ilakkiyainfo

ஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்

ஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி  பின்னால் சென்று தாக்கிய புலிகள்!!  (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்
May 13
01:58 2018

வாசகர்களே!

கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான பங்கினையும் விபரித்திருந்தோம்.

இதற்கான பிரதான காரணம் ஆனையிறவு முகாம் தாக்குதல்களும், அதனைக் கைப்பற்றுவதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை எடுத்துக் கூறுவதற்காகவேயாகும்.

இனி அவ் ராணுவத் தளத்தின் முக்கியத்துவம் காரணமாக அப் பிரதான போக்குவரத்து கேந்திர நிலையம் மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

Jaffna-Kandy Road

விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாஸ அரசிற்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது A9 பாதை திறக்கப்பட்டிருந்தது.

பின்னர் பேச்சுவார்த்தைகள் முறிந்த காரணத்தால் அப் பாதை மீண்டும் மூடப்பட்டது.

வன்னிப் பெரு நிலப் பரப்பிலிருந்து குடா நாட்டை நோக்கிச் செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அவற்றில் ஆனையிறவு பாலம் உள்ள A9 பாதையே பிரதான பாதையாகும். ஏனெனில் இப் பாதை சகல கால நிலைகளிலும் பாவனைக்கு உகந்ததாகும்.

அடுத்த பாதை பூனேரி வழியாக சங்குப்பிட்டிப் பாலமூடாக கப்பல் பயணத்துடன் குடாநாட்டிற்குள் நுழைய முடியும். இப் பாதை செப்பனிடப்படாத பாதையாகும். பயணம் சிரமமானது.

மூன்றாவது பாதை மிகவும் கடினமானது. பரந்தன் வழியாக புளியம்பொக்கணையிலிருந்து சுண்டிக்குளம் பின்னர் மேற்குப் புறமாக இயக்கச்சி வழியாக யாழ்ப்பாணத்தை அடைய முடியும். இப் பாதையும் மிகவும் சிக்கலானதும், சகல கால நிலைகளுக்கும் பொருத்தமான ஒன்று அல்ல.

A9 பாதை ஒன்று மட்டுமே இலகுவானதும், சகல கால நிலையிலும் வவுனியாவிலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, பளை, கொடிகாமம், சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை அடைய முடியும்.

ஆனையிறவு முகாம் காரணமாக ஆனையிறவுப் பாலத்தினூடகச் செல்லும் பாதையையும், பூனேரி முகாம் காரணமாக சங்குப்பிட்டிப் பாதையையும் பாவிக்க முடியாதவாறு விடுதலைப்புலிகள் மக்களைத் தடுத்தனர்.

சுண்டிக்குளப் பாதை சீராக இல்லாமையாலும் அது ஆனையிறவு முகாமிற்கு அண்மித்து இருந்தமையாலும் மக்கள் அதனைப் பயன்படுத்தவில்லை.

இதன் காரணமாக குடாநாட்டிற்குள் செல்லவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை காணப்பட்டதால் புலிகள் புதிய பாதை ஒன்றினைத் திறந்தார்கள்.

1280px-கச்சாய்_கடல்_நீர்_ஏரிகிளாலி ஏரி

அதுவே கிளாலி ஏரி வழியாகச் செல்லும் கடல் வழிப்பாதையாகும். இப் பாதையைத் திறந்ததும் கடற்படையினருடன் மோதல் அடிக்கடி நிகழ்ந்தது. ஆனாலும் அப் பாதை பெருமளவில் கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

இப் பயணம் என்பது மிகவும் அபாயகரமானது. கடற்படையின் தாக்குதல்களின் அபாயத்துடன்தான் மக்கள் அவ் வழியாகப் பயணிக்க வேண்டும்.

மாற்று வழிகள் இல்லாத காரணத்தால் மக்கள் அவ் வழியாகவே குடாநாட்டிற்குள் செல்ல அல்லது வெளியேற வேண்டிய நிலை காணப்பட்டது.

மக்களின் இவ்வாறான சிக்கலான நிலமைகளைப் பயன்படுத்திய விடுதலைப்புலிகள் அப் பயணத்திற்கு மிக அதிகளவு கட்டணத்தை வசூலித்தார்கள். இதனால் அவர்கள் அதிக வருமானத்தைப் பெற்றார்கள்.

அவர்களது வருமானம் இவ் வகையாக அதிகரிப்பது ஏனைய இரண்டு பாதைகளும் திறக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்தின.

நான் ஆரம்பத்தில் ஆனையிறவு முகாமிற்குச் சென்றபோது அம் முகாம் A9 பாதையின் கிழக்குப் புறத்திலும், ஏரியின் வடக்குப் புறமாகவும் அமைந்திருந்தது.

ஏரியானது ரயில் பாதையினதும், தெரு வீதியினதும் இரு மருங்கிலும் ஏரி விரிந்திருந்தது. பின்னர் அம் முகாம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இக் கால வேளையில் மாங்குளம், கொக்காவில் ஆகிய முகாம்கள் புலிகளால் அழிக்கப்பட்டது. எனவே ஆனையிறவு முகாமே அவர்களது அடுத்த இலக்காக அமைந்தது.

இச் சமயத்தில் நான் மன்னாரிலிருந்து வெலி ஓயாவிற்கு மாற்றப்பட்டிருந்தேன். ஏனெனில் அப் பகுதியிலிருந்த குடியேற்றங்களில் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்தமையால் அனுப்பப்பட்டேன்.

புலிகளின் தாக்குதல்கள் காரணமாக அங்கு குடியேறிய மக்களில் சிலர் மீண்டும் தமது பழைய இடங்களுக்குச் செல்ல ஏனையோர் தமது வறுமை காரணமாக அங்கேயே தங்கி வாழ்ந்தனர்.

இம் மக்கள் ராணுவத்துடன் நெருக்கமாகச் செயற்பட்ட போதிலும் தமது நாளாந்த தேவைகளுக்காக விறகு வெட்ட அல்லது வேட்டையாட ஆபத்துகள் காணப்பட்ட போதிலும் ராணுவத்தின் கடுமையான உத்தரவுகளை மீறியும் செயற்பட்டனர்.

இதன் விளைவாகப் பலர் மிகவும் கொடுமையான விதத்தில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனுபவித்த வறுமையே இத் துன்பங்களுக்குக் காரணமாக அமைந்தது.

1200px-Oluvil

வெலிஓயா பிரதேசம் என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையேயுள்ள பிரதேசம் என்பதால் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

அங்கு காடுகளும் அதிகமாக இருந்தது. இப் பிரதேசமானது தமிழர் தாயகம் எனப் புலிகள் கருதியதால் அங்கு குடியேறிய மக்கள் பகுதி ‘சிங்கள குடியேற்றங்கள்’ எனவும், அபகரிக்கப்பட்ட நிலங்கள் எனவும் கூறினர்.

மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியென ராணுவம் கருதியதால் மிகவும் பயிற்சி பெற்ற ராணுவ பட்டாலியன் அக் கிராமங்களின் பாதுகாப்பை மேற்கொண்டது. நாம் விவசாய நிலங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் அக் கிராமங்களை அணுகும் பாதைகளையும் கண்காணிக்க வேண்டியிருந்தது.

ஆனையிறவு முகாம் தாக்கப்படுவதாக செய்தி கிடைத்ததும் எனது நினைவுகள் சிலாவத்துறை முகாம் சம்பவங்களே நினைவுக்கு வந்தன.

சிலாவத்துறை முகாமிற்கு மேலதிகமாக ராணுவத்தை அனுப்பவது மிகவும் வில்லங்கமானது. ஆனால் ஆனையிறவு முகாமிற்கு அனுப்புவது அதைவிட மிக மோசமானது.

இத் தாக்குதல் செய்தி கிடைத்ததும் மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ, பிரிகேடியர் விஜய விமலரத்ன ஆகியோர் அதனைக் காப்பாற்றும் திட்டங்களில் ஈடுபட்டனர்.

elephant-pass-d8e90c46-6fde-4401-9f13-056e7b8c928-resize-750

ஆனையிறவு முகாம் பாரிய பரப்பளவைக் கொண்டிருந்தது. வடக்குத் தெற்காக 5 கிலோ மீற்றர் நீளமும், குறுக்காக 3 1ஃ2 கிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டது.

இம் முகாமின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளைப் புலிகள் சுற்றி வழைத்திருந்தனர். அதன் மேற்குப் பகுதி ஏரியாகும். அதுவும் கடற்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனவே அங்குள்ள ராணுவத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் சிக்கல் நிறைந்திருந்தது.

ராணுவ உளவுத்துறையினர் ஏற்படக்கூடிய ஆபத்தினையும், அப்போதுள்ள கள நிலவரத்தையும் மேஜர் சனத் கருணரத்னவிற்கு தெரிவித்திருந்தனர். முகாமிற்கு தேவையான உதவிகளை உலங்கு வானூர்தி மூலமாக மட்டுமே வழங்கக்கூடிய நிலமை காணப்பட்டது.

அவ்வாறு ஏப்ரல் 22ம் திகதி வானூர்தி முகாமிலுள்ள தளத்தில் இறங்கிய வேளையில் இரண்டு முறை மோட்டார் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொண்டனர்.

இதனால் விமானப்படையினர் வானூர்தி இறங்கு தளத்தினை மேலும் விரிவாக்கி பலாலியிலிருந்து ராணுவத்தை இறக்கும் நோக்கில் பணித்தனர். இதன் காரணமாக ராணுவத்தினர் அருகிலிருந்த ‘தமிழாமடம்’ என்ற பகுதியையும் இணைக்கத் தீர்மானித்தனர்.

E.pass-01
எனவே தமிழா மடத்தினைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவம் ஏப்ரல் 27ம் திகதி அப் பகுதிக்குள் செல்ல அங்கிருந்த விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்குமிடையே மோதல் மூண்டது.

பலத்த இழப்புகளுடன் அப் பகுதி ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இப் போரில் 28 ராணுவத்தினர் பலியாகியதோடு, 64பேர் காயமடைந்தனர். அங்கிருந்த ஒட்டு மொத்த 600 ராணுவத்தினரில் 90 பேர் பலியாகியதோடு, மிகப் பெருந் தொகையான வெடி மருந்துகளும் இழக்கப்பட்டன.

இத் தாக்குதலுக்கு முன்பதாக தமிழாமடம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டால் அதனைத் தக்க வைக்க மேலதிக ராணுவம் தேவை என்பதால் மேஜர் கருணாரத்ன அவ்வாறு பலாலி தலைமைப் பீடத்திடம் கோரியிருந்தார்.

அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையில் அவர் தமிழாமடத்தினைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு மேலதிக ராணுவம் வழங்கப்படாதது ராணுவ வரலாற்றில் இன்னொரு அத்தியாயாமாகும்.

ஒரு ராணுவ அதிகாரி உயர் மட்டத்தின் வாக்குறதியை நம்பி செயலில் இறங்கும் போது கைவிடப்பட்டால் நிலமை என்னவாகும்? தாம் ஏமாற்றமடையலாம் என அவர் நம்பியிருந்தால் இவ்வாறான தாக்குதலை நடத்தத் தீர்மானித்திருப்பாரா?

ராணுவத்தினர் தொகை போதவில்லை என்பதும். போரில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளதும், வேலைக்கு வராமல் தவிர்ப்பது, விலகிச் செல்வது போன்ற காரணத்தால் பலர் ராணுவத்தில் இணைய மறுப்பது போன்ற நிகழ்வுகளைப் பலரும் அறிவர்.

ராணுவ உயர் மட்டத்தினர் இவற்றை அறிந்து அதன் பிரகாரம் திட்டமிடாமல் போலி வாக்குறுதிகள் மூலம் ராணுவத்தை உற்சாகப்படுத்தி அவர்களைத் தினமும் மரணத்திற்குள் தள்ளினர்.

இக் காரணிகளால் கைப்பற்றிய அப் பிரதேசத்தினைக் கைவிட வேண்டிய நிலை மேஜர் சனத் கருணரத்னவிற்கு ஏற்பட்டது. இதனைப் படிக்கும் ராணுவத்தினரின் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் தியாகங்கள் தந்த பலன் என்ன? என வினவக்கூடும்.

ராணுவ உயர் மட்டத்தின் மறைத்தலைத் தவிர எந்தப் பலனும் இல்லை. 30 வருடங்களாக நடைபெற்ற இப் போரில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்று அநியாயமாக பல பெறுமதியுள்ள உயிர்கள் இழக்கப்பட்டன.

இவ்வாறான பயனற்ற முயற்சிகளினதும், தோல்விகளினதும் காரணமாக ராணுவத்திற்கும், விமானப் படையினருக்குமிடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட அளவில் இடம்பெற்றன. இதன் காரணமாக பல மாற்றங்கள் ஏற்பட்டன.

இவை இவ்வாறு நடந்தேறிய வேளையில் ராணுவ உளவுப் பிரிவினர் போர் நிலமைகள் பற்றிய அவ்வப்போதைய விபரங்களை ராணுவ உயர் மட்டத்தினருக்குத் தெரிவித்தனர்.

அதாவது பாரிய தாக்குதல் விரைவில் இடம்பெறலாமெனக் கருதினர். ஏனெனில் புலிகளின் உரையாடல்களை அவதானித்த போது அவர்கள் நூற்றுக் கணக்கான சவப் பெட்டிகள், மேலதிக உணவுப் பொருட்களின் தேவைகள், துப்பாக்கி துளைக்காத வாகனங்கள் போன்றன பற்றிப் பேசப்பட்டிருந்தன. எனவே புலிகள் பாரிய தாக்குதலுக்குத் தயாராவது தெளிவாகத் தெரிந்தது.

Balraj-in-preparations-for-Elephant-Pass-operation

இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆனையிறவு முகாமைச் சுற்றிய பகுதிகளின் நிலையில் எவ்வித மாற்றங்களும் தென்படவில்லை. ஆனால் புலிகளின் நடமாட்டம் மிகவும் அதிகரித்திருந்தது.

1991ம் ஆண்டு யூலை 10ம் திகதி காலை 5.20 மணியளவில் புலிகள் முகாமைத் தாக்க ஆரம்பித்தனர். முதலில் தாக்குதல்கள் கப்டன் லக்சிறீ வடுகே இன் பகுதியில் ஆரம்பித்தன.

இதன் காரணமாக மேஜர் லலித் புத்ததாஸ படுகாயமடைந்தார். இத் தாக்குதல்கள் அதி காலையிலேயே முடிவடைந்தமையால் உலங்கு வானூர்தி மூலம் காயமடைந்தோரை எடுத்துச் செல்ல முயற்சித்த போது புலிகளின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்தன.

20081124173031215734_8

இதனால் வானூர்தி இறங்குவதே பெரும் சிக்கலாக அமைந்தது. புலிகள் மிகவும் சக்தி மிக்க 23 MM கன ரக ஆயுதங்களை இப் போரில் பயன்படுத்தியது பின்னர் தெரிய வந்தது.

இத் தாக்குதல்களால் வானூர்தி தாமதித்து இறங்கியதால் காயமடைந்திருந்த மேஜர் லலித் புத்ததாஸ அதிக இரத்தம் சிந்தியதால் மரணமானார். வானூர்தி மூலமும் ஆனையிறவு முகாமை அடைய முடியாமல் போனதால் அம் முகாம் முற்றிலும் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இம் முகாமின் தற்போதைய நிலமைகளைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் குறைந்த பட்சம் 14 நாட்களுக்காவது பாதுகாக்கும் வகையில் கிடைத்த வளங்களை மேஜர் கருணாரத்ன ஒருமுகப்படுத்தினார்.

balraj_ithth_1

10ம் திகதி இரவு மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. இரவு 11.30 மணி அளவில் பாரிய பாரம் தூக்கும் யந்திரம் முன் அரங்கு வழியாக பின்னால் பல போராளிகளுடன் வந்தது.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய போதிலும் அவ் வாகனம் தொடர்ந்து முன்னேறியது. பின்னர் மரம் ஒன்றுடன் மோதித் தாமதித்த போதிலும் தொடர்ந்து முன்னேறியது.

போராளிகளின் மூர்க்கமான தாக்குதல்கள் தொடர்ந்தன. பாரம் தூக்கும் யந்திரத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாமல் போன ராணுவம் தனது இரண்டாம் கட்ட பாதுகாப்பு நிலையை நோக்கிப் பின்வாங்கியது.

மறு நாள் காலை இரண்டாம் கட்ட பாதுகாப்பு நிலைகளை அவதானித்த போது போரின் உக்கிரம் காரணமாக தமது பொருட்களையும், ஆயுதங்களையும் முதலாவது பாதுகாப்பு அரண்களிலேயே ராணுவத்தினர் கைவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது.

( மேலும் தொடரும் )

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம்

போர்க் காலத்தில் ஊர்காவல் படைகள்!! ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்

புலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன?: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com