ilakkiyainfo

ilakkiyainfo

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)
March 09
18:50 2019

நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல முக்கிய விடுதலைப் புலிகள், குறிப்பாக காயமுற்றவர்கள் மதுரை, சென்னை, நெய்வேலி, சேலம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

ராஜிவைக் கொல்வது என்று முடிவெடுத்த பிறகு, இப்படித் தமிழகத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அனைவரையும் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றி, பாதுகாப்பாக எங்காவது வீடுகள் எடுத்துத் தங்கவைக்கத் திருச்சி சாந்தன் மூலம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் ஏற்பாடு செய்தார்கள்.

பல இடங்களில் அம்மாதிரியான ‘சேஃப் ஹவுஸ்கள்’ அவர்களுக்குக் கிடைத்தன.

அப்படித் தங்கவைக்கப்பட்ட வீடுகளுள் ஒன்று வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனுடைய வீடு என்பது விசாரணையில் தெரியவந்தது!

சமீபத்தில் வைகோவே இதனை ஒப்புக்கொண்ட செய்தியை நான் பார்த்தேன்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கலந்துகொள்ளும்  பொதுக்கூட்டம்  நடக்கவிருந்த அதே சமயம், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவிருந்த கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதே தேதி, அதே ஊர். இரண்டு மணி நேர வித்தியாசம் மட்டுமே. இரவு எட்டு மணிக்கு ராஜிவ் காந்தி கூட்டம் தொடங்குவதாகச் சொல்லப்பட்டிருந்தது.

கருணாநிதி கலந்துகொள்ளவிருந்த பொதுக்கூட்டம் மாலை ஆறு மணிக்குத் தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.

முன்னதாக, 19.5.91 அன்று தி.மு.க.காரர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்குச் சென்று பொதுக்கூட்டத்துக்கு முறைப்படி அனுமதிக் கடிதம் கொடுத்து, டவர் ப்ளாக், காந்தி மைதானத்தில் நிகழ்ச்சி நடக்க அனுமதி வாங்கியிருந்தார்கள்.

அவர்கள் அனுமதி பெற்றுத் திரும்பிய சில மணி நேரத்துக்குள்ளாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாத்தூர் ராமசாமி நாயுடு என்பவர் (இவர் மரகதம் சந்திரசேகரின் தேர்தல் பிரசார நிர்வாகி), ‘நாங்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நிகழ்ச்சி வைத்துக்கொள்கிறோம்’ என்று எழுதிக் கொடுத்தார்.

அந்தக் குறிப்பிட்ட மைதானம் ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குள் இல்லாமல், இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் தள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்த இடம்.

முன்னர் ராஜிவ் பிரதமராக இருந்த சமயம் ஒருமுறை அந்த மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியிருக்கிறார்.

அதே இடத்தில்தான் இம்முறையும் ஹெலி பேட் அமைக்கப்பட்டு இருந்தது.

21ம் தேதியன்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இரவு ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்கிவிட்டு, மறுநாள் அங்கிருந்தே அவர் புறப்பட்டுப் பாண்டிச்சேரி போவதாகத் திட்டம் அல்லவா? அதற்காக.

 z_p14-When-Tigersகேன்சல் ஆன கலைஞர் கூட்டம்

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், 19ம் தேதி போலீஸ் அனுமதி பெற்ற இடத்துக்கு மாறாக, காங்கிரஸ்காரர்கள் வேறு இடத்தில் (சம்பவம் நடந்த இடம்) பந்தல் போடக் குழி தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இது நடந்தது மே 20ம் தேதி. விஷயம் கேள்விப்பட்டு காவல் துறையைச் சேர்ந்த ஏ.டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், ஏ.எஸ்.பி. பிரதீப் ஃபிலிப் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தார்கள்.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றது வேறு இடம். இப்போது அனுமதி பெறாத இன்னொரு இடத்தில் குழி தோண்டினால் என்ன அர்த்தம்? காங்கிரஸ்காரர்களுடன் அப்போது மரகதம் சந்திரசேகரே அந்த மைதானத்தில் இருந்தார்.

அவர்கள் அனைவரும் கடுமையாக வாதாடத் தொடங்கினார்கள். ‘ஊருக்கு வெளியே அத்தனை தூரத்தில் கொண்டு போய் கூட்டத்தை நடத்தினால் யார் வருவார்கள்?

இந்த இடமாவது மெயின் ரோடுக்கு அருகே உள்ளது. மக்கள் வந்துபோக வசதி. வெளியூர்க்காரர்களும் வருவதற்கு வசதியான இடம். எனவே இங்கேதான் நடத்துவோம்.

பள்ளி மைதானத்துக்குப் போவதாக இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் எத்தனையோ வாதாடிப் பார்த்தும் மரகதம் சந்திரசேகர் தன் கருத்தில் விடாப்பிடியாக இருந்தார்.

அவருக்குக் கூட்டம் நன்றாக நடக்கவேண்டும். நிறைய மக்கள் வரவேண்டும். ராஜிவ் காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றியடைய வேண்டும்.

அவ்வளவுதான். தொடர்ந்து வாதாடிப் பயனில்லை என்னும் நிலையில் காவல் துறை அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டார்கள். என்ன செய்யமுடியும்? சண்டையா போட முடியும்?

சரி, கருணாநிதி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்திலேயே இந்த மைதானம் இருந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே, இரண்டு மணிநேர வித்தியாசம் இருக்கிறது;

கருணாநிதி நிகழ்ச்சி முடிவடைந்ததும் எப்படியும் அந்தக் கூட்டம் அதற்குள் கலைந்துவிடும், பிறகு ராஜிவ் காந்தி நிகழ்ச்சிக்கான போக்குவரத்து ஒழுங்குகளை ஆரம்பித்துச் செய்யலாம் என்று ஒரு மாதிரி முடிவு செய்தார்கள்.

இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள், ரூட் பந்தோபஸ்து ஆகிய பணிகளில் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள்.

மறுநாள் விடிந்தது. மே 21ம் தேதி. இரண்டு தலைவர்களின் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென தலா இருநூறு போலீசாரைப் பணியமர்த்தியிருந்தார்கள்.

காலை முதலே காவல் துறையினருக்குப் பரபரப்புதான். எந்தப் பிரச்னையும் வராமல், சிக்கல்கள் ஏற்படாமல் இரண்டு நிகழ்ச்சிகளும் நல்லபடியாக நடந்து முடிந்தாக வேண்டுமே?

அவர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்த சமயம் சரியாக நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. செயலாளர் கையில் ஒரு தந்திக் காகிதத்துடன் காவல் அதிகாரிகளிடம் வந்தார்.

‘எங்க தலைவர் இன்னிக்கி இங்க வரல சார். ப்ரோக்ராம் கேன்சல் ஆயிடுச்சி.’

rajiv_killing விமானச் சிக்கல்      

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தபோது, ராஜிவ் காந்தி விசாகப்பட்டணத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டு, செக்யூரிடி க்ளியரன்ஸுக்கான உத்தரவுகள் அனுப்பப்பட்டன.

அவருக்குச் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அவருக்கு யார் யார், எந்தெந்த இயக்கங்களால் அச்சுறுத்தல், ஆபத்துகள் உண்டு என்றெல்லாம் விரிவாக விளக்கி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தி டெல்லியிலிருந்து முறைப்படி தகவல் வந்து சேர்ந்தது.

காஷ்மீர் இயக்கங்கள், உல்ஃபா முதல் எத்தனையோ பல இயக்கங்களின் ஹிட் லிஸ்டில் இருப்பவர் என்று குறிப்பிட்டிருந்த அந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை.

நிகழ்ச்சியை எவ்வாறு நடத்த வேண்டும், யார் ராஜிவை நெருங்கலாம், யார் யாருக்கெல்லாம் அனுமதி கிடையாது, அவர் தங்குமிடம் எங்கே, எப்படி இருக்கவேண்டும், எம்மாதிரியான பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று மிக விரிவாக எழுதப்பட்ட அறிக்கை. ஐ.பியிலிருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை அறிக்கை அது.

அதே சமயம் இங்கே, தமிழ்நாடு க்யூ ப்ராஞ்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எஃப்.சி. சர்மா மட்டும் விடுதலைப் புலிகளால் ஆபத்து இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டு ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூருக்கு மட்டுமல்லாமல், மறுநாள் ராஜிவ் எங்கெல்லாம் பயணம் செய்ய இருந்தாரோ, அத்தனை இடங்களுக்கும் இந்தத் தகவல்கள் சென்றன.

இந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில்தான் நிகழ்ச்சியை வடிவமைக்க வேண்டும். ஆகவே, வேறு வழியில்லாமல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் தங்குவதற்கு மரகதம் சந்திரசேகர் ஏற்பாடு செய்திருந்த சேட்டு வீட்டை விடுத்து, ஸ்ரீபெரும்புதூரிலுள்ள விருந்தினர் மாளிகையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீலா ப்ரியா பொறுப்பில் அந்த ஏற்பாடு நடந்தது. ராஜிவும் அதனை ஏற்றுக்கொண்டு இருந்தார். ஆனால் வாழப்பாடி ராமமூர்த்திக்கு இந்த ஏற்பாடும் பிடிக்கவில்லை.

அவர், அன்றைய கவர்னர் பீஷ்ம நாராயண் சிங்கிடம் விஷயத்தை விளக்கி, மீனம்பாக்கத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜிவ், அன்றிரவு மீனம்பாக்கத்துக்கே திரும்பி, விமான நிலைய விருந்தினர் விடுதியில் தங்கும்படி ஏற்பாடு செய்ய விரும்புவதைச் சொல்லி, அவரது ஒத்துழைப்பையும் பெற்றார்.

அதன்படியே இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. 21ம் தேதி மாலை நான்கு மணிக்கு புவனேஸ்வரிலிருந்து ராஜிவ் விசாகப்பட்டணம் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

தாமதமில்லாமல் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்து இறங்கிவிட வேண்டுமென்பது திட்டம்.

விசாகப்பட்டணம் விமானத் தளத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் எந்த விமானமும் புறப்பட முடியாது. இரவு நேர டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்குக்கு அங்கே வசதியும் அனுமதியும் இல்லை.

எனவே நாலரை மணிக்குள்ளாக ராஜிவ் கிளம்பிவிட்டால் ஐந்தரை மணி அளவில் தமிழகம் வந்துவிடுவார். சாலைப் பயணம், வரவேற்பு அது இதுவென்று ஒரு அரை மணிநேரம் போனாலும் ஆறு மணிக்கெல்லாம் வந்த வேலையை ஆரம்பித்துவிட முடியும்.

எல்லா ஏற்பாடுகளும்  தயாராக இருந்த   நிலையில், திட்டமிட்டபடி   ஐந்து மணிக்கு ராஜிவ் காந்தி விசாகப்பட்டணம் விமானத் தளத்தில் முதல்வர் ஜனார்த்தன் ரெட்டியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, சென்னை விமானம் ஏற நடந்து வந்துகொண்டிருந்தார்.

சில அடிகள் இன்னும் நடந்தால் விமானத்தை அடைந்துவிடலாம் என்னும் நிலையில், விமானத்தில் இருந்த பைலட், வாகனத்தின் ரேடார் கருவி வேலை செய்யவில்லை என்பதைக் கண்டார்.

ஒரு கணம் அவருக்குப் பதற்றமாகிவிட்டது. ஏற வந்துவிட்ட ராஜிவின் பக்கம் திரும்பி, ‘சாரி சார். ரேடார் வேலை செய்யவில்லை. என்னவென்று பார்க்கக் கொஞ்சம் நேரம் வேண்டும்’ என்று சொன்னார்.

ராஜிவ் ஒரு பைலட். அவருக்கு இம்மாதிரிப் பிரச்னைகள் எப்போதும் வரலாம் என்பது பற்றி நன்றாகவே தெரியும். எனவே அவர் பதறவில்லை.

‘பாருங்கள். ஆனால் கொஞ்சம் சீக்கிரம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஜனார்த்தன் ரெட்டியுடன் பேசிக்கொண்டு நின்றார்.

என்ன கோளாறு என்று ஆராயத் தொடங்கிய விமானிக்கு, ஒரு குறிப்பிட்ட கருவியை மாற்றினாலொழிய வண்டி புறப்பட வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

எனவே, வேறு வழியில்லாமல், அருகே உள்ள விமானப்படை விமான நிலையத்தில் அந்த ரேடார் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என்று பார்க்கச் சொல்லித் தகவல் அனுப்பினார். ம்ஹும்.

உடனடியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. தகவலை ராஜிவிடம் தயங்கியபடி சொன்னபோது அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

‘ஓ, அப்படியானால் என்னால் தமிழ்நாட்டுக்கு இன்று போகமுடியாதா? வேறு விமானம் ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா பாருங்களேன்.

Gandhi-Family2

நான் ஆன்ட்டியை ஏமாற்ற விரும்பவில்லை’ என்று சொன்னார். ‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள், ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யப் பார்க்கிறோம்’ என்று விமானி நம்பிக்கை சொல்லி, தீவிரமாக அந்தக் கருவியை ஏதாவது செய்து சரியாக்க முயற்சி செய்யத் தொடங்கினார்.

‘நாம் எதற்கு இங்கே வீணாகக் காத்திருக்க வேண்டும்? நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். உடனே இங்கே ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன்’ என்று ராஜிவை அழைத்துச் சென்று விடுவதிலேயே ஜனார்த்தன் ரெட்டி ஆர்வம் காட்டினார்.

‘இல்லை. நான் போயே ஆகவேண்டும். ஆன்ட்டி மிகவும் வருத்தப்படுவார்கள்’ என்று அவர் விடாமல் அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

‘சரி. நாம் அரசு மாளிகைக்குச் செல்வோம். விமானம் தயாரானதும் தகவல் வரும். நாம் திரும்பி வருவோம்’ என்று சொல்லிவிட்டு அவரை  அழைத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார் ஜனார்த்தன் ரெட்டி.

அவர்கள் காரில் ஏறிப் புறப்பட்ட சில நிமிடங்களில் பைலட்டுக்கு அந்த ரேடார் வசப்பட்டுவிட்டது. என்ன கோளாறு என்று எப்படித் தெரியவில்லையோ, அதே மாதிரிதான் எப்படிச் சரியானது என்பதும்.

ஆனால் ரேடார் இப்போது துல்லியமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. சந்தோஷத்தில் அவர் உடனே ராஜிவின் விமானத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலர்களிடம் விஷயத்தைச் சொன்னார்.

‘கருவி சரியாகிவிட்டது. வி.ஐ.பி. உடனே திரும்ப வரலாம்.’ ஜனார்த்தன் ரெட்டிக்கு வேண்டுமானால் சற்று ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ராஜிவுக்கு அளவிட முடியாத சந்தோஷம். ‘வண்டியைத் திருப்பு, வண்டியைத் திருப்பு’ என்று உற்சாகமாகிவிட்டார். ‘சரி, நீங்கள் ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்லுங்கள்.

நான் வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டார் ரெட்டி. அன்றிரவு எப்படியாவது ராஜிவை ஆந்திராவில் தங்கவைத்து விடுவது, முடிந்தால்  ஒரு திடீர்ப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து அவரைப் பேச வைத்துவிடுவது என்பது அவரது எண்ணம்.

இரண்டும் முடியாது போய்விட்டது. என்ன செய்வது? ராஜிவுக்கு ஆன்ட்டிதான் முக்கியம். அப்புறம்தான் மற்றவர்கள். ஆறு மணிக்குச் சென்னையில் இறங்கிவிடுவது என்னும் திட்டத்துடன் புறப்பட்ட ராஜிவ் அன்று ஆறு மணி அளவில்தான் விமானத்தில் ஏறினார்.

இங்கே ஸ்ரீபெரும்புதூரில் திடீரென்று கருணாநிதி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அந்த நிகழ்ச்சிப் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த சுமார் இருநூறு காவலர்களும் ராஜிவ் நிகழ்ச்சிக்கே கிடைத்தார்கள்.

அதிகாரிகளுக்கு மிகவும் திருப்தி. ‘நல்லதாப் போச்சுய்யா. செக்யூரிடிய நல்லா டைட்டா போடுங்க. கவனமா பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாகப் போனார்கள்.

அன்றைக்குக் கிட்டத்தட்ட முன்னூற்றைம்பதிலிருந்து நாநூறு போலீசார் ராஜிவ் பொதுக்கூட்டத்துக்குக் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

அனைவரும் தயாராகக் காத்திருக்க, இரவு ஏழரை மணிக்கு ராஜிவின் விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. சுறுசுறுப்பாக இறங்கி, பத்திரிகையாளர்களிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார்.

புறப்படலாமா என்று கேட்டபடியே விறுவிறுவென்று கிளம்பி, காரில் ஏறினார். வழியில் போரூர், பூந்தமல்லியில் சிறு பொதுக்கூட்டங்கள்.

முன்னதாக பேட்டிக்காக வந்திருந்த இரண்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களைத் (நியூயார்க் டைம்ஸ் மற்றும் கல்ஃப் நியூஸ் இதழ்களைச் சேர்ந்தவர்கள்) தன் காரிலேயே  ஏறிக்கொள்ளச் சொல்லிவிட்டு, போகிற வழியிலேயே அவர்களுடன் பேசிக்கொண்டு சென்றார்.

போரூர், பூந்தமல்லி பொதுக்கூட்டங்கள் ஒரு முன்னாள் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தைப் போலவே இல்லை. ஒரு செக்யூரிடி கிடையாது, கட்டுப்பாடு கிடையாது, போக்குவரத்து ஒழுங்கு கிடையாது, ஒன்றுமே கிடையாது.

இது பற்றி அந்த இரு பத்திரிகையாளர்களே வியப்புத் தெரிவித்து பிறகு எழுதியிருந்தார்கள். சர்வ அலட்சியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டங்களில், அது குறித்த எவ்வித விமரிசனமும் இல்லாமல் சிரித்தபடியே கலந்துகொண்டுவிட்டு கார் ஏறிவிட்டார் ராஜிவ்.

ஸ்ரீபெரும்புதூருக்கு வந்ததும் முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் வைபவம். அதை முடித்துவிட்டுப் பொதுக்கூட்ட மைதானத்தருகே வந்தார்.

மெயின் ரோடில் இருந்து சுமார் நூறடி நடந்தால் சிவப்புக் கம்பளம் ஆரம்பிக்கும். விறுவிறுவென்று நடந்தால் முப்பது வினாடிகளில் மேடையேறி விட முடியும்.

ஆனால் அந்தக் கூட்டம்! ராஜிவ் பயணம் செய்த அந்த குண்டு துளைக்காத கார் சரியாக சிவப்புக்கம்பளம் ஆரம்பிக்கும் இடத்துக்கு வந்து நின்றது. பொதுவாகவே ராஜிவ் காந்தி பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் விதம் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நிறைய விமரிசனங்கள் உண்டு.

அவர் செக்யூரிடியைப் பொருட்படுத்த மாட்டார் என்பது முதலாவது. எத்தனை தடுத்து வைத்தாலும் பொது மக்களை நெருங்கவே விரும்புவார் என்பது அடுத்தது. அவர் வருகிற கூட்டத்தில் மக்களைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மூன்றாவது.

அப்படிக் கட்டுப்படுத்துவதைப் பொதுவாக அவர் விரும்ப மாட்டார் என்பது நான்காவது. ஆனால் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தைப் பொருத்தவரை, நாங்கள் கள ஆய்வு செய்து, துப்புரவாக விசாரித்த வகையில் ராஜிவ் காந்தி, அங்கே வந்து இறங்கிய கணம் முதல், மேடையை நோக்கிச் சென்ற அந்தத் தருணம் வரை எந்தவிதமான செக்யூரிடி வயலேஷனுக்கும் இடம் தரவேயில்லை.

காவல் துறையினர் என்ன ஏற்பாடு செய்திருந்தார்களோ, அதனைத்தான் பின்பற்றினார். விமானத் தாமதத்தினால் எட்டு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்குப் பத்து மணிக்கு வந்து சேர்ந்தார் என்பது தவிர, அவரால் வேறு பிரச்னையே இருக்கவில்லை.

பிரச்னை வேறு விதமாகத்தான் அங்கே வந்தது.

kadithammmkadithammd

தொடரும்…

கே. ரகோத்தமன் (தொகுப்பு:கி.பாஸ்கரன்-சுவிஸ்)

(மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! 1….2…3..4…5…6-7..8…9…10)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

<

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News