ilakkiyainfo

ilakkiyainfo

வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!!

வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!!
February 06
20:30 2018

எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் எனது ஒட்டுமொத்த உலகமும் சுக்கு நூறாகிவிட்டதைப் போல் நான் உடைந்து போனேன்.

பதினேழு ஆண்டு கால வாழ்க்கையில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்… மலரும் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்க, எனது பத்து வயது மகளுடன் தன்னந்தனியாக நின்றேன்.

நான் அவரிடம் பலமுறை மன்றாடினேன். ஆனால் அவரோ எங்கள் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார். எந்தக் காரணமும் சொல்லவில்லை. அவர் மனதில் குற்ற உணர்வு துளியும் இல்லை.

உடன் பணிபுரியும் பெண் ஒருத்தியுடன் அவர் ஆழமான உறவு கொண்டிருந்தது, அவரது நண்பர்கள் மூலம் எனக்குத் தெரியவந்தது.

இதைக் கேள்விபட்டதும் துடித்துப் போனேன். அதற்கு மேலும் உயிர் வாழ விரும்பவில்லை. ஆக்ரோஷத்துடன் அதிக அளவில் விஷத்தைக் குடித்துவிட்டேன். அன்றே நான் இறந்திருக்க வேண்டியது. எப்படியோ பிழைத்துவிட்டேன்.

அவரைத் தாண்டி, எங்கள் திருமண வாழ்வைக் கடந்து, என்னால் எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நான் உயிருக்கு உயிராக நேசித்து திருமணம் செய்துகொண்ட எனது கணவரை இன்னொரு பெண்ணுடன் பார்க்க எனக்கு தைரியமில்லை.

நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கைத் துணையை வேறொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ள நான் தயாரில்லை.

வலியும் பொறாமையும் என்னை சூழ்ந்துகொண்டது. என் கணவர் விருப்பப்பட்டுதான் தேர்வு செய்தார் என்பதையும் மறந்து அவர் வாழ்வில் புதிதாக வந்திருக்கும் அந்தப் பெண்ணை நான் சபித்தேன்.

இவையெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்று புரிந்துகொண்டேன். பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து இதனுடன் தொடர்புபடுத்த உதவின.

அவர் என்னை ஏளனமாக பார்க்கத் தொடங்கினார். நான் ஒன்றும் அவ்வளவு அழகல்ல; போதுமான அளவுக்கு நான் சம்பாதிக்கவும் இல்லை.

_61861142_mumbai1  வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!! 61861142 mumbai1

‘நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருந்தால் நீ எனக்கு கிடைத்திருப்பாய்’ என்ற வார்த்தைகள் ‘நீ என் வாழ்வில் வந்தது எனது துரதிர்ஷ்டம்’ என்று மாறியது. ‘நீ மிகவும் அழகாக இருக்கிறாய்’ என்பது ‘நீ எனக்கு பொருத்தமானவள் அல்ல’ என்று மாறிப்போனது.

அவரது நகரத்து காதலியின் முன்னால் நான் நாட்டு பூசணிக்காய் போலத் தோன்றினேன் போலும். திடீரென்று அவர் கண்களுக்கு நான் சரியாக ஒப்பனை செய்துகொள்ளாதது போல் தோன்றியிருகிறது.

‘உனக்கு ஆங்கிலம் கூட பேசத் தெரியாது; உனக்கெல்லாம் யார் வேலை கொடுப்பார்கள்?’ என்பார். அவருக்குப் பொருத்தமான பெண் நானில்லை என்று தோன்றியது.

மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது முதல் நோய்வாய்பட்டால் சிகிச்சை அளிப்பது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் நானே பார்த்துக்கொண்டேன். நண்பர்களுடனான சந்திப்பு, விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கெல்லாம் என்னை அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டார்.

நான் மிகவும் நேசித்த ஒருவர் என்னை தனியாக விட்டுவிட்டார், என்னை ஒதுக்கிவிட்டார். மெதுவாக எல்லா அன்பும் காணாமல் போனது.

ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்றியது; அதை சரிசெய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓர் இரவில் அவர் என்னைப் பிரிந்து சென்றார்.

அவர் என்னை விட்டுச் சென்றவுடன் அவர் வேறு வீட்டில் வாழத் தொடங்கினார். நானோ எனது மகள் மற்றும் மாமனார் மாமியாருடன் அதே வீட்டில் தங்கினேன்.

நான் அங்கு இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை; ஆனால் அவர் திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நான் அங்கு இருந்தேன்.

ஒவ்வொரு முறை கதவைத் தட்டும் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவராகத்தான் இருக்குமோ என்று ஆவலோடு ஓடிப்போய் கதவைத் திறப்பேன்; ஆனால் தபால்காரனோ அல்லது வேலை ஆட்களோ வந்திருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து போய்விடும்.

இதுநாள் வரையில் என்னுடைய வாழ்க்கை அவரைச் சுற்றியே இருந்தது. எனக்கு வயதாகிவிட்டது. இது புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடிய காலமில்லை.

இந்த வாழ்கையைப் பாதுகாக்க நான் போராடவேண்டும் என்று நினைத்தேன்; நான் தனியாகப் போராடினேன். எனது உணர்வலைகளைப் புரிந்துகொள்ள என் மகளுக்கு வயது போதாது. எனது உடல் நலம் சிதைந்துகொண்டே வந்தது; இருப்பினும் அவருடைய தோள்களில் ஓய்வேடுக்கவே நான் ஏங்கினேன்.

அவர் ஏற்படுத்திய காயங்களுக்கு அவரே மருந்தளிக்கமுடியும்; என் மனதிற்கு சிகிச்சை அளிக்க அவர் வேண்டும். அவர் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார். இருப்பினும் நான் போராடினேன்.

என்றோ இறந்துவிட்ட எங்கள் திருமண வாழ்வைக் காக்க, என் வாழ்விலேயே இல்லாத ஒரு நபருக்காகத்தான் நான் போராடிக்கொண்டிருகிறேன் என்பதை உணர எனக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

இறுதியில் நான் சோர்ந்துபோய்விட்டேன். நீதிமன்றப் படிகள் ஏறி, வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, சட்டரீதியான செலவுகளைச் சமாளித்து சோர்ந்துவிட்டேன். நான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டேன்.

இதனால் நமது பழமைவாத சமூகத்தில் எந்த மரியாதையும் பெற்றுத்தராத ‘விவாகரத்தானவள்’ என்ற புதுப் பட்டம் கிடைத்தது; அப்போது எனக்கு 39 வயது. ஒரு வீடு தேடுவதே எனக்கு முதல் சவாலாக இருந்தது.

நான் பல கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. உங்கள் கணவர் எங்கே? அவர் என்ன வேலை செய்கிறார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. எனது ஏக்கத்திலிருந்தும் வெளியே வர நான் விரும்பவில்லை. என்னுடைய தோழிகள்தான் இதிலிருந்து வெளிவர எனக்கு உதவினார்கள். அவர்கள் என் வாழ்வில் வந்த தேவதைகள்.

எனக்குள் இருந்த தைரியத்தை ஒன்று திரட்டி கணவனால் கைவிடப்பட்ட பெண் என்று இந்த சமூகம் அழைப்பதை நான் துணிச்சலுடன் ஏற்க என்னை தயார்படுத்தினார்கள். அது அவ்வளவு சுலபமானதல்ல. வெகு சில நாட்களிலேயே அவர் அப்பெண்ணை மணந்துகொண்டார்.

ஒவ்வொரு முறை அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போதும் எனது காயங்களின் வலி மேலும் அதிகமானது. இந்த நேரத்தில்தான் எனது பெற்றோரும் காலமானார்கள். எனது வாழ்வில் இரண்டு பாகங்கள் மட்டுமே இருந்தன- ஒன்று எனது வேலை, மற்றொன்று எனது மகள்.

எனது வேலையில் அதிக கவனம் செலுத்தினேன்; கார்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தேன். நிறைய படிப்பதிலும், எனது எண்ணங்களை வலைப்பதிவுகளில் அரங்கேற்றுவதிலும், எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான எழுத்திலும் எனது நேரத்தை செலவழித்தேன்.

எனது கணவருக்காக சமைப்பதற்கு பதிலாக எனது தோழிகளுக்காக சமைத்தேன். விருந்துகள் வைத்தேன், குறுகிய பயணங்கள் மேற்கொண்டு புது நினைவுக் களஞ்சியங்களை உருவாக்க நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.

அவரது பிரிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அந்த இடங்களில் எனது தோழிகளை வைத்துப் பார்க்க முயற்சித்தேன். அவர்களுடன் நேரில் உரையாடுவது, என்னைச் சுற்றி ஒரு பெரிய உலகம் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

எனது தனிமை, முகநூலில் எனது பதிவுகளுக்குக் கிடைத்த விருப்பங்கள் மற்றும் விமர்சனங்களால் நிரப்பப்பட்டது. எனது குடும்பம்தான் என் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எனது பிரபஞ்சத்தை விரிவுபடுத்திக்கொண்டேன்.

_99774122_4_padma_illustration3  வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!! 99774122 4 padma illustration3

சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாத குழந்தைகளுக்காக பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் தன்னார்வலராக என்னை இணைத்துக்கொண்டேன்; இது எனக்கு மிகப்பெரிய சக்தியின் பிறப்பிடமாக ஆனது.

நான் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினேன், எனது பலம் எது என்று உணர்ந்தேன்; முனைவர் பட்டம் பெற்றேன்.

என்னிடம் இருந்து எடுக்கப்பட்டதை நான் மீட்டுக்கொண்டேன். வெட்கப்படுவதற்குப் பதிலாக, நான் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமணங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

நான் அழகான புடவைகள் கட்டிக்கொண்டு நன்றாக அலங்காரம் செய்துகொண்டேன். விவாகரத்தான ஒரு பெண் எப்போதும் சோகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் அமைதியான ஆனால் உறுதியான பதில் இதுவே.

என்னைப் பற்றி அவர்களுடைய கணிப்பால் அவர்களது கண்கள் பெரிதாய் விரியும்; ஆனால் அதை நான் எதிர்ப்பதால் என் கண்கள் பிரகாசமாய் ஒளிரும். நான் இன்னொரு வீட்டை உருவாக்கினேன்; மற்ற நாடுகளுக்கு அலுவல்பூர்வ பயணங்கள் மேற்கொண்டேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வேறொரு வேலை கிடைத்தது, என் நகரத்தைவிட்டு வெளியேறவும், வேறெங்காவது இடம் மாறவும் தைரியமான முடிவை எடுத்தேன்.

நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக மறுபிறவி எடுத்தேன். இன்று எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. தனியாகவும் தைரியமாகவும் என்னால் நடக்க முடியும், இருட்டிலும் கூட….

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

நெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News