Site icon ilakkiyainfo

ஈழப் போரின் இறுதி நாட்கள்-28: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?- பகுதி -8

வான்புலிகளின் அடுத்த தாக்குதல், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இரு நகரங்களையும் தவிர்த்துவிட்டு, கிழக்கு நகரமான திரிகோணமலையை நோக்கி திட்டமிடப்பட்டது.

தமது விமானங்கள் பறக்கும் பாதைகளை இலங்கை ராணுவம் தெரிந்துகொண்டு விட்டார்கள் என்பது வான்புலிகள் பிரிவினருக்கு புரிந்திருக்க வேண்டும். அதுதான், அதுவரை சென்றிராத பாதையில் உள்ள திரிகோணமலை நகரை நோக்கி திட்டமிடப்பட்டிருக்கலாம். அங்கே இலங்கை கடற்படையின் பெரிய தளம் ஒன்று உள்ளது.

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வான்புலிகளின் விமானங்கள் திரிகோணமலை கடற்படை தளம் மீது குண்டுவீச சென்றன.

இந்த தளம்மீது தாக்குதல் நடத்துவது என திட்டமிட்ட வான்புலிகள், அதிலுள்ள பிளஸ்-மைனஸ் பாயின்ட்களை எந்தளவுக்கு தெரிந்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. காரணம், இந்த தளத்தை தாக்குவதில் மைனஸ் பாயின்டே அதிகம்.

வன்னியில் இருந்து புறப்படும் விமானங்கள் இரு வழிகளில் பிளைட் பிளான் போடப்பட்டு, திரிகோணமலை கடற்படை தளத்துக்கு மேல் வந்து சேரலாம்.

முதலாவது, முல்லைத்தீவு அருகே கரையை கடந்து கடலுக்கு மேலால் தென்கிழக்கே பறந்து, விமானத்தை சுமார் 100-110 டிகிரியில் வலப்புறமாக திருப்பினால், திரிகோணமலை கடற்படை தளத்தை நோக்கி விமானத்தை பொசிஷன் பண்ணலாம்.

இரண்டாவது, தரைக்கு மேல் பறப்பது. முல்லைத்தீவில் இருந்து நேரே தெற்கே பறந்தால், திரிகோணமலை கடற்படை தளத்துக்கு மேலே போய் சேரலாம்.

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் இரண்டுமே, ஹை-ரிஸ்க் பாதைகள்தான். இரண்டாவது மிக மிக ரிஸ்க் ஆன பாதை. காரணம், திரிகோணமலையில் இருந்து புலிகளை வடக்கு நோக்கி பின்வாங்க வைத்து, முல்லைத்தீவுக்குள் முடக்கியிருந்தது, இலங்கை ராணுவம். இதனால், புலிகள் அந்த வழியால் திரும்பாமல் இருக்க திரிகோணமலைக்கும், முல்லைத்தீவுக்கும் இடையே பல இடங்களில் சிறிதும், பெரிதுமாக ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தரைக்கு மேல் பறப்பது என்றால், பல ராணுவ முகாம்களுக்கு மேலே பறக்க வேண்டியிருக்கும். சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சான்ஸ் அதிகம்.

நாம் முதலாவதாக குறிப்பிட்ட கடல் பாதை இதைவிட பரவாயில்லை.

அந்த பிளைட் பிளானில், முல்லைத்தீவு அருகே கரையை கடக்கும்போது, அது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரைப்பகுதி. ஆபத்து கிடையாது. தொடர்ந்து கடலுக்கு மேலே பறத்தல் என்பதால், கடலில் கடற்படையின் கப்பல்கள் இருந்தாலும், தண்ணீரில் வைத்து இப்படியொரு விமானத்தை இரவில் சுட்டு வீழ்த்துவது சுலபமல்ல. அதிலும் தப்பித்து விடலாம்.

ஆனால், கடலில் வைத்து சுமார் 100-110 டிகிரியில் வலப்புறமாக திருப்ப வேண்டும் என்று சொன்னோமல்லவா? அது, கடற்படை தளத்தை கடந்து சென்றுதான், திருப்ப வேண்டும். மிகவும் கடினமான பொசிஷனிங் அது.

தற்போதுள்ள வர்த்தக விமானங்களில் ஜி.பி.எஸ். இன்டர்கிரேஷன் இருப்பதால் இதை சுலபமாக செய்யலாம். ஆனால், புலிகள் வைத்திருந்ததுபோன்ற செமி-ஆட்டோ விமானங்களில் அந்த வசதியெல்லாம் கிடையாது.

மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியென்றால்கூட, டார்கெட் மிஸ்-அப்ரோச் ஏற்பட சந்தர்ப்பம் மிக அதிகம்.

வான்புலிகள் குண்டுவீச முயற்சித்தது, இந்த பிளைட் பிளானைத்தான்!

கடலுக்கு மேலேயிருந்து, வட-மேற்காக திரிகோணமலை கரையை கடந்த வான்புலி விமானம், இலக்கை மிஸ் பண்ணியது. கடற்படை தளத்தின் காம்பவுண்டுக்குள் குத்துமதிப்பாக இரு குண்டுகளை வீசிவிட்டு, முல்லைத்தீவு நோக்கி பறந்தது.

விழுந்த இரு குண்டுகளில் ஒன்று வெடிக்கவே இல்லை. மற்றொன்று வெடித்ததில், கடற்படையை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவ்வளவுதான் பாதிப்பு.

அந்தக் குண்டுகள் கடற்படையின் வேகப்படகுகள் டொக்-யார்ட், அல்லது, கடற்படை நேர்வ்-சென்டர் மீது போடப்பட்டிருந்தால், கடற்படைக்கு பெரும் அழிவு ஏற்பட்டு, யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை.

ஆனால், இந்த வான் தாக்குதல்கள் மிஸ்லீடிங் பிரசாரத்துக்கு பயன்பட்டன.

“வான்புலிகள் கொழும்பு கட்டுநாயகவில் குண்டு வீசினார்கள், யாழ்ப்பாணம் பலாலியில் குண்டு வீசினார்கள், கொலன்னாவவில் குண்டு வீசினார்கள், அதோ, திரிகோணமலை கடற்படை தளம் மீதும் குண்டுவீசி விட்டார்கள்” என்ற பிரசாரம் தமிழ் மீடியாக்களில் பொறி பறந்தது. கீழே விழுந்த குண்டுகள் என்ன சேதத்தை ஏற்படுத்தின என்பதில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.

பெரும்பாலான தமிழ் மீடியாக்கள் இலங்கைக்கு வெளியேயிருந்தே நடத்தப்பட்டன. அவர்கள் ரியாலிட்டி தெரிந்தோ, தெரியாமலோ இந்த வான்புலி தாக்குதல்களை, உலக யுத்தத்தின் பேர்ள் ஹார்பர் தாக்குதல் ரேஞ்சுக்கு வர்ணித்து, தமிழ் மக்களுக்கு ஒரு தவறான பிக்சரை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அதே மீடியாக்கள்தான், வன்னிக்கு உள்ளேயும் யுத்தம் தொடர்பான செய்திகளை கொடுத்துக்கொண்டு இருந்தன.

இது, யுத்தம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்புவரை, புலிகளின் டாப் மட்டத்தில் இருந்தவர்களைவிட கீழேயிருந்த பலருக்கு தவறான ப்ரோகிரஸ் ரிப்போர்ட்டை கொடுத்துக்கொண்டு இருந்தது. ‘நாம் யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு இருக்கிறோம் போலிருக்கிறதே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.

அதனால்தான், 2009 மே மாதம் யுத்தம் முடிந்தபோது, பலரால் அதை ஜீரணிக்கவோ, நம்பவோ முடியாமல் போனது.

ஒரு உதாரணமாக, 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் வான்புலிகளின் விமானம் திரிகோணமலை கடற்படை தளத்தின்மீது குண்டுவீசிவிட்டு சென்ற ஓரிரு நாட்களில், கனடாவில் இருந்து ஒளிபரப்பான தமிழ் டி.வி. சேனலில், நம்ம ‘ஆய்வாளர்’ ஒருவர், அந்த தாக்குதலை 1 மணி நேரமாக அக்கு வேறு ஆணி வேறாக, அலசிக்கொண்டு இருந்தார்.

அவரது ‘ஆய்வு’ எப்படி போனதென்றால், முல்லைத்தீவில் இருந்து திரிகோணமலைக்கு டவுன்பஸ்ஸில் போவதுபோல, விமானத்தை வளைத்து வளைத்து செலுத்தி, கண்ணில் தென்பட்ட இடத்தையெல்லாம் சுட்டுத்தள்ளி பஸ்பமாக்கிக்கொண்டு போய், திரிகோணமலை கடற்படை தளத்தையும் சாம்பல் காடாக்கிவிட்டு வந்துவிட்டார்.

பாதி யுத்தத்தை தமது வாயால் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டார் அவர்.

கனடாவுக்கு முதல் தடவை விமானத்தில் வந்தபின், ஏதாவது ஒரு விமானத்துக்கு அருகேகூட சென்று பார்க்கவில்லை அந்த ‘ஆய்வாளர்’ என்பதுதான், அவரது பேச்சில் இருந்து புரிந்தது.

அந்தளவுக்கு சாகசங்களை செய்தது, அவரது வாயில் இருந்து புறப்பட்ட வான்புலிகள் விமானம்!

அவரது வர்ணணைகள் நடந்து, 8 மாதங்களுக்குள், யுத்தம் முழுமையாக முடிந்தே விட்டது. ஆனால், யுத்தம் புலிகளுக்கு தோல்வியில் முடிந்தது என்பதை பெரும்பாலான தமிழர்களால் நம்பவே முடியவில்லை.

இப்போது யுத்தம் முடிந்து 5 வருடங்களின் பின்னர்தான், கொஞ்சம் கொஞ்சமாக கனவுலகில் இருந்து பலர் வெளியே வர தொடங்குகிறார்கள்.

ஒரு விதத்தில் பார்த்தால், இது இலங்கை அரசுக்கு சாதகமான நிலைதான்!

எப்படியென்றால், யுத்தம் முடிந்த நேரத்தில், ‘இதுதான் நடந்து முடிந்திருக்கிறது’ என்பது தெளிவாக புரிந்திருந்தால், அனைவரும் ஒரே பாதையில் அடுத்த கட்டத்தை நோக்கி போயிருப்பார்கள். அது, இலங்கை அரசுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தி விட்டிருக்கும்.

ஆனால், மெஜாரிட்டி தமிழர்கள் மீடியாக்களின் புண்ணியத்தில் கனவுலகில் இருந்ததால், யுத்தம் முடிந்த பின்னரும், ஒரு தரப்பினர், “புலிகள் தோற்றிருக்க முடியாது. திரும்பி வருவார்கள். வெயிட் பண்ணுவோம்” என்ற பாதையில் போனார்கள்.

மற்றொரு தரப்பு, “பிரபாகரன் 30,000 பேருடன் மறைந்திருக்கிறார், இதோ, வருவார், அதோ வருவார்” என்ற பாதையில் போனார்கள்.

வேறொரு தரப்போ, சந்தடி சாக்கில், அடுத்த யுத்தத்துக்கு நிதி சேகரிக்க தொடங்கினார்கள். “அண்ணே.. புலி இல்லை. நாம் அடுத்து ஆகவேண்டியதை பார்க்கலாம்” என்பவர்களை மிக சுலபமாக துரோகி ஆக்கினார்கள்.

2009-ம் ஆண்டு இறுதியில், “பிரபாகரன் இறந்துவிட்டார்” என்று யாராவது சொன்னால், சொன்ன ஆள் மீது ஒரு படையே பாய்ந்துவிடும். 2014-ம் ஆண்டு செல்லும்போது, பாதிப்பேருக்காவது புரிகிறது. சொல்லியவர் மீது பாயுமுன், “5 ஆண்டுகளாக சத்தமே இல்லை.. உண்மைதான் போலிருக்கிறது” என யோசிக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு சொன்னால், யாருக்கும், எந்தவொரு சின்ன அதிர்வும் இருக்காது.

காரணம், நாளாக, நாளாக, எந்தவொரு விஷயத்திலும் வீரியம் குறைந்துவிடும்.

இன்று மீடியாக்களில் வெளியாகும் செய்திகள் என்ன சொல்கின்றன? யாழ்ப்பாணத்தில் நிலைமை என்ன என்பதை மீடியா செய்திகளை வைத்து எந்தளவுக்கு கணிப்பிடலாம்?

அதற்கும் ஒரு சிறிய உதாரணம், இது கடந்த வாரம் நடந்தது. இதையெல்லாம், வேறு மீடியாக்களில் போட மாட்டார்கள். தொழில் படுத்துவிடும்.

மே-18ல் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு நினைவுதினம் என்று மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே பரபரப்பு இருந்ததை பார்த்திருப்பீர்கள்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில், விக்கினேஸ்வரன் முதல்வராக உள்ள வடக்கு மாகாணசபை அலுவலகத்துக்கு எதிரில், தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பில், அஞ்சலி நிகழ்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

போலீஸ் சென்றது. கணிசமான மீடியாக்காரர்களும் சென்றனர். ஆனால், தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்தான் வரவில்லை.

அன்று அஞ்சலி செலுத்த வந்தது வெறும் மூவர். சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து டீக்கடைக்காரர்.

மிகுதிப்பேர் எங்கே? முதல்வர் விக்கினேஸ்வரன், யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தமது வீட்டில்தான் இருந்தார். வாயால் உரிமை பெற்றுக் கொண்டுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீரர்கள் எங்கே? எம்.பி.க்கள் எங்கே? மாகாணசபை அமைச்சர்கள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் 4 லட்சம் மக்கள் உள்ளார்கள். அவர்கள் எங்கே?

யாழ்ப்பாணம் தமிழ் மக்களில் பலர், வேறு ஒரு இடத்தில் பிசியாக இருந்தனர்.

வடக்கு மாகாணசபை அலுவலகம், யாழ்ப்பாணம், கைதடி என்ற இடத்தில் உள்ளது. அங்கிருந்து வெறும் 12 கி.மீ. தொலைவில் யாழ்ப்பாண நகர மையம் உள்ளது. கைதடியில் வெறும் 3 பேர், மே-18க்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு நின்றபோது, யாழ்ப்பாண நகர மையத்தில் ஆயிரக்கணக்கானோர் நின்றிருந்தார்கள்.

அங்கே ஏதாவது போராட்டமா? சிங்களவரை எதிர்த்து ஆர்ப்பாட்டமா?

சேச்சே… அங்கு இலங்கை ராணுவத்தினர் பிரமாண்ட அளவில் வெசாக் வலயம் அமைத்திருந்தனர். (வெசாக் என்பது, புத்த பூர்ணிமா, அல்லது புத்தரின் பிறந்த தினம்)

சிவாஜிலிங்கம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த வந்த அதே தினத்தில், வெசாக் வலயத்தில், 10,000 மக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது என மறுநாள் ராணுவம் செய்தி வெளியிட்டது. அந்த எண்ணிக்கை நிஜமா, இல்லையா என்பதை, யாழ்ப்பாணத்தில் உள்ள யாரையாவது கேட்டு தெரிந்து கொள்ளவும்.

அதீத கற்பனை வளம் இருந்தால், ராணுவம் 10,000 சிங்களவரை உணவு உண்ண யாழ்ப்பாணம் அழைத்து வந்தது என்று கூறலாம். அல்லது, தமிழர்களை ‘மிரட்டி’ சபையில் அமர்த்தினார்கள் எனவும் நம்பி ஆனந்திக்கலாம். ஆனால், நிஜம் அதுவல்ல.

அங்கு உணவு உண்டவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஓட்டு போட்ட அதே யாழ்ப்பாண தமிழர்கள்தான்!

நாளாக, நாளாக, எந்தவொரு விஷயத்திலும் வீரியம் குறைந்துவிடும் என நாம் குறிப்பிட்டது, இதைத்தான்.

அதுவும், ஒரு விஷயத்தில், ‘நிஜமும்’ ‘நிழலும்’ கலந்திருந்தால், வீரியம் மிக வேகமாக குறையும்.

‘நிஜமும்’ ‘நிழலும்’ கலந்திருந்தால்…” என்றால் என்ன?

“பிரபாகரன் வருவார், புலிகள் வருவார்கள்” என்பதையும், “தமிழர்களுக்காக போராடவோ, அஞ்சலி செலுத்தவோ வாருங்கள்” என்பதையும் கலந்தால், ஒன்றையொன்று neutralize பண்ணிவிடும். அதனால், மிக வேகமாக வீரியம் குறையும் என்பதை, கீழேயுள்ள போட்டோவில் காணலாம்.

இந்த போட்டோ, யாழ்ப்பாணம் வெசாக் வலயத்தில், ராணுவம் அளித்த விருந்தின்போது எடுக்கப்பட்ட போட்டோ… (தொடரும்)

Exit mobile version