ilakkiyainfo

‘அவர் மனசு முழுக்க நான்தான் இருந்தேன்

‘அவர் மனசு முழுக்க நான்தான் இருந்தேன்
May 01
11:29 2014

அற்புதமான உறவை  இழந்தவளின்
ஆத்மாவுக்குள் இருந்து கசிந்து வந்த
கள்ளம்  கபடமில்லாத  நிஜமான  வார்த்தைகள் இவை…

அவர் மனசு முழுக்க நான்தான் இருந்தேன்

அவர் என் குழந்தையின் அப்பாவாக இருந்தார்

அவர் ஒற்றுமையை நம்பினார்

அவர் வேலையை நேசித்தார்

அவர் தன்னை ஹீரோவாக நினைக்காதவர்

அவர் என் ஆன்மாவாக இருந்தவர்

அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்

அவர் எல்லாவற்றையும் எனக்கு உணர்த்தினார்

அவர் வாழ்க்கை முழுவதும் என்னை காதலித்தார்

அவர் இப்போது கடவுளிடம் இருக்கிறார்

ஒருநாள் நான் அவரைச் சந்திக்கப் போவேன்

என்னைப் பார்த்ததும் அவர் கட்டி அணைத்து வரவேற்பார்

மூச்சுவிட முடியாத அளவுக்கு

அவர் என்னை ஆரத்தழுவும்போது

ஒரு நொடிகூட நான் விலக நினைக்க மாட்டேன்!’

 

– தன்னுடைய ஃபேஸ்புக்கில் இப்படி காதலில் கசிந்துருகி எழுதியிருக்கிறார் தேசத்துக்காக தனது தேகத்தைத் தந்துவிட்டுப்போன மேஜர் முகுந்த்தின் மனைவி இந்து.

 

நான் அழுவதை என் மகன் விரும்ப மாட்டான்!
உயிர் கொடுத்த ராணுவ மேஜர்…
நிலை குலையாத கம்பீர குடும்பம்!

 

கடந்த 25-ம் தேதி நடந்தது அந்தச் சம்பவம். காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கரேவா மலினோ என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை இரவில் சுற்றிவளைத்த ராணுவத்தினர், தீவிரவாதிகளைச் சரண் அடையுமாறு எச்சரித்தனர்.

 

தீவிரவாதிகளோ ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ராணுவத்தினரும் பதிலுக்குச் சுட்டார்கள். பதுங்கி இருந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள்.

இந்திய ராணுவத் தரப்பிலும் மூன்று பேரை இழக்க நேரிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முகுந்த். ஒட்டுமொத்த இந்தியாவும் முகுந்த்க்கு மரியாதை செலுத்திக்கொண்டு இருக்கிறது.

 

தாம்பரம், பேராசிரியர் காலனியில் முகுந்த்தின் பெற்றோர் வரதராஜனும் கீதாவும் வசித்து வருகிறார்கள். முகுந்த்தின் மனைவி இந்துவும் அவர்களது மூன்று வயது குழந்தை அர்ஷியாவும் பெங்களூரு ராணுவ குடியிருப்பில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் தகவல் கேள்விப்பட்டு நிலைகுலைந்து போயிருக்கிறது.

p19

மேஜர் முகுந்த் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு, தெருவெங்கும் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வழிகாட்டின. அடுக்குமாடியின் குடியிருப்பு தரைதளத்தில் உள்ள திறந்தவெளியில் முகுந்த் படத்துக்கு மாலையிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்திருந்தார்கள். சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் முகுந்த் வீட்டில்  குவிந்திருந்தனர்.

 

பெங்களூருவில் இருந்து முகுந்த்தின் மனைவி இந்துவையும், மகள் அர்ஷியாவையும் சென்னையில் உள்ள ஆபீஸர் ட்ரெயினிங் அகாடமி ‘ப்ரிகாடியர்’ சந்து மற்றும் அதிகாரிகள் ராணுவ மரியாதையுடன் சென்னைக்கு அழைத்து வந்தனர். காரில் இருந்து அர்ஷியாவோடு இறங்கினார் இந்து.

 

வாய்விட்டு எதுவும் பேசாமல் சிரித்தபடியே வரதராஜனை அணைத்துக்கொண்டார் இந்து. குடியிருப்பு பகுதியில் இருந்தவர்கள் சிலர் இந்துவை பார்த்ததும் வெடித்து அழுதனர். ஆனால், அவர்களின் முகங்களைப் பார்க்காமலேயே நகர்ந்து சென்றார் இந்து.

 

மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த வரதராஜன், முகுந்த் படத்துக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டு படத்தை பார்த்தபடியே சில நிமிடங்கள் நின்றிருந்தார். அவருக்கு நாம் ஆறுதல் சொல்லிப் பேசினோம். ‘என்னைப் போட்டோ எடுக்காதீங்க. நான் எமோஷனல் ஆகிடுவேன்.

 

என் கண்ணில் ஒரு துளி கண்ணீர்கூட வரக்கூடாது என்று முகுந்த் அடிக்கடி சொல்வான். நான் கண்ணீர் சிந்துவதை முகுந்த் விரும்பமாட்டான்’ என்றவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார். பின்பு மெதுவாக அவரே பேசத் தொடங்கினார்.

 

‘ராணுவத்துல சேரணும்னு நான் ஆசைப்பட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை. என் மகனாவது ராணுவத்துக்குப் போகணும்னு நினைச்சேன். அவனுக்கும் அந்த ஆசை இருந்துச்சு. தாம்பரத்துலதான் பி.காம். படிச்சான். அதுக்கப்புறம் எம்.ஏ. ஜர்னலிசம் படிச்சான்.

 

முகுந்தும் அவனோட நண்பர்கள் சிலரும், சென்னையில் உள்ள ஆபீஸர் அகாடமியில் அப்ளிகேஷன் போட்டாங்க. இவனுக்கு மட்டும் அங்கே பயிற்சி பெற வாய்ப்பு கிடைச்சுது. 44-வது ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவில் ராணுவ மேஜராக சேர்ந்தான்.

 

2011-12 ஐ.நா. சபையின் அமைதிப்படையில் லெபனானில் ஒரு வருஷம் வேலை பார்த்தான். அதுக்கப்புறம் காஷ்மீரில் ராணுவ மேஜராகப் பணியைத் தொடர்ந்தான்.

 

ராணுவத்தில சேர்ந்ததில் இருந்து அவனோட கஷ்டத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவே மாட்டான். சந்தோஷமா இருக்கேன்னு மட்டும் சொல்லுவான். சந்தோஷமாக இருந்த நிகழ்ச்சி எதுவானாலும் உடனே போன் செய்து சொல்லிவிடுவான்.

ஒருமுறை அவன் முதுகில் ஒரு புல்லட் பாய்ந்து அதை ஆபரேஷன் செஞ்சு எடுத்திருக்காங்க. அதை எங்ககிட்ட சொல்லவே இல்லை. வீட்டுக்கு வந்தபோது கனமான பையைத் தூக்கும்போது வலிக்குதுன்னு சொன்னான். அப்போதான் எங்களுக்கு விஷயமே தெரியும்.

p19a

ஒருமுறை கண்ணிவெடி ஒன்றில் கால் வைத்து உயிர் தப்பியிருக்கான். ‘பாருப்பா! கண்ணிவெடியிலகூட என் உயிர் போகல. எனக்கு ஆயுசு கெட்டி. நீங்க என்னைப்பத்தி கவலைப்படாதீங்க’னு சிரிச்சுகிட்டே சொன்னான்.

தாம்பரம் முழுக்க அவனுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. தாம்பரத்துலதான் ஃப்ளாட் வாங்கணும்னு அவனுக்கு ஆசை. அதுக்காக இப்போதான் ஒரு ஃப்ளாட் புக் பண்ணி அதுக்காக அட்வான்ஸ் பணமும் கட்டினான்.

 

அவன் எப்பவும் அம்மா செல்லம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவோடதான் அதிகம் பேசுவான். ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு என்னையும் அழைச்சிகிட்டுப் போவான்.

அவன் கையைப் பிடிச்சிட்டுதான் மலை ஏறுவேன். ‘நீங்க வேலை பார்த்தது போதும்ப்பா… ரெஸ்ட் எடுங்கன்னு முகுந்த் சொன்னதாலதான் பேங்க் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ். வாங்கிட்டேன்.

 

ஏப்ரல் 12-ம் தேதி அவனோட பிறந்தநாள். ‘வாழ்த்து சொல்லணும் பேச முடியுமா?’னு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினேன். ‘நான் பாதுகாப்பு பணியில் பிஸியாக இருக்கிறேன். சாயங்காலம் பேசுறேன்’னு பதில் அனுப்பினான். சொன்னதுபோலவே சாயங்காலம் போனில் பேசினான்.

15713

நானும் அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன். ‘அர்ஷியாவை டாக்டர்கிட்ட காட்ட வேண்டியிருக்கு. பத்து நாள் லீவு கேட்டிருக்கிறேன். மே மாசம் வருவேன். இந்துகிட்ட சொல்ல வேண்டாம்.

நான் வருவது ரகசியமா இருக்கட்டும்’னு சொன்னான். இப்படி எனக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுப்பான்னு நினைக்கலை’ என்று சொன்னவர், முகுந்த் படத்தையே பார்க்கிறார். தனது மகனின் ஆசைபோலவே அந்த அப்பா ஒரு துளி கண்ணீரும் சிந்தவில்லை.

சோகத்தையெல்லாம் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, குழந்தையிடம் சிரித்தபடி விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறார் இந்து. எதுவும் புரியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறாள் அர்ஷியா.

மக்களின் மகனாக மாறிவிட்டார் முகுந்த்!

பா.ஜெயவேல். படங்கள்: க.பாலாஜி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com