புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான பூஜா உமாசங்கர் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இலங்கையரான தீபக் சண்முகநாதனையே அவர் திருமணம் செய்யவுள்ளமை நிச்சயமாகியுள்ளது.
இலங்கையர் ஒருவரையே தான் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக பிரபல நடிகை பூஜா மெட்ரோ நியூஸுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபக் சண்முகநாதனையே பூஜா திருமணம் செய்யவுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மெட்ரோ நியூஸுக்கு உறுதிப்படுத்தின.
கடந்தவாரம் தீபிக்கின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டபோது, பூஜாவுக்கு அவர் மோதிரமொன்றையும் அணிவித்தார் எனவும் அடுத்த வருடம் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
2003 ஆம் ஆண்டு முதல் தமிழ், சிங்களம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களில் பூஜா நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்த பழகும் பூஜாவின் காதல், திருமணம், குறித்து அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள சினிமா நடிகர் ஒருவரை அவர் திருமணம் செய்யப்போகிறார் என ஒரு காலத்தில் கூறப்பட்டது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிகர் ஆர்யாவும் பூஜாவும் பிரதான வேடங்களில் நடித்தனர்.
அப்படத்தில் பூஜாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், அப்படத்தின் பின்னர் பூஜாவை ஆர்யா திருமணம் செய்யப்போகிறார் என்ற வதந்தியும் வேகமாக பரவியது.
இவையெல்லாம் வெறும் வதந்திகள் என்பதும் பூஜாவின் காதல் இலங்கையிலேயே மையங் கொண்டுள்ளது என்பதும் அண்மையிலேயே பகிரங்கமாகியது.
1981 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தவர் பூஜா. ஆரம்பக் கல்வியை இலங்கையிலேயே கற்றவர். பின்னர் கர்நாடக மாநிலத்தின் சிங்மங்களூரிலும், மைசூரிலும் கல்வி கற்கச் சென்றார். பெங்களூரில் பி.கொம் பட்டதாரியான பூஜா பின்னர் எம்.பி.ஏ. பட்டதாரியானார்.
இயக்குநர் சரணின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேஜே தமிழ்திரைப்படமே பூஜாவின் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ்திரைப்படமாகும். முதல் படத்திலேயே தன் வசீகரத்தினாலும், நடனத்தாலும் நடிப்பாலும் பலரையும் கவர்ந்தார் பூஜா.
அப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது.
சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றல்கொண்ட பூஜா 2006 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலிக்கா திரைப்படம் மூலம் சிங்களத் திரையுலகுக்கும் அறிமுனமானார். அப்படத்திலும் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சிறந்த நடிகை, சிறந்த பிரபல நடிகை ஆகிய விருதுகளுக்கு பூஜா பரிந்துரைக்கப்பட்டார்.
இந்திய திரைப்படங்களிலும் இலங்கைத் திரைப் படங்களிலும் ஒரே வேளையில் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்கும் பெருமை பூஜாவுக்கு உள்ளது.
அண்மையில் வெளியான “விடியும் முன்” எனும் படத்திலும் பூஜாவின் நடிப்பு பலாராலும் பாரட்டப்பட்டதுடன் பல்வேறு விருதுகளுக்கு அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaya TV Diwali Special – Naan Ippo Hero G V Prakash Kumar Player 1