Site icon ilakkiyainfo

`ஆர்கஸம்’ இனியும் ஆபாசம் அல்ல; உங்களின் ஆரோக்கியமே! – பெட்ரூம்… கற்க கசடற! – (பகுதி-1)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
– குறள் 1290

(விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.)

உணவுபற்றி பேசுகிறோம். உடைபற்றி அலசுகிறோம். உறவுபற்றி? அதிலும் குறிப்பாக `தாம்பத்தியம்’ என்று இலைமறை காயாகவே அப்போதும் இப்போதும் குறிப்பிடப்படும் செக்ஸ் பற்றி?

இதுபற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. காரணம்?

* தயக்கம்

* தவறான செயலோ, தகாத விஷயமோ என்கிற எண்ணம்

* ஆபாசம் இது என்கிற சித்திரிப்பு

* காலங்காலமாகத் திணிக்கப்பட்ட அருவருப்பு

இவை எல்லாவற்றையும் ஒலிம்பிக் வீராங்கனை போலச் சட்டென தாண்டி வாருங்கள். ஏனெனில், மேற்கண்ட கருத்துகள், சிந்தனைகள், எண்ணங்கள், கருத்துகள், திணிப்புகள் என எதிலுமே துளியளவும் உண்மையில்லை.

அப்படியானால், `இதென்ன பெண்ணியமா?’ எனப் புருவம் உயர்த்துகிறீர்களா? பெண்ணியமும் இல்லை… ஆணியமும் இல்லை. இது மனிதம். இது அறிவியல். இது உடலியல். இது உணர்வியல்.

பெண்கள் தங்கள் உடல்நலத்தின் அனைத்து அம்சங்களையும் முன்னுரிமையாகக் கொள்ளுமாறு நாம் வலியுறுத்துகிறோம்.

அதில் பாலியல் ஆரோக்கியமும் அடங்கும். ஆகவே, இனியாவது பாலியல், செக்ஸ், காதல், உடல், உணர்வு, உடலுறவு, உச்சக்கட்டம் போன்ற வார்த்தைகளைக் கண்டு மிரண்டு வேறு பக்கத்துக்குச் செல்ல வேண்டாம். இதில் உண்மை அறிந்து உவகையும் அடைவது மிக இயல்பான, ஆரோக்கியமான விஷயம்தான்.

அண்மைக்காலக் கணக்கெடுப்பு அளிக்கும் முதல் அதிர்ச்சி இது. 80 சதவிகித பெண்கள் தங்கள் குழந்தைகள், வாழ்க்கைத் துணைவர் மற்றும் செல்லப்பிராணிகளுக்குப் பிறகுதான், தங்கள் ஆரோக்கியம் பற்றி சிந்திக்கிறார்கள்.

அதோடு, 62 சதவிகிதப் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் திருப்தி அடையவில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

பாலியல் திருப்தி என்பது கட்டாயம் அடைந்தே தீர வேண்டியதுதானா? அது இல்லாவிட்டால்தான் என்ன? என் குழந்தைகளும் குடும்பத்தினருமே என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றார்களே? இது போதாதா? பலர் இப்படி நினைக்கலாம். யார் என்ன நினைத்தாலும், பாலியல் திருப்தி என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு பகுதிதான்.

Couple (Representational image)

வெளிப்படையாகத் தெரிவதைவிட உடலுறவின் நன்மைகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. செக்ஸ் என்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் நல்ல மனநிலையையும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது கொரோனாவோடு வாழப் பழகிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு எந்த அளவு அவசியம் என்பது உங்களுக்கே தெரியும். அது மட்டுமல்ல… உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடலுறவின்போது ஒரு பரவசத்தை (ஆர்கஸம்) அடைவது பாலியல் நன்மைகளை இன்னும் அதிகரிக்கிறது.

அப்போதுதான் ஆக்ஸிடோஸின் மற்றும் எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயக்கின்றன.

இந்த நல்ல ஹார்மோன்கள் உங்களை ரிலாக்ஸ் செய்கின்றன; தம்பதியின் அரவணைப்பு மற்றும் நெருக்கத்துக்கு முக்கிய பங்களிக்கின்றன.

அத்துடன் வலி மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

 

இந்தச் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் கொண்டு, பாலியல் செயல்பாடுகளின்போது 41 சதவிகித பெண்கள் எப்போதுமே உச்சக்கட்டத்தை அனுபவிப்பதாகக் கூறுகிறார்கள்.

இதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது? மிகவும் நல்லது என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், அவர்களின் பாலியல் திருப்தி மற்றும் உச்சக்கட்டத்தை அடைவதற்கு அவர்களின் துணைவர் காரணமாக இல்லை என்பதுதான் இதில் சோகம்.

இது போன்ற அதிர்ச்சி உண்மைகள்தான் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப்படுவதன் அவசியத்துக்கும் காரணமாக இருக்கின்றன.

மேற்சொன்ன 41 சதவிகித பரவசத்துக்கு பெரும்பாலும் அந்தந்த பெண்களேதான் பொறுப்பு. அவர்களின் துணைவர்கள் அல்ல. என்ன்ன்ன்ன்ன்ன?

ஆம்… இந்த ஆய்வு முடிவுகளைத் தயக்கம் களைந்து படியுங்கள்.

* 62 சதவிகித பெண்கள் சுய இன்பத்தின்போதுதான் பரவசம் அடைகிறார்கள்.

* உடலுறவின் தொடக்கத்திலேயே 27 சதவிகித பெண்கள் பரவசம் அடைந்துவிடுகிறார்கள்.

* பிறப்புறுப்பு தொடுதலின்போதே 26 சதவிகித பெண்கள் உச்சக்கட்டத்தை எட்டிவிடுகிறார்கள்.

ஓ… அவ்வளவு ஈஸியா என்று இதில் திருப்தி அடைந்துவிட வேண்டாம். இது மிகப்பெரிய பிரச்னை.

அதாவது, பாலியல் திருப்தி என்பது ஒரு புணர்ச்சி அல்லது பரவச நிலையை எட்டுவது மட்டுமே அல்ல. அல்லது காலங்காலமாகக் கற்பித்தபடி குழந்தை பெறுவது மட்டுமல்ல.

உண்மையில், அது உங்கள் துணையுடனான நெருக்கம் மற்றும் தொடர்பை பற்றியது. உடலுறவு என்பது உடலோடு உடல் இணைத்து உறவுகொள்வது மட்டுமே அல்ல. அது உள்ளத்தோடும் தொடர்புடையது.

நல்லவேளையாக உலகம் இப்போது மாறி வருகிறது. 60 சதவிகித பெண்கள் அதிக உடலுறவை விரும்புகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

விவரம் தெரிந்த, உண்மை அறிந்த பெண்கள் உடலுறவு கொள்கிறார்கள்; அதை மேலும் விரும்புகிறார்கள். இது நல்ல செய்தி. பெண்கள் தங்கள் உடல் பேசுவதைக் கேட்க வேண்டும்.

அதில் குழப்பங்கள் இருந்தால் மருத்துவ நிபுணர்களிடம் தயங்காமல் பேச வேண்டும். ஏனெனில், அவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படை பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவது மிக முக்கியம்.

முதல் கட்டமாக… உங்கள் பாலியல் ஆரோக்கியம் பற்றி யோசியுங்கள். கவலைகளையும் கருத்துகளையும் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் உங்கள் துணைவருடன் பேசுவதை உறுதி செய்யுங்கள்.

இனியும் தாமதிக்க வேண்டாம். உங்கள் பாலியல் ஆரோக்கிய பயணத்துக்கு உதவக்கூடிய அவசிய உரையாடலைத் தொடங்க, உங்களுக்கு உதவவே இந்தத் தொடர். இதைத் தொடரச் செய்து இனிய பயணமாக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு!

தயக்கம் களைவோம்… தடுமாற்றம் போக்குவோம்!

– சஹானா

 

Exit mobile version