இதுதான் “அலாவுதீன் அற்புத விளக்கு” என்று கூறி 31 லட்சம் ஏப்பம்

எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஏமாறுகிறவர்களுக்கு பஞ்சம் இல்லாதவரை ஏமாற்றுகிறவர்களுக்கும் சிக்கலில்லை.
கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்த ஏமாற்றுவேலை நடந்தததாக கூறப்படுவது தமிழ்நாட்டில் அல்ல. உத்தரப்பிரதேசத்தில்.
பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு மருத்துவர்.
“இதுதான்அலாவுதீன் அற்புத விளக்கு. இதை வைத்திருந்தால் செல்வமும், வளமும் சேரும்” என்று மயக்கும் சொற்களைக் கூறி இந்த ஏமாற்று விற்பனை நடந்ததாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
அரேபிய இரவுகள் கதையில் வருவதுபோல, விளக்கை தேய்தால் ஆவி வரும் என்று கூறி, அதே போல போலியாக வரவைத்து, அந்த அலாவுதீன் விளக்கை அவர்கள் விற்றதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விளக்குக்கு அவர்கள் கேட்ட தொகை சுமார் 1 கோடி 50 லட்சம். ஆனால் இறுதியாக 31 லட்சம் ரூபாய்க்கு பேரத்தை முடித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றும் அவர்தான் இந்த சம்பவம் முழுவதற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில் ஏமாந்த மருத்துவர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரில், ஒரு பெண்ணையும், அவரது மகன்கள் என்று நினைத்த இரு ஆண்களையும் கடந்த ஒரு மாதம் முன்பு சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாக என்டிடிவி தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
“அவர்கள் என்னிடம் ஒரு சாமியார் குறித்து பேச ஆரம்பித்தார்கள். அந்த சாமியார் அவர்கள் வீட்டிற்கு வந்ததாகவும் கூறினர்.
நான் அந்த சாமியாரை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நானும் அவரை சந்தித்தேன். அவர் ஏதோ சடங்கு சம்பிருதாயங்கள் எல்லாம் செய்தார்.
அப்படி ஒருமுறை நான் அவரை சந்திக்க சென்றபோது, அலாவுதினை என் கண்முன் வரவைத்தார். பிறகுதான் தெரிந்தது அந்த இரு ஆண்களில் ஒருவர்தான் அலாவுதீனாக வேடமிட்டு நடித்துள்ளனர் என்று” என அப்புகாரில் அந்த மருத்துவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அலாவுதீன் விளக்கில் இருந்து பூதத்தை வரவைத்து, அது உண்மை என்று நம்ப வைத்ததாகவும் சில ஊடக செய்திகள் கூறுகின்றன.
இறுதியாக அந்த அலாவுதீன் விளக்கை வைத்திருந்தால் செல்வம், நல்ல உடல்நலம் மற்றும் அதிஷ்டம் வந்து சேரும் என்று கூறி அதற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் விலை கூறினர். ஆனால் பணமாக 31 லட்சம் பெற்று பேரத்தை முடித்தனர்.
இதே ஆட்கள் வேறு சில குடும்பங்களை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளதாகவும், மீரட்டின் மூத்த காவல்துறை அதிகாரி அமித் ராய் என்டிடிவியிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் தேடப்பட்டு வருகிறார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment