இந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?

1962-ஆம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போது சீன ராணுவம் எண்ணிக்கையில் இந்திய ராணுவத்தை விட இரு மடங்கு வலிமை உள்ளதாக இருந்தது. அது மட்டுமல்ல அவர்களிடம் தேர்ந்த ஆயுதங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.
தளவாடங்களுக்கும் சீன தரப்பில் குறைவில்லை. அனைத்திற்கும் மேலாக அவர்களின் தலைமை மிகவும் அனுபவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் போரிட்ட அந்த அனுபவம் இருந்தது.
வாலோங்கில் தனது முதல் பின்னடைவை இந்தியா சந்தித்தது. அதன்பிறகு லே பாஸ் பகுதி கூட இந்தியாவை விட்டு கைநழுவிப் போனது.
இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் 10 முதல் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் சீனாவின் 18 முதல் 20 ஆயிரம் ராணுவ வீரர்களை எதிர்த்து மோத வேண்டியிருந்தது
உலகப்போர் காலத்தைச் சேர்ந்த என்ஃபீல்டு துப்பாக்கிகள் இந்தியாவிடம் இருந்தன. அமெரிக்கா அனுப்பிய தானியங்கித் துப்பாக்கிகளும் அவர்களைச் சென்றடைந்தன. ஆனால் அவை பிரிக்காமல் கூட வைக்கப்பட்டிருந்தன.
மேலும், அவற்றை பயன்படுத்தும் பயிற்சியும் வீரர்களுக்கு வழங்கப்படவில்லை. சே லா-வுக்குப் பிறகு சீனா போம்டிலா நகரை நோக்கி வந்தனர். மொத்தமாக, இந்தியாவின் 32 ஆயிரம் சதுர மைல் பகுதி சீனாவின் ஆளுமைக்கு கீழ் வந்தது.
நெவில் மேக்ஸ்வெல், ‘இந்தியா சைனா வார்’ என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிறநாட்டு ராணுவத்தின் உதவியை பெற வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை விடுக்கிறார் இந்தியாவின் கமாண்டர் பிஜி கௌல். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.”
அமெரிக்காவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் ஜே.கே. கால்ப்ரேத் தனது சுயசரிதையான ‘எ லைஃப் இன் அவர் டைம்ஸ்’ என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “இந்தியா முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கி இருந்த காலம் அது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் போருக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் அந்த விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அசாம், மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் கொல்கத்தா வரையிலும் போர் மேகம் சூழ்ந்து இருந்தது.”
கென்னடிக்கு நேரு எழுதிய இரண்டு கடிதங்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்க அதிபர் கென்னடிக்கு இந்திய பிரதமர் நேரு இரண்டு கடிதங்கள் எழுதுகிறார். அந்தக் கடிதங்கள் இந்திய தூதரகம் வாயிலாக வெள்ளை மாளிகை வரை கொண்டு சேர்க்கப்பட்டன. அந்த கடிதங்கள், குறிப்பாக இரண்டாவது கடிதம் கடைசி வரை வெளிப்படுத்தப்படவில்லை.

பிற்காலத்தில் கால்ப்ரேத் தனது டைரியில் எழுதுகிறார், “ஒரு முறை அல்ல, இரண்டு முறைகள் உதவிக்கான விண்ணப்பம் வைக்கப்பட்டது. இரண்டாவது விண்ணப்பம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது.
அந்தக் கடிதம் அமெரிக்க அதிபரின் பார்வைக்கு மட்டுமே (ஃபார் ஹிஸ் ஐஸ் ஒன்லி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அது அழிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது”
இதற்குப் பிறகு, இந்தியாவை ஆண்ட பல அரசுகளும் அத்தகைய ஒரு கடிதம் இல்லவே இல்லை என்று மறுத்தன.
ஆனால் பிரபல பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா, நவம்பர் 15, 2010 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய ‘JN to JFK, Eyes Only’ என்ற கட்டுரையில், “நேருவிற்குப் பின் பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர் செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்துப் பதிவுகளும் சோதனையிடப்பட்டதாகவும் ஆனால் அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்.” என்று எழுதினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆவணக் காப்பகங்கள் இந்த கடிதங்கள் எழுதப்பட்டதை ஒப்புக் கொண்டன, ஆனால் அவற்றில் எழுதப்பட்ட விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், 2010 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி ப்ரெசிடென்ஷியல் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் இந்தக் கடிதங்களை வெளியிட்டது.
கடிதங்கள் குறித்து அமைச்சர்களுக்குக்கூட தெரியாது
இந்த கடிதத்தில், “சீனர்கள் நெஃபாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளனர், மேலும் அவர்கள் காஷ்மீரில் லடாக்கில் உள்ள சுஷாலை ஆக்கிரமிக்கப் போகிறார்கள்.” என்று நேரு எழுதியிருந்தார்.
மேலும் அதில் “சீனத் தாக்குதலைச் சமாளிக்க இந்தியாவுக்கு போக்குவரத்து மற்றும் போர் விமானங்கள் தேவை” என்றும் இறுதியில், “பிரிட்டன் பிரதமர் ஹரால்ட் மேக்மில்லனுக்கும் இதேபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றும் எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் வெள்ளை மாளிகையில் பெறப்பட்டவுடன், கால் பிரத் ஒரு ரகசிய தந்தியை அமெரிக்க அதிபர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புகிறார்.
அதில், “நேரு உங்களுக்கு இன்னொரு கடிதம் அனுப்பவுள்ளார். அது பற்றி அவரது அமைச்சர்களுக்குக் கூட தகவல் இல்லை . இது எனக்குக் கிடைத்த ரகசியத் தகவல்” என்று எழுதுகிறார்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பி.கே.நேரு அவர்கள் நவம்பர் 19 ஆம் தேதி அந்தக் கடிதத்தை அமெரிக்க அதிபரிடம் நேரடியாகச் சென்று சேர்க்கிறார்.
“உங்களுக்கு முதல் கடிதம் எழுதிய சில மணி நேரங்களில் நெஃபாவில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. பிரம்மபுத்ரா பகுதியில் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.
உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து அனைத்தும் சீனாவின் வசமாகிவிடும்” என்று நேரு அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
“எங்களுக்குக் குறைந்தபட்சம் 12 ஸ்க்வாட்ரன் போர் விமானங்கள் தேவை. ஆரம்பத்தில், எங்கள் விமானிகள் அவற்றை இயக்க பயிற்சி பெறும் வரை அமெரிக்க விமானிகளே அவற்றை இயக்க வேண்டும்.
இந்திய விமானங்கள் மற்றும் தளங்களைப் பாதுகாக்க அமெரிக்க விமானிகள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஆனால், திபெத்துக்குள் மட்டும் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளும். இதற்காக, எங்களுக்கு பி -47 குண்டுவீச்சு விமானங்களின் இரண்டு படைப்பிரிவுகளும் தேவைப்படும்.” என்று நேரு தெளிவாக எழுதியிருந்தார்.
இந்தத் தளவாடங்கள் சீனாவுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்றும் நேரு கென்னடிக்கு உறுதியளித்தார். ( ஜான் எஃப் கென்னடி ப்ரெசிடென்ஷியல் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், நேரு கடிதங்கள், நவம்பர் 11-19, 1962 )
நேருவின் கடிதத்தால் தலைகுனிந்த தூதர் பி.கே. நேரு
இரண்டாவது கடிதத்தில், நேரு உண்மையில் கென்னடியிடமிருந்து 350 போர் விமானங்களைக் கோரினார். அவற்றை இயக்க குறைந்தபட்சம் 10000 பேரின் உதவியும் தேவை.
டென்னிஸ் குக் தனது ‘இந்தியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்: எஸ்ட்ரேஞ்ச் டெமாக்ரஸீஸ்’ (India and the United States: Estranged Democracies) என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “அமெரிக்காவின் இந்திய தூதர் பி.கே.நேரு, பிரதமர் நேருவின் கடிதத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தார்,
அதை அவர் தனது ஊழியர்களில் எவரிடமும் காட்டவில்லை, தனது மேசையறையில் வைத்திருந்தார். பின்னர் அவர் ஒரு வரலாற்றாசிரியரிடம் இந்த இரண்டு கடிதங்களையும் உளவியல் ரீதியாக நிறைய அழுத்தங்களுக்கு உட்பட்டதாலேயே நேரு எழுதியிருப்பார் என்று கூறினார்.”

பின்னர் பி.கே. நேரு தனது சுயசரிதை ‘நைஸ் கைஸ் ஃபினிஷ் செகண்ட்’ (Nice Guys Finnish Second) என்ற புத்தகத்தில், “முதல் கடிதம் எங்கள் அணிசேராக் கொள்கைக்கு எதிரானது.
இரண்டாவது கடிதம் மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது, அதைப் படித்த பின் என் வெட்கத்தையும் துக்கத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ” என்று எழுதியுள்ளார்.
டெல்லியில் விரக்தி சூழ்நிலை
மறுபுறம், டெல்லியில் உள்ள ரூஸ்வெல்ட் மாளிகையில், அமெரிக்க தூதர் கால்பிரத் 1962 நவம்பர் 20 அன்று தனது நாட்குறிப்பு புத்தகத்தில், “டெல்லிக்கு மிகவும் அச்சம்தரும் நாளாக இன்று அமைந்துள்ளது. முதன்முறையாக மக்கள் நம்பிக்கை இழப்பதை நான் கண்டேன்.
தளவாடங்கள் மற்றும் 12 சி -130 விமானங்களையும் உடனடியாக அனுப்புமாறு நான் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் எழுதினேன். மேலும், ஏழாவது கடற்படையை வங்காள விரிகுடாவை நோக்கி அனுப்புங்கள் என்றும் கோரினேன்.” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய கடற்படை அமெரிக்கக் கடற்படையிடம் எந்த உதவியும் கேட்கவில்லை, ஆனால் வங்காள விரிகுடாவில் ஏழாவது கடற்படை இருப்பது இந்தியாவின் இந்த நெருக்கடியில் அமெரிக்கா அதற்குத் துணை நிற்கிறது என்ற தெளிவான செய்தியை சீனாவுக்கு அனுப்பும் என்று கால்பிரத் நினைத்தார்.
கென்னடி உடனடியாக கால்பிரத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார், பசிபிக் கடற்படையின் தலைமையகத்திலிருந்து ஏழாவது கடற்படையை உடனடியாக அனுப்புமாறு கூறினார். உத்தரவைப் பெற்றதும், யுஎஸ்எஸ் கிட்டி ஹாக் போர்க்கப்பல் வங்காள விரிகுடாவுக்கு அனுப்பப்பட்டது .
டெல்லி வந்தார் கென்னடியின் தூதர்
நேருவின் 2 கடிதங்களுக்கும் பதிலளித்த கென்னடி இந்தியாவின் தேவைகளை ஆய்வு செய்வதற்காக ஏவ்ரல் ஹேரிமேன் தலைமையில் உடனடியாக ஒரு உயர்நிலைக் குழுவை டெல்லிக்கு அனுப்பினார்
அவசரமாக, அமெரிக்க விமானப்படை கே.சி 135 விமானம் ஆண்ட்ரீஸ் விமான நிலையத்திலிருந்து பறக்கவிடப்பட்டது.

எரிபொருளுக்காக துருக்கியில் சிறிது காலம் தங்கிய பின்னர், நவம்பர் 22 தேதி மாலை 6 மணிக்கு 18 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு ஹேரிமேனும் கென்னடி நிர்வாகத்தின் அதிகாரிகள் சுமார் 20 பேரும் டெல்லிக்குச் சென்றனர்.
கால்பிரத் அவர்கள் அனைவரையும் விமான நிலையத்திலிருந்து நேருவின் இல்லத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றார். ஆனால் அதற்கு முன்னர், நவம்பர் 21 ஆம் தேதி காலையில், ‘அமைதியாக அமைதி திரும்பியது’, ஏனெனில் நவம்பர் 20 இரவு சீனா ஒருதலைபட்ச போர்நிறுத்தத்தை அறிவித்தது.
இது மட்டுமல்லாமல், நவம்பர் 7, 1959 அன்று உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு இருந்த இடத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் தனது படைகள் செல்லும் என்றும் சீனா அறிவித்தது.
அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தம்
நேஃபாவிலிருந்து பின்வாங்கிப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் முடிவை மாவோ ஏன் எடுத்தார் என்ற கேள்வி எழுகிறது.
புரூஸ் ராட்டெல் தனது புத்தகமான ‘ஜே.எஃப் கேஸ் ஃபர்காட்டன் க்ரைசிஸ், திபெத், சி.ஐ.ஏ மற்றும் சீன இந்தியப் போர்’ ( JF Cays Forgotten Crises Tibet, the CIA and the Sino Indian War) என்ற நூலில், “மாவோவின் முடிவுக்குப் பின்னால் அமைப்பு மற்றும் திட்டமிடல் ரீதியிலான பல காரணங்கள் இருந்தன.
” குளிர்ந்த வானிலை தொடங்கவிருந்தது, திபெத் மற்றும் இமயமலையில் உள்ள சீன இராணுவம் தங்கள் தளவாடங்களைப் பராமரிப்பதில் சிரமங்களை சந்திக்கவிருந்தது.
சிலிகுரியை ஆக்கிரமித்து அசாமிற்குள் நுழைவதற்குக் கவர்ச்சியான வாய்ப்பும் இருந்தது. இதைச் செய்வதன் மூலம், அவர்கள் கிழக்கு பாகிஸ்தானின் எல்லையில் உள்ள பகுதியை அடைய முடியும். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் கென்னடியை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதை தடுக்கமுடியாததாகிவிடும் என்று மாவோ எண்ணியிருக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க விமானப்படை மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர்ஃபோர்ஸ் ஆகியவை இந்தியாவுக்கு உதவி வழங்கும் பட்சத்தில், அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவது மட்டுமல்லாமல், ராணுவ ஆதரவையும் வழங்குகின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.
நவம்பர் நடுப்பகுதியில், இந்த உதவி போர்க்களத்தை அடைந்தது. நவம்பர் இறுதிக்குள், இந்த போரில் இந்தியா தனியாக இல்லை என்பதையும், நீண்ட காலம் போர் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆயுதங்கள் அதிக அளவு இந்தியாவை எட்டும் என்பதையும் மாவோ உணர்ந்திருந்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment