அமெரிக்காவின் கலாரோடோ மாகாணத்தைச் சேர்ந்த ஷேனோன் கோன்லி என்னும் 19 வயது நர்ஸ் பெண்மணி, இப்போது 4 வருட சிறைத் தண்டனைக் கைதி. காரணம், அவர் விடுத்த ஸ்டேட்மென்ட்!
‘‘என் ஆசை, ஒரு முழுமையான ஜிகாதி ஆக வேண்டும் என்பதே! அவர்களின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
எனக்கும் அவர்களோடு சேர்ந்து கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்; இல்லையென்றால், அவர்களுக்கு என்னாலான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஆசை!’’ என்று மருத்துவ உபகரணங்களுடன் சிரியாவுக்கு பேக்-அப் செய்ய இருந்தவரை, செப்டம்பர் மாதம் அதிரடியாகக் கைது செய்தது அமெரிக்க காவல்துறை.
‘‘தீவிரவாதிகள் மட்டுமில்லை; கோன்லி போன்றவர்களும் நாட்டுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான்!’’ என்று நீதிபதி, நேற்று அவருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.
‘‘நீதிபதி சொல்வதுபோல், என்னால் நாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. என்னுடைய நோக்கம், யாருக்கும் எந்தக் கேடும் விளைவிப்பது அல்ல.
ஐஎஸ்ஐஎஸ் ஜிகாதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்! முடிந்தால் ஒரு ஜிகாதியைத் திருமணம்கூட செய்து கொள்வேன்!’’ என்று பதிலுக்கு வாக்குவாதம் செய்ததில், ஆடிப் போயிருக்கிறது அமெரிக்க காவல்துறை.
இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள். அவரின் பின்புலம் என்ன என்று கோன்லியின் சமூக வலைதளப் பக்கம், போன் அழைப்புகள் போன்றவற்றை அதி தீவிரமாக சோதனை போட்டு வருகிறார்கள்.
இப்போது அமெரிக்க ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால், மனநலப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார் நர்ஸ் கோன்லி.
– தமிழ்