Site icon ilakkiyainfo

ஈழப் போரின் இறுதி நாட்கள்-27: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-7

வான் புலிகளின் 1-வது வான் தாக்குதல் 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நடந்த நிலையில், சுமார் 1 மாத இடைவெளி விட்டு, ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை, வான் புலி விமானம் ஒன்று பலாலி விமான தளம் அருகே குண்டு வீசியது.

முதலாவது தாக்குதலுக்கு சென்றதுபோல, இரு விமானங்கள் இந்த தாக்குதலுக்கு செல்லவில்லை. ஒரேயொரு விமானம் இரு குண்டுகளை தாங்கி சென்றது.

இந்த தாக்குதல், தரையில் இருந்து விடுதலைப் புலிகள் வழி ஏற்படுத்திக் கொடுக்க, வானில் இருந்து வான்புலி விமானம் குண்டு போடும் விதத்தில் திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்தின்படி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூனேரியில் இருந்து ஆட்டிலரி ஷெல் தாக்குதல்கள், பலாலியில் உள்ள ராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்டன. ராணுவத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பதை தெரிந்துகொண்டு, அங்கிருந்த ராணுவத்தினர் பாதுகாப்பு தேடி பதுங்கு குழிகளில் மறைந்து கொண்டனர்.

திடீரென ஷெல் தாக்குதல்கள் நிறுத்தப்பட, வான் புலிகளின் விமானம் வானில் பறந்து வந்தது.

தரையில் இருந்து ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட முடியாமல் பதுங்கு குழிகளில் மறைந்திருக்க, எந்த எதிர்ப்பும் இல்லாமல் வான் புலிகள் விமானம், பலாலி பிரதான ராணுவத்தளத்தின் மீது இரு குண்டுகளையும் வீசியிருக்க முடியும். அப்படி செய்திருந்தால், யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவம் பலத்த சேதத்தை சந்தித்திருக்கும்.

ஆனால், வன்னியில் இருந்து பறந்துவந்த வான்புலி விமானி, பலாலி பிரதான ராணுவத் தளத்துக்கு நேர் மேலே விமானம் பறப்பதற்கு முன்னரே குண்டுகளை ரிலிஸ் செய்துவிட, விமானத்தில் இருந்து விழுந்த இரு குண்டுகளும், பலாலி தளத்துடன் இணைந்திருந்த மயிலிட்டி கடற்கரையில் விழுந்தன. ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். சேதம் அவ்வளவுதான்.

வான்புலிகள் விமானம் குண்டு வீசிவிட்டு, தாக்குதலுக்கு உள்ளாகாமல் பத்திரமாக திரும்பிச் சென்றது என்பதை தவிர, இந்த தாக்குதல் வேறு எதையும் சாதிக்கவில்லை.

அனால் இந்த தாக்குதல், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு பெரிய ஹிட் ஆக அமைந்தது.

“யாழ்ப்பாணத்திலேயே புலிகள் விமானத்தில் இருந்து குண்டு வீசி விட்டார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது பாருங்கள். இறுதி யுத்தத்துக்க நிதியை வாரி வழங்குங்கள்” என்று ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் தமிழர்களிடையே செய்யப்பட்ட பிரசாரம், ஓவர் நைட்டில் மில்லியன் கணக்கான டாலர்களை வசூல் செய்ய உதவியது.

(தற்போது வெளிநாட்டுப் புலிகள் தங்களுக்கிடையே சண்டை போட்டுக்கொள்வதற்கு காரணமான நூற்றுக்கணக்கான மில்லியன்களில், இந்த தொகையும் அடக்கம். காரணம், இந்த வசூலின்பின் எந்த ஆயுதக் கப்பலும், வன்னியில் யுத்தம் புரிந்துகொண்டிருந்த புலிகளுக்கு போகவில்லை.

2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்பின் புலிகளின் வெளிநாட்டுப்பணம், தனிப்பட்ட நபர்கள் சிலரின் சொந்தப் பணமாகிப் போனது. அவரவர் இஷ்டத்துக்கு செலவு பண்ணலாம். தலைவர் வந்து கேட்டால்தான் கணக்கு காட்ட வேண்டுமாம்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் நடித்து ரிட்டயர் ஆன தெலுங்கு நடிகைக்கு பிறந்த நாள் பரிசாக வாங்கிக் கொடுக்கப்பட்ட புத்தம்புது ஆடம்பர காரிலும் (BMW என்று ஞாபகம்), வெளிநாட்டு ஈழத் தமிழரின் பங்களிப்பு உள்ளது என பெருமைப்பட்டு கொள்ளலாம்)

வான் புலிகளின் 2-வது தாக்குதல் இப்படி முடிந்து ஒரு வாரத்துக்குள், முன்றாவது தாக்குதல்!

ஏப்ரல் மாதம் 29-ம் தேதி, இலங்கையில் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு முன் அமர்ந்திருந்த நேரம் அது. காரணம், 2007-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், பைனல் மேட்சில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி விளையாடிக்கொண்டு இருந்தது.

மேட்ச் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டேக் ஆஃப் செய்த வான்புலி விமானம், கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் சேகரிப்பு நிலையத்தில் குண்டு வீச சென்றது. அங்கே குண்டு வீசிவிட்டு, அடுத்து கீரவலபிட்டிய என்ற இடத்தில் இருந்த ஷெல் கேஸ் காம்ப்ளக்ஸில் குண்டு வீசுவது என்பதே திட்டம்.

இந்த இரு இடங்களிலும் சரியாக குண்டு வீசப்பட்டால், இலங்கையின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டிருக்கும். காரணம், இந்த இரு இடங்களில் இருந்துதான், இலங்கை முழுவதுக்குமான பெட்ரோல், டீசல், எரிவாயு அனைத்துமே சப்ளை செய்யப்படுகின்றன. அந்த வகையில் இவர்கள் தேர்ந்தெடுத்த இலக்குகள் சரியானவையே.

ஆனால், கொலன்னாவ என்ற இடம் தலைநகர் கொழும்புவின் புறநகர பகுதியில் உள்ளது. எனவே, வான்புலிகளின் முதலாவது தாக்குதலுக்காக கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு சென்ற அதே விமானப் பாதையிலேயே (பிளைட் பாத்) இம்முறையும் விமானங்கள் பறக்க வேண்டும்.

இந்த தொடரின் கடந்த அத்தியாயங்களில், வான் பலிகளின் விமானம் எந்த பிளைட் பாத்தில் வரும் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விளக்கமாக குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் விமானம் அதே பாதையில் பறக்க தொடங்கியதில், விமானங்கள் அனுராதபுர நகரத்தை கடந்த உடனேயே ட்ராக்டவுன் பண்ணி விட்டார்கள்.

கொழும்புவுக்கு அருகே விமானம் செல்ல தொடங்கியபோதே, கீழேயிருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கின.

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ரேடார்கள் ஆகியவற்றை, வான்புலி விமானங்கள் வரக்கூடிய பாதையில் தயாராக வைத்திருந்ததுடன் நின்றுவிடாமல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தினர் மற்றொரு சிம்பிளான ஏற்பாட்டையும் செய்திருந்தார்கள்.

ஒவ்வொரு நகரத்திலும், இலங்கை மின்சார இலாகாவுடன் ஒரு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.

 

அதன்படி, வான்புலி விமானம் எந்தவொரு நகரத்தின் மேலாக பறக்க தொடங்கினாலும், உடனே அந்த நகரத்துக்கான மின்சாரத்தை கட் செய்து விட்டார்கள். முழு நகரமும் இருளில் மூழ்கிவிடும்.

வான்புலி விமானங்கள், கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் சேகரிப்பு நிலையத்துக்கு அருகே வந்தபோது, கொலன்னாவ நகரமே திடீரென இருளில் மூழ்கியது.

போர் விமானங்களில் தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக கண்டுபிடிக்க, டார்கெட் ஐடென்டிஃபையர் என ஒரு சாதனம் உண்டு. ஆனால், வான்புலிகள் உபயோகித்தது போன்ற சிறிய பயணிகள் விமானத்தில் அப்படியான வசதிகள் ஏதுமில்லை.

இலக்கை விமானிகள் கண்களால் பார்த்து, ஜட்ஜ் பண்ணிதான், குண்டு வீச வேண்டும்.

திடீரென தரையில் உள்ள லைட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, நகரமே இருளில் மூழ்கியதால், கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் சேகரிப்பு நிலையத்தை துல்லியமாக அடையாளம் காண முடியாமல் குண்டு வீசியது வான்புலி விமானம்.

குண்டுகள், அந்த நிலையத்துக்கு வெளியே விழுந்தன. அப்போது நேரம், அதிகாலை 0150.

அங்கிருந்து புறப்பட்ட வான்புலி விமானங்கள், அடுத்த இலக்கான கீரவலபிட்டிய ஷெல் கேஸ் காம்ப்ளக்ஸை நோக்கி சென்றன. கீரவலபிட்டிய நெருங்கியபோது, மின்சார இலாகாவில் ஏற்பட்ட ஏதோ தாமதத்தால், நகரில் லைட்டுகள் எரிந்துகொண்டு இருந்தன.

வான்புலி விமானங்கள் ஷெல் கேஸ் காம்ப்ளக்ஸை அடையாளம் கண்டு, அதை நோக்கி பறக்க தொடங்கியபோதே, லைட்டுகள் அணைக்கப்பட்டன.

இதனால், ஷெல் கேஸ் காம்ப்ளக்ஸை மிகவும் நெருங்கிய நிலையில், இதுதான் இலக்கு என ஊகித்து குண்டுகளை வீசியது விமானம்.

குண்டுகள், கேஸ் சேகரிப்பு டேங்க்குகள் மீது விழவில்லை, அந்த காம்ப்ளக்ஸில் இருந்த பில்டிங் ஒன்றின் ஒரு பக்கத்தில் விழுந்தன. அப்போது நேரம் அதிகாலை 0205.

அந்த பில்டிங்கில் சேதம் ஏற்பட்டது. அவ்வளவுதான்.

இதற்குமுன், 1995-ம் ஆண்டு இதே கொலன்னாவ ஆயில் மையம்மீது தரை மார்க்கமாக சென்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். 20 விடுதலைப் புலிகள் சென்று நடத்திய அந்த தாக்குதலில், அங்கிருந்த 47 ஆயில் ஸ்டோரேஜ் டேங்க்குகள் எரிந்தன. மிகப்பெரிய தீ விபத்து அது.

ஆனால், அதே இடத்தில் 2007-ம் ஆண்டு நடந்த வான்புலிகளின் விமான தாக்குதல் வெற்றியளிக்கவில்லை.

இந்தத் தாக்குதலும் இப்படி முடிந்துவிட்ட நிலையில், அடுத்த தாக்குதலுக்காக வான்புலி விமானங்கள் கொழும்பு நோக்கி வராமல், பாதையை மாற்றி, திரிகோணமலை நோக்கி சென்றன. அங்குள்ள கடற்படை தளம் மீது குண்டு வீசுவதே திட்டம். (தொடரும்)

முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Exit mobile version