புதுடில்லி: இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் பெறும் சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி 9வது இடம் பெற்றார். இவரது ஒரு ‘போஸ்ட்க்கு’ ரூ. 1.35 கோடி பெறுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 30. சமீபத்திய உலக கோப்பை தொடரில் அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார்.
இவரது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் 3.82 கோடி பேர் பின்பற்றுகின்றனர். சமீபத்தில் பளுதுாக்குவது போல இவர் வெளியிட்ட வீடியோவை இதுவரை 63 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதனிடையே கோஹ்லி, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் விளம்பர ரீதியிலான போட்டோக்கள் லட்சக்கணக்கில் பகிரப்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன.
இதன் படி கோஹ்லி வெளியிடும் ஒரு போட்டோவுக்கு ரூ. 1.35 கோடி வருமானம் கிடைக்கிறது.
இப்பட்டியலில் கோஹ்லி, 9வது இடம் பிடித்தார். இதில் இடம் பெற்ற ஒரே கிரிக்கெட் நட்சத்திரம் இவர் மட்டும் தான். இது ‘ஹுப்பர்’ என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
முதலிடத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இவர் பதிவிடும் ஒரு ‘போஸ்ட்க்கு’ ரூ. 6.73 கோடி வருமானம் பெறுகிறார்.
2, 3வது இடத்தில் கால்பந்து வீரர்கள் நெய்மர் (பிரேசில்), மெஸ்சி (அர்ஜென்டினா) உள்ளனர். செரினா (அமெரிக்கா, டென்னிஸ்) 16வது இடம் வகிக்கிறார்.