ilakkiyainfo

இப்படியும் ஒரு பொலிஸ்..O.I.C

January 26
18:42 2014

கடந்த வருடத்தின் இறுதி நாளது. ஆம் 2013.12.31 ஆம் திகதியது. முழு நாடும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரமது. சூரியன் மறைந்து இருள்பரவிக் கொண்டிருந்த அந்தப் பொழுதில் கடிகாரமோ இரவு ஏழு மணியை நெருங்கி ஓடிக்கொண்டிருந்தது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் வேதிசிங்க தலைமையிலான பொலிஸ் குழு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றது. சென்றது தான் தாமதம் அங்கிருந்த வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பண்டார முனசிங்ஹவை கைது செய்து தெமட்டகொட கொலன்னாவை எல்லை அருகே உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கொண்டு வந்தனர். கூடவே 26.5 கிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருளையும் சேர்த்தே பொலிஸார் அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்திருந்தனர்.

உண்மையில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் உத்தரவுக்கு அமைய மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அனுர சேனாநாயக்கவின் வழிகாட்டலின் கீழேயே இந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கைது இடம்பெற்றிருந்தது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான பண்டார முனசிங்க போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் 1 ஆம் திகதி இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரான பண்டார முனசிங்க எதிர்வரும் 10 ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வுகளுக்கு தோற்றத் தயாராக இருந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தொடர்பில் பரந்துபட்ட விதத்தில் பூரண விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள இவ்வாறான போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு தான் ஒரு போதும் மன்னிப்பளிக்கத் தயாரில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க சிக்கிய போதைப்பொருள் பாவனை தொடர்பான இந்த நடவடிக்கை சுவாரஷ்யமானது.

உண்மையில் பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் விஷேட குழுவொன்று கடந்த வருடத்தின் இறுதி நாளன்று வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் 25 கிராம் போதைப் பொருளுடன் நபரொருவரைக் கைது செய்தனர்.

இந் நடவடிக்கையானது திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதனின் விசேட வழிகாட்டலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கை 31 ஆம் திகதி முற்பகல் வேளையில் இடம்பெற்றிருந்தது. கைதானவரிடம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்ட விசாரணைகளில் அந்த போதைப்பொருளானது மஞ்சள் அக்ரம் எனப்படும் நபரின் மனைவி ஒருவரூடாக கிடைக்கப் பெற்றது என தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடன் செயற்பட்ட பொலிஸார் ஹெரோயின் போதைப்பொருள் 10 கிராம்களுடன் மஞ்சள் அக்ரமின் மனைவியையும் உடன் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் செய்த விசாரணைகளில் அவருக்கு வந்த போதைப் பொருளை பெற்றுக் கொடுத்தது நகராதிபதி ஒருவரின் உதவியாளர் எனத் தெரிய வந்துள்ளது. அந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோக தடுப்புப்பிரிவு பொலிஸார் அவரையும் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான விநியோகஸ்தர் என சந்தேகிக்கப் படுகிறது.

இந்நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையானது கைது செய்யப்பட்ட பெண்ணாலும் மற்றைய நபராலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் முறையே 150,000 ரூபா, 30,000 ரூபா செலுத்தி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ள விடயத்தை திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோக தடுப்புப்பிரிவு பொலிஸ் குழு தமது உயர் நிலை அதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணாரத்ன விடயத்தினை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து விடயம் தொடர்பில் விளித்துக் கொண்ட பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் இது தொடர்பில் பூரண விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஊடாக முன்னெடுக்குமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேதிசிங்க தலைமையிலான பொலிஸ் குழு சந்தேக நபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார முனசிங்கவை 31 ஆம் திகதி இரவே கைது செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண எமக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான பண்டார முனசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 42.372 கிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ இல்லமானது வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய வளாகத்திலேயே அமைந்துள்ளது.

அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் அலுமாரியிலிருந்து 42 கிராம் போதைப்பொருளுக்கு மேலதிகமாக ஒரு இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பணமும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றத் தடுப்புப்பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பணத்தொகையும் போதைப் பொருளும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார முனசிங்கவின் மனைவியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான ரணசிங்க ஆரச்சிகே இராஷினி சந்திரகாந்தியினாலேயே அந்த அலுமாரியில் வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனைக்கு கிடைத்த அந்தப் பணத்தில் 150,000 ரூபா ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெண் ஊடாகவும் 30,000 ரூபா கைது செய்யப்பட்ட ஆண் ஊடாகவுமே ஓ.ஐ.சி. பண்டார முனசிங்ஹவின் மனைவியிடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் போதைப் பொருள் விற்பனை மூலம் இந்த பணம் பெறப்பட்டதை பண்டார முனசிங்கவின் மனைவி அறிந்திருந்தாரா இல்லையா என்பது குறித்து குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை தொடர்வதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.

உண்மையில் முதலாம் திகதி குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்த ஓ.ஐ.சி.யின் மனைவி ரோஷினி பின்னர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் வர்த்தகத்திற்கு பக்க பலமாக இருந்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

ஓ.ஐ.சி. முனசிங்க மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் மூவரையும் முதலாம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனிடம் ஆஜர்படுத்திய குற்றத்தடுப்புப் பிரிவு அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது.

அத்துடன் ஓ.ஐ.சி. மனைவியான ரோஷினியை 2 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்திய குற்றத்தடுப்பு பிரிவு அவரையும் 8 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதியைப் பெற்றது. இந்நிலையில் ஓ.ஐ.சியின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளானது ஹெரோயின் இல்லை எனவும் அது ஒரு மூலிகை எனவும் அதனாலேயே அதனை அலுமாரியில் வைத்திருந்ததா கவும் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஓ.ஐ.சி. பண்டார முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அது தொடர்பில் உறுதி செய்துகொள்ள கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தகவல்களின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்படும் போதைப் பொருள் வர்த்தகர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப் பொருளின் ஒரு பகுதியை குறித்த ஓ.ஐ.சி. எடுத்து மீள விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் அந்த தகவல் உத்தியோக பூர்வமானதன்று.

இந்நிலையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்ற பதவியிலிருந்து சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பண்டார முணசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.

உண்மையில் அண்மைக்காலமாக பல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் செயற்பாடுகள் குறித்து மோசமான பெறுபேறுகளை அவதானிக்க முடிகிறது.

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி கைப்பற்றிய போதைப்பொருளை கோதுமை மாவாக்கிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் அந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலங்கம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் குழுவினரும் கொலை தொடர்பான தகவல்களை மறைக்க ஒரு கோடி வரையில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது இடம் பெற்றுள்ளது.

(பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன்)

‘குற்றம் தொடர்பில் தராதரமற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விஷேடமாக பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் சட்டம் தீவிரமாக அமுல் செய்யப்படுகிறது. அதனுடன் பொலிஸ் மா அதிபர் மூலம் அவ்வாறானவர்களுக்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படாது. எமது அதிகாரிகள் என வித்தியாசம் காட்டப்படாது’ என முதலாம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்ட வாசகங்களையும் ஞாபகப்படுத்துகிறோம்.

அத்துடன் பொலிஸாரின் தவறான நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் சேவை ஆணைக் குழு அறிமுகம் செய்துள்ள 0710361010 என்ற இலக்கம் மூலம் முறையிட்டு எமக்கான தரமான பொலிஸ் சேவையை நாமே கட்டியெழுப்புவோம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com