ilakkiyainfo

ilakkiyainfo

வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ – காரை துர்க்கா

வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ – காரை துர்க்கா
July 02
22:12 2019

 – காரை துர்க்கா

“நான் பிறந்தது யாழ் நகரப் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம்; கல்வி கற்றது, யாழ். நகரில் உள்ள கல்லூரி; உயர்கல்வி கற்றது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம்; பணியாற்றியது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்   அதனை அண்மித்த வைத்தியசாலைகளிலும் தான்” என வைத்தியர் ஒருவர் கூறினார்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு (30.10.1995) இடம்பெற்றிருக்காது விட்டால், நாவற்குழிக்கு அப்பால், என்ன நிறமென்றே பலருக்குத் தெரிந்திருக்காது என்று, நம்மவர்கள் நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. இவ்வாக்கியம், இவ்வைத்தியர் விடயத்தில் அப்படியே, அச்சொட்டாகப் பொருந்துகிறது அல்லவா?

ஆயுதப் போரும் அதனால் ஏற்பட்ட வலிகள் நிறைந்த இடப்பெயர்வுகளும் எப்போதும் துன்பங்களையும் இழப்புகளையுமே ஏற்படுத்தும்.

ஆனாலும்,  1995ஆம் ஆண்டு இடப்பெயர்வு,   யாழ்ப்பாணத்தில்  பிறந்து வாழ்ந்த பலருக்கு, வன்னியில் பல கிராமங்களை அறிமுகம் செய்தது. மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் முகவரிகள் ஆக்கியது.
கைவிடப்பட்டிருந்த பகுதிகளை வாழ்விடங்களாக்கியது.

அதற்குப் பின்னரான, பல ஆண்டு கால எண்ணிலடங்கா இடப்பெயர்வுகளும் போர் ஓய்ந்த 2009க்குப் பின்னரும், தற்போதும் யாழ். மக்கள் ஏராளமானோர், வன்னியை நிரந்தர வாழ்விடமாகக் கொண்ட வாழ்ந்து வருகின்றனர்.

இது இவ்வாறு நிற்க, யாழ்ப்பாணத்தில் வாழும் 14,000 பேருக்கு, நிரந்தரமாகக் காணிகள் இல்லை. இதனால் வீட்டுத்திட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், காணி இன்மையால் அவை சாத்தியமற்று உள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், தெல்லிப்பழை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்; பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றுகையிலேயே இவ்வாறாகத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டம், கோப்பாய் பிரதேச செயலாளர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில், காணிகளற்ற 55 குடும்பங்களுக்கு, இடைக்காட்டில் இரண்டு பரப்பு வீதம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு, வடக்கு வலயக் காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு பரப்பு என்பது, இருபது பேர்ச் ஆகும்.

பொருளாதார நெருக்கடிகளே, அதிகப்படியானவர்களுக்கு இன்று நிரந்தரமான நெருக்கடி நிலையை உருவாக்கி விட்டுள்ளது. இதிலிருந்து விடுபட, கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

கால்நடைகள், கோழி வளர்ப்பு எமக்குத் தேவையான புரதம் நிறைந்த உணவாக உள்ளதோடு, வணிக நோக்கிலும் முதன்மை இடம் வகிக்கின்றது. இந்நிலையில், வெறும் இரண்டு பரப்புக் காணிக்குள் என்னத்தைச் செய்ய முடியும்?

யாழ்ப்பாண மாவட்டத்தில், அரசாங்க காணிகள் சொற்ப சதவீதத்திலேயே உள்ளன. மிகஅதிகப்படியான காணிகள், தனியாருக்குச் சொந்தமானவை.

ஆகவே, பாரியளவில் தனியார் காணிகளை அன்பளிப்பாகப் பெற்று, காணி அற்றவர்களுக்கு வழங்குவது சவாலானது.

சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், (2017) வடக்கு மாகாணத்தின் மொத்த மக்கள் (1,119,820) தொகையில் சராசரியாக 55 சதவீதமான மக்கள் (607,915) யாழ், மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தை விட அதிகப்படியான நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வடமாகாணத்தின் வெறும் 8.5 சதவீதமான மக்கள் (95,749) மக்கள் வாழ்கின்றனர்.

அதிலும், வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்ட மணலாறில் அண்ணளவாக 9,000 குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள்.

மணலாற்றில் ஆரம்பித்த பேரினவாதக் குடியேற்றங்கள், கரைதுறைப்பற்று நோக்கி நகருகின்றன. வவுனியா தெற்கில் ஆரம்பித்த பேரினவாதக் குடியேற்றங்கள், வவுனியா வடக்கு (நெடுங்கேணி) நோக்கி நகருகின்றன.

‘எல்லைகளை நோக்கி நாம் நகர மறுக்கும் வேளையில், எல்லைகள் எம்மை நோக்கி நகரும்’ எனக் கூறுவதுண்டு.

இதனையே வடக்கு, கிழக்கில் தலைவரித்தாடும் காணிகள் கையகப்படுத்தலால், தமிழ் மக்களின் படுக்கை அறைகளில் கூட, எமது நிலம் என எல்லைக்கல்லை வைக்குமளவுக்கு நிலை உள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை, இலங்கை அரச படைகள் ஒரு போதும் திரும்ப வழங்காதிருக்கக் கூடுமென, நிலம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுத்தம் நடைபெற்ற காலங்களில் உயிர்பிரிந்து விடும் என்ற அச்சத்தால் ஆறுகள், சமுத்திரங்கள், பன்னாட்டு இராணுவ எல்லைகள் என பல்வேறு தடைகளைத் தாண்டியே ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் (கனடா உட்பட) சென்றோம்.

சிறிய ரக மீன்பிடிப் படகுகளில், அதிகளவில் ஏறி தமிழ்நாடு சென்றோம். படகுகள் கவிழ்ந்து, வாழ்வும் பிரிந்த துன்பக் கதைகள் ஏராளம் எம்மிடம் உள்ளன.

சொந்த உறவுகளைப் பிரிந்து வாழ்பவர் அநாதை ஆவார். அதேபோலவே, சொந்த நிலத்தைப் (மண்) பிரிந்து வாழ்பவர் அகதி ஆவார்.

இந்நிலையில், இன்றும் நகைகள் அத்துடன் தாலிக்கொடியைக் கூட அடைவு வைத்து அல்லது விற்று முற்றிலும் உயிருக்கு உத்தரவாதமற்ற ஆபத்தான கடல் வழிப்பயணங்களில், குடும்பமாக புலம்பெயரும் நிலை தமிழர்களிடம் உள்ளது.

இவ்வாறாக, விற்றுச் சுட்டுப் பணம் சேர்த்து, அதனைப் போலி முகவர்களிடம் கொடுத்து, முகவர் ‘ஏய்க்காட்டி’ பணத்தையும் தொலைத்து வாழ்வையும் தொலைக்கும் நிலையும் தமிழ் மக்களிடம் தொடர்கின்றது.

இதேவேளை, இப்போதும் எம் தாய் மண்ணையும் எம் உறவுகளையும் பிரிந்து, வெளிநாடு செல்லும் வாழ்வை நேசிப்பவர்களும் உண்டு.

புரியாத மொழி, தெரியாத இடம், அறியாத மனிதர்கள், முற்றிலும் முரணான கலாசாரப் பின்னணியைக் கொண்ட தேசங்களுக்குப் புலம்பெயரும் நிலை, இனியும் வேண்டாம். இதுவரை போனவர்கள் போதும்; இந்த நிலை தொடர வேண்டாம்.

ஒருபுறம் யுத்தம், எமது மக்களைத் தின்றது. மறுபுறம், புலம்பெயர் வாழ்வு தாயகத்தில் எமது மக்களின் தொகையை வற்றச் செய்தது.

ஏற்கெனவே, சிறுபான்மை இனம் என்பதே, எங்கள் நாட்டில் அரசாங்கம் சூட்டிய எமக்கான சிறப்புப் பெயர். நாங்கள் தொடர்ந்தும் பிற தேசங்களுக்குப் புலம்பெயர, எங்கள் பிரதேசங்கள் பிற இனத்தவருக்கான பிரதேசங்களாக வேகமாக மாறி வருகின்றன.

‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ என்ற நாடகம் 1970ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இளைஞர்கள் பலரை, விவசாயச் செய்கை நோக்கியும் வன்னி நோக்கியும் நகர்த்தியது.

அந்நாள்களில் அவர்கள் பாரியளவில் விவசாயம் செய்து, உழைப்பில் வெற்றியும் மகிழ்ச்சியும் கண்டார்கள். அரை நூற்றாண்டு கழிந்து, மீண்டும் காலம் அழைக்கின்றது.

வறுமையைப் போக்க, வேலைவாய்ப்பை வழங்க பொருளாதாரம் செழிக்க, எம்மக்களுக்கு இரசாயனம் அற்ற உணவுகள் வழங்க, அவை அனைத்தையும் தாண்டி எம்மண் மேலும் அபகரிக்கப்படாது தடுக்க, வன்னி செல்வோம்.

ஸ்ரீ லங்கா அரசாங்கம், அரசியல் அபிவிருத்தி செய்கின்றது. நாங்கள், எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பம், சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அறிவியல் அபிவிருத்தி செய்வோம்.

ஆகவே, பொருளாதாரம் ஈட்ட வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பழைய கண்ணோட்டத்தைப் புரட்டிப் போடுவோம்; தூக்கி எறிவோம்.

இழந்த பொருளாதாரத்தையும் இனி இழக்கப் போகின்ற மண்ணையும் மீட்க வன்னி செல்வோம். எங்கள் இனத்தின் தனித்துவங்களை இழந்து, அந்நியருடன் (புலம்பெயர்வு) ஐக்கியப்படுவதில் என்ன வாழ்வு இருக்கிறது?

அதிலும் ஆயிரம் வசதிக் குறைவுகளுக்கு மத்தியிலும் எங்கள் மண்ணில் எங்கள் உறவுகளோடும் உதிரங்களோடும் ஒன்றாகச் சங்கமித்து வாழ்வோம்.

‘தொழில்களில் முதன்மையானதும் மதிப்பு வாய்ந்ததும் விவசாயமே’ என ரூசோ என்ற அறிஞர் கூறுகின்றார். 1950களின் பின்னர், காலத்துக்குக் காலம், பல்வேறு விவசாயத் திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், வன்னி மாவட்டங்களில் குடியேறினர்.

‘வந்தோரை வாழ வைக்கும் வன்னி மண்’ அவர்களையும் அரவணைத்தது; வளப்படுத்தியது; வாழ்வு கொடுத்தது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் காணி அற்றவர்களுக்கு, வன்னி மாவட்டங்களில் காணிகளை ஏன் வழங்கக் கூடாது? சட்டபூர்வமாகக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் மாவட்டச் செயலாளருக்கு இல்லை. பெரும்பான்மையின மக்கள், தமிழர்கள் நிலங்களில் சட்டரீதியற்ற முறையிலேயே குடியமர்த்தப்படுகின்றனர்.

ஆகவே, இவ்வாறான குடியமர்த்தல் காரியங்களை அதிகாரிகள் ஆற்ற முடியாது. ஆற்றலுள்ள அரசியல்வாதிகளாலேயே ஆற்ற முடியும். இதுவோர் இலகுவான காரியமும் அன்று. ஆனாலும், அதற்கான நகர்வுகள் ஏதேனும் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கூட்டமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றிச் சுற்றிப் பிரதமரின் கொல்லைக்குள் இருக்கின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் என்ற பதவிக்கு மேலதிகமாகத் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சு எனப் பல அமைச்சுகளையும் தன்வசம் கொண்டுள்ளார். இவற்றைக் கொண்டு எம்மக்களுக்கு எம்மவர்களால் என்ன செய்ய முடிந்தது?

- காரை துர்க்கா-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News