வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான  அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை நிரூபிக்காமலேயே ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான அனுமதியையே சவுதி அரேபியா வழங்கவுள்ளது.

சுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சவுதிஅரேபியா கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது.

சவுதிஅரேபிய பெண்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்கள் தனியாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்த ஆணும் பெண்ணும் ஹோட்டல்களில் ஒன்றாக தங்கியிருக்ககூடிய நிலையும் உருவாகும்.

சுற்றுலாத்துறைக்கான சவுதி அரேபியாவின் ஆணைக்குழு இதனை உறுதி செய்துள்ளது.

இதுவரை காலமும் ஹோட்டல்களில் ஆணும்பெண்ணும் ஒன்றாக தங்கியிருப்பதற்கு தங்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை காண்பித்து உறவினை உறுதி செய்யவேண்டும், எதிர்காலத்தில் இது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்கு அவசியமில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் தங்கள் அடையாள உறுதிப்படுத்திய பின்னர் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருக்கலாம் எனவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா தனது சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் முன்னர் காணப்பட்ட பல கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் கறுப்பு ஆடை அணியவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாடு தளர்த்தியுள்ளது.