ஜல்லிக்கட்டு போட்டியின் போது களத்தில் இறந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு, நினைவு மண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.

22727711

தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கொம்பன் என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்.

அந்தக் காளை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதுடன், பல பரிசுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசல் வழியாக அந்த காளை வந்தபோது, தடுப்பு கட்டையில் அடிபட்டு களத்திலேயே இறந்தது.

அதன் உடலை, விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

 

இதனிடையே, இறந்த காளையின் நினைவாக அமைச்சரின் தோட்டத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

அதில், கொம்பன் காளையின் சிலை அமைக்கப்பட்டு, கொம்பன் காளையின் உண்மையான கொம்பு, நினைவு காளையின் சிலையில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு மண்டபத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.