உங்கள் பணத்தால் ஏழைகளுக்கு உதவுங்கள்.. நடிகர் விஜய்க்கு வானதி அட்வைஸ்!
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிரடியானதுதான்.
20 சதவிகிதம் பேர் செய்யும் தவறினால் 80 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் கருத்துக்கு பதில் அளித்த வானதி கூறுகையில். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்… அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும்.
அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
வானதியின் கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் I Support Vijay என்ற ஹாஷ்டாக்கில், அவரது ரசிகர்கள் வானதி சீனிவாசனுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment