ilakkiyainfo

ilakkiyainfo

புதிய அரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்!! – ஜெயம்பதி விக்ரமரத்ன.

புதிய அரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்!! – ஜெயம்பதி விக்ரமரத்ன.
October 10
08:09 2017

 

கடந்த8-10-17ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட‘ புதியஅரசியல் அமைப்பு முயற்சிகளும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்றதலைப்பில் மிகவும் விரிவாக உரையாற்றினார்.

அவரது உரையின்போது தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பினை புதியயோசனைகளுடன் ஒப்பீடு செய்து புதியமாற்றங்களை விளக்கினார்.

தனது ஆரம்ப  உரையின்போது இலங்கையில் நடைமுறையிலிருந்த அரசியல் அமைப்புகளின் வரலாறுபற்றி தெரிவிக்கையில் சோல்பரி அரசியல் அமைப்பு பிரித்தானியரால் திணிக்கப்பட்ட   ஒன்று எனவும், அதன் பின்னர் நடைமுறைக்கு வந்த முதலாவது குடியரசு யாப்பு ஐக்கியமுன்னணி அரசின் அதிகளவு பாராளுமன்றப் பலத்தின் காரணமாகவும், ஐ தேகட்சியின் படுதோல்வியின் பின்னணியில் உருவானதால் ஐக்கியமுன்னணியில் செயற்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி லங்காசம சமாஜக் கட்சி,கம்யூ. கட்சி ஆகியவற்றின் யாப்பாகவே கொள்ளுதல் பொருத்தமானது எனவும் அதனைத் தொடர்ந்து ஐ தேகட்சியின் ஐந்தில் நான்கு பெரும்பான்மைப் பலத்தின் பின்னணியில்தான் இரண்டாவது குடியரசு யாப்பு அதாவது தற்போது நடைமுறையிலுள்ள யாப்பினைக் கருதவேண்டும் எனவும தெரிவித்தார்.

இவ் வரலாற்றின் பின்னணியில் தற்போது விவாதிக்கப்படும் யாப்பு முற்றிலும் புதிதான அரசியல் பின்னணியில் தயாரிக்கப்படுவதாக விளக்கினார்.

கடந்த காலயாப்புத் தயாரிப்பின் போது ஒருவகையில் திணிக்கப்பட்ட ஒன்று எனத் தெரிவித்த அவர் அதன் காரணமாகவே தந்தைசெல்வா அரசியல் அமைப்பு விவாதங்களில் கலந்துகொள்ளாமல் விலகிய சம்பவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தற்போதுதேசத்தின் மக்களிடம் பரவலான அபிப்பிராயங்கள் பெறப்பட்டதோடு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முழுமையான ஆதரவோடு பாராளுமன்றம் அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ளது எனவும், கடந்தகாலத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியலை நடத்திய பிரதான அரசியல் கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தேசியக் கட்சிஎன்பன ஒரே அரசாங்கத்தில்  இணைந்து  அக் கட்சிகளே தேசியப் பிரச்னைகளைத்  தீர்த்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும், இக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்புத் தொடர்பான வழிகாட்டுக் குழுவின் பிரதான யோசனைகளை பலமுக்கியகட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வழிகாட்டுக் குழுவின் அறிக்கையை ஐ தேகட்சி முழுமையாக ஏற்றுள்ளது. அதேபோல மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சிசில திருத்தங்களை மட்டுமே  வைத்துள்ளதாகவும், அவ்  அறிக்கையின் பிரதான   பகுதிகளை தமிழர் தேசியக் கூட்டமைப்பு, ஈபி டி பி, மலையககட்சிகள், முஸ்லீம் காங்கிரஸ், அரசிற்கு வெளியில் செயற்படும் கம்யூ. கட்சி  ஆகியன ஆதரித்துள்ளன.

இதில் விசேஷ அம்சம் என்னவெனில் 13 வதுதிருத்தத்தினை அதாவது அதிகாரபரவலாக்கத்தினை எதிர்த்துவந்த ஜே விபி இனர் தற்போது பின்வரும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரிக்கத் தீர்மானித்துள்ளன. அதாவது

-நிறைவேற்றுஅதிகாரமுள்ள ஜனாதிபதிஆட்சியைஒழித்தல்.
-தேர்தல் முறையைமாற்றுதல்.
-அதிகாரபரவலாக்கத்தினைநடைமுறைப்படுத்தல்.

மேற்குறித்த மூன்று நிபந்தனைகளையும் சமகாலத்தில் நிறைவேற்ற அரசு முயற்சிக்குமாயின் அவற்றை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக இக் கட்ச தெரிவித்துள்ளது.

மகிந்ததரப்பான இணைந்த எதிர்க்கட்சியினர் தவிர்ந்த ஏனைய கட்சிகள் (ஜாதிககெல உறுமய உட்பட) பெரும்பாலானகட்சிகள் இதனை ஆதரிக்க முடிவுசெய்திருப்பது மிக வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும்.

இவ்வாறான வாய்ப்பினை நழுவவிட்டால் இதேபோன்ற வாய்ப்பு எதிர்காலத்தில் கிட்டுமா? என்பது சந்தேகமே எனத் தெரிவித்த அவர் தற்போதுள்ள அரசியல் புறச் சூழலில் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் மேலும் பேசிகிடைப்பதைப் பெற்று மேலும் அழுத்தங்களைப் போட வாய்ப்பு உண்டு என்கிறார்.

அரசியல் அமைப்பின் சில முக்கிய பகுதிகளின் சாராம்சங்களை அவர் மேலும் விபரித்தார். குறிப்பாக ஒற்றைஆட்சியா? சமஷ்டியா? பௌத்தமதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை, அதிகாரபரவலாக்கம், காணிஅதிகாரம் என்பன குறித்து விளக்கினார்.

அரசகட்டுமானவியாக்கியானம் எவ்வாறானது?

இவ் அரசகட்டுமானம் பற்றிய உரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தெரிவித்த கருத்தினை ஆதாரமாக வைத்தே அம் மாற்றங்கள் குறித்து விளக்குகிறார்.

அதாவது தெற்கில் வாழும் மக்கள் சமஷ்டி என்றால் அச்சப்படுகிறார்கள். அதே போலவே வடக்கில் வாழ்பவர்கள் ஒற்றை ஆட்சி எனில் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

எனவே மக்கள் அச்சப்படாத புதியமொழிப் பிரயோகத்தை, புதிய அர்த்தத்தை வழங்குதல் அவசியம் என்றார்.

அதேபோல அரசியல் அமைப்புக் குறித்து மக்களிடம் ஆலோசனைகள் கேட்டபோது சிங்களமக்களில் பெரும்பாலோர் சமஷ்டியை ஏன் எதிர்க்கிறார்கள்? என வினவப்பட்டபோது அது பிரிவினையை ஏற்படுத்திவிடும் எனத் தெரிவித்த அம் மக்கள், அதிக அதிகாரங்களை வழங்குவதை எதிர்க்கவில்லை.

அதேபோல ஒற்றை ஆட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள்? என தமிழ் மக்களிடம் வினவியபோது வழங்கிய அதிகாரங்களைப் பறிக்கும் வாய்ப்பு உண்டு.

ஆங்கிலமொழிமாற்ற மூலமாகக் கூறப்படும் ஒற்றைஆட்சி என்ற பதத்தை விலக்குமாறு கோரியமக்கள் பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத இலங்கை என்பதை ஏற்றுள்ளனர்.

எனவே இதற்கான சரியான உரையாடல் அவசியம் என உணரப்பட்டதாக  தெரிவித்தார். அதன் காரணமாகவே தற்போது அரசகட்டுமானம் குறித்து பயன்படுத்தும் ஒற்றைஆட்சி என்பது நாட்டின் ஒட்டு மொத்த ஒருமித்த தன்மையை விளக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் Unitary state  என்பது அரசகட்டுமானத்தின் உள்ளார்ந்த தன்மையைவிளக்காது  அது ஒற்றைத் தன்மையை அதாவது மத்தியஅரசின் அதிகாரத்தை உணர்த்துவதாகவே புரிந்து கொள்ளப்படுவதால் சிங்களத்தில் அரசகட்டுமானம் எது? என்பது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் ‘எக்கய ராஜ்ய’எனவும், தமிழில் ‘ஒருமித்தநாடு’ எனக் கருதப்படும் விதத்தில் மொழிப் பதத்தினை பயன்படுத்தியுள்ளதாகவும், இச் சொற் பிரயோகத்தினைப் பெரும்பாலானகட்சிகள் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறைமைஅதிகாரம்

இறைமை அதிகாரம் என்பது மக்களிடமே தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தஅவர், சிலநாடுகளில் குறிப்பாக பாகிஸ்தானில் அந்த அதிகாரம் இறைவனிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மக்களே எஜமானர்கள் என்பதால் அந்த அதிகாரம் அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என்றார். தற்போது இறைமை அதிகாரம் என்பது பிரிக்கமுடியாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது பிரிவினையைத் தடுப்பதற்கான மேலதிக பாதுகாப்பு என்றார்.

இரண்டாவது சபை அல்லதுசெனட் சபை

இச் சபையின் அங்கத்தவர்கள் மாகாணசபைகளிலிருந்து சபைக்கு ஐவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட, பாராளுமன்றம் 10 உறுப்பினர்களை நியமிக்கும் என்றார். அரசியல் அமைப்பை மாற்றுவதாயின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும். இதனையும் இணைந்த எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனையோர் ஆதரித்துள்ளனர்.

மத உரிமை

தற்போது நடைமுறையிலுள்ளவாறே பௌத்தமதத்திற்கு மிகமுக்கிய ஸ்தானம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இதர மதங்கள் கௌரவத்துடனும், பாகுபாடற்ற அந்தஸ்தும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு‘பாகுபாடற்ற’என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து சிங்களதேசியவாதிகள் தெரிவிக்கையில் அதுவும் மறைமுகமாக சமஅந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கவலைப்படுவதாக தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.

சமத்துவம் தொடர்பான பகுதியில் அதாவது பாகுபாடு என்பது சாதி, இனம், பால், பிறப்பு என்பவற்றின் அடிப்படையில் இடம்பெறக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது பாகுபாட்டை மேலும் தடுக்கும் ஒரு பகுதியாக உள்ளதாகக் கூறினார்.

வடக்கு,கிழக்கு இணைப்பு

இதுகுறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளதாகவும், அதில் தற்போது இருக்கும் நிலையைத் தொடர்ந்து வைத்திருப்பது, மாகாண இணைப்பு அவசியமெனில் பாராளுமன்றம் தனியானசட்டத்தை இயற்றுவது, கூட்டமைப்பினர் இணைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.

சிலர் இணைப்புத் தேவையாயின் சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போதுள்ள சூழலில் வடக்கு,கிழக்கு இரண்டாக இருக்குமாயின் செனட் சபைக்கு மேலும் இரட்டிப்பு உறுப்பினர்களைப் பெறவாய்ப்பு உண்டு என்றார்.

இச் சந்தர்ப்பத்தில் மாகாணங்களின் அதிகாரங்கள் தொடர்பாக நாட்டின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள7 மாகாணசபைகளின் முதலமைச்சர்களின் யோசனைகளை மேற்கொள் காட்டி பல விபரங்களைத் தெரிவித்தார்.

-மாகாணசபைகளின் அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.

-ஒருமுறை மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவை மீளமத்திய அரசால் பெறப்படமுடியாது.

-ஓற்றைஆட்சிஎன்ற பதம் பயன்படுத்த முடியாது.

-தேசியக் கொள்கைகள் உருவாக்கப்படின் அவற்றை நடைமுறைப்படுத்த மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

-அவற்றை மத்திய அரசு மீளப் பெறமுடியாது.

-அதிகார பிரிப்பு தெளிவானதாகவும், சந்தேகத்திற்கு இடமற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

-தேசியக் கொள்கைகள் தயாரிக்கும் போது மந்திரிசபையில் மட்டும் விவாதிக்காமல் வெளிப்படையாக விவாதித்தல் அவசியம்.

சுற்றுநிருபங்கள் மூலம் கொள்கைமாற்றங்களை அறிவிக்கமுடியாது. மாகாணசபைகளுடன் கலந்துரையாடுவதும், மாகாணசபைகளுக்கு பகுதிகள் வழங்கப்பட்டால் அவற்றை மத்தியஅரசு மீளப் பெறமுடியாது.

மாகாண ஆளுநர்

இப் பதவிதொடர்ந்து இருப்பது அவசியம். ஏனெனில் அவரே மாகாணஅரசு- மத்தியஅரசுடன் தொடர்பு கொள்வதற்கான இணைப்பாகசெயற்படுவார்.

ஆனால் அவரது அதிகாரங்கள் அதாவது மாகாண பொதுநிர்வாகத்தில் தலையிடுவது நிறுத்தப்பட்டு, மாகாணங்களுக்கான பொதுநிர்வாக ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அதுவே இடமாற்றம் போன்றகாரியங்களை நிறைவேற்றும்.

ஆனால் இவை அரசியல் அமைப்புசபையின் அனுமதியுடன் நிறைவேற்றப்படவேண்டும். அப் பதவிபெயரளவில் மட்டுமேஉள்ளதாகும்.

காணி அதிகாரம்

தற்போது காணிஅதிகாரம் மாகாணசபைகளுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக் காணிகள் தொடர்பான விவகாரங்களைத் தேசியகாணி ஆணைக்குழுவே கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. அதுவே பலபிரச்சனைகளுக்குக் காரணமாகஅமைந்தது.

தேசியகாணி ஆணைக்குழவிற்குச் சமஅளவான பிரதிநிதிகள் மத்தியிலிருந்தும், மாகாணத்திலிருந்தும் நியமிக்கப்படுவார்கள். அவர்களே காணிகள் தொடர்பான தேசியக் கொள்கைகளை வகுப்பார்கள்.

மாகாணசபைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மத்தியஅரசு கோருமாயின் மாகாணஅரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பெறவேண்டும்.

அது சாத்தியப்படாவிடில் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். அவசிய தேவைக்காக உடனடியாக காணி தேவைப்படின் வர்த்தமானிஅறிவித்தலுடன் நிலத்தைப் பெறலாம். ஆனால் அவைநீதித்துறையின் மீளாய்விற்கு உட்படுத்தப்படும்.

காணிகளை வழங்குதல் அல்லது குடியேற்றங்களை அமைப்பதாயின் பின்வரும் ஒழுங்கில் முதன்மைவழங்கப்படுதல் வேண்டும்.

-முதலாவது முன்னுரிமை அம் மாவட்டத்தின் பிரிவுக் காரியாலய எல்லைக்குள் வாழும் நிலமற்றமக்கள்.
-இரண்டாவது அம் மாவட்டத்திற்குள் வாழும் நிலமற்றமக்கள்.
-மூன்றாவது அம் மாகாணத்தின் நிலமற்ற மக்கள்.
-நான்காவதேஅப் பிரதேசத்திற்கு வெளியில் உள்ளநிலமற்றமக்களாகும்.

இவ்வாறு புதியஅரசியல் அமைப்புயோசனைகள் குறித்து அவரது விளக்கங்கள் இருந்தன. இப் புதியசூழலைப் பயன்படுத்தி மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்த இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

( தொகுப்பு : வி. சிவலிங்கம்.)

vsivalingam@hotmail.com

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News