யாழ்ப்பாணம்: 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் ; ஆலய பூசகர் சிறுமியின் உறவினர் இருவருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் ஆலய பூசகர் ஒருவரும் சிறுமியின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 27 ஆம் திகதி 9 வயது சிறுமியிடம் கையடக்கத் தொலைபேசி இருந்தமையை பாடசாலை ஆசிரியர்கள் அவதானித்துள்ளனர். இது தொடர்பில் சிறுமியிடம் அவர்கள் விசாரணை செய்துள்ளனர்.ஆலய பூசகர் ஒருவரே அதனை வாங்கி தந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் தகவலையடுத்து பாடசாலை ஆசிரியர்கள் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்தனர். அத்துடன் சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
ஆலயப் பூசகர் வழிபாடுகள் முடிவடைந்ததும் பிரசாதம் வழங்குவதற்காக தொலைபேசி ஊடாக அழைப்பதாக சிறுமி பொலிஸாருக்கு கூறியுள்ளார். ஆலய மடப் பள்ளியில் வைத்து சிறுமியை அங்க சேஷ்டை செய்வதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சித்தப்பா உறவு முறை உடைய ஒருவரும் இவ்வாறு நடந்து கொள்வதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் பிரசாதத்துடன் ஆலய பூசகர் பணம் வழங்குவதாகவும் தெரிவித்த சிறுமி, அதனை சேர்த்து வைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸாரிடம் சான்றாதாரமாக வழங்கியுள்ளார்.
சிறுமியிடம் இருந்த கைப்பேசி சிம் அட்டை ஆலய பூசகரின் பெயரில் இருந்தமையைக் கண்டறிந்த பொலிஸார் 72 வயதான ஆலய பூசகரையும், 50 வயதான சிறுமியின் சித்தப்பாவையும் கைது செய்து நேற்றுமுன்தினம் நீதி மன்றில் முற்படுத்தினர். இதன்போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தர விடப்பட்டுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment