மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம், 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 33,517 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக,  வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

இதன்பிரகாரம், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 6 இலட்சத்து 37 ஆயிரத்து 534 இலங்கையர்கள்,  மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு  பணியாளர்களாகச் சென்றவர்களுள்,  சவூதி அரேபியாவில் 1,61,947 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1,50,000 பேரும்,  கட்டாரில் 1,17,732 பேரும், குவைத்தில் 89,183 பேரும், ஓமானில் 21,409 பேரும், பஹ்ரைனில் 12,928 பேரும் தொழில் புரிந்து வருகின்றனர்.

இவர்கள் மூலம்,  கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 33,517.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணத்துக்கு எந்தவித வரியும் அறவிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டுப் பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு,  பெண்களை அனுப்பும் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.    இதேபோல்,  அனுபவம் மிக்க நபர்களையே நாம்  அனுப்புகின்றோம். அனுபவம் இல்லாத எந்த நபர்களையும் நாம் அனுப்புவதில்லை.

மத்திய கிழக்கை இலக்கு வைத்து முன்னெடுத்த இந்த வேலைத்திட்டத்தை, தற்போது ஏனைய  நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இதன் மூலம், எமக்கு  பாரிய சாதகத் தன்மைகள் நிறையவே  கிடைத்துள்ளன.

இது தவிர தென் கொரியாவில் 23,774 பேரும்,  சைப்ரசில் 4,885 பேரும்,  இஸ்ரேலில் 6,500 பேரும்,  ஜகர்த்தாவில் 9,676 பேரும், லெபனானில் 11,500 பேரும்,  மலேசியாவில் 6,000 பேரும், மாலைதீவில் 15,000 பேரும், சிங்கப்பூரில் 7,000 பேரும் தொழில் புரிந்து வருகின்றனர் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.