

”தொடுவதென்ன தென்றலோ…” (சபதம் திரைப்பட பாடல்), ”தேன் சிந்துதே வானம்…” (பொண்ணுக்கு தங்கமனசு) போன்ற ஜிகேவின் அழகான வார்ப்புகளின் உருவாக்கத்தில் இளையராஜா பங்கேற்றிருக்கிறார்.

ஆர்.கோவர்த்தனம் இசை அமைத்த ”வரப்பிரசாதம் (1975)” என்ற படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா. பாடல்கள் அமைப்பதில் தனது பாணியை காண்பிக்க, தனி இசை தட்டை ”பாவலர் பிரதர்ஸ்” என்ற பெயரில் உருவாக்கினார்.

”ஓ நெஞ்சமே” என்ற நாடகத்திற்கு இளையராஜா இசையமைத்த போது ‘அன்னக்கிளி’ பட கதாசிரியர் செல்வராஜின் நட்பு கிடைத்தது. பஞ்சு அருணாச்சலத்திடம், இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தவர் செல்வராஜ் தான்.

அந்தக்காலத்து பாடகர், இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா, 70களில் சில பாடல்கள் பாடி ஓரிரு இசையமைப்பு வாய்ப்புகளும் பெற்றதால் அவரிடமிருந்து வேறுப்படுத்திக் காட்ட ராஜா, இளையராஜா ஆக்கப்பட்டார்.

இளையராஜா, 33வது வயதில் தான் முதல்பட வாய்ப்பான ”அன்னக்கிளி”யை பெற்றார். 1976-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களிலேயே 100 நாட்கள் ஓடியதோடு வெள்ளி விழா கண்ட ஒரே படம் ”அன்னக்கிளி”.

வெங்கடேஷின் உதவியாளராக இருந்தபோதே, தானே மெட்டு அமைத்து டிஎம்.சவுந்தர்ராஜனை பாட வைத்திருந்தார்.

1980களில் ரஜினிகாந்த் போன்ற புதிய வரவுகளுக்கு டிஎம்எஸ்-ஐ பாட வைத்து வெற்றி கண்டவர் இளையராஜா. திரையுலகிற்கு வந்து ஐந்தாறு ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார் இளையராஜா.

தமிழ் திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையமைப்பில் உருவானவை தான். 1980களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்கள், 30 ஆண்டுகளில் நெருங்கிய எண்ணிக்கையை 10 ஆண்டிலேயே சாதித்து காட்டினார்.

1980களில் எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ், ரவீந்திரன், ஷியாம், ஜிகே.வெங்கடேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், மனோஜ் கியான்… என்று பலர், இசையமைத்து இருந்தாலும் இளையராஜாவின் கையே ஓங்கியிருந்தது.

ஒரு ஆண்டில் வெளிவரும் தமிழ் படங்களின் எண்ணிக்கை 100யை தாண்டிக்ய் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே ரஜினி, கமல் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்தார்கள்.

விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் போன்ற அன்றைய இரண்டாம் வரிசை நட்சத்திரங்களின் வெற்றிகளிலும் இளையராஜாவின் பெயர் கலந்திருந்தது.

புதியவர்களையும், இளைஞர்களையும் வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இளையராஜாவின் நட்சத்திர அந்தஸ்த்தை பயன்படுத்தி தங்கள் படங்களுக்கு கூடுதல் மவுஸை ஏற்படுத்தி கொள்ள முயன்றார்கள். அதன் விளைவு தான் அவருக்கு கிடைத்த முக்கியத்துவம்.

தெலுங்கு
இளையராஜாவின் செல்வாக்கு தெலுங்கிலும் பெரிய அளவில் இருந்தது. இளையராஜா இசையமைத்த பாடலை படமாக்கும் போது,படத்தின் பாத்திரங்களை விட, அவரது இசை எனக்கு அதிக உற்சாகம் கொடுக்கிறது என்றார் புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் வம்சி. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களான கே.விஸ்வநாத், வம்சி, கோதாண்டராமி ரெட்டி ஆகியோர் தங்களது படங்களுக்கு இளையராஜாவை நன்றாக பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

சிம்பொனி
இளையராஜாவின் சிம்பொனி பதிவாகும் போது, கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒற்றி கொண்ட பின்னரே வாசிப்பும், ஒலிப்பதிவும் தொடங்கியது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ.என்.வி.குருப், ஸ்ரீ குமரன் தம்பி, ஷி உதய ஷங்கர், குல்சார் உள்ளிட்ட அனைத்து இந்திய கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய பெருமையும் இளையராஜாவுக்கு உண்டு.

பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், மணிரத்தினம், பாசிர், கே.விஸ்வநாத். சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன், வம்சி, சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களுடன் இளையராஜா பணியாற்றி உள்ளார்.

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் முத்துராமன், முரளி, மோகன், சிவக்குமார், ராமராஜன், அஜித், விஜய், தனுஷ், உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜா.

விருதுகள்

பத்ம விருதுகள்
1. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2. 2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

தேசிய விருதுகள்
1. 1984 ஆம் ஆண்டு சாகர சங்கமம் என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது.
2. 1986 ஆம் ஆண்டு சிந்து பைரவி படத்திற்காக தேசிய விருது.
3. 1989 ஆம் ஆண்டு ருத்ர வீணா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது.
4. 2009 ஆம் ஆண்டு பழசிராஜா என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது.
5. 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசைக்கான தேசிய விருது.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்
1. 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படத்திற்காகவும்
2. 1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்திற்காகவும்
3. 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்காகவும்
4. 1988 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்காகவும்
5. 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 மற்றும் கரகாட்டக்காரன் திரைப்படங்களுக்காகவும்
6. 2009 ஆம் ஆண்டு அஜந்தா திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.

கலைமாமணி விருது
1. 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

முனைவர் பட்டம்
1. இசையில் அவர் புரிந்த சாதனைகளுக்காக 1994 ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

பிலிம் பேர் விருது
1. 1989 ஆம் ஆண்டு அவருடைய சிறப்பான பங்களிப்பிற்காகவும்
2. 1990 ஆம் ஆண்டு பொப்பிலி ராஜா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும்
3. 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும்
4. 2005 ஆம் ஆண்டு அச்சுவின்டே அம்மா என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.

கேரள மாநில திரைப்பட விருதுகள்
1. 1994 ஆம் ஆண்டு சம்மோஹனம் என்ற திரைப்படத்திற்காகவும்
2. 1995 ஆம் ஆண்டு காலாபாணி என்ற திரைப்படத்திற்காகவும்
3. 1998 ஆம் ஆண்டு கல்லு கொண்டாரு பெண்ணு என்ற திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.

நிஷாகாந்தி புரஷ்காரம் விருது
2016-ம் ஆண்டு கேரள அரசு சார்பில் இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

நந்தி விருதுகள் (ஆந்திரா)
1. 1981-ம் ஆண்டு சீதாகோகா சிலுகாகா படத்திற்காகவும்
2. 1988-ம் ஆண்டு ருத்ரவீணா படத்திற்காகவும்
3. 1990-ம் ஆண்டு ஜகதேகா வீருடு அதிலோக சுந்தரி படத்திற்காகவும்
4. 2011-ம் ஆண்டு ஸ்ரீ ராம ராஜ்யம் படத்திற்காகவும்
5. 2012-ம் ஆண்டு ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்

கோல்டன் ரெமி விருது

சர்வதேச ஹூஸ்டன் திரைப்பட விழாவில் 2005-ம் ஆண்டு விஸ்வ துளசி என்ற படத்திற்காக கோல்டன் ரெமி விருது பெற்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

2015-ம் ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார்

சங்கீத நாடக அகாடமி விருது
1. 2012 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has [...]

இலங்கை பத்திரிகைகள்

English News