Site icon ilakkiyainfo

இந்த 4 கேள்விகளுக்கும் விடைதெரிந்தால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை வேற லெவல்தான்! – பெட்ரூம்: கற்க கசடற – (பகுதி-2)

படுக்கையறை தடைகளை உடைத்து தாம்பத்யத்தில் மேலும் மேலும் இறுக்கமான தழுவல்களை அனுபவிப்பது எப்படி? பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உணர என்னதான் தேவை?

 

சூப்பரான செக்ஸ் வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும்?

̀ஆணும் பெண்ணும் மட்டும்தானே’ என்பது அந்தக் கால பதில். இப்போது ஆணும் பெண்ணும் கூடிக் களிக்கவும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.

உறவுகொள்வதற்கான மனநிலையைப் பெறுவதில் அல்லது உச்சக்கட்டத்தை அடைவதில் சில பெண்களுக்குச் சிக்கல்கள் இருக்கக்கூடும். படுக்கையறையில் உங்கள் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வு காணலாம். பாலியல் நெருக்கத்தை விருப்பத்துடன் அனுபவிக்க இது உதவும்.

உடலுறவின் நன்மைகள் படுக்கையறைக்கு அப்பாலும் நீட்டிக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் செக்ஸ் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

அதோடு, உங்கள் இணையுடனான ஆரோக்கியமான இல்வாழ்க்கைக்கான நெருக்கம் பெட்ரூமில்தான் வலுப்படுகிறது.

`அதெல்லாம் போன வாரமே படிச்சாச்சு. எனக்குத்தான் அந்த ஆர்வமே வர மாட்டேங்குதே; என்று உங்களில் சிலர் மைண்டு வாய்ஸில் பேசுவது கேட்கிறது.

உங்களுக்கு உடலுறவு கொள்ளும் மனநிலை உண்டாகவில்லையா அல்லது தாமதமாகிறதா? அதற்காகக் கவலைப்பட வேண்டாம்.

உங்களைப் போலவே இந்த உலகில் பல பெண்களுக்கு பாலியல் ஆர்வங்களும் தூண்டுதல்களும் ஏற்ற இறக்கமாகவே உள்ளன.

பாலியல் ஆர்வம் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஓர் அளவுகோலே.

சில நேரங்களில் உங்களுக்குப் பாலுணர்ச்சி (லிபிடோ) குறைவாக ஏற்பட்டால், உணர்வுரீதியாகவோ, உடல்ரீதியாகவோ வேறு ஏதேனும் பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாக அது இருக்கலாம்.

படுக்கையறை தடைகளை உடைத்து தாம்பத்யத்தில் மேலும் மேலும் இறுக்கமான தழுவல்களை அனுபவிப்பது எப்படி? பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உணர என்னதான் தேவை?

டுக்கையறையில் உங்களுக்குப் பிடித்தது உப்பா, சர்க்கரையா?

படுக்கையறையில் நீங்கள் விரும்புவதையும் விரும்பாததையும் பற்றி முதலில் நீங்கள்தான் அறிந்துகொள்ள வேண்டும். ஆம்… படுக்கையில் உங்கள் மகிழ்ச்சிக்கான முதல் விஷயம், நீங்கள் விரும்புவதை அறிவதுதான்.

– எந்தச் செயல்பாடு உங்களை நன்றாக உணரச் செய்கிறது?
– எது உங்களை மேலும் ஆர்வப்படுத்துகிறது?
– எது உங்களை உச்சக்கட்டத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது?
– எது உங்களைத் தடுக்கிறது?

இந்த 4 கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டு விடைகளை அறியுங்கள். விருப்பமான தூண்டுதல்கள், நீங்கள் விரும்பும் நிலைகள் பற்றி கூச்சப்படாமல் தெரிந்துகொள்ளுங்கள்.

அவை பற்றி இணையுடன் பகிர்ந்துகொண்டு, அதற்கேற்ப அவரும் செயல்படும்போதுதான் இருவரின் இன்பமும் பூர்த்தியாகும். அதேபோல இணையின் நியாயமான விருப்பங்களுக்கு இசைவு தெரிவித்து ஒத்துழைப்பது மிக முக்கியம்.

முதல்முறை இது பற்றிப் பேசுவதற்கு சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், செக்ஸ் என்பதே பகிர்தல்தானே? அதனால், முதலில் கற்பனை வடிவத்தில் நீங்கள் விரும்புவதை வடிவமைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, நீங்கள் இருவரும் இளம் ஜோடியாக எப்படிப் பழகினீர்கள் என்று கனவு கண்டதாக உங்கள் கூட்டாளரிடம் சொல்லலாம். அப்படி நினைத்துக்கொண்டு, கூடிய வரை அதே முறையில் உறவில் ஈடுபடலாம். இப்படிச் செய்வது நீங்கள் விரும்பும் பாலுறவுக்கு உங்களை வழிநடத்த உதவும்.

சுய இன்பம் மூலமாகவும் பெண்கள் படுக்கையில் அவர்கள் விரும்புவதை அறிய முடியும். குறிப்பாக, எந்த இடத்தில் அதிக அளவு தூண்டுதல் ஏற்படுகிறது என்பதை அறிந்து அந்த இடத்துக்கு இணையை வழிநடத்த இது நல்ல வழி.

சுய இன்பம் செய்வது பாலியல் தெளிவு பெற உதவும் என்றே மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே, அது தவறு என்பது போன்ற தவறான எண்ணங்கள் இருந்தால் ரப்பர் வைத்து நன்றாக அழித்துவிட்டு வேலையைப் பார்க்கவும்.

 

நாம் காதலில் கவனம் செலுத்த விரும்பினாலும், அழுத்தங்கள் நிறைந்த நம் வாழ்க்கைமுறை காரணமாக திசைதிருப்பப்படுவது இயல்புதான்.

ஆனால், குறிப்பாக பெண்களுக்கு, அந்தத் தருணத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் அன்றாடங்களின் பரபரப்பிலிருந்து மீண்டு, தளர்வான சூழலில் நீங்கள் இருக்க விரும்புங்கள்.

அப்படி ரிலாக்ஸாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் முழு உற்சாகத்தையும் புணர்ச்சியையும் அனுபவிக்க முடியும்.

என்ன சத்தம் அந்த நேரம்!

முனகல், மகிழ்வொலி போன்ற சத்தங்களை சங்கடப்பட்டு உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு வீணாக்க வேண்டாம்.

உறவின்போது உங்களுக்கு இயல்பாக வெளிப்படும் சத்தங்களை தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.

அது உங்கள் இணையையும் உற்சாகப்படுத்தி தூண்டுதலை அதிகப்படுத்தும். `வெளியில் கேட்குமோ’ என்று எண்ணிக்கொண்டு, ஆசை ஒலிகளை வெளிப்படுத்தாமல் அடக்குமுறை செய்ய வேண்டாம்.

இதில் இன்னமும் தயக்கம் இருந்தால், அதற்கேற்ற அறை, நேரத்தைத் தேர்ந்தெடுத்துங்கள். அவ்வளவுதான்!

எட்டு முறை இன்ப ஆய்வு

மனநிறைவு அளித்த பாலியல் செயல்பாட்டில் எட்டு முறை ஈடுபட்ட பெண்களிடம் ஓர் ஆய்வு செய்யப்பட்டது.

எட்டு முறை பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட பிறகு, உண்டான நெருக்கமும் மனநிறைவும் அவர்களின் ஒட்டுமொத்த பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல… அவர்களின் துயரங்களும் குறைந்திருக்கின்றன.

ஒரு டிப்ஸ்: வழக்கமாக தியானம், யோகா செய்யும் பெண்களுக்கு பாலியல் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்; இணைக்கு ஈடுகொடுக்கும் அளவிலான வேட்கையும் கிட்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கற்பனைக்கு வானமே எல்லை!

பெண்கள் பலர் உடலுறவின்போது கற்பனை செய்கிறார்கள். அழுத்தங்களிலிருந்து விடுபட முடியாதவர்களுக்கு இது நல்ல வழி.

கற்பனை உங்கள் கவலைகளை மூடுவதற்கான சக்திவாய்ந்த ஒரு வழி. இதன் மூலம் செக்ஸில் அதிக கவனம் செலுத்த முடியும். கற்பனை (ஃபேன்டசி) என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஓர் இயற்கையான, மருத்துவ அங்கீகாரம் பெற்ற வழிமுறையும்கூட!
நேர்மறை உடல் உருவம் மற்றும் பாலியல் தன்னம்பிக்கை

ஒரு பெண் தன் உடலை நன்றாக உணரவில்லை என்றால், அவளுக்கு உடலுறவை அனுபவிப்பது மிகவும் சவாலாக இருக்கும்.

உருவம், எடை பற்றிய கவலை, உடல்நிலை, பாலியல் செயல்பாட்டின்போது உடலைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவை பெண்களின் பாலியல் திருப்தியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பாலியல் திருப்தியைக் குறைவாகவே அனுபவிக்கும் பெண்கள் உடல் உருவத்தின் இந்தக் குறிப்பிட்ட அம்சங்களைச் சரி செய்யும் சிகிச்சைகள் மூலம் பயனடையலாம்.

குறையொன்றுமில்லை!

உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியம் காப்பதும் உங்களுக்கு ஒருவித நம்பிக்கையையும் கவர்ச்சியையும் அளிக்கும்.

ஆற்றலையும் அதிகரிக்கும். இதன் மூலம் நன்றாக உணர முடியும். தங்களைப் பற்றி நன்றாக உணர்பவர்கள் பாலியல் ரீதியாக விரும்பத்தக்கவர்களாகவும் பாலியல் ரீதியாக சிறப்பாகச் செயல்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே, எதிர்மறையான உடல் உருவ சிந்தனை ஒரு தடையாகவும், தடுக்கும் காரணியாகவும் அமையும்.

நேர்மறையான உடல் உருவம் நம்பிக்கையை அதிகரிக்கும், அந்த விஷயத்திலும்! இதையெல்லாம் தாண்டிய உண்மை என்ன தெரியுமா? உங்கள் பாலுணர்வை முழுமையாக அனுபவிக்க நீங்கள் சரியான உடலைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

உங்களுடைய பிரசவ தழும்புகளோ, வயிற்றுப் பகுதியில் எடை கொஞ்சம் அதிகமாக இருப்பதோ, பாலியல் தூண்டுதலுக்கும், அதன் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கும் எந்த விதத்திலும் தொடர்புடையதல்ல.

ஆணைப் பொறுத்தவரை உடலைவிட உறவுதான் அங்கே பிரதானமாகிறது. இருவரும் இனிய மனதுடன் இணைந்தால் எல்லாம் இன்பமயமே!

நம்பிக்கை மற்றும் உணர்வுரீதியான பாதுகாப்பு உங்கள் இணையுடன் உணர்வுரீதியாகவும் நீங்கள் பாதுகாப்பாக உணர்வது மிக முக்கியம். அவருடன் நீங்கள் துண்டிக்கப்பட்டதாக – அதாவது நெருக்கமின்றி உணர்ந்தால் அது பாலியல் உறவையும் பாதிக்கும்.

இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உடனுக்குடன் பேசி, அதை நிவர்த்தி செய்வது முக்கியம். உறவு மற்றும் அது சார்ந்த பாலியல் வாழ்க்கையே இருவருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். படுக்கையறையில் ஒரு மொபைல் போனோ, லேப்டாப்போ அதைக் குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது.

இணையின் பாலியல் ஆரோக்கிய நிலையை அறியுங்கள். சங்கடமான கேள்விகளை யாரும் விரும்புவதில்லைதான், பாலியல் சார்ந்த உடல்நிலை பிரச்னைகள், பிறப்புக் கட்டுப்பாடு பற்றிய விவாதம் போன்றவை பெரும்பாலும் நம் படுக்கையறையில் தடுக்கப்பட்டே வருகின்றன.

ஆனால், உங்கள் இணையின் பாலியல் பிரச்னைகள் பற்றி கேள்விகளைக் கேட்க பயப்பட வேண்டாம். அதற்கு அவர் பதில் கூற மறுப்பது நியாயமாகாது!

வசதியாகச் செய்யத் தேவையான முன்னேற்பாடுகள்

சில நேரங்களில் நீங்கள் உடல் ரீதியாக எழுப்பப்படலாம். ஆனால், மனரீதியாக அதற்கு நேர்மாறாக இருக்கலாம். அதனால், நீங்கள் ரெடியாகத் தேவையான அளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்கள் யோனி வறட்சியை அனுபவிக்கிறார்கள். அப்படி இருந்தால் பாலியலை மிகவும் வசதியாக மாற்ற, அதற்கேற்ற க்ரீம்களைப் பயன்படுத்த யோசிக்க வேண்டாம். இயற்கையான, நீர் சார்ந்த லூப்ரிகன்ட்டுகள் சிறந்தவை. இதைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் கைனகாலஜிஸ்ட்டும் உதவுவார்.
எதுவுமே தவறில்லை!

சில நேரங்களில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிலை (பொசிஷன்) தேவைப்படலாம். அல்லது அந்த இடத்துக்குக் கீழே தலையணை வைத்தால் வசதியாக இருக்கலாம். ஏன், நீங்கள் மேலே வர வேண்டும் (Woman on Top) எனக்கூட விரும்பலாம். இருவரும் மனமுவந்து ஈடுபடும் செக்ஸில் எதுவுவே தவறில்லை. ஆகவே, தயக்கம் களைந்து தடைகளைத் தாண்டவும்!

– சஹானா

ஆர்கஸம்’ இனியும் ஆபாசம் அல்ல; உங்களின் ஆரோக்கியமே! – பெட்ரூம்… கற்க கசடற! – (பகுதி-1)

 

Exit mobile version