ilakkiyainfo

ilakkiyainfo

1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 93)

1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 93)
January 24
14:24 2018

இலங்கையின் போராட்ட வரலாற்றை எழுதுவதோ, போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள், தாக்குதல்கள் பற்றி விவரிப்பதோ இந்தத் தொடரின் நோக்கமல்ல.

மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்குவதனூடாக இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதுடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வதற்கான தேடலே இது.

ஆனால், இந்தத் தேடலில், அரசியலிலும் இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய சில சம்பவங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு, அதன் பின்னணியையும் அதனோடு தொடர்புடைய போராட்டக் காரணிகளையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அந்தவகையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது, நாடு தழுவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறிக் கலவரமான ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரத்தினுடைய பின்னணியை முழுமையாக விளங்கிக் கொள்வது, இலங்கை அரசியல் வரலாற்றையும் இனப்பிரச்சினை வரலாற்றையும் புரிந்துகொள்வதற்கு மிக அவசியமானதாகும்.

திருகோணமலையில் தொடங்கிய வன்முறைகள்

வவுனியா, திருகோணமலை, பேராதனை எனத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் 1983 ஜூன் மாதத்திலேயே, அப்பாவித் தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன.

திருகோணமலையில் நிலைமை தீவிரமாகிக் கொண்டிருந்தது. வைத்தியர் எஸ்.ஏ. தர்மலிங்கம் தலைமையிலான தமிழீழ விடுதலை முன்னணி (TELF), திருகோணமலையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலெழுப்பினார்கள்.

1983 ஜூன் 30 ஆம் திகதியளவில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா (அன்றைய சோவியத் ஒன்றியம்), கியூபா, லிபியா, ஈராக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச தூதரகங்களுக்கு, திருகோணமலையில் தமிழர்கள் சந்தித்த இனவெறித் தாக்குதல் பற்றித் தந்தியடித்தார்கள்.

அதில், ‘திருகோணமலையில் தமிழ் மக்கள் படுபயங்கரமான சூழலை எதிர்கொள்வதாகவும், அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பினும் கொலை, கொள்ளை, தீவைப்புகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இனவெறி மிகுந்த பாதுகாப்புப் படைகளே இதன் பின்னணியில் இருப்பதாகவும் ஆகவே, நட்பு நாடுகளை உடனடியாக  இதில் தலையிட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோருகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு, தமிழீழ விடுதலை முன்னணி, 1983 ஜூலை முதலாம் திகதி, திருகோணமலையில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து, ஹர்த்தால் போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், வடக்கில் தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற அமைப்பு யாழ்தேவி ரயில், அரசுக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தபாற் கந்தோர்கள் உட்பட அரச அலுவலகங்கள் ஆகியவற்றுக்குத் தீவைத்துத் தாக்குதல் நடத்தியது.

இது, அரசுக்குப் பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக 1983 ஜூலை இரண்டாம் திகதி, தமிழீழ விடுதலை முன்னணியின் சார்புடையதாகக் கருதப்பட்ட ‘சற்றடே ரிவ்யு’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் ‘சுதந்திரன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையையும் அரசாங்கம் உடனடியாக மூடி, சீல் வைத்தது.

அத்துடன், ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியரும் தமிழீழ விடுதலை முன்னணியின் (TELF) செயலாளருமான கோவை மகேசனும் தமிழீழ விடுதலை முன்னணியின் தலைவரான வைத்தியர் எஸ்.ஏ.தர்மலிங்கமும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இராணுவ முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

உண்மையில், யாழ்தேவி, பஸ்கள் மற்றும் அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தமைக்கும் தமிழீழ விடுதலை முன்னணி என்ற வைத்தியர் எஸ்.ஏ. தர்மலிங்கம் தலைமையிலான அமைப்புக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

கொன்று புதைப்பதற்கான அனுமதி

வடக்கு-கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில், அப்பாவித் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் முளைவிட்டெழத் தொடங்கியிருந்த பொழுதில், அதனைத் தடுப்பதற்கு வினைதிறனான அதிரடி நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத அரசாங்கம், 1983 ஜூலை மூன்றாம் திகதி, பாரதூரமான அவசரகாலச் சட்ட ஒழுங்கு ஒன்றைப் பிரகடனம் செய்தது.

1983 ஜூலை மூன்றாம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டவொழுங்கு 15A ஆனது, பாதுகாப்புப் படைகளுக்கு, அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனடியாகப் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதி தந்தது.

அதாவது, இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டால், அவரது அடையாளத்தை அறியாமலும், மரணவிசாரணை நடத்தப்படாமலும், உடனடியாகப் பாதுகாப்புப் படைகளால் அந்தவுடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடிய அதிகாரத்தை, இந்த அவசரகாலப் பிரகடனம் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது.

இந்தச் சட்ட ஒழுங்கு, இலங்கைப் படைகளுக்கு ஏறத்தாழக் கொல்வதற்கான அனுமதியை (License to Kill) வழங்கியதற்குச் சமனாகும்.

யாரையும் கொன்று புதைத்தோ, எரித்தோ விட்டுச் செல்லத்தக்க பயங்கரம் மிக்க பலம் இது. இதனால்தான் தமிழ்த் தலைமைகளும் பல்வேறு தரப்பினரும் இதனை ‘அரசாங்க பயங்கரவாதம்’ என்று விளித்தார்கள்.

இதுபற்றி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கருத்தை, 1983 ஜூலை ஏழாம் திகதி, இங்கிலாந்தின் ‘காடியன் பத்திரிகை’ மேற்கொள் காட்டியிருந்தது.

அதில், “ஜே.ஆர், ஆயுதங்களைப் பயன்படுத்தும் தேவையெழும்போது, அதனைப் பயன்படுத்தியதற்காக அரச படைகளை இனிச் சட்டத்தைக் கொண்டு துன்புறுத்த முடியாது என்பதை, இந்தப் புதிய சட்டம் உறுதி செய்கிறது. நூற்றுக்கணக்கான உடல்கள், பெரும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை

1983 ஜூலை, ஆறாம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபை, 1983 வருட ஆரம்பத்தில் இலங்கையில் மேற்கொண்டிருந்த கள ஆய்வு பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

1983 பெப்ரவரி இறுதியிலே, அதாவது குறித்த அறிக்கை தயாரான புதிதிலேயே, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு அதை அனுப்பி வைத்து, குறித்த அறிக்கை பற்றி, கலந்துரையாட நேரமொன்றை சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டிருந்தபோதும், 1983 ஏப்ரலில், குறித்த அறிக்கை பற்றிக் கலந்துரையாட முடியாது என்று இலங்கை அரசாங்கம், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜூலை ஆறாம் திகதி, சர்வதேச மன்னிப்புச் சபை, தனது அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான, கடுமையான விமர்சனத்தை அந்த அறிக்கை முன்வைத்தது.

சிறுபான்மையான தமிழர்களையும் எதிர்க்கட்சியினரையும் விசாரணையின்றித் தடுத்து வைக்கவும், அவர்களைச் சித்திரவதைக்குட்படுத்தவும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது.

அத்துடன், அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ், நீண்டகாலத்துக்கு வெளியுலகத் தொடர்பின்றி, இராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டித்திருந்ததுடன், இலங்கைப் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளால் நடைமுறையில் கையாளப்பட்ட சித்திரவதை முறைகளையும் விவரித்தது.

மேலும், தமிழ்க் குடிமக்கள் அரச படைகளாலும், பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சார்ந்தவர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் அதற்கு ​எதிரான கடுமையான கண்டனத்தையும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் முன்வைத்திருந்தது.

தமிழ் அப்பாவிகள் சிலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களையும் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த சம்பவங்களைக் கொலையென நீதிவானால் தீர்மானிக்கப்பட்டிருந்தும், மேலதிக நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்பதையும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

இத்தோடு குறித்த அறிக்கையில், நபரொருவர் கைது செய்யப்படும்போது, கைதுக்கான காரணத்தை அவருக்கு அறிவிக்க வேண்டும்; அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அவரது உறவினர்களுக்கு அறியத்தருவதுடன், அவர் சட்டத்தரணிகளை அணுக அனுமதிக்க வேண்டும்.

சித்திரவதை பற்றி விசாரிக்க சுயாதீனப் பொறிமுறையொன்றை உருவாக்குதல்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான விசேட சான்றுகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்குப் பதிலாக, சாதாரண சான்றுக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளையே நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த அறிக்கை வெளிவந்ததும், அதற்கு உடனடியாகப் பதிலளித்த இலங்கை அரசாங்கம், சகல குற்றச்சாட்டுகளையும் பொய் என நிராகரித்தது. ஆனால், சில நபர்கள், வெளியுலகத் தொடர்பின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டது.

JR-Jayawardene-1-436x360  1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 93) JR Jayawardene 1தமிழர்களைப் பற்றி யோசிக்க முடியாது

தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகள் தலையெடுக்கத் தொடங்கியிருந்த இந்த வேளையில், 1983 ஜூலை 11 ஆம் திகதி லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது.

அந்தக் குறுஞ்செவ்வியில் “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது.

அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”. அப்பட்டமான இனவெறி நிறைந்த, சுயலாப அரசியலின் விளைவாக, எழுந்த சொற்களே இவை; வேறென்னவாக இருக்க முடியும்? ஒரு கணம் ஆசுவாசப்படுத்தி யோசிக்க வேண்டும்.

பல்லினங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி, தன்னுடைய நாட்டில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சிறுபான்மை மக்கள் மீது அழுத்தம் கூடினால், தன்னுடைய பெரும்பான்மையினர் சந்தோஷப்படுவார்கள் என்று பகிரங்கமாகச் சொல்வது, எத்தகையதொரு வெளிப்படையான, பாரதூரமான இனவெறி?

பின்னிருந்து நோக்கும்போது, ஆங்காங்கே தமிழ் மக்களுக்கெதிராகப் பயங்கர வன்முறைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுதில், அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கத்தின் செய்கைகள், நடத்தைகள், அறிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு இதைவிடப் பெரிய ஆபத்துக் காத்திருக்கிறது என்பதைச் சொல்லும் அபாய எச்சரிக்கையாகவே தென்படுகிறது.

ஆனால், தமிழ் மக்கள் இதனை உணர்ந்திருந்தாலும், வெளிப்படையான இனவெறியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்கிய ஓர் அரசாங்கத்துக்கு எதிராக, உடனடியாக எதைத்தான் செய்திருக்க முடியும்?

இந்த நிலையில், 1983 ஜூலை ஒன்பதாம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு, அந்த ஆண்டுக்கான மாநாட்டை, ஜூலை 21 ஆம் திகதி மன்னாரில் நடத்தத் தீர்மானித்தது.

தமிழ்ப் பிரதேசங்களில் பதற்றமான சூழல் ஆரம்பித்திருந்த நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்த முடிவை எடுத்திருந்தது.

அத்தோடு, 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பையும் சர்வசன வாக்கெடுப்பொன்றினூடாக நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டித்தததையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்த்திருந்தது.

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவுபெறவிருந்த தினத்தில், பதவி விலகுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னர் தீர்மானித்திருந்தது.

அந்த வகையில் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நாடாளுமன்றமானது 1978 ஆம் ஆண்டு, இரண்டாம் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்படாமல் விட்டிருந்தால், அத்தோடு நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்படாவிட்டிருந்தால், 1983 ஜூலை 21 ஆம் திகதி அதன் பதவிக்காலம் முடிவடையவிருந்தது (1972 ஆம் ஆண்டு யாப்பின் கீழ் நாடாளுமன்றப் பதவிக்காலம் ஆறு வருடங்கள்).

ஆகவே, அந்தத் தினத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வீ.என்.நவரட்ணம் அறிவித்தார்.

இந்தச் சூழலில் வடக்கில் இராணும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு, குறிப்பாக இராணுவம் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைப்பதில் தீவிரம் காட்டியது.

ஆனால், மரபு வழி யுத்தத்துக்குப் பழக்கப்பட்டிருந்த இராணுவத்துக்கு, விடுதலைப் புலிகளை அடக்குவது இலகுவாக இருக்கவில்லை.

இந்த விடயத்தை, இலங்கை யுத்தம் பற்றிய தமது நூல்களில் பல்வேறு இராணுவ அதிகாரிகளும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்திய அமைதி காக்கும் படையின் அதிகாரிகள் கூட, இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் தோல்வி கண்டதன் முக்கிய காரணங்களுள் ஒன்றாக இதனையே குறிப்பிடுகிறார்கள்.

(அடுத்த வாரம் தொடரும்)

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

1983: அரசியல் தலைமையை எதிர்த ஆயுதத் தலைமை!! : தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 92)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News