ilakkiyainfo

‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது!! அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ : ரவிராஜின் மகள் பேட்டி

‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது!!  அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ : ரவிராஜின்  மகள் பேட்டி
January 16
07:35 2017

கடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்பதே அவற்றின் தலைப்புச் செய்திகளாக இருந்தன.

இந்தச் செய்தியில் 2006ல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் ஒளிப்படமும், அதன் கீழ் இவரது படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியைத் தமது குடும்பங்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒளிப்படமும் காணப்பட்டன.

‘இது அநீதியான செயலாகும்’ என 25 வயதான பிரவீன ரவிராஜ் தெரிவித்தார்.

நவம்பர் 2006 அன்று கொழும்பு    பிரதான வீதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட ஐந்து பேரை சிறிலங்கா நீதிமன்றம் நத்தாருக்கு முதல் நாள் விடுவித்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ‘போதுமானதாக இல்லை’ என்பதன் அடிப்படையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தமது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்றே கடந்த பத்து ஆண்டுகளாக ரவிராஜ் குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.

‘நாம் அச்சத்துடன் வாழ்ந்தோம். எம்மிடம் நம்பிக்கை காணப்படவில்லை’ என படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ்ஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கூறினார்.

இந்த நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தமானது மிகவும் துன்பகரமான முடிவை எட்டியது. யுத்த களங்களுக்கு அப்பால், ‘வெள்ளை வான்’ கடத்தல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புச் செயற்பாடுகள் போன்ற பிறிதொரு அழுக்கு யுத்தமும் இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது.

‘இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கேள்வியெழுப்புவதில் எதுவித பயனும் இல்லை என்பதை நான் கண்டுணர்ந்தேன். அமைதியான வாழ்வொன்றை வாழவே நான் விரும்பினேன்’ என திருமதி ரவிராஜ் தெரிவித்தார்.

கொழும்பின் பிரபல பாடசாலை   ஒன்றில் கணித பாட ஆசிரியராக சேவையாற்றும் இவர் தனது பிள்ளைகளின் கல்வி மீதே அதிக கவனம் எடுத்தார். பிரவீன் சட்டக்கல்வியையும் அவரது சகோதரன் மருத்துவக் கல்வியையும் பயின்றனர்.

தனது கணவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் வாழும் திருமதி ரவிராஜ் தான் அந்த வீட்டை விட்டு வேறெங்கும் செல்வதில்லை எனத் தீர்மானித்தார்.

தனது கணவர் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் திருமதி ரவிராஜ் தனது முதலாவது ஊடக நேர்காணலை ‘இந்து’ ஊடகத்திற்கு வழங்கினார்.

தனது குடியிருப்பின் வரவேற்பு அறையில் இருந்தவாறு இவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

Raviraj-family

இவர் அமர்ந்திருந்த அறையின் ஒரு மூலையில் ஒளிவீசும் புன்னகையுடன் தாடி வளர்ந்த ரவிராஜ்ஜின் ஒளிப்படம் காணப்பட்டது.

ஒரு பத்தாண்டு கடந்த நிலையில் தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்கின்ற திடீர் அறிவிப்பை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதாவது இவ்வாறான துன்பியல் சம்பவத்திலிருந்து மீண்டெழும் ரவிராஜ்ஜின் குடும்பத்தாருக்கு நீதிமன்ற அறிவிப்பானது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவும் அவருடைய ஆதரவாளர்களும் ஜனவரி 2015ல் இடம்பெறவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பரப்புரையின் போது நல்லாட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை மீளத் தொடர்வதாகவும் நீதியை உறுதிப்படுத்துவதாகவும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

‘நான் மைத்திரிபால சிறிசேனவை நம்பினேன். அவருக்கு ஆதரவாக எனது வாக்குகளை வழங்கினேன்’ என திருமதி ரவிராஜ் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய போது, பிரவீனா ரவிராஜ் தனது தந்தையின் ஒளிப்படங்கள் மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இடம்பெற்ற 2006 தொடக்கம் 2012 இற்குள் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வாசீம் தாஜூதீன் போன்றவர்களின் ஒளிப்படங்களை ஒன்றுசேர்த்தார்.

‘இவர்கள் தொடர்பான வழக்குகளுக்கு நீதி கிடைக்கும் என நான் நம்பினேன். ஆனால் எனது தந்தையார் தொடர்பான வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதையே சுட்டிநிற்பதாக உணர்கிறேன்.

அத்துடன் எனது தந்தையார் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நான் பின்முதுகில் குத்தப்பட்டதாகவே உணர்கிறேன்’ என படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ்ஜின் மகளான பிரவீனா ரவிராஜ் தெரிவித்தார்.

திரு.ரவிராஜ் யாரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக ஒரு சிலரே சந்தேகம் கொண்டுள்ளனர்.

‘நீங்கள் வீதியில் செல்லும் மக்களைக் கூப்பிட்டுக் கேட்டால் எனது கணவரை யார் படுகொலை செய்திருப்பார்கள் எனக் கூறுவார்கள்’ என திருமதி ரவிராஜ் கூறினார்.

இவரது படுகொலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரே தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்காவின் மத்திய புலனாய்வுத் திணைக்களமும்  சட்ட மா அதிபர் திணைக்களமும்  சாட்சியம் வழங்கியிருந்தன.

Raviraj-

தமிழீழ விடுதலைப்  புலிகள்  அமைப்பிலிருந்து  பிரிந்து சென்று ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த கருணா அம்மானிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து ரவிராஜ்ஜைக் கொலை செய்யுமாறு கட்டளை வழங்கியதாக முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் இக்கொலை வழக்கில் அரச தரப்புச் சாட்சியமாக நீதிமன்றில் தோன்றிய போது தெரிவித்திருந்தார்.

ரவிராஜ் படுகொலையானது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல.

நாடாளுமன்ற உறுப்பினராக திரு.ரவிராஜ் பணியாற்றிய போது இவரது ‘சமாதான அரசியல்’ என்பது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது.

தேசிய தொலைக்காட்சி ஒன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கும் போது திரு.ரவிராஜ் தனக்குத் தெரிந்த சிங்கள மொழியில் கருத்துக்களை வழங்கியிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது. இவருக்கு அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ என மகளான பிரவீனா தெரிவித்தார்.

இப்படுகொலை இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், திருமதி.ரவிராஜ்ஜிற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

‘நீ வெள்ளைச் சேலை அணிவதற்குத் தயாரா? உனது கணவனை எச்சரித்து வை’ என தொலைபேசியில் கதைத்தவர் கூறியதை இன்றும் திருமதி ரவிராஜ் நினைவில் வைத்துள்ளார்.

உடனடியாக இவர் தனது பிள்ளைகளை அழைத்து நாட்குறிப்பு ஒன்றிலிருந்த தொலைபேசி எண்களைக் காண்பித்ததுடன் ‘எனக்கு அல்லது அப்பாவிற்கு ஏதும் நடந்தால் இதிலிருக்கும் எண்களுக்கு அழைத்து அவர்களிடம் விடயத்தைத் தெரியப்படுத்துங்கள்’ என திருமதி ரவிராஜ் கூறியிருந்தார்.

நவம்பா 10, 2006 காலை வேளை, பிரவீனா, தரம் பத்து வகுப்பறையில் இருந்தபோது, ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்பறைக்குள் சென்று பிரவீனாவை அதிபர் தனது அறைக்கு வருமாறு அழைப்பதாகத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பிரவீனா அதிபர் அறைக்குச் சென்ற போது ‘எமது அதிபர் தொலைபேசிக்கு அருகில் நிற்பதை நான் பார்த்தேன்.

நான் உடனே எனது வாயை எனது கைகளால் பொத்திக் கொண்டேன். ஏனெனில் ஏதோ பயங்கரம் இடம்பெற்று விட்டதை நான் அறிந்து கொண்டேன்’ என பிரவீனா தெரிவித்தார்.

இதன் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பிரவீனா தனது ஒரு சில நண்பிகளுடன் மட்டுமே தனது  தந்தையார் தொடர்பாகக் கதைப்பார்.

‘எவரது அனுதாபத்தைப் பெறவும் நான் விரும்பவில்லை. அப்பாவின் மரணச்சடங்கின் போது கூட, எனது அம்மா ஒரு முறை அழுததை மட்டுமே நான் பார்த்தேன்.

எனது அம்மாவிடமிருந்தே நானும் தைரியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன் என நினைக்கிறேன்’ என பிரவீனா தெரிவித்தார்.

‘இது போன்று நாங்கள் இந்த வீட்டில் கதைப்பதில்லை’ எனத் தாயாரைப் பார்த்தவாறு பிரவீனா தெரிவித்தார். தாயார் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். இவரது இளைய சகோதரர் அரிதாகவே இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசுவார்.

சட்டத் துறைப் பட்டதாரியாக பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த பின்னர், சட்டத்துறையில் பணியாற்றுவதற்கு பிரவீனா தயக்கம் காண்பிக்கிறார்.

‘எந்தவொரு நன்னெறி சாராத அநீதிகள் நிறைந்த சிறிலங்காவின் நீதித்துறையில் பணியாற்ற நான் விரும்பவில்லை’ என பிரவீனா தெரிவித்தார்.

சிறிலங்காவின் அரசியற் சூழலானது பிரவீனாவை சட்ட முறைமை மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது. இதற்குப் பதிலாக இவர் சந்தைப்படுத்தல் துறையைத் தெரிவு செய்துள்ளார்.

‘எனது கணவரைக் கொலை செய்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றின் தீர்ப்பானது எமக்கு ஆழ்ந்த அதிருப்தியைத் தந்துள்ளது.

இவ்வாறான ஒரு அநீதியான தீர்வு வழங்கப்படும் என தீர்மானிக்கப்படும் வழக்குகளை மீளவும் தொடர வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை?’ என திருமதி ரவிராஜ் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில் – Meera Srinivasan
வழிமூலம் – The hindu
மொழியாக்கம் – நித்தியபாரதி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com