இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 40 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், 27,088 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 2019 ஜூலை 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,820 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 3,536 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 4138 பேர் காலி மாவட்டத்திலும்  நோயாளர்களாகப் பதிவாகியுள்ள நிலையில்,  வாரமொன்றில் சுமார் 30 நிமிடங்களையாவது டெங்கு ஒழிப்புப் பணிக்காக ஒதுக்கி, சுற்றுப்புறச் சூழல்களைத் துப்புரவு செய்யுமாறும், பொதுமக்களை  அப்பிரிவு மேலும்  அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு நுளம்பின் தாக்கமானது, காலை 6 மணி முதல் 11.00 மணி வரையிலும், பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையான காலப் பகுதியிலும் காணப்படுமென குறிப்பிட்டுள்ள இப்பிரிவு, இக்காலப் பகுதியில் மக்கள் தம்மை டெங்குத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

புது வகையான டெங்கு நுளம்பே இம்முறை பரவியுள்ளதாகவும், கடந்த வருடங்களை விட இம்முறை கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளி ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு டெங்கு தொற்றாத வகையில், இயன்றளவு  நுளம்பு வலைகளை  உபயோகிக்குமாறும், அத்தோடு கடும் காய்ச்சல், வாந்தி, சிவப்பு நிற தழும்புகள் என்பன காணப்படின், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கோ அல்லது தகைமையுள்ள வைத்தியர் ஒருவரிடமோ சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அப்பிரிவு பொதுமக்களை அறிவிறுத்தியுள்ளது.

அதேவேளை குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், ஆகியோர் காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலேயே மருத்துவரின் உதவியை நாடுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.