ilakkiyainfo

ஆதாரங்களைக் கொடுத்தால் அப்போலோவுக்குதான் ஆபத்து!’ – எம்பாமிங்கால் வெளியில் வந்த ஜெ. மரண நிமிடங்கள்

ஆதாரங்களைக் கொடுத்தால் அப்போலோவுக்குதான் ஆபத்து!’ – எம்பாமிங்கால் வெளியில் வந்த ஜெ. மரண நிமிடங்கள்
January 08
09:22 2018

Chennai: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். `ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் கூறிய தகவல்கள், அப்போலோ நிர்வாகத்துக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதுதொடர்பான ஆதாரங்களையும் விசாரணை ஆணையத்தின்முன் சமர்ப்பித்திருக்கிறார் சுதா சேஷய்யன்” என்கின்றனர் அரசு மருத்துவர்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறார் முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் நடந்த விசாரணை நிறைவுபெற்றுவிட்டது.

ஆணையத்தின் முன் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மருத்துவர் சுதா சேஷய்யன், `ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது குறித்து நீதிபதியிடம் விளக்கினேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மருத்துவமனையில் நான் அவரை சந்திக்கவில்லை.

டிசம்பர் 5-ம் தேதி இரவு 10.30 மணியளவில் எனக்கு போன் வந்தது. ஜெயலலிதா உடல் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு ‘எம்பாமிங்’ செய்ய வேண்டும் என்று கூறினர்.

நான் இரவு 11.40 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். 12.20 மணிக்கு எம்பாமிங் செய்யப்பட்டது’ எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.

`ஜெயலலிதா 11.30 மணிக்கு இறந்தார்’ என அப்போலோ நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், `10.30 மணிக்கு அழைப்பு வந்தது’ எனச் சுதா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன.

மருத்துவர் சுதா சேஷய்யனிடம் பேசினோம். “ஓர் அரசாங்க ஊழியராக இருப்பதால் இந்த விவகாரம் குறித்து என்னால் எதுவும் பேச இயலாது” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அவர் தரப்பு விளக்கமாக நம்மிடம் பேச முன்வந்தார் அரசு உடற்கூறு மருத்துவர் ஒருவர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘ஒரு நோயாளி எதனால் இறந்தார்’ என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கும்போது, அந்த உடலை கிளினிக்கல் அட்டாப்சி செய்ய வேண்டும் என்பது மருத்துவ நியதி. இதன்மூலம் இறப்புக்கான காரணத்தையும் கண்டறிய முடியும். இதைத் தெளிவுபடுத்தாமல் எம்பாமிங் செய்தது சரியா?

“நோயாளியின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள், ‘எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை; கிளினிக்கல் அட்டாப்சி வேண்டாம்’ என வேண்டுகோள் வைத்தால், அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எம்பாமிங் நடவடிக்கைகளை மேற்கொண்ட நேரத்தில், இது சந்தேக மரணம் என யாரும் கேள்வி எழுப்பவில்லை”.

ரத்த சம்பந்தமுள்ள வாரிசு என்றால், அப்போது சசிகலாவுடன் நல்ல அணுகுமுறையில் இருந்தது தீபக் மட்டும்தானே?  

“கிளினிக்கல் அட்டாப்சி செய்ய வேண்டும் என தீபக் கூறியிருந்தால் பிரச்னை வந்திருக்கும். அவர் கேட்டாரா எனத் தெரியவில்லை”.

உள்ளூர் காவல்நிலையத்தின் கிளியரன்ஸைப் பெற்றுக்கொண்டுதான் எம்பாமிங் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? 

“காவல்நிலையத்தில் அனுமதி வாங்கப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒரு மரணத்தில் சந்தேகம் எழவில்லையென்றால் காவல்நிலையத்தின் கிளியரன்ஸ்(N.O.C) வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

`டிசம்பர் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார் ஜெயலலிதா’ என தீபக் கூறுகிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது. ஒருவரின் மரணத்தில் சந்தேகம் வராவிட்டால் அட்டாப்சி தேவையில்லை.”

ஒரு சாதாரண மனிதனின் இறப்பில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு சட்டம் வழிவகை செய்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரின் மரணத்தில் ஏன் இவ்வளவு மர்மம்? 

“ஜெயலலிதா இறந்த அன்று, இப்போது கேட்கப்படும் எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை. அப்போலோ நிர்வாகம் கொடுத்துள்ள இறப்பு சான்றிதழில் வெண்ட்ரிகுலர் பிப்ரிலேஷன்(ஏ.ஆர்.டி.எஸ்) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் இறந்து நான்கைந்து நாள்கள் கழிந்த பிறகுதான் மர்மம் எனப் பேசத் தொடங்கினார்கள். ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமுள்ள வாரிசுகள், கிளினிக்கல் அட்டாப்சி மூலம் இதைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அன்று ஜெயலலிதாவுடன் யார் இருந்தார்கள். அவர் இறந்த 24 மணி நேரத்தில் ஒருவரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லையே…?”

ஆணைய விசாரணையில், ‘ஜெயலலிதா இறந்த அன்று இரவு 10.30 மணிக்கு அழைப்பு வந்தது’ என்கிறார் சுதா சேஷய்யன். ஆனால், ‘11.30 மணிக்கு இறந்தார்’ என அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. ஏன் இந்த முரண்பாடு? 

“இதைப் பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தால், ஆணையத்தின் விசாரணைப் போக்கை திசைமாற்றியதாக ஆகிவிடும்.

அப்போலோவில் உள்ள ஆவணங்களில் மாற்றம் செய்வதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுப்பதுபோலாகிவிடும். எங்களிடம் சில ஆதாரங்கள் இருக்கின்றன.

10.30 மணிக்குத் தகவல் வந்தது. ஓர் ஆட்டோவில் ஏறி கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார் மருத்துவர் சுதா. தொண்டர்களின் கூட்டம் அதிகப்படியாக இருந்ததால், அவரால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

11.20 மணிக்கு கிரீம்ஸ் ரோட்டில் அவர் நடந்துகொண்டிருந்தார். ‘கிரீம்ஸ் ரோட்டில் நுழைய முடியவில்லை. எனக்கு வாகனம் அனுப்புங்கள்’ என அப்போலோ மருத்துவர்களுக்கு அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் ஆதாரம் உள்ளது.

11.40 மணிக்குத்தான் அவரால் உள்ளே நுழைய முடிந்தது. அங்கிருந்த மருத்துவர்கள், ‘முதல்வர் உடலை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சற்றுப் பொறுங்கள்’ எனக் கூறினார்கள்.

அதன்பிறகு 12 மணிக்கு எம்பாமிங் நடவடிக்கைகளைத் தொடங்கினார் சுதா. `11.30 மணிக்கு அவர் இறந்தார்’ என அப்போலோ கொடுத்த சான்றிதழ் எங்களிடமும் உள்ளது.

அவர்கள் கொடுத்த சான்றிதழ்படி 11.30 மணி என நாங்கள் பேசினால், எங்களிடம் இருக்கும் இதர ஆதாரங்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நாங்கள் பொய் பேசுகிறோம் என்பதுபோல் ஆகிவிடும்.”

appollo600_10012அப்போலோ மருத்துவமனையின் எந்த அறையில் எம்பாமிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? 

“இரண்டாவது மாடியில் ஐ.சி.யு அறை என அவர்கள் கூட்டிச் சென்ற அறையில்தான் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனையின் வடிவமைப்பைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.”

ஒரு சந்தேகம். அடுத்த 17 மணி நேரத்தில் புதைக்கப்பட இருக்கும் ஓர் உடலுக்கு, அதுவும் டபுள் கம்ப்ரஸர் வசதி கொண்ட குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்ய வேண்டிய சூழல் எதனால் ஏற்பட்டது?

“இந்தக் கேள்விக்கான பதில் ரொம்ப சிம்பிள். எம்பாமிங் செய்ய வேண்டும் என்பது எங்களுடைய தனிப்பட்ட முடிவு கிடையாது. நீங்கள் எம்பாமிங் செய்ய வேண்டும் என்ற உத்தரவு வந்தது.

அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது, அந்த உடலில் இருந்து வாடை வரலாம்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தார். பிரதமர் உள்பட முக்கியப் புள்ளிகள் வருவதால், இந்த வாடை தெரியாமல் இருக்க பதப்படுத்தும் முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கும்போது பதப்படுத்துவது என்பது நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.”

`ஆட்டோமேடிக் இயந்திரம் மூலம் அரைமணி நேரத்தில் எம்பாமிங் செய்து முடிக்கப்பட்டுவிட்டது’ என்கிறார் மருத்துவர் சுதா சேஷய்யன்.

வலது தொடையில் உள்ள பெமோரல் தமணி வழியாக ரத்தத்தை முழுமையாக எடுப்பதற்கே 20 நிமிடம் ஆகும் என்கிறார்கள். அப்படியானால், எப்படி 30 நிமிடத்துக்குள் எம்பாமிங் செய்து முடித்திருக்க முடியும்?

“ரத்தத்தை முழுமையாக எடுப்பது என்பது நடைமுறையில் கிடையாது. தொழில்நுட்பரீதியாக இது தவறான தகவல். கற்பனையில் சிலர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

எங்களது அனாடமி துறையில் தினமும் மூன்று, நான்கு உடல்களுக்கு எம்பாமிங் செய்து வருகிறோம். அதற்கான நவீன வசதிகளைக் கொண்டு வந்திருக்கிறோம்.

15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எம்பாமிங் செய்யும்போது, கேன் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டுவிட்டு இரவு முழுவதும் ரத்தத்தை வெளியில் எடுப்போம். சுமார் எட்டு மணி நேரம் செலவாகும். இதெல்லாம் மிகவும் பழைய நடைமுறைகள். இப்போது கெமிக்கல் ஆட்டோமேடிக் இயந்திரங்கள் வந்துவிட்டன. ரத்தத்தை எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.”

முதல்வரின் சமூக வழக்கப்படி உடலை எரியூட்டுவது மரபு. எம்பாமிங் செய்யும்போது, எளிதில் வெடிக்கக்கூடிய ஐசோ புரபைல் ஆல்கஹாலைக் கலந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறதே? 

sudha_sesaiyyan_10368

“அதெல்லாம் வெடிக்காது. ஐசோ புரபைல் ஆல்கஹால் வெடிக்கும் எனச் சிலர் பேசலாம். மெக்னீஸியத்தைக் காற்றில் வைத்தால் எளிதில் தீப்பிடிக்கும்.

விலை உயர்ந்த சிறிய ரக கார்களின் இன்ஜின்களில் மெக்னீஸியத்தை வைத்திருக்கிறார்கள். இந்த ரசாயனம் இன்ஜினுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதற்காகக் கலக்கிறார்கள். அதே மெக்னீஸியத்தை வெளியில் வைத்தால் தீப்பிடிக்கும். இதுதான் அறிவியல். இதேபோல்தான், ஐசோ புரபைல் ஆல்கஹாலும்.”

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com