ilakkiyainfo

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?
October 03
18:26 2017

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின்  மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில்-

அதிகாரப்பகிர்வு

• ஒற்றை ஆட்சி சொற்பிரயோகம்

ஆளுநர்

•நிதி உள்ளடக்கம் இல்லை

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மையை தொடர்ந்தும் பேண வேண்டும். தமிழ் மக்களின் ஆத­ரவு கார­ண­மா­கவே எம்மை சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

எனவே அந்த நிலைமை பாது­காக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­மு டன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன் தெரி­வித்தார்.

இணைந்த வடக்கு,கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் முன்­னேற்­ற­க­ர­மாக இருக்­கின்­றன.

ஆனால் இது இறுதி முடி­வல்ல. இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­பட்ட பின்னர் அது குறித்து மக்­களை நாம் தெளி­வு­ப­டுத்­துவோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மன்னார் நகர சபை மண்­ட­பத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மன்னார் மாவட்­டக்­கி­ளையின் ஏற்­பாட்டில் நேற்று மாலை சம­கால அர­சியல் கள நில­வரம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­மர்வு இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா செயலாளர் துரைராஜ சிங்கம் உட்பட கட்சியின் எம்.பி.க்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது;

1995, 1997, 2000 புதிய அரசியல் சாசனம் சம்பந்தமான பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அவற்றினைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவர் பல்லின நிபுணர் குழுவை நியமித்தார்.

சர்வகட்சி குழுவை நியமித்தார். அவைகளெல்லாம் சிபார்சுகளை முன்வைத்தன. இவையெல்லாம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை முன்னோக்கி எடுத்துச் சென்றன.

2015ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன பதவியில் அமர்த்தப்பட்டார்.

அதற்கு எமது மக்கள் பாரிய பங்களிப்பினைச் செய்தார்கள். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டு தற்போது கூட்டு அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.

முதன் முறையாக எமது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புக்காக மூன்றிரண்டு பெரும்பான்மையை அடைவதற்கான வாய்ப்பிருக்கின்றது.

முன்னதாக சந்திரிகா பண்டாரநாயக்க நியாயமான அதிகரங்கள் பகிரப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது அதனை நிறைவேற்றுவதற்கு அவரிடத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்திருக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள கூட்டு அரசாங்கமானது தற்போது நடைபெறுகின்ற பேச்சு வார்த்தைகளின் பிரகாரம் பார்க்கையில் 2020ஆம் ஆண்டு வரையில் தொடரலாம்.

ஆகவே எமது ஆதரவுடனும் ஏனைய சில கட்சிகளின் ஆதரவுடனும் பாராளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்புக்கள் தராளமாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு அரசியல் நிர்ணய சபையாக பாராளுமன்றம் மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன.

இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்களும் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன.

வழிநடத்தல் குழுவானது சில தாமதத்திற்கு பின்னர் இடைக்கா அறிக்கையை அரசியலமைப்பு நிர்ணய சபைக்குச் சமர்பித்தது.

அந்த அறிக்கை மீதான விவாதம் இந்த மாதம் 30ஆம்,31ஆம் திகதிகளிலும் நவம்பர் முதலாம் திகதியுமாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

இத்தகையதொரு பின்னணியில் தான் நாம் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக பரிசீலிக்கின்றோம். எமது மக்களும் இந்த விடயங்களை அறிய வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறான கூட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

அந்த வகையில் நான் சில முக்கிய விடயங்களை கூறவிரும்புகின்றேன். ஆனால் சிலர் இந்த விடயங்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றமையால் அனைத்து விடயங்களையும் கூறுவது கடினமாக இருக்கும்.

மூன்றிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்களின் விருப்பத்தினை அறிந்து கொள்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் அங்கீகாரம் அளித்த பின்னரே அது சட்டமாகும்.

மக்களை குழப்புவதற்கு பல முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. விசேடமாக கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு பிளவடையப்போகின்றது. பௌத்த சமயத்திற்கு பாதகம் ஏற்படவுள்ளது என பல விடயங்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாம் கூறுகின்ற கருத்துக்கள் அவ்வாறானவர்களுக்கு ஒரு ஆயுதமாக அமைந்து விடக்கூடாது.

அதிகாரப்பகிர்வு

புதிய அரசியலமைப்பில் அதிகாரங்கள் மூன்று பட்டியலாக பிரிக்கப்படும். முதலாவதாக தேசிய பட்டியலாகும்.

பாராளுமன்றம், பிரதமர், அமைச்சரவை ஆகியவற்றுகுரிய பட்டியலே அதுவாகும். இரண்டாவதாக மாகாணத்திற்குரிய பட்டியல் காணப்படும்.

மாகாணசபை, முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள் ஆகியன தொடர்பான பட்டியலாகும். மூன்றாவதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான பட்டியல் காணப்படும்.

நாட்டில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய இறைமையின் (ஆட்சி அதிகாரம், மனித உரிமைகள், வாக்குரிமை) அடிப்படையில் உரிமைகளை அடைந்து கொள்ள முடியும். இறைமையின் அடிப்படையில் என்கின்ற போது தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், உள்ளூராட்சி மட்டத்திலும் தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை யார் கொள்ள வேண்டும் என்பதை வாக்குரிமை மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஆகவே மக்களுடைய இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு அந்ததந்த மட்டங்களில் முழுமையாக பயன்படுத்த முடியும்.

அதியுச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியைப் பொறுத்தவரையில் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில கருமங்களை நிறைவேற்றக் கூடிய அதிகாரம் இருக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, தேசிய பாதுகாப்பு, முப்படை, வௌிவிவகார கொள்கை, தேசிய போக்குவரத்து, பிரஜாவுரிமை, தொடர்பாடல், குடிவரவு குடியகல்வு, நிதிக் கொள்கைகள், ஒற்றுமைப்பாட்டுடன் தொடர்பான விடயங்கள் போன்றன காணப்படுகின்றன.

அதேபோன்று மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கல்வி, காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், மாகாண போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, கைத்தொழில், இவ்விதமானவை மாகாண அடிப்படையில் உள்ளன. அந்த வகையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்குமான அதிகாரங்கள் காணப்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும் ஒழுங்குகளின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அதிகாரங்கள் சம்பந்தமாக பார்க்கையில் மத்திய அரசாங்கம் அதிகாரங்களை பயன்படுத்த முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல மாகாணங்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களை மீளப்பெற முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியிருகின்றோம். அதற்கான இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்குரிய ஒழுங்குங்கள் முழுமைபெறவில்லை.

ஒரு செனட் சபை உருவாக்கப்படும். தற்போதைய இடைக்கால அறிக்கையின் பிரகாரம் அந்த செனட் சபையில் ஐம்பத்தைந்து உறுப்பினர்கள் காணப்படுவார்கள். ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஐந்து பேர் வீதம் 45 பேர் மாகாண சபையை சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.

பத்து பேர் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுவார்கள். மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அதிகாரத்தினை பயன்படுத்துவதாக இருந்தால் அல்லது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும், செனட் சபையில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும் அவசியமாகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் சில ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவ்விதமான நிலைமையொன்று உருவாகின்றபோது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை அவர்களின் இறைமையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும். அதனடிப்படையில் மக்கள் மாகாணங்களுக்கு வழங்கிய தமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்தலாம்.

ஒற்றை ஆட்சி சொற்பிரயோகம்

உலகத்தில் உள்ள அரசியலமைப்புக்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு அரசியலமைப்பு காணப்படுகின்றன. சில நாடுகளில் சமஷ்டி அடிப்படையில் பயன்படுத்துகின்றனர்.

சில நாடுகளில் சமஷ்டி அடிப்படை இல்லாது விட்டாலும் தாரளமான அதிகாரப்பகிர்வு இருக்கின்றது. அவ்விதமான பல அமைப்புக்கள் இருக்கின்றன. இவ்விதமான விடயங்களை நாங்கள் கருத்திற் கொண்டுள்ளோம்.

தற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சியுடைய நாடு என்று தமிழிலும் ஆங்கிலத்தில் Sri Lanka is a unintry state என்றும் சிங்களத்தில் சிறிலங்கா ஏகிய ராஜ்ய என்றும் உள்ளன.

ஏகிய ராஜ்ய என்ற சொற்பதமானது நாட்டினுடைய ஒற்றுமையையும், பிரிபட முடியாத நிலைமையையும் தான் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் பெரும்பன்மை தலைவர்களின் கருத்தாகின்றது.

ஆகவே ஏகிய ராஜ்ய என்ற சொற்பதம் பெரும்பன்மை மக்களை திருப்திப் படுத்துவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்திருக்கின்றார்கள்.

தமிழில் காணப்படும் ஒற்றை ஆட்சி என்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் உள்ள unintry state என்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஒற்றை ஆட்சிக்குப் பதிலாக ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் ஏகிய ராஜ்ய என்பதன் விளக்கம் என்னவென்று கூறப்படவில்லை. ஆனால் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஏகிய ராஜ்ய என்ற சொல்லின் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஏகிய ராஜ்ய என்பது, ஒரு பிரிக்கப்படாத, பிளவுபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாடு என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே ஒற்றை ஆட்சி, யுனிற்றரி ஸ்ரேட் என்ற சொற்கள் நீக்கப்படுகின்றன. ஏகிய ராஜ்ய என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் அதற்கான விளக்கம் தௌிவாக வழங்கப்பட்டுள்ளது. எமது மக்கள் இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணத்துடன் அதியுச்ச அதிகாரங்காரங்களை பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்படுமாயின் அது மிகவும் முன்னேற்றகரமான விடயமாகும்.

ஆளுநர்

தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆளுநர், பட்டியல்கள், நிதி கையாளல், நியமனங்கள் விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. ஆளுநரின் நிர்வாக அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுநர் முதலமைச்சர், அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு செயற்படவேண்டிய கட்டாயம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நியமனங்கள் சம்பந்தமாக ஆளுநருக்கு எவ்விதமானஅதிகாரங்களும் இல்லை. மாவட்ட செயலாளர் ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுமதியுடன் நியமிக்கப்படவேண்டும். ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழவின் ஆலோசனையுடன் நியமிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு இலாக்காக்களுக்கும் பொறுப்பான தலைமை அதிகாரிகள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கமோ, ஆளுநரோ தலையிட முடியாத வகையிலான ஏற்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நிதி உள்ளடக்கம் இல்லை

மாகாண சபை செயற்படுவதற்கு நிதி அவசியம். உள்நாட்டு, வெளிநாட்டு, வரி மூலமாக கிடைக்கும் நிதிகளை கையாள்வதற்குரிய ஏற்பாடுகள் அவசியமாகின்றன.

அவை இன்னமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் சம்பந்தமாக நாம் கலந்துரையாடல்களை செய்திருக்கின்றோம். ஆனால் அந்த முக்கிய விடயம் இன்னமும் உள்ளடக்கப்படவில்லை.

தேசிய கொள்கை

எந்தவொரு கருமம் சம்பந்தமாகவும் ஒரு தேசியக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. அவ்விதமான ஒரு சூழலில் இறைமை, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியாது. அந்த பந்தி தற்போது முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.

அதேசமயம் தேசிய கொள்கை, தேசிய தராதரம், மாகாண சபையின் சட்டமாக்கும் அதிகாரம், மாகாண சபையின் நிதி விவகார அதிகாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பில்லாது சுற்றாடல், சூழல், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற கருமங்களில் தேசிய கொள்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஐ.நா. தீர்மானம்

இந்த நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருந்திருக்கின்றன.

அந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தனது கடமையை நிறைறேற்றாது விட்டால் சர்வதேச ரீதியான ஒன்றுபட்டு அவற்றை செய்விக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

த.தே.கூ. ஒற்றுமை

இந்த நிலைமைக்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே பின்னணியில் இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எவரையும் விமர்சிக்கின்ற பழக்கம் எமக்கு இல்லை. ஒற்றமையை நாம் பாதுகாக்க வேண்டும். பேண வேண்டும்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு காரணமாகின்றது.

பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரிபூரணமாக ஆதரித்தமையால் சர்வதேச சமூகம், இந்த நாட்டின் தலைவர்கள், அரசாங்கம் என அனைவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைமை பாதுகாக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களுக்கான அழைப்பும்

அலகுகள் சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட வேண்டும். அது சம்பந்தமாக தற்போது மூன்று விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

முதலாவது இணைப்பு இல்லை. இராண்டாவது வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படலாம். ஆனால் இணைப்பு ஏற்படுத்துவதென்றால் சர்வஜனவாக்கெடுப்பு ஒவ்வொரு மாகாண சபையிலும் நடத்தப்படவேண்டும். மூன்றாவது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணம் அவசியம். இந்த மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது வடக்கு, கிழக்கு தனித்தனியாக உள்ளன. ஆனால் இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு முகங்கொடுத்த கஷ்டங்களை நான் அறிவேன். அது பற்றி அதிகமாக பேசவில்லை. இருப்பினும் இந்த தருணத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அழைப்பை விடுக்கவுள்ளேன்.

நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். நாம் தமிழ் பேசும் மக்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் தான் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.

இந்த உண்மையை எவரும் மறுதலிக்க முடியாது. ஆகவே எமக்குள் இந்த விடயம் சம்பந்தமாக இணக்கப்பாடு ஏற்பட்டு இதனை சுமூகமாக தீர்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்தின் போது ஒரு முஸ்லிம் முதலமைச்சரை ஏற்பதற்கு தயார் என நான் அப்போது பகிரங்கமாக் கூறியிருந்தேன்.

தேர்தல் நிறைவடைந்தவுடன் எம்மை புறக்கணித்து மற்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தீர்கள். அந்த ஆட்சியை தொடர முடியவில்லை. அந்த சூழலில் கூட நாம் உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) உதவினோம்.

வடகிழக்கில் கூட படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கு தயார்.

நாம் அதற்கும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால் உங்களுடைய (முஸ்லிம்களுடைய) பிரதிநிதிகள் சிலர் வழிநடத்தல் குழவில் கூறிய விடங்களை கேட்டால் நீங்கள் வெட்கமடைவீர்கள். அவர்கள், அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது. அதிகாரங்கள் மத்தியில் இருக்க வேண்டும். காணி அதிகாரம் மத்தியில் மாத்திரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் இது தான் உண்மை.

1949ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணன் அமிர்தலிங்கத்தின் காலம் என நீண்டதொரு பயணத்தினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் பல முன்னேற்றங்களைக் காண்பதற்கும் இடமுண்டு.

ஆறு மாதங்களுக்கு முன்னதாக எமது நண்பர்கள் சிலர் எம்மை வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கோரினார்கள்.

குறிப்பாக சம்பந்தனும், சுமந்திரனும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம் என்று கட்டளை இட்டபோது நாம் பதில் கூற விரும்பவில்லை. அப்போதும் நான் நிதானமாகவே இருக்க வேண்டும் என்றே கூறினேன்.

அடுத்த கட்டம்

ஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.

ஆனால் இது இறுதி முடிவல்ல. இறுதி முடிவுக்கு நாங்கள் வரவில்லை. இறுதி முடிவுக்காக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். அதன் பின்னர் வழிநடத்தல் குழு கூடும். வழிநடத்தல் குழுவில் நானும், சுமந்திரனும் இருக்கின்றோம். அதன் இறுதியில் புதிய அரசியல் சாசனத்திற்கான வரைபு உருவாக்கப்படும்.

அவ்விதமான அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது நாம் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

அது தொடர்பில் அங்கு கூறவேண்டிய கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைப்போம்.

தற்போது இடைக்கால அறிக்கையானது புதிய அரசியல் சாசனத்திற்கான பாதையில் ஒரு கட்டம் வரை வந்திருகின்றது.

ஆனால் வழிநடத்தல் குழுவின் உள்ள எல்லா கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை விளக்கி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. நாங்களும் சமர்ப்பித்துள்ளோம்.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது ஒருமித்த கருத்து உருவாக்கப்படவேண்டும்.

அவ்வாறான ஒருமித்த கருத்து உருவாக்கப்படவில்லை. புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலில் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவேண்டும்.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த பெரும் கருமத்தினை ஆரவாரமின்றி அமைதியாக குழப்பங்களை ஏற்படுத்தாது முன்னெடுக்கப்படவேண்டியதொரு தேவைப்பாடு அவசியமாகின்றது.

அரசியல் சாசனத்தின் அவசியம்

தற்போதுள்ள கடன் சுமையிலிருந்து இந்த நாடு மீள்வதாக இருந்தால், இந்த நாட்டில் சர்வதேச ரீதியாக காணப்படுகின்ற பின்னடைவுகளிலிருந்து நன்மதிப்பை பெறுவதாக இருந்தால் புதிய அரசியல் சாசனம் அவசியமாகின்றது.

மேலும் இந்த நாடு இந்த நிலைமையில் இருப்பதற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமிலிருக்கின்றமையும் மிகப்பிரதான காரணமாகின்றது. ஆகவே எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய தருணத்தினை சரியாக பயன்படுத்துவதற்காக பக்குவமாக கையாள வேண்டும். இறுதி அரசியல் சாசன வரைவு தயாரகின்றபோது மீண்டும் உங்களை நான் நிச்சயமாக சந்திப்பேன்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com