Site icon ilakkiyainfo

அமெரிக்காவின் சதியா? -கே.சஞ்சயன் (கட்டுரை)

அளுத்கமையில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை வெளிநாட்டுச் சக்திகளின் சதியென்று நிரூபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிர கவனம் எடுத்துவருகிறது.

வன்முறைகளை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பழியிலிருந்து விடுபடுவதற்கான இலகுவானதொரு உபாயமே இந்த வெளிநாட்டுச் சூழ்ச்சி.

அரச தரப்பிலுள்ள அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதியென்ற பிரசாரத்தை தெளிவாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையொன்றிலும் அமைச்சர்களான  எஸ்.பி.திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் இவ்வன்முறைகளின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏனைய அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவும் இது வெளிநாட்டுச் சதியென்று குறிப்பிட்டுள்ளனரே தவிர, அந்த வெளிநாட்டுச் சக்தி எதுவென்று  சுட்டிக்காட்டவில்லை.

இலங்கையில் மத மோதல்களை தூண்ட வெளிநாட்டுச் சக்திகள் முனைவதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து இப்போது பலரிடமும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மிகச் சிறப்பான நிலையில் இருப்பதாக கூறமுடியாது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியான உறவுகளில் இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காதுபோனாலும்,  வெளிவிவகார அமைச்சு மட்டத்திலான இராஜீய உறவுகளில் பெரியதொரு இடைவெளி இருந்து வருவது உண்மை.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது தொடக்கம், இந்த இடைவெளி அதிகரித்துவருகிறது. இத்தகைய பின்னணியில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைகிறதா என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் தமக்குச் சார்பில்லாத அரசாங்கங்களை வீழ்த்துவதற்கு அமெரிக்கா பின்புலத்திலிருந்து செயற்பட்டதும் கூட, இலங்கை அரசாங்கத்துக்கு இச்சந்தேகம் வருவதற்கு முக்கியமானதொரு காரணம் எனலாம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய கடப்பாடுகளை அமெரிக்கா பட்டியல் போடத் தொடங்கியபோது, ஏற்படத் தொடங்கியது இந்த விரிசல்.

எனினும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்கு இழுத்து தண்டிக்க வேண்டுமென்று அமெரிக்கா மனதார விரும்பியதில்லை.
போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்களுக்கு பொறுப்பு கூறப்படவேண்டும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதிகாரப்பகிர்வு ஒன்றின் மூலம் நிலையான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டுமென்பதை அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் போன்றவர்களெல்லாம் சர்வதேச விசாரணைப் பொறிமுறை மூலமே பொறுப்பு கூறப்பட வேண்டுமென்று வலியுறுத்திக்கொண்டிருந்தபோது கூட, கடந்த மார்ச் மாதம்வரை அமெரிக்கா ஒருபோதும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து வாய் திறக்கவேயில்லை.

அதாவது, இலங்கை அரசாங்கத்துக்கு சார்பாகவே அமெரிக்காவின் முன்னைய நிலைப்பாடுகள் இருந்தன.

நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால், அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு கால் வைத்திருக்காது.

ஆனால், அமெரிக்காவினது கருத்துக்களையும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் புறக்கணித்தது.

இதனால் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை மீறல்கள், மத மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமென்று வலியுறுத்த ஆரம்பித்தது அமெரிக்கா.

இவ்வாறாக அமெரிக்கா வலியுறுத்திவந்த அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் கருத்திற்கொள்ளாமல் விட்டதோடு சீனா, ரஷ்யா, ஈரானுடன் இணைந்துகொண்டு அமெரிக்காவையும் எதிர்க்கத் தலைப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்கியதுமே 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான வரையறையை இல்லாமல் செய்ததும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. அது, எதேச்சாதிகாரமும் குடும்ப ஆட்சியும் இலங்கையில் நிலைபெற்றுவிடுமென்று அமெரிக்கா கருதியது.

இவையெல்லாவற்றையும் அமெரிக்கா பகிரங்கமாகவோ, சூசகமாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்துக்கு தனிப்பட்ட ரீதியிலோ வெளிப்படுத்திவந்துள்ளது.

இத்தகைய நிலையில், சீனாவின் தயவையும் ரஷ்யாவின் ஆதரவையும் பெற்றுள்ள தம்மை  இந்தப் பதவியில் நிலையாக அமர்ந்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்ற கருத்து இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

அதாவது, இந்த ஆட்சியை அமெரிக்கா கவிழ்க்கப் போகிறதென்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டு பல வருடங்களாகி விட்டன.
அதனால்தான்,  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை வைத்து ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முனைவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இப்போது, ஐ.நா. விசாரணைகளையும் நிராகரித்து மேற்குலகுடனும் ஐ.நா. வுடனும் இன்னும் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

ஆக இலங்கை அரசாங்கம், மேற்குலகின் கருத்துக்களை மதிக்காமலிருப்பது, மேற்குலக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணியை உருவாக்கும் கனவிலிருப்பது, மேற்குலக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டிருப்பது ,

ஐ.நா.வின் தீர்மானங்களை  நிராகரித்து அவற்றை நடைமுறைப்படுத்த தடையாக இருப்பது  என்று அடுக்கடுக்கான காரணங்களை ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்கா முன்வைக்கக்கூடிய சூழல் ஒன்று உள்ளதை மறுக்கமுடியாது. இதனை அரசாங்கம் தெளிவாகவே உணர்ந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் விருப்பத்துக்கும் அதன் நலன்களுக்கும் புறம்பாக தாம் செயற்படுவதால், தம்மை ஆட்சியில் தொடர விட்டு வைக்கப்போவதில்லையென்று அரசாங்கத்துக்கு உள்ளூர  பயமிருக்கிறது.

பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தனது நலன்களுக்கு ஒத்துவராத ஆட்சிகளை கலைத்த அல்லது கவிழ்த்த வரலாறுதான், அரசாங்கத்தின் இந்த அச்சத்தின் அடிப்படை.

அவ்வாறாயின் அரசாங்கம் கூறுவதுபோல இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இது நேரிடையாக யாருமே பதிலளிக்கமுடியாத ஒரு வினா.

இதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கக்கூடியவர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்லது அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டும்தான். அவர்கள் யாருமே இந்த வினாவுக்கு விடை தரப்போவதில்லை.

இலங்கையில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முனைவதாகவோ, அவ்வாறு முனையவில்லை என்றோ வெளியிலுள்ள எவரும் திட்டவட்டமாக கூறமுடியாது.

ஏனென்றால், அத்தகையதொரு முயற்சி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது உயர்நிலைப் புலனாய்வு வலையமைப்பு ஒன்றினால் முன்னெடுக்கப்படுவதாகவே இருக்கும். அதை அவ்வளவு இலகுவாக கண்டறிந்துவிட முடியாது.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அவ்வாறானதொரு திட்டத்தை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்றும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

அவ்வாறாயின், அளுத்கமை வன்முறைகளை வைத்துக்கொண்டு அரசாங்கம் வெளிநாட்டுச் சதியென்று குற்றஞ்சாட்ட முனைவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றில் இது உண்மையானதாக இருக்கலாம்.

அரசாங்கத்துக்கு இது பற்றிய நம்பகமான புலனாய்வுத் தகவல் கிடைத்திருக்கலாம்.

அல்லது இப்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிப்பதற்கான உத்தியாகவும் இதனைக் கருதலாம்.

அதாவது, அளுத்கமை வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் அநீதியாக உலகெங்கும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்த விவகாரம் பூதாகார வடிவெடுக்குமென்று அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை.

அரசாங்கமும் சரி, ஜனாதிபதியும் சரி இதனை சின்ன விடயமாகவே பார்க்கின்றனர் என்பதை தகவல் திணைக்கள அறிக்கையும் ஹம்பாந்தோட்டை துறைமுக எரிபொருள் கொள்கலன்கள் திறப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்திய உரையும் தெளிவாகவே எடுத்துக்காட்டியுள்ளன.

உலகளாவிய ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திசைதிருப்ப வேண்டியதொரு தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், இவ்வன்முறைகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதொன்றாக இருக்கும்.

அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையால் அரச தரப்பில் போட்டியிடக்கூடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க நேரிடலாம். அது அவரது வெற்றி வாய்ப்பின் மீதும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

அதுமட்டுமன்றி, இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்தும் வலுவடைந்துள்ளது. இதனையும் தடுத்தாகவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு உள்ளது.

வன்முறைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இத்தகைய கருத்து வலுப்பெறுவது ஆபத்தானது. எனவே, இவ்வன்முறைகளுக்கான பழியை எவர் தலையிலாவது கட்டிவிட்டாக வேண்டும்.

அதற்கு அரசாங்கத்துக்கு மிகச் சுலபமாக கிடைத்துள்ள தலை தான் வெளிநாட்டு சக்திகள். அல்லது கொஞ்சம் வெளிப்படையாக கூறப்போனால் அமெரிக்கா.

அண்மைக்காலத்தில் அரபு நாடுகளில் அமெரிக்காவின் பின்புல ஆதரவுடன்தான், ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறியதான நம்பிக்கை உலகளாவிய ரீதியாக உள்ளது.

அதுபோலவே, இலங்கையிலும் ஆட்சியை கவிழ்க்க மேற்குலகம் முனைகிறதென்று கூறினால், உலகம் இலகுவாக நம்பிவிடும். அதுபோலவே, இலங்கையிலுள்ள மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்களும் அதனை நம்பிவிடுவார்கள். எனவேதான் அரசாங்கம், வெளிநாட்டுச் சக்திகள் என்ற ஆயுதத்தை தனது கவசமாக பயன்படுத்த முடிவுசெய்தது.

அரசாங்கம் இதுபோன்று வெளிநாட்டு சக்திகளை வம்புக்கு இழுப்பது இதுதான் முதல் தடவை என்றில்லை. தமக்கு எதிரான சர்வதேச நகர்வுகள் எப்போதெல்லாம் மேற்கொள்ளப்படுகிறதோ, அப்போதெல்லாம் இவ்வாறே குற்றஞ்சாட்டுவதுண்டு.

வெளிநாட்டு சக்திகளின் சதி அல்லது அமெரிக்காவின் சதியென்று அரசாங்கம் கூறியதை முஸ்லிம் தலைமைகள் சிலவும் நம்பத்தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் தலைவர்கள் சிலர், இதனை அப்பட்டமாகவே கூறியுள்ளனர்.

அதாவது அளுத்கமை வன்முறைகளின் உண்மைப் பரிமாணத்தை அறிந்திருந்தாலும், அவர்கள் அரசாங்கத்துடன் ஒத்து ஊதத் தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் எம்பிக் குதித்தவர்கள் இப்போது இது வெளிநாட்டு சதியென்று கூறி தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள முனைந்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டே முஸ்லிம்களை பாதுகாக்க முடியவில்லையென்று கவலையுடன் கூறிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அங்கிருந்து வெளியே வரவில்லை.

அவ்வாறான நிலையில், அவர்களும் தமது இருப்பை நியாயப்படுத்திக்கொள்வதற்கு வெளிநாட்டு சதியென்பதை தூக்கிப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இதனை காலப்போக்கில் முஸ்லிம் மக்களும் கூட நம்பிவிடக் கூடும்.

இந்த வகையில் பார்க்கப்போனால்,  வெளிநாட்டுச் சதியென்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் தன்னை நியாயப்படுத்திக்கொள்வதில், தற்காத்துக்கொள்வதில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதென்று தான் கூற வேண்டும்.

ஆனால், இந்த வெளிநாட்டுச் சதியென்ற கவசத்தை அரசாங்கம் நிரந்தரமாக பேணமுடியாது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான முழுமையான முயற்சி ஒன்றுதான், அத்தகைய கவசமாக இருக்கமுடியும்.

ஆனால், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடிக்கும் அரசாங்கத்தால், அத்தகைய கவசத்தை இலகுவாக ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது.
அதேவேளை, அரசாங்கம் சொல்வதுபோலவே, இது வெளிநாட்டுச் சதியாக இருந்தால் கூட, அது ஆபத்தான நிலையொன்றுக்கான அறிகுறியாகவே இருக்கும்.

கே.சஞ்சயன்

Exit mobile version