`இது எனது அம்மாவுக்காக!’ – விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப்

`நான் இந்த புற்களை விரும்புகிறேன்’ ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் உதிர்த்த வார்த்தை இது. இங்கிலாந்தில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஹாலெப் முதன்முறையாக தகுதிப்பெற்றார்.
இதனையடுத்து தனது உற்சாகத்தை வார்த்தைகளில் வெளிக்காட்டினார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் – சிமோனா ஹாலெப் மோதினர்.
இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவியது. செரினா, ஹாலெப் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். எனவே இந்தப்போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பு நிலவியது.
அதற்கு காரணமும் இருக்கிறது. இந்த டைட்டிலை செரினா வென்றால், இது அவரது 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.
அவ்வாறு வென்றால் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரட் கோர்ட் (24) சாதனையை செரினா சமன் செய்ய வாய்ப்பு இருந்தது.
உலக தரவரிசையில் சிமோனா ஹாலெப் 7-வது இடத்தில் இருக்கிறார். செரினா 10-வது இடத்தில் உள்ளார்.
இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக இருவரும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருந்தனர்.
இதில் 9 போட்டிகளில் செரினாவே வெற்றி பெற்றிருந்தார். அதனால் செரினாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனக் கூறப்பட்டது. செரினாவுக்கு தற்போது 37 வயது. அதிக வயதில் டென்னிஸ் விளையாடும் வீராங்கனையும் இவர்தான்.
ரூமேனியா வீராங்கனையான சிமோனாவும் சளைத்தவர் இல்லை. இந்தத் தொடரில், தான் விளையாடி போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வந்தவர்.
எனவே, இந்தப்போட்டியை சரியாக பயன்படுத்திக்கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இது செரினாவுக்கு 11வது விம்பிள்டன் இறுதிப்போட்டி ஹாலெப்புக்கு முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டி. இந்தநிலையில் தான் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய முதலே சிமோனாவின் கை ஓங்கியே இருந்தது. முதல் செட்டை 6-2 என்ற நிலையில் சிமோனா கைப்பற்றினர்.
முதல் 7 நிமிடத்தில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். வெறும் 26 நிமிடத்தில் செரினாவிடம் இருந்து முதல் செட்டை பறித்து விட்டார்.
இரண்டாவது செட்டில் செரினா கடுமையாக போராடினார். அந்த போராட்டம் சிமோனாவின் வெற்றியை தாமதப்படுத்தியதே தவிர, அதைத் தடுக்கவில்லை. 56 நிமிட போராட்டத்திற்கு பின்பு 2-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.
பட்டத்தையும் சிமோனாவிடம் பறிக்கொடுத்தார். சிமோனா ஹாலெப் மைதானத்தில் கண்ணீர் விட்டார்.
போட்டிக்கு பின்னர் பேசிய சிமோனா, “நான் இதுவரை விளையாடியதிலே சிறப்பான போட்டி இதுதான். இது சிறந்த போட்டியாக இருந்தது. செரினா எனக்கு ஊக்கமளித்தார்.
இந்தப் போட்டிக்கு முன்பு நான் பதற்றமாக இருந்தேன். எனக்கு வயிற்றில் பிரச்னை இருந்தது. ஆனால் இது உணர்ச்சிகளுக்கான நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும். இது சிறப்பான தருணம். என் வாழ்நாளில் நான் இதை மறக்க மாட்டேன்.
இது என் அம்மாவுக்காக ஏனென்றால் அவர் தான் நான் சிறு வயதாக இருந்த போது விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.
நான் இந்த ஆண்டு விளையாட தொடங்கியபோதே லாக்கர் அறையில் உள்ளவர்களிடம் நான் பட்டத்தை வெல்ல விரும்புவதாக கூறினேன்.
ஏனெனில் அதுதான் எனக்கு வாழ்நாள் உறுப்பினருக்காக அந்தஸ்தை தரும் அது இப்போது என்னிடம் உள்ளது. உண்மையில் புல் தரையில் விளையாடுவதற்காக எனது ஆட்டத்தை மாற்றினேன்.
நான் ஓட விரும்புதால் அது கடினமாக இருந்தது. ஆனால், நீங்கள் புல் தரையில் சரியவும் முடியாது. ஆனால் இந்த முறை நான் அனுபவித்து விளையாடினேன். அடுத்த வருடத்திற்காக என்னால் காத்திருக்க முடியாது” என்றார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment