அங்கிள் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ. 6 கோடி கேட்ட சர்ச்சை நடிகை
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக வலம் வருகிறார்.
அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை.
சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்கள் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்ததுடன் அவரது நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தின. காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், பேயாக வந்த மாயா படங்களும் திருப்புமுனையாக அமைந்தன.
புதிய படங்கள்
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
இவற்றின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் படங்கள் வசூல் குவித்ததாலும் பட வாய்ப்புகள் குவிந்ததாலும் சம்பள தொகையை ரூ.4 கோடியாக உயர்த்தினார்.
ஆனால் புதிதாக தெலுங்கில் தயாராகும் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
ரூ.6 கோடி சம்பளம்
இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.
அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment